என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "crackers factory"
- ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
- புகாரின் பேரில் வழக்குப்பதிவு கைது செய்து விசாரணை.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மாரனேரியில் பெப்சி என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து பட்டாசு ஆலை விதி மீறி இயங்கியதாக கருதி கடந்த மார்ச் 1-ந்தேதி தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் வேறு ஆலைகளுக்கு சென்றுவிட்டனர். ஆனாலும் ஆலை செயல்படுவது போல் தினமும் பலர் அந்த ஆலைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆலையில் சட்ட விரோத மாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாசில் தார் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆலையில் அதிரடியாக ஆய்வு செய்த னர்.
இந்த ஆய்வில் 50 தொழி லாளர்களை வைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறி யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் 'சீல்' வைத்தனர். மேலும் மாரனேரி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் உரிய பயிற்சி பெற்ற போர்மேன்களை மட்டுமே பணியில் அமர்த்தி உரிய விதிமுறைகளை பின்பற்றி அவரது மேற்பார்வையில் மருந்து கலவை செய்ய வேண்டும் என்று கலெக்டர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதில் முரண்பாடு இருந்தால் ஆலை மீதும், அந்த போர்மேன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் விதிகளை மீறி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் அதிகாரிகள்.
சென்னை:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதுபோன்ற சம்பவம் இனி ஏற்படாமல் தடுக்கும் விதமாக பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்களை அமைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தீபாவளி முடியும்வரை பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
சிவகாசி:
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9-ந் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சட்ட விரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
விதிமுறைகளை மீறியதாக இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த பட்டாசு ஆலையை சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக வருவாய் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த பட்டாசு ஆலைக்கு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லோடு ஆட்டோவில் வந்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த செங்கமலபட்டி கிராம மக்கள் பட்டாசு ஆலை இருக்கும் பகுதிக்கு திரண்டு சென்றனர். அப்போது பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பேன்சிரக பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.
இது குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொள்ளையர்களை விரட்டினர். இதனை கண்ட கொள்ளையர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்கள் லோடு ஆட்டோ ஆகிவற்றை விட்டுவிட்டு தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர்.
கொள்ளையர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள்கள், லோடு ஆட்டோவை போலீசாரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனா். கிராம மக்கள் ஒப்படைத்த மோட்டார் சைக்கிளில் ஒரு மோட்டார் சைக்கிளில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த போலீஸ் வாகனத்தை விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
பட்டாசு ஆலையில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை முயற்சி நடைபெற்ற செங்கமலபட்டி பட்டாசு ஆலையில் தற்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பட்டாசு ஆலையில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.
- காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 14 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மேலும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பட்டாசு ஆலையில் இருந்த 10 அறைகள் தரைமட்டமாகின.
- மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 13 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு விதிமீறலே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆலையின் போர்மேன், குத்தகைதாரர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடிபொருள் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- எந்த திசையில் இருந்து பார்த்தாலும் கம்பீரமாக காட்சியளிக்கும் ஐவர் மலை பழனியின் அடையாளங்களில் ஒன்றாகும்.
- ஸ்டெர்லைட், மீத்தேன் எதிர்ப்பு போன்று மிகப்பெரிய போராட்டம் பழனி நகரிலும் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பழனி:
வெண்முகில் இறங்கிய மலை உச்சியிலிருந்து மழைநீர் வழியும் அழகு ஐவர் மலைக்கு உரியது. எந்த திசையில் இருந்து பார்த்தாலும் கம்பீரமாக காட்சியளிக்கும் ஐவர் மலை பழனியின் அடையாளங்களில் ஒன்றாகும். 1000 ஆண்டுகளுக்கு முன்பு சமணப்பள்ளி இருந்த இடம் இது.
5 தீர்த்தங்கரர்கள் வாழ்ந்த இடம் என்பதால் ஐவர் மலை என பெயர் பெற்றது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மலை மீது முருகனும், விநாயகரும், திரவுபதியும் மக்களின் வழிபாட்டு கடவுள்களாக இருந்து வருகின்றனர். நீண்டகாலமாக ராமலிங்க அடிகளாரின் தொண்டர்கள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எனும் அமைப்பை நடத்தி வருகிறார்கள்.
ஐவர் மலைக்கும் அதற்கு நேர் எதிர்புறம் உள்ள துரியோதனன் மலைக்கும் இடையே செல்லும் ராஜபாட்டை பன்னெடுங்காலமாக உள்ளது. முன்னொரு காலத்தில் ஐவர் மலைக்கு மேற்குப் பக்கம் உள்ள கொழுமம் சர்வதேச சந்தையாக இருந்தது. கடல் மார்க்கமாக கப்பல்கள் மூலம் கேரளா வழியாக வரும் வெளிநாட்டு வணிகர்களுக்கான பொருட்கள் உள்நாட்டிலிருந்து ராஜபாட்டை வழியாக வண்டிகளில் கொண்டு செல்லப்படும். 2 மலைகளைச் சுற்றிலும் தொல்குடி மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
ஐவர் மலையைச் சுற்றிலும் விவசாய பூமிகள் நிறைந்துள்ளன. விவசாயத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடிமக்கள் அமைதியான சுற்றுச்சூழலுடன் நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே பழனி கொழுமம் ரோட்டிற்கு தெற்குப் பக்கம் நவீன ராட்சத செங்கற்சூளைகள் நிரம்பி வழிகிறது. தற்போது ரோட்டிற்கு வடக்குப் பக்கம் 250 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய வெடிமருந்து தொழிற்சாலை அமைவதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகிறது. அதுவும் ஐவர் மலையை ஒட்டி அமைக்கப்படுகிறது. நிலத்தடி நீரும் தூய காற்றும் மாசு படும். மனிதர்களும் விலங்குகளும் பல்லுயிரிகளும் புல் பூண்டுகளும் வாழத் தகுதியற்ற பாலை நிலமாக மாறிவிடும். விபத்து ஏற்பட்டால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் வெடி மருந்து தொழிற்சாலை கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் என பாப்பம்பட்டி மக்கள் மத்தியில் உறுதியளித்தார். ஆனால் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களைக் கூட அறியாமல் மாவட்ட நிர்வாகம் வெடிமருந்து தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது என விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை மூடி மறைத்து ஏற்றிக்கொண்டு வரிசையாக லாரிகள் ஐவர் மலையைச் சுற்றிலும் வலம் வருகின்றன. ஒரு கார்ப்பரேட் கம்பெனி முதலாளிக்காக பழனி வேட்டைப்பகுதியாக மாறி விடுமோ என்ற அச்சத்திலும் பீதியிலும் மக்கள் உறைந்து போய் உள்ளனர்.
இது குறித்து பழனி முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராஜமாணிக்கம் தெரிவிக்கையில்,
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழக அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. அதனால் தான் ஸ்டெர்லைட் ஆலை விசயத்தில் கடுமை காட்டியது. தொன்மையையும் பழமையையும் பண்பாட்டு கலாச்சாரத்தையும் தொலைத்து விட்டு நல்ல காற்றையும் நிலத்தடி நீரையும் இழந்து விட்டு நடைப்பிணங்களாக வாழும் நிலை ஏற்படுமோ? என்ற அச்சம் பழனி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வடமாநிலத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளியின் சுயநலத்திற்கும் சொகுசு வாழ்க்கைக்கும் இப்பகுதி மக்கள் இரையாகிவிடுவோமோ? என்று அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு வெடிமருந்து தொழிற்சாலை பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஸ்டெர்லைட், மீத்தேன் எதிர்ப்பு போன்று மிகப்பெரிய போராட்டம் பழனி நகரிலும் வெடிக்கும் சூழல் உள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்