என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Biryani"
- வில்லூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
- நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விருதுநகர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள வில்லூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின் நிர்வாகிகளுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. சிலர் கூட்டம் நடந்த இடத்தில் சாப்பிட்டனர். பலர் வீட்டிற்கு கொண்டு சென்று குடும்பத்துடன் சாப்பிட்டனர்.
பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
17 பெண்கள், குழந்தைகள் உள்பட 39 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பாதிக்கப்பட்ட 39 பேரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தி.மு.க. பொதுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்ட கட்சியினரும், அவர்களது குடும்பத்தினரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுக்கூட்டத்தில் விநியோகம் செய்யப்பட்ட பிரியாணி தரம் குறைந்து இருந்ததால் கெட்டுபோன இறைச்சி சேர்க்கப்பட்டதா? என தெரியவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
- போக்குவரத்து போலீசார் உடனடியாக அபராதம் விதித்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை:
கோவை ரெயில் நிலையம் அருகே ரெயில்பெட்டியை கொண்டு புதிய ஓட்டல் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஓட்டலில் நேற்றுமுன்தினம் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.
அரை மணி நேரத்தில் 6 பிளேட் பிரியாணியை சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் 4 பிளேட் சாப்பிட்டால் ரூ.50 ஆயிரம், 3 பிளேட் சாப்பிட்டால் ரூ.25 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பு காரணமாக போட்டியில் பங்கேற்க ஏராளமானோர் ஓட்டல் முன்பு திரண்டனர். அவர்கள் வந்த வாகனமும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் வந்து செல்லும் முக்கியமான சாலை என்பதால் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி நகர் முழுவதும் எதிரொலித்தது.
இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி இருந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்து போலீசார் உடனடியாக அபராதம் விதித்தனர்.
இந்தநிலையில் பிரியாணி போட்டி நடத்திய ஓட்டல் மேலாளர் கணேஷ் என்பவர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அனுமதியின்றி போட்டியை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
- மோதலை யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
- வலைத்தள காட்சிகளை பார்வையிட்ட போலீசார், புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
குடும்ப விழாக்கள் மற்றும் விருந்துகளில் இப்போது சிக்கன் பிரியாணி எனப்படும் கோழி இறைச்சி பிரியாணி முக்கிய இடம் பெறுகிறது. பிரியாணி என்றால் அதில் லெக்பீஸ் எனப்படும், பெரிய இறைச்சித் துண்டு இருக்க வேண்டும். அது இல்லாத பிரியாணி, குஸ்காவாகிவிடும்.
ஒரு திருமணவிழாவில் லெக்பீஸ் இல்லாமல் பிரியாணி வழங்கப்பட்டதால் பெரிய ரகளையே ஏற்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தின் பரேலி நகரில் நேற்று முன்தினம் அந்த திருமண விழா நடந்தது.
அப்போது மணமகன் வீட்டாருக்கு வழங்கப்பட்ட விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. அதில் சிலருக்கு லெக்பீஸ் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லையாம். இதனால் வாலிபர்கள் அதை பிரச்சினையாக்கினர். முறையிடலாக தொடங்கிய பிரச்சனை வாக்குவாதம், கைகலப்பாக வளர்ந்து களேபரமானது. ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையும் கோதாவில் இறங்கி, தங்கள் தரப்பினருக்காக சண்டையிட ஆரம்பித்தார். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பலருக்கும் அடி உதை விழுந்தது. அப்போது சிலர் நாற்காலிகளையும் தூக்கி வீசினர்.
இந்த மோதலை யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதுபற்றிய காட்சிகள் வைரலாக பரவியது. ஆனால் இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. வலைத்தள காட்சிகளை பார்வையிட்ட போலீசார், புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார்.
- புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என ஜொமோட்டோ கேட்டுக்கொண்டது.
ஆன்-லைன் மூலம் வினியோகம் செய்யப்படும் பொருட்களில் சில நேரங்களில் பொருட்கள் மாற்றி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் புனேவை சேர்ந்த பங்கஜ் சுக்லா என்பவர் ஆன்-லைன் மூலம் ஜொமோட்டோவில் சைவ உணவு ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பங்கஜ் சுக்லா தனது பதிவில் கூறி இருப்பதாவது:-
புனேவின் கார்வே நகரில் உள்ள ஒரு கடையில் பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு வினியோகம் செய்யப்பட்ட அந்த பிரியாணியில் சிக்கன் துண்டு இருந்தது. நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ஜொமோட்டோவுக்கு எதிராக விமர்சனங்களை பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஜொமோட்டோ அவரது பதிவுக்கு பதில் அளித்தது. அதில், புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என கேட்டுக்கொண்டது. இந்த விவகாரம் இணையதளத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
ordered paneer biryani from pk biryani house karve nagar pune maharashtra and I found a chicken piece in it(I am a vegetarian) I already got refund but this os still a sin since I am a religious person and it has hurt my religious sentiments.#pkbiryani #zomato pic.twitter.com/nr0IBZl5ah
— Pankaj shukla (@Pankajshuklaji2) May 13, 2024
- ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று பஜ்ரங் தள் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
- மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ராமரின் படம் இருக்கும் பேப்பர் தட்டில், பிரியாணி பரிமாறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
இதை அறிந்த உள்ளூர் மக்களும் பஜ்ரங் தள் உறுப்பினர்களும் கடையைச் சுற்றி, கும்பலாக திரண்டு ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உணவக உரிமையாளரை கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா அல்லது மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது.
- அம்பத்தி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை அவரது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.
திருப்பதி:
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத் புறப்பட்டு சென்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி தற்போது ஓய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை அவரது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.
ரவீந்திர ஜடேஜா, தீபக்சாகர், சிவம் துபே, மற்றும் முகேஷ் சவுத்ரி உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அழைப்பினை ஏற்று ஐதராபாத்தில் உள்ள அம்பத்தி ராயுடு வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அம்பத்தி ராயுடுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீருடை அணிந்திருந்தார்.
அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார். வீரர்கள் பாரம்பரிய ஐதராபாத் பிரியாணியை ருசித்து சாப்பிட்டனர்.
பின்னர் அவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அம்பத்தி ராயுடு ஓய்வில் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.
அவர் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டியின் போது ஐதராபாத் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து வருகிறார். வீரர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அம்பத்தி ராயுடு வீட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து அளித்த காட்சி.
- பிரியாணியின் மேல் வெள்ளை வலை போன்ற வடிவங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது.
- ஹீனா கவுசத் ஏற்கனவே பார்பி நிறத்தில் உணவுகளை தயாரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருந்தவர் ஆவார்.
உணவு பிரியர்களை கவருவதற்காகவே சமூக வலைதளங்களில் புதிய வகை உணவு தயாரிப்பு குறித்து வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் மும்பையை சேர்ந்த ஹீனா கவுசர் ராத் என்ற பெண் தயாரித்த 'ஸ்பைடர் மேன் பிரியாணி' குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் நீல நிற பிரியாணி நிறப்பப்பட்ட பாத்திரம் உள்ளது. அதில் பிரியாணியின் மேல் வெள்ளை வலை போன்ற வடிவங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது. ஹீனா, பிரியாணியின் பகுதிகளை வெளியே எடுக்கும்போது வலைகள் முழுவதுமாக சாப்பிடும் வகையில் இருப்பதாக விளக்குகிறார். அவர் சுவைக்காக அதில் மேலும் சில கலவைகளை சேர்க்கிறார்.
அவரது இந்த 'ஸ்பைடர் மேன் பிரியாணி' குறித்த வீடியோயை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஹீனா கவுசத் ஏற்கனவே பார்பி நிறத்தில் உணவுகளை தயாரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருந்தவர் ஆவார்.
- காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.
- பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து சாலை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). இவர் அங்குள்ள பழைய பஸ் நிலையத்தில் பிரியாணி கடை திறந்தார். இதற்கான திறப்பு விழா துண்டு பிரசுரத்தில் 10 ரூபாய் நாணயம் கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும். இது காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து காலை 11 மணிக்கு கடையை திறந்தபோது பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பிரியாணி வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த ஆத்தூர் டவுன் போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் கூட்டம் அதிகமாகவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து உரிமையாளர், 10 ரூபாய் பிரியாணி தீர்ந்துவிட்டது என அறிவிப்பு பலகை வைத்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
- விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளில் ஓட்டல்கள் நடத்தும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக விளங்கி வருகிறது.
வருடந்தோறும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து விமரிசையாக திருவிழா நடத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
89-வது ஆண்டாக நடை பெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்து அதிகாலை ஐந்து மணிக்கு கோவிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.
இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.
இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார்.
- நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயது டைல்ஸ் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். அவரது 2-வது மகளும் மனைவியுடன் சென்றுவிட்டார். இதனால் டைல்ஸ் வியாபாரி தனது மூத்த மகளுடன் வசித்து வந்தார்.
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த டைல்ஸ் வியாபாரி தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று தனது மூத்த மகளை பைக்கில் அழைத்துக் கொண்டு கொல்கத்தா சயின்ஸ் சிட்டிக்கு சென்றார்.
அங்குள்ள மேம்பாலத்தில் பைக்கை நிறுத்தினார். மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார். அதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கூச்சலிட்டு அவரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவர் மேம்பாலத்தில் இருந்து இறங்கவில்லை.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் நுனியில் நின்று கொண்டிருந்த வியாபாரியிடம் தயவு செய்து கீழே இறங்குங்கள்.
உங்கள் மகளின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள் என பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை. தொடர்ந்து பாலத்தில் நின்று கொண்டே இருந்தார்.
மேலும் அங்கிருந்த பொதுமக்களும் சத்தம் போட்டபடி அவரை தயவு செய்து குதிக்க வேண்டாம் என தெரிவித்தனர் .
அந்நேரத்தில் தான் போலீசாருக்கு ஒரு யோசனை வந்தது. கொல்கத்தா சயின்ஸ் சிட்டி நகரில் பிரபல ஓட்டல் ஒன்றில் ருசியான பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.
அது பற்றி டைல்ஸ் வியாபாரியிடம் கூறினர். தற்கொலை முடிவை கைவிட்டால் பிரபல ஓட்டலில் இருந்து பிரியாணி வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர்.
இதனை கேட்டதும் வியாபாரி தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு கீழே இறங்கினார். உடனடியாக அவருக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தனர்.
அதனை சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றார். இதனால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவத்தால் சயின்ஸ்சிட்டி மேம்பாலத்தில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
STORY | Kolkata man climbs down bridge after police lure him with job, biryani
— Press Trust of India (@PTI_News) January 23, 2024
READ: https://t.co/H6STQs1Qw3
VIDEO:
(Source: Third Party) pic.twitter.com/R7w4zslvvc
- பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது.
- முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
தருமபுரி:
தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாள் நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது. அந்த வகையில் தருமபுரி அடுத்த முக்கல் நாயக்கன்பட்டியில் கயிறு இழுக்கும் போட்டி 2 கைகளிலும் செங்கல் தூக்கி நிற்கும் போட்டி, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு தொடர் விளையாட்டுப் போட்டிகள், நடத்தப்பபட்டது.
அதன் ஒருபகுதியாக, நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு 'சாப்பாட்டு ராமன் போட்டி' என்ற பெயரில் அதிக அளவில் சாப்பிட்டு சாதனை படைப்பவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில்,1 கிலோ சிக்கன் பிரியாணியை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் போட்டி நடந்தது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரையிலும், பெண்களுக்கான 25 பேர் பங்கேற்ற இப்போட்டியில் பிரியாணி குதுகலமாக சாப்பிடும் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஷாலினி (15) என்பவர் 1 கிலோ சிக்கன் பிரியாணி 4 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். அதைத் தொடர்ந்து, 1 கிலோ சிக்கன் வருவலை குறைந்த நேரத்தில் சாப்பிடும் போட்டி நடந்தது. இப்போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
இதில் பச்சியப்பன் என்பவர் 1 கிலோ சில்லி சிக்கனை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். முனுசாமி என்பவர் 1 கிலோ சிக்கனை 7 நிமிடத்தில் சாப்பிட்டு 2-ம் பரிசு பெற்றார்.
இறுதி நிகழ்வாக, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ் குடிக்கும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் ராஜ்குமார் என்பவர் 2 நிமிடத்தில் 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடித்து முதல் பரிசை பெற்றார். இப்போட்டியால் முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
- பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதனை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்
- ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளிகில்ஸ் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.
அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது. இதனை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது தெரியவந்தது. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததற்காக அந்த ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்