search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Covid19"

    • கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • கடந்த நான்கு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. கேரளாவில் 266 பேரும், கர்நாடகாவில் 70 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது.

    கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,420 ஆக அதிகரித்துள்ளது.

    இதனிடையே, பாட்னா, கயா மற்றும் தர்பங்கா விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு பீகார் அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த நான்கு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உலக அளவில் 8,50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் ஒமைக்ரானில் இருந்து 2 வகை புதிய வைரஸ்கள் உருவாகி இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.
    • கொரோனா வைரஸ் தொற்று பற்றி கண்டுபிடிக்க வெறும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே போதுமானதல்ல.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் முற்றிலும் இல்லை என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக அவதாரம் எடுத்து அது தனது வேலையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை தமிழக பொது சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடித்து உள்ளது.

    உருமாறி உருமாறி வரும் வைரசை கண்டுபிடிப்பதற்காக மரபணு பரிசோதனை நிலையம் தமிழக அரசு சார்பில் ரூ.4 கோடி செலவில் கொரோனா காலத்தில் அமைக்கப்பட்டது.

    இதனால் புது புது வைரஸ்கள் அவ்வப்போது அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒமைக்ரானில் இருந்து 2 வகை புதிய வைரஸ்கள் உருவாகி இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர். இது கொரோனா வைரசை போல் வீரியமிக்கது அல்ல. ரொம்ப சாதுவாகத்தான் இருக்கிறது. இது தாக்குபவர்கள் உடல்வலி, காய்ச்சல் என்று ஓரிரு நாட்கள் புரட்டி எடுத்து விடுகிறது. ஆபத்து எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    இந்த புதுவகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றி அதிகாரி கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் தொற்று பற்றி கண்டுபிடிக்க வெறும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே போதுமானதல்ல. அது எந்த வகை வைரஸ் என்பதை கண்டுபிடிக்க மரபணு பரிசோதனை அவசியம். கொரோனா நெருக்கடி காலத்தில் உடனுக்குடன் கண்டுபிடித்து கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இந்த மாதிரி ஆய்வகம் இருப்பது தமிழகத்தில் மட்டும்தான்.

    2021-ல் ஒமைக்ரான் வகை வைரஸ் பரவியதை கண்டுபிடித்தது. நைஜீரிய நாட்டு பயணியிடம் இருந்து நமது நாட்டுக்குள் வந்தது உறுதி செய்யப்பட்டது.

    வெளிநாடுகளில் மட்டும்தான் இந்த வகை இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் 'கிளஸ்டர்' உருவானது. அதை கண்டுபிடித்ததால் வேகமாக கட்டுப்படுத்த முடிந்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எக்ஸ்.பி.பி. என்ற வகை வைரசை கண்டுபிடித்தோம். இது இரண்டு வகையான ஒமைக்ரான் வைரஸ் சேர்ந்து உருவாவது.

    எனவே இது வீரியம் மிகுந்ததாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் வரை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இந்த வகை வைரஸ் தாக்கியதில் 2 மற்றும் 3 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 81 சதவீதம் பேர். எனவே நாம் எடுத்துக் கொண்ட கொரோனா தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம் குறைந்து இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

    இன்புளூயன்சா வந்த பிறகு அது முற்றிலுமாக ஒழியவில்லை. பருவ காலங்களில் வரத்தான் செய்கிறது. எனவே வெளிநாடுகளில் அதில் இருந்து தப்பிக்க தடுப்பூசி கண்டுபிடித்து செலுத்திக் கொள்கிறார்கள்.

    அதே போல் இனி கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகள் தயாரிக்கும் போது தற்போது எந்த வகை வைரஸ் சுற்றிக் கொண்டிருக்கிறதோ அதில் இருந்து தயாரிக்க வேண்டும்.

    இந்த மாதிரி அடுத்தகட்ட ஆய்வுக்கு நாம் கண்டுபிடித்து இருக்கும் வைரஸ் மற்றும் அது தொடர்பான தரவுகள் கைகொடுக்கும் என்றார்.

    தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை உலக அளவில் பிரபலமான 'லான்செட்' மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.

    • கொரோனா தாக்கத்தால் எண்ணிலடங்கா உயிரிழப்பும், தொழில் முடக்கமும், அளவிட முடியாத பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.
    • ஆய்வகத்திலிருந்துதான் வந்தது என கூறும் சாத்தியக்கூறுகளை உளவுத்துறை அமைப்புகளால் இன்னும் நிராகரிக்க முடியவில்லை.

    சீனாவின் வுஹான் மாகாணத்தில் 2019ம் வருட இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா (Corona) எனப்படும் வைரஸ் தொற்று, மிக அதிக வேகத்துடன் உலகம் முழுவதும் பரவி, பல லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இதனால், பல நாடுகள் லாக்டவுன் எனப்படும் பொது முடக்கம் அறிவிக்கும் சூழ்நிலை உருவானது. கொரோனாவின் தாக்கத்தால் எண்ணிலடங்காத உயிர்ப்பலியும், தொழில் முடக்கமும், அளவிட முடியாத பொருளாதார இழப்பும், பல துறைகளின் வீழ்ச்சியும் ஏற்பட்டது.

    இதற்கு காரணம் சீனாவிலிருந்து அந்த வைரஸ் உருவானதுதான் என பல நாடுகள் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள பரிசோதனை நிலையத்தில் இருந்து இந்த வைரஸ் உருவானதா எனும் குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்கா விசாரணை செய்து வருகிறது.

    இந்நிலையில், சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் நடத்திய ஆய்வுகளிலிருந்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் நான்கு பக்க அறிக்கை வெளியாகி உள்ளது.

    அதில், "கொரோனா வைரஸ், இந்த ஆய்வகத்திலிருந்துதான் வந்தது என கூறும் சாத்தியக்கூறுகளை உளவுத்துறை அமைப்புகளால் இன்னும் நிராகரிக்க முடியவில்லை. இருப்பினும், தொற்றுநோயின் தோற்றத்தையும் கண்டறிய முடியவில்லை. மத்திய புலனாய்வு முகமை மற்றும் வேறொரு நிறுவனத்தால் கோவிட்-19 வைரஸின் துல்லியமான தோற்றத்தை தீர்மானிக்க முடியவில்லை, ஏனெனில் இரண்டு (இயற்கை மற்றும் ஆய்வக) அனுமானங்களை இந்த கருத்துகள் நம்பியுள்ளன. மேலும், முரண்பட்ட அறிக்கைகளுடன் சவால்களையும் இந்த கருத்துகள் எதிர்கொள்கின்றன" என்று கூறியிருக்கிறது.

    வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவனம், கொரோனா வைரஸ்கள் தொடர்பாக விரிவான ஆய்வுகள் நடத்தியிருந்தாலும், கொரோனா வைரஸ் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில், அங்கிருந்துதான் கசிந்துள்ளது என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.

    "வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியின் தொற்றுநோய் பரவலுக்கு முந்தையகால ஆராய்ச்சியானது, ஸார்ஸ்கோவ்-2 அல்லது அதன் முன்னோடியை உள்ளடக்கியதுதான் என்பதற்கு எந்த அறிகுறியும் எங்களிடம் இல்லை. கோவிட் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வகையில் வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவன பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி தொடர்பான சம்பவம் அங்கு நிகழ்ந்தது என்பதற்கான நேரடி ஆதாரமும் இல்லை" என அந்த அறிக்கை கூறியிருக்கிறது.

    • பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
    • தடுப்பூசி போடாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஒட்டாவா:

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர்  பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிக்கப்பட்டது.

    இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

    எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பொது சுகாதார வழிகாட்டு தல்களைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தற்போது நன்றாக இருக்கிறேன்.

    எனவே, நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நமது சுகாதார அமைப்பையும், மற்றவர்களையும் மற்றும் நம்மையும் பாதுகாப்போம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஜஸ்டின் ட்ரூடோ முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தனிமைப்படுத்துல் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார்.

    • நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
    • உலக நாடுகளில் இதன் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.

    முதல் அலை, இரண்டாவது அலை என்று உலக நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. புதிய நோய் பாதிப்பில் உலகமே பாதிக்கப்பட்ட நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது, இந்த பாதிப்பில் இருந்து எப்படி விடுபடுவது என்ற பணிகளில் மருத்துவத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.

    நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின் இந்த மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. இவ்வாறு பல்வேறு நிலைகளில் கடந்த சில ஆண்டுகளாக உலக நிகழ்வுகளை கொரோனா வைரஸ் மொத்தமாக பாதித்தது. கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வீட்டில் இருந்து பணியாற்றும் முறை, பெரும்பாலான பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றம் என்று ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

    கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து இருப்பது, உலக நாடுகளில் இதன் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பது என்று பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது.

    "எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது எங்களுக்கு தெரிந்தவரையிலான கணக்கு மட்டும் தான்," என்று உலக சுகாதார அமைப்பு டுவிட் செய்துள்ளது. 

    • ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
    • மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல்

    காரைக்கால்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    • தொற்று வேகமாக பரவுவதற்கான காரணங்கள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பானது, கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 7026 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு பிரதமர் சில ஆலோசனைகளை வழங்க உள்ளார். 

    • சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியது.
    • ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.

    பீஜிங்:

    சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 வைரஸ் காரணமாக அந்நாட்டில் நோய் தொற்று மீண்டும் எழுச்சி பெற்றது.

    அங்கு தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியானது.

    ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு சரியான தகவல்களை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் சீனாவில் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசின் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் ஆ ஜூன்யூ கூறும்போது, நடப்பு சந்திர புத்தாண்டு விடுமுறை காலத்தில் மக்கள் நடமாட்டம் தொற்று நோயை பரப்பலாம். சில பகுதிகளில் தொற்று நோய் அதிகரிக்கலாம்.

    ஆனால் 2-வது கொரோனா அலை அடுத்த காலத்தில் வருவதற்கான சாத்தியமில்லை. ஏனென்றால் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2அல்லது 3 மாதங்களில் மீண்டும் அதிக அளவில் கொரோனா பரவல் வருவதற்கான சாத்தியக் கூறுங்கள் தொலைவில் உள்ளன என்றார்.

    இதற்கிடையே ஜனவரி மாத நிலவரப்படி சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் ஆஸ்பத்திரியில் உயிரிழந்துள்ளனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நிபுணர்கள் கூறும் போது, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக கணக்கிடப்படுகிறது. ஏனென்றால் வீட்டில் இறந்தவர்களை தவிர்த்து உள்ளனர். மேலும் பல டாக்டர்கள், கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடுவதில்லை என்றனர்.

    • பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11-ந்தேதி 90 கோடியை கடந்துவிட்டதாக தகவல்
    • கொரோனா வைரசால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகள் பதிவாகி உள்ளன

    பீஜிங்:

    சீனாவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதையடுத்து மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதை சீன அரசு மறுத்தது. கொரோனாவுக்கு பலியானவர்கள் குறித்த எண்ணிக்கையை சீனா மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11-ந்தேதி 90 கோடியை கடந்துவிட்டதாகவும் நாட்டில் 64 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சீனாவில் கடந்த 35 நாட்களில் மட்டும் கொரோனா தொடர்பான பாதிப்புகளால் சுமார் 60000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை சீனாவில் 59,938 கொரோனா தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்திற்கு உட்பட்ட மருத்துவ நிர்வாக அலுவலக தலைவர் ஜியோ யாஹுய் செய்தியாளர் சந்திப்பில் கூறி உள்ளார். கொரோனா வைரசால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகளும், கொரோனாவுடன் இணைந்த அடிப்படை நோய்களால் 54,435 இறப்புகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார்.

    • புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும்
    • இந்தியா வந்ததும் 2 சதவீத ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்

    புதுடெல்லி:

    சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளது.

    சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச விமானங்களில் பயணிப்பவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அவர்கள் இந்தியா வந்ததும் 2 சதவீத ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • சீனாவில் இருந்து வரும் சர்வதேச விமான பயணிகள் கொரோனா தொற்றில்லா சான்றிதழை கொண்டு வரவேண்டும்.
    • அமெரிக்க குடிமக்கள் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது. சீனாவில் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட நிலையில், ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டது போன்ற வீடியோக்களும் வெளிவந்து திடுக்கிட செய்தன.

    தினமும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீன பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் விதித்துள்ளன. கனடாவும் இந்த முடிவை பின்பற்ற முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து வரும் சர்வதேச விமான பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான தொற்றில்லா சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவும் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளது. இதன்படி, சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் கொரோனா தொற்றில்லா சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை வருகிற ஜனவரி 5-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்க குடிமக்கள் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும் அறிவுறுத்தி உள்ளன.

    இதுபற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சீன மக்கள் குடியரசில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவில் அதன் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சீனாவிடம் இருந்து, தொற்றியல் மற்றும் வைரசின் மரபணு தொடர் பற்றிய போதிய தகவல்கள் கிடைக்க பெறாமலும், வெளிப்படையற்ற தன்மையாலும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என தெரிவித்து உள்ளது.

    சீனா தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிட போவதில்லை என அறிவித்த போதிலும், நாள்தோறும் 9 ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர் என்று கசிந்த அதிர்ச்சி தகவலை தொடர்ந்து, அமெரிக்கா இந்த முடிவை அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தற்போது உலகம் முழுவதிலும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தைப் பொருத்தவரை 1.25 லட்சம் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 72 ஆயிரம் படுக்கைகளை, கொரோனா பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் தயார் நிலையில் உள்ளன. மேலும் 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளன. ஆக்சிஜனைப் சிலிண்டர்கள், கான்சென்டேட்டர்கள், ஜெனரேட்டர்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளன. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் ரேண்டம் முறையில் 2 சதவீதம் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று முதல் அந்த பரிசோதனைகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 4 பன்னாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பயணிகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கவும், யாருக்காவது அதிகமான வெப்பநிலை கண்டறியப்பட்டால், அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    ×