என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Border-Gavaskar Trophy"

    • பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.
    • இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி, ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் மோதுவதாக இருந்தது. இந்நிலையில் அந்த 3 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியை இந்திய அணி தற்போது ரத்து செய்துள்ளது. மேலும் இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மற்றும் மூத்த வீரர்கள் வலை பயிற்சியை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

    ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • நிச்சயம் அணியில் பெரிய மாற்றம் இருக்கும்.
    • இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    வங்கதேசஅணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு இந்திய அணி மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வொயிட்-வாஷ் செய்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்துள்ளளது. மேலும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடரில் வொயிட்-வாஷ் ஆவதும் இதுவே முதல் முறை. இதனால் அணியில் உள்ள சில சீனியர் வீரர்களுக்கு பிசிசிஐ செக் வைத்துள்ளது.

    நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் ரன்கள் அடிக்காதது பெரும் ஏமாற்றத்தை தந்தது.

    தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால், சீனியர் வீரர்கள் அணியிலிருந்து படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    "நிச்சயம் அணியில் பெரிய மாற்றம் இருக்கும். பார்டர் கவாஸ்கர் தொடருக்காக இந்திய அணி நவம்பர் 10-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் அதில் மாற்றம் செய்ய முடியாது. ஆஸ்திரேலியா தொடர் சில வீரர்களுக்கு கடைசி போட்டியாக இருக்கலாம்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கின்றது.

    உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்றால் ரோகித், விராட், அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு சூப்பர் சீனியர்களும் இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம். பார்டர் கவாஸ்கர் தொடரின் முடிவு தான் அவர்களின் எதிர்காலம். ஒருவேளை மும்பை டெஸ்ட் தான் அந்த நான்கு பேரின் கடைசி சொந்த டெஸ்டில் ஒன்றாக இருக்கலாம்" என்று மேலும் கூறினார்.

    சீனியர் வீரர்களால் வாய்ப்புக்காக காத்திருக்கும் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்களுக்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அஷ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் தனது இடத்தை டெஸ்ட் அணியில் தக்க வைத்துள்ளார். ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல் ரெடியாக உள்ளார். ரோஹித் சர்மாவிற்கு பதில் அபிமன்யு ஈஸ்வரனும், விராட் கோலிக்கு பதில் ருதுராஜ் கைகுவாட்வும் உள்ளனர்.

    ரோகித், கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அஸ்வின் தற்சமயம் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோகித் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
    • பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

    இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்று பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்-ல் வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விளையாடுவது சந்தேகம் என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா விளையாடவில்லையெனில் அவருக்கு பதிலாக துணை கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    அதில், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விளையாடுவது முக்கியம். காயம்பட்டால் அது வேறு, ஆனால் அவர் வரவே இல்லை என்றால், துணை கேப்டன் தலைமையில் அணி களமிறங்க வேண்டும்.

    • பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி இரு குழுவாக ஆஸ்திரேலியா செல்கிறது. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில் அவர் இன்று புறப்படும் முதல் குழுவினருடன் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-வது குழு நாளை செல்கிறது.

    இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.

    பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

    • அவரை இது போன்ற பணியில் இருந்து விலக்கி வைப்பது தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லது.
    • செய்தியாளர்களுடன் உரையாடும் போது, அவரது நடத்தை, வார்த்தைகள் மெச்சும்படி இல்லை.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு அதிரடி தொனியில் வெளிப்படையாக பதில்கள் அளித்தார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பகிரங்கமாக சாடினார்.

    இந்த நிலையில் கம்பீருக்கு பொதுவெளியில் வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. அதனால் அவரை செய்தியாளர்கள் சந்திப்புக்கு அனுப்பாதீர் என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் தள பதிவில், 'கம்பீரின் செய்தியாளர் சந்திப்பை இப்போது தான் பார்த்தேன். அவரை இது போன்ற பணியில் இருந்து விலக்கி வைப்பது தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லது. அவர் அணிக்கு பின்னணியில் இருந்து மட்டும் வேலை பார்க்கட்டும்.

    செய்தியாளர்களுடன் உரையாடும் போது, அவரது நடத்தை, வார்த்தைகள் மெச்சும்படி இல்லை. இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அகர்கர் ஊடகத்தினரை எதிர்கொள்வதில் திறமையானர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • விராட் கோலி, ரோகித் சர்மா நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள்.
    • கடந்த காலங்களிலும் இவர்கள் விமர்சனங்களை தாண்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை குறைந்தது 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் தவிக்கிறது.

    இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பார்ம் பெரிய அளவில் இல்லை. அவர்களது பார்ம் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி, ரோகித் சர்மா நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள். கடந்த காலங்களிலும் இவர்கள் விமர்சனங்களை தாண்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி இருக்க இவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

    • பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
    • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    சிட்னி:

    பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள செய்தித்தாள்களில் இந்தியாவில் பேசப்படும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் அச்சிட்டுள்ளன.

    ஆஸ்திரேலியாவின் டெய்லி டெலிகிராப் நாளிதழில், வரவிருக்கும் தொடரின் ஈர்ப்பைப் படம்பிடித்து காட்டும் வகையில், யுகங்களுக்காக போராடுங்கள் (யுகோன் கி லடாய்) என்கிற இந்தி தலைப்புடன் கோலியின் பெரிய புகைப்படத்தை அச்சிட்டுள்ளது. இதேபோல், ஹெரால்ட் சன் என்கிற நாளேடு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கோலியின் வாழ்க்கைப் புள்ளிவிவரங்களை கொண்டுள்ளது.

    மேலும், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பின்பக்கங்களை அலங்கரிக்கிறார்.

    தி ஹெரால்டு சன் முழு பக்கத்தையும் ஜெய்ஸ்வாலுக்கு ஆங்கிலத்திலும், பஞ்சாபியிலும் தி நியூ கிங் என தலைப்பு போட்டுள்ளது.

    டெய்லி டெலிகிராப், வீரேந்திர சேவாக்கிற்குப் பிறகு இந்தியாவின் மிகவும் ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் என்று குறிப்பிடுகிறது

    • அதிவேகமும், நல்ல பவுன்சுக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை உருவாக்கியுள்ளோம்.
    • போக போக ஆடுகளத்தில் விரிசல் ஏற்பட்டால், ஆட்டத்தின் போக்கை மாற்றும்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆடுகளத்தன்மை முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் என்று பிட்ச் தலைமை பராமரிப்பாளர் இசாக் மெக்டொனால்டு இப்போதே எச்சரித்துள்ளார். சுழலுக்கு ஏற்ற ஆடுகளத்தில் விளையாடிவிட்டு வந்துள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முதல் போட்டியே பெரும் தலைவலியாக இருக்கப்போகிறது.

    இசாக் மெக்டொனால்டு கூறுகையில், 'இது ஆஸ்திரேலியா....அதிலும் பெர்த்... இங்கு தொடர்ச்சியாக அதிவேகமும், நல்ல பவுன்சுக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை உருவாக்கியுள்ளோம். சரியாக சொல்வது என்றால் கடந்த ஆண்டு எப்படி இருந்ததோ அதையே பின்பற்ற விரும்புகிறேன். சென்ற ஆண்டு இங்கு டெஸ்டின் போது (ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்) ஆடுகளத்தில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் விடப்பட்டு இருந்தது. இது நல்ல தொடக்க புள்ளியாக அமைந்தது.

    ஏனெனில் புற்கள் காரணமாக முதல் 3 நாட்கள் மிகுதியான வேகம் காணப்பட்டது. ஆனால் இரு அணியிலும் புயல்வேக பவுலர்கள் இருந்ததால் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த ஆண்டும் அது போலவே இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் சில பேட்ஸ்மேன்கள் இத்தகைய சூழலை சிறப்பாக எதிர்கொண்டு துரிதமாக ரன் எடுக்க முடிந்தது போல் இந்த முறையும் எடுக்க முடியும். இந்த டெஸ்ட் 5-வது நாளுக்கோ அல்லது கடந்த ஆண்டை போல 4-வது நாளின் கடைசி பகுதிக்கோ செல்லும் என்று நம்புகிறேன். போக போக ஆடுகளத்தில் விரிசல் ஏற்பட்டால், ஆட்டத்தின் போக்கை மாற்றும்' என்றார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வெறும் 89 ரன்னில் சுருண்டது. அதே சமயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் 'பவுன்ஸ்' பந்துகளில் உடலில் அடிவாங்கினர். குறிப்பாக லபுஸ்சேன் எனது வாழ்க்கையில் விளையாடிய கடினமான பிட்ச் இது தான் என்று அப்போது குறிப்பிட்டார்.

    வேகப்பந்து வீச்சாளர்களுக்கே ஆடுகளம் ஒத்துழைக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் தெளிவுப்படுத்திய நிலையில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலன்ட் ஆகியோரும் யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் புனே அணிக்காக நாங்கள் இணைந்து விளையாடி இருக்கிறோம்.
    • சுமித்தின் வலை பயிற்சி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராக இந்திய அணியினர் 10 நாட்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் குறித்து பேசுகையில், 'சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட கூடிய வீரர்களில் ஸ்டீவன் சுமித்தும் ஒருவர். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதிலும் கூட தனித்துவமான தொழில்நுட்பத்தை கடைபிடிக்கிறார். அதிகம் சிந்திக்கக்கூடிய ஒரு வீரர். இந்த முறை சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள நிச்சயம் புதிய திட்டத்துடன் தயாராக களம் இறங்குவார் என்று நினைக்கிறேன். அதை ஆடுகளத்தில் செயல்படுத்தும் முனைப்புடன் இருப்பார். டெஸ்டில் அவரது திட்டத்தை உடைத்தெறியும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளேன்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் புனே அணிக்காக நாங்கள் இணைந்து விளையாடி இருக்கிறோம். சுமித்தின் வலை பயிற்சி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். இதனால் அவர் எந்த பந்தை நன்றாக விளையாடுவார், எது அவருக்கு குடைச்சல் கொடுக்கும் என்பது எனக்கு தெரியும்' என்றார்.

    • 2-வது டெஸ்டுக்கு முன்பாக நிறைய நாட்கள் உள்ளது.
    • அத்துடன் இப்போது அணியில் ஆலோசகரை சேர்ப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக (0-3) இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த தொடருக்கு இந்திய அணிக்கு ஆலோசகராக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது சமூக வலைதள பதிவில், 'ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர்- கவாஸ்கர் கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் இருந்தால் அது அணிக்கு பெரிய அளவில் பலன் தரலாம். 2-வது டெஸ்டுக்கு முன்பாக நிறைய நாட்கள் உள்ளது. அத்துடன் இப்போது அணியில் ஆலோசகரை சேர்ப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது' என்று கூறியுள்ளார்.

    • கோலி அமைதியுடனும், கவனத்துடனும் விளையாடுவது மிகவும் முக்கியம்.
    • ஆஸ்திரேலிய தொடரில் கோலி தனது பார்மை மீண்டும் பெறுவார் என்று நம்புகிறேன்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சொந்த மண்ணில் இழந்தது. இதனால் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. இத்தொடரில் விராட் கோலியின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை.

    இந்த நிலையில் கோலிக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கோலி தனது கோட்டையான ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். கிங் எனும் பட்டத்தை நீங்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி எதிரணியிடம் பெற்றுள்ளீர்கள். எனவே கோலி பேட்டிங் செய்ய செல்லும் போது அது எதிரணியின் மனதில் இருக்கும்.

    இந்த தொடரின் முதல் 3 இன்னிங்சில் முதல் ஒரு மணி நேரம் கோலி அமைதியுடனும், கவனத்துடனும் விளையாடுவது மிகவும் முக்கியம். அந்த நேரங்களில் நீங்கள் வேகமாக இல்லாமல் பொறுமையுடன் நிதானமாக உங்களுடைய சொந்த வேகத்தில் விளையாடினால் அனைத்தும் சரியாகி விடும். ஆஸ்திரேலிய தொடரில் கோலி தனது பார்மை மீண்டும் பெறுவார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும் போது, ரோகித் சர்மாவின் இயல்பான தாக்குதல் பாணி, சக்திவாய்ந்ததாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக அவருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

    போட்டியின் முதல் சில ஓவர்களில் ரோகித் சர்மாவின் கால் அசைவதில்லை. அதனால் அவர் சிக்கலில் சிக்குகிறார். அவர் ஷாட் தேர்வை சரியாக எடுக்க வேண்டும். இது ரோகித் சர்மாவுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பேட்ஸ்மேன்களுக்கும் பொருந்தும்.

    ரோகித் சர்மா தனது இன்னிங்சின் தொடக்கத்தில் மிகவும் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் அவரால் இந்தியாவுக்குத் தேவையான ரன்களை எடுக்க முடியும் என்றார்.

    • பயிற்சியின் போது ஸ்லிப்பில் நின்று பீல்டிங் செய்த சுப்மல் கில்லுக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டு வெளியேறினார்.
    • அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய வீரர்கள் தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்றைய பயிற்சியின் போது ஸ்லிப்பில் நின்று பீல்டிங் செய்த சுப்மல் கில்லுக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் பயிற்சிக்கு திரும்பவில்லை. அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனால் அவர் முதல் டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் நாள் பயிற்சியின் போது பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சை எதிர்கொள்கையில் லோகேஷ் ராகுலுக்கு வலது முழங்கையில் பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×