என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boat service"

    • படகு போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • வசதிகளை அதிகரிப்பதற்காக மேலும் சில நாட்கள் தேவை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொழும்பு:

    இந்தியா-இலங்கை இடையிலான படகு போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு படகு போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் போக்குவரத்து தொடங்கவில்லை.

    இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் படகு போக்குவரத்து தொடங்குவது மேலும் தாமதமாகும் என இலங்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.

    "இந்தியாவுடன் படகு போக்குவரத்தை தொடங்க இலங்கை தயாராக உள்ளது. ஆனால் படகு சேவைக்காக இந்தியா தேர்ந்தெடுத்த துறைமுகத்தை மாற்றுவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிதாக நாகப்பட்டினம் துறைமுகத்தை தேர்வு செய்துள்ள இந்திய அதிகாரிகள், அங்கு வசதிகளை அதிகரிப்பதற்காக மேலும் சில நாட்கள் தேவை என்று தெரிவித்துள்ளனர்" என இலங்கை மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.

    • ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை இந்த துறைமுகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

    குஜராத்தின் கெவாடியாவில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழும கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் மத்தியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக்கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெருந்திறன் கொண்ட பசுமை வளத் துறைமுகத்தை உருவக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை இந்த துறைமுகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

    1980ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த, இந்தியா- இலங்கை இடையேயான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன.
    • படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் தினமும் பார்வையிட்டு வருகின்றனர். இதற்காக 3 படகுகள் காலை 8 மணி முதல் இடைவிடாது இயக்கப்பட்டு வருகின்றன.

    சுனாமிக்கு பிறகு அமாவாசை மற்றும் பவுர்ணமியின்போது கடலில் அடிக்கடி சீற்றம் ஏற்பட்டு வருவதால் படகு போக்குவரத்து தொடங்குவதில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன. இன்று காலையும் கடல் சீற்றமாக இருந்தது. அவ்வப்போது காற்றுடன் கூடிய மழையும் நீடித்தது. இதனால் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    தற்போது பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற காரணங்களால் ஏராளமான வடமாநில சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து உள்ளனர். மேலும் விவேகானந்தர் நினைவிடம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் நேற்று திறக்கப்பட்டு உள்ளது. அதனை பார்ப்பதற்காகவும் ஏராளமானோர் கன்னியாகுமரி வந்திருந்தனர்.

    அவர்கள் இன்று காலை 6 மணியில் இருந்தே படகு குழாமில் காத்திருந்தனர். ஆனால் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இதன் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து கூட்டத்தை சீர்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • மீன் பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் அமாவாசையையொட்டி இன்று 5-வது நாளாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் நீடித்தது. இதனால் வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் இன்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

    மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தடையை மீறி கடலில் இறங்குபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்கக்கடல் பகுதி மற்ற கடல் பகுதியை விட அதிகமான அளவில் சீற்றமாக இருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சகஜ நிலைக்கு திரும்பியபிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனால் படகு குழாமில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதே போல திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீன் பிடி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வட்டக்கோட்டைக்கும் உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    • இன்று அதிகாலை சூரியன் உதயம் காண ஏராளமானோர் கடற்கரையில் திரண்டிருந்தனர்.
    • படகுத் துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இன்று காலையில் இருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. கன்னியாகுமரியில் பெய்த மழையின் காரணமாக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

    இன்று அதிகாலை சூரியன் உதயம் காண ஏராளமானோர் கடற்கரையில் திரண்டிருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயம் தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதற்கிடையில் மழை காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்தும் காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை. இதனால் படகுத் துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழையின் காரணமாக படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்து உள்ளது.

    இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், கண்ணாடி பாலம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மழை காரணமாக கன்னியாகுமரி கடற்கரை மட்டும் இன்றி அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.

    கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடல் நீர் மட்டம் அடிக்கடி தாழ்ந்து உள்வாங்கி வருவதால் படகு போக்குவரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து பகல் 11 மணிக்கு பிறகே தொடங்கப்பட்டது.

    இன்றும் (வியாழக்கிழமை) 5-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு பலகை படகுத்துறை நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நுழைவுவாயில் முன்பு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையில் கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக பகல் 11 மணிக்கு பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதன்பிறகு சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    வைகை அணை பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களில் வைகை அணை முக்கிய இடமாக உள்ளது. இங்குள்ள பூங்கா பகுதியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இருப்பதால் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால் பூங்கா பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வந்தது. புல்தரைகள், கண்கவர் பொம்மைகள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், படகு குழாம் மேம்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. முதல் கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் படகு குழாம் கட்டும் பணி நிறைவடைந்தது.

    இதனையடுத்து 5 பெடல் படகுகள் இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி 3 ஆண்டுகளுக்கு பிறகு படகு சவாரி செயல்பாட்டுக்கு வந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் படகு குழாமில் 2 பேர் செல்லும் 3 பெடல் படகுகளும், 4 பேர் செல்லும் 2 பெடல் படகுகளும் உள்ளன. 4 பேர் அமர்ந்து செல்ல ½ மணி நேரத்துக்கு கட்டணமாக ரூ.170-ம், 2- பேர் அமர்ந்து செல்ல ½ மணி நேரத்துக்கு ரூ.90-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படகு சவாரி செய்யும்போது பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட் வழங்கப்பட உள்ளது.

    பாதுகாப்பு பணிக்கு இன்னும் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தற்காலிக பணியாளர்களை கொண்டே பராமரித்து வருகிறோம். தற்போது வாரத்திற்கு 2 நாட்கள் (சனி, ஞாயிறு) இயக்க முடிவு செய்துள்ளோம். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் முழு நேரம் இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

    வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அங்கு படகு சவாரி இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி படகு சவாரியை தொடங்கி வைத்தார்.
    தென்காசி:

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 71.15 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.91 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.30 அடியாகவும் உள்ளன. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 880 கன அடி தண்ணீரும், சேர்வலாறு அணைக்கு 587 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணைக்கு 205 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாகவே சீசன் களை கட்டியுள்ளது. ஜில்லென்ற காற்றும், சாரலும் குற்றாலத்தை குதூகலமாக்கி உள்ளன. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நாளுக்கு நாள் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று காலை குற்றாலத்தில் நல்ல மழை பெய்தது.

    தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. சுற்றுலா பயணிகள் காலையில் இருந்தே அதிகளவில் வர தொடங்கினர். மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் அலைமோதினார்கள். ஏராளமானோர் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளம் நிரம்பியது.

    இங்குள்ள படகு குழாமில் ஆண்டுதோறும் குற்றாலம் சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் படகு சவாரி நடத்தப்படுவது வழக்கம். வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அங்கு படகு சவாரி இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி படகு சவாரியை தொடங்கி வைத்தார்.

    இங்கு 29 படகுகள் உள்ளன. 4 இருக்கைகள் கொண்ட 16 பெடல் படகுகளும், 2 இருக்கைகள் கொண்ட 4 பெடல் படகுகளும், 5 துடுப்பு படகுகளும், ஒருவர் மட்டும் செல்லக்கூடிய கயாக் வகையை சேர்ந்த 4 துடுப்பு படகுகளும் சுற்றுலா பயணிகள் சவாரிக்காக உள்ளது. படகு சவாரிக்கு அரை மணி நேரத்துக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படுகிறது. 4 இருக்கைகள் கொண்ட படகுக்கு ரூ.150ம், 2 இருக்கைகள் கொண்ட படகுக்கு ரூ.120ம், துடுப்பு படகுக்கு ரூ.185ம், கயாக் வகை படகுக்கு ரூ.95ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. படகில் செல்பவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து உற்சாகமாக படகில் சென்றனர்.
    வெண்ணமடை குளம் தற்போது முழுவதுமாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அங்கு படகு சவாரி விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தென்காசி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். கேரளாவில் கடந்த மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதால் குற்றால சீசனும் அப்போதே தொடங்கி விட்டது.

    சீசன் தொடங்கிய சில நாட்களில் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பின்பு சில நாட்கள் தண்ணீர் வரத்து குறைந்தது.

    இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குற்றாலம் மலைப் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிகளில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மெயினருவி மற்றும் ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த அருவிகளில் குளிக்க தொடர்ச்சியாக 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. பின்பு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தடை நீக்கப்பட்டது.

    தற்போது குற்றாலம் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மெயினருவி, ஐந்தருவிகளில் நேற்று மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இன்று வெள்ளம் குறைந்தது. மெயினருவியில் ஆர்ச்சை தொட்டப்படியும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் சாரல் மழையில் நனைந்தபடி அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் வரும் தண்ணீர் வரத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    ஐந்தருவியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் அதிகளவில் கொட்டி வருவதால், படகு சவாரி நடக்கும் வெண்ணமடை குளத்திற்கு தண்ணீர் வரத்தொடங்கியது. அந்த குளம் தற்போது முழுவதுமாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அங்கு படகு சவாரி விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    படகு சவாரிக்காக பழைய படகுகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அதே போல் புதிதாக 20 படகுகளும் வந்துள்ளன. ஐந்தருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி நடக்கும் என நினைத்து படகு குழாமுக்கு வந்து செல்கிறார்கள். ஆனால் படகு சவாரி தொடங்கப்படாததை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். ஆகவே அங்கு விரைவில் படகு சவாரி தொடங்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
    கன்னியாகுமரி:

    தென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை பெய்யுமென்றும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளில் இருந்து தினமும் அதிகாலையில் ஏராளமான மீனவர்கள் கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். ஆனால் இன்று காலை இவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

    கடலுக்கு புறப்பட்ட சிலரும் அலைகளின் ஆக்ரோ‌ஷம், கடல் சீற்றம் காரணமாக கரைக்கு திரும்பினர். மேலும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரியில் நேற்றிலிருந்தே கடல் சீற்றம் காணப்பட்டது. அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்தன. இன்று காலையிலும் அலைகள் ஆக்ரோ‌ஷமாக மிரட்டின. இதனால் காலையில் சூரியோதயம் காணச் சென்ற சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா போலீசார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர்.



    கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. கோவளத்தில் தூண்டில் வளைவு சேதமானது.
    ×