என் மலர்
நீங்கள் தேடியது "Corona Vaccine"
- இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர்.
- தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது.
பீஜிங்
கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவை முற்றாக ஒழிக்க அந்த நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறது.
குறிப்பாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை செலுத்துவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது.
இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும், 57 சதவீதம் பேர் பூஸ்டர் டோசை பெற்றுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஊசியின்றி வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை சீனா பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகராக கருதப்படும் ஷாங்காய் நகரில் நேற்று முதல் வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து, ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது.
கொரோனாவுக்கு வாய் வழியாக வழங்கப்படும் உலகின் முதல் தடுப்பு மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2021, அக்டோபர் 21-ம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது.
- கடந்த ஜூலை 17-ம் தேதி 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியது.
புதுடெல்லி:
உலக அளவில் கொரோனா வைரஸ் 65 கோடிக்கும் கூடுதலானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது.
அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் மத்திய அரசு செலுத்தி வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது. கடந்த ஜூலை 17-ம் தேதி 200 கோடி டோஸ் செலுத்தி புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில், தொடர்ந்து நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி முகாமில் போடப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது இன்று 220 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- விலையை மத்திய அரசும் அங்கீகரித்து விட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
2 தவணைகளாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. அதன் பரிசோதனை தரவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்டது.
இந்த தரவுகளை மத்திய அரசு ஆய்வு செய்து மூக்கு வழியே செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு கடந்த 23-ந்தேதி அனுமதி அளிக்கப்பட்டது.
பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும், பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பு மருந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விலையை மத்திய அரசும் அங்கீகரித்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி ஒரு டோசின் விலை ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியும், மருத்துவமனை கட்டணமும் உண்டு. இதனால் அனைத்தையும் சேர்த்து ரூ.1000 ஒரு டோசுக்கு செலவாகும்.
ஒரு டோசில் 4 சொட்டுகள் கிடைக்கும். ஒருவருக்கு 2 சொட்டுகள் செலுத்தப்படும். இந்த தடுப்பு மருந்தை கோவேக்சின், கோவிஷீல்டு செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக எடுத்துக்கொள்ளலாம்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஜனவரி 26-ந்தேதிக்குள் கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
- மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பல கட்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளது.
- எந்த பக்க விளைவுகளும் ஏற்படப்போவதில்லை.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை தயாரித்து வழங்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தார், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்து 'பிபிவி 154' என்ற பெயரில் மூக்கு வழியே செலுத்துகிற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த மூக்கு வழி தடுப்பு மருந்து, 'இன்கோவாக்' என்ற வணிகப்பெயருடன் சந்தைக்கு வருகிறது. இந்த தடுப்பு மருந்துக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை கடந்த நவம்பர் மாதம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியது. அதைத் தொடர்ந்து இந்த தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக (முன்எச்சரிக்கை டோஸ்) வழங்குவதற்கு கடந்த 23-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்த தடுப்பு மருந்து 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளில் சோதிக்கப்பட்டு, வெற்றி காணப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து கோ-வின் தளத்தில் இப்போது கிடைக்கிறது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான இந்த தடுப்பு மருந்து ஒரு 'டோஸ்' விலை ரூ.800 ஆகும். அதே நேரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இந்த தடுப்பு மருந்து ரூ.325 என்ற விலையில் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு மருந்து, பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தாக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தார் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை மீண்டும் செலுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்குறி மக்கள் மனதில் எழுந்தது. இது தொடர்பாக கொரோனா தடுப்புக்குழு தலைவர் டாக்டர் அரோரா விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை பூஸ்டராக பயன்படுத்தலாம் என்று சொல்லி உள்ளனர். ஆனால் ஏற்கனவே கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இதுவரை கொரோனாவுக்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மூக்கு வழியாக எடுத்துக் கொள்ளும் தடுப்பு மருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் 4-வது முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே 2 தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 3-வது முறையாக பூஸ்டர் தடுப்பூசியும் பெற்று உள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நன்றாகவே உள்ளது.
எனவே 4-வது பூஸ்டர் தடுப்பூசிக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை மிக எளிதாக பயன்படுத்தலாம். இதற்கு முன்பு தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் உள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொண்டால் நல்லது.
மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பல கட்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜனவரி 1-ந்தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணத்திற்கு முன் பயணிகள் தங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இங்கிலாந்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னா், சுமார் 10 சதவீதம் பேருக்கு, அதாவது 8 லட்சம் பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டன.
- பக்க விளைவுகள் லேசாகவோ, மிதமாகவோ இல்லை. அதிகமாக இருந்தது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்டவா் இங்கிலாந்து மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா. கொரோனாவுக்கு எதிரான எம்ஆா்என்ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் வலியுறுத்துவோரில் முன்னணியில் உள்ளாா். இந்தியா வந்துள்ள அவா், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:-
அமெரிக்காவின் பைசர், மாடா்னா போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் எம்.ஆர்.என்.ஏ. கொரோனா தடுப்பூசிகள் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளன. எனவே, அந்த தடுப்பூசிகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் குரல்கள் எழுந்துள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் வரை, எம்.ஆர்.என்.ஏ. மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்பட்டு, அதன் முடிவுகள் ஆய்விதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது. அந்த முடிவில், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம், இளவயதினருக்கும் முதியவா்களுக்கும் ரத்தம் உறைவது, சில உயிரிழப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் பைசர் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை விட, கோவிஷீல்ட் தடுப்பூசி மிக மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னா், சுமார் 10 சதவீதம் பேருக்கு, அதாவது 8 லட்சம் பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டன. அந்தப் பக்க விளைவுகள் லேசாகவோ, மிதமாகவோ இல்லை. அதிகமாக இருந்தது. இதுபோல முன் எப்போதும் நடந்தது இல்லை.
கடுமையான பக்க விளைவுகள் காரணமாக சில நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அப்படி இருக்கும்போது, இந்தியாவில் அந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவது ஏன்? அந்தத் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும்.
கோவேக்சின் தடுப்பூசியின் தரவுகளை ஆராய்ந்ததில், அந்தத் தடுப்பூசியால் குறிப்பிடும்படி பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது போலவே தென்படுகிறது. ஆனால், பிற தடுப்பூசிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும் நிலையில், கோவேக்ஸினும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.
90 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியா்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர் கொண்டனா். அவா்களுக்கு உடலில் இயற்கையாக நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இயற்கையாக உருவாகும் நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் ஆற்றல் வாய்ந்தது.
அது கடுமையான உடல்நல பாதிப்புகளில் இருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே, கொரோனா குறித்து இந்திய மக்களும் அரசும் கவலை அடைய வேண்டாம்.
இனி இந்தியாவில் யாருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதேபோல பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அதன்மூலம் பக்க விளைவுகள் அதிகரிக்கலாம். மென்மேலும் தடுப்பூசி தவணைகளை செலுத்திக் கொள்ளும்போது கடுமையான பக்க விளைவுகளால் அவதிப்பட அதிக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொரோனா தொற்று மேலாண்மையில் இது வலுவான பதிலளிப்பாக அமைந்தது.
- கொரோனாவை கட்டுப்படுத்தி, பொருளாதார செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டன.
புதுடெல்லி :
சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா தொற்று, உலக நாடுகள் எல்லாவற்றிலும் பரவியது. இந்த தொற்றின் ஆரம்ப காலத்திலேயே இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டன.
இந்தத் தடுப்பூசியால் நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது, உயிரிழப்புகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளால் 34 லட்சம் பேரது உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வுத்தகவல் தெரிவிக்கிறது.
'பொருளாதாரத்தை சீர்ப்படுத்துதல்: இந்தியாவின் தடுப்பூசி மற்றும் தொடர்புடைய சிக்கல்களில் பொருளாதாரத்தின் தாக்கத்தை மதிப்பிடுதல்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ள இந்த ஆய்வு கட்டுரையை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவத்தினால் 2020-ம் ஆண்டு, ஜனவரி மாதம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தொற்று மேலாண்மை தொடர்பான செயல்முறைகள், கட்டமைப்புகள் இந்தியாவில் செயல்படத்தொடங்கி விட்டன.
பிரதமர் மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அரசு, ஒட்டுமொத்த மக்கள்சமூகம் என்ற அணுகுமுறை ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது. கொரோனா தொற்று மேலாண்மையில் இது வலுவான பதிலளிப்பாக அமைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-
* கொரோனா தொற்றைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், தினசரி பாதிப்பின் அளவு 7,500 என்ற அளவில் (2020 ஏப்ரல் 11 நிலவரம்) இருந்தது.
* மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஊரடங்கு போட்டிருக்காவிட்டால், கொரோனா தினசரி பாதிப்பின் அளவு அப்போது 2 லட்சம் என்ற அளவுக்கு சென்றிருக்கும்.
* ஊரடங்கால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,500 என்ற அளவிலேயே இருந்தது.
* இந்தியாவில் கட்டுப்படுத்துதல், நிவாரணங்கள், தடுப்பூசி நிர்வாகம் ஆகிய 3 அம்சங்களால் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொரோனாவை கட்டுப்படுத்தி, பொருளாதார செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டது. தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி வலுப்படுத்தப்பட்டது.
* இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் தடுப்பூசி திட்டம், செயல்படுத்தப்பட்டதால் 34 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செர்பிய வீரர் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
- இதனால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் துபாய் ஓபன் டென்னிசில் அரையிறுதியில் தோற்ற போதிலும் ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் முதலிடத்தில் இருப்பது இது 379-வது வாரமாகும். அதிக வாரங்கள் முதலிடத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.
இந்நிலையில், இண்டியன்வெல்ஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் முறையே வருகிற 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும், 22-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரையும் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடைக்காததால் 'நம்பர் ஒன்' வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகி இருக்கிறார்.
கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோகோவிச் தனக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர் இந்தப் போட்டியில் இருந்து பின்வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொள்ள மெல்போர்ன் சென்ற ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதேபோல் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியையும் அவர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் அளவில் கொரோனா தொற்று பரவலை நிர்வகிப்பதற்கு வட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இருப்பது அவசியம்.
- பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று அதிகரிப்பு காணப்படுவது குறித்தும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
புதுடெல்லி:
கொரோனா தொற்று தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து சுகாதார மதிப்பாய்வு செய்ய பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறையினர் பங்கேற்று மதிப்பீடுகளை மேற்கொண்டனர். நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பு, தளவாடங்கள், மருந்துகள் போன்றவை தயார் நிலையில் வைப்பது மற்றும் தடுப்பூசி பிரசாரத்தில் கவனம் செலுத்துவது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், சர்வதேச அளவிலும் கொரோனா நிலைமையைப் பற்றிய விரிவான விளக்கத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் செயலர் ராஜேஷ் பூஷண் வழங்கினார்.
நாட்டில் பதிவான கொரோனா தொற்றுகளில் பெரும்பான்மையாக தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பதிவாகி உள்ள புள்ளிவிவரத் தகவல்களை அவர் எடுத்துரைத்தார்.
மேலும், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று அதிகரிப்பு காணப்படுவது குறித்தும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
பின்னர் பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.மிஸ்ரா கூறுகையில், உள்ளூர் அளவில் கொரோனா தொற்று பரவலை நிர்வகிப்பதற்கு வட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இருப்பது அவசியம். மாநிலங்களுடன் கலந்தாலோசித்து அதை உறுதிப்படுத்தலாம் என்று தெரிவித்தார்.
மேலும், இன்புளூயன்சா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்ட பரிசோதனை மாதிரிகளை முழு மரபணு வரிசை முறைக்கான ஆய்வுகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்தவும் கேட்டுக்கொண்டார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் எந்த முன் அனுமதியும் இல்லாமல் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தேவையான கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
- மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டும் வந்தது.
புதுடெல்லி:
கொரோனா தொற்றுக்கு பிறகு இளம் வயதில் மாரடைப்பில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என்று பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
இதை மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டும் வந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளால் இளைஞர்களிடையே திடீர் மரணம் ஏற்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில், மரபு தொடர்பான நோய்கள், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால்தான் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
- அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு.
- மருத்துவ நிபணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.
இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது.
இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகள் ஆய்வு மற்றும் மருத்துவ நிபணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்ப வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி இருந்தது.
- பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.
உலகளவில் பெரும் பாதிப்புகளையும், லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொடூர நோயாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டினர்.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடலில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
அந்த வரிசையில், தற்போது கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக என தகவல் வெளியானது.
கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி இருந்தது. இதில் பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு இதன் பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், கோவாக்ஸ் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த ஆய்வு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும், ஆய்வு முடிவுகளில் தங்கள் பெயரை நீக்க வேண்டும், திரும்பப் பெறப்படாவிட்டால், சட்டரீதியாக மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சுமார் 30 சதவீத பேருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக வெளியான அறிக்கை முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வறிக்கையை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.