search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dogs bite"

    அருப்புக்கோட்டை அருகே நாய்கள் கடித்து குதறியதில் மான் சிகிச்சை பலனின்றி பலியானது.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகேயுள்ள சின்னான்செட்டிப்பட்டி கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் இரவு ஒரு புள்ளிமான் வந்துள்ளது. அதனை நாய்கள் விரட்டியுள்ளன. சத்தம் கேட்டு எழுந்த கிராமத்தினர் நாய்களை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு வெளியே முட்புதருக்குள் புள்ளிமான் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதன் உடலில் நாய்கள் கடித்த காயங்கள் இருந்தன. இது குறித்து பந்தல்குடி போலீசாருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்தனர். போலீசார், கால்நடை டாக்டர் சத்யபாமாவை அழைத்து வந்து மானுக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அதனை காப்பாற்ற இயலவில்லை. மான் இறந்துபோனது குறித்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். உயிரிழந்த அந்த ஆண் மானுக்கு 2½ வயது இருக்கும் என்று டாக்டர் தெரிவித்தார். 
    பழனி அருகே, தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் இறந்தன. தெருநாய்கள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    கீரனூர்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மேல்கரைப்பட்டி நால்ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டகை அமைத்து அதில் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜேந்திரனின் தோட்டத்துக்குள் தெருநாய்கள் புகுந்து கொட்டகையில் இருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த 5 ஆடுகள் துடிதுடித்து இறந்தன.

    நேற்று காலையில் வழக் கம்போல் தோட்டத்துக்கு சென்ற ராஜேந்திரனிடம் தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் இறந்து போனதை அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தோட்டத்துக்கு சென்று இறந்த ஆடுகளின் உடல்களை பார்த்தார். பின்னர் ஊராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்த அவர், தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அதையடுத்து இறந்த ஆடுகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மேய்ச்சலுக்காக விடப்பட்ட கன்றுக்குட்டியை தெருநாய்கள் கடித்து கொன்றன. மேலும் ஆடு, கோழிகள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்களையும் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் எங்கள் பகுதி மக்கள் சாலையில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். 
    அரச்சலூரில் இன்று காலை தண்ணீர் தேடி வந்த மானை தெரு நாய்கள் கடித்து கொன்றது. தகவல் அறிந்த வன காப்பாளர் வந்து மானை பார்வையிட்டார்.

    அரச்சலூர்:

    அரச்சலூரில் 480 ஹெக்டர் பரப்பில் காப்புக்காடு உள்ளது. இந்த காட்டில் 500-க்கும் மேற்பட்ட மான்கள், மயில்கள், எறும்பு தின்னி, உடும்பு போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் இன்று காலை தண்ணீர் தேடி ஒரு புள்ளிமான் வழி தவறி காட்டை விட்டு வெளியே வந்தது. மானை கண்ட தெரு நாய்கள் அதை விரட்டி... விரட்டி கடித்து குதறியது. இதில் அந்த மான் இறந்து விட்டது.

    இது குறித்து கிடைத்த தகவலின் படி அரச்சலூர் வன காப்பாளர் கோபால் வந்து மானை பார்வையிட்டார்.

    பிறகு அந்த மான் பரிசோதனை செய்யப்பட்டு காப்பு காட்டிலேயே புதைக்கப்பட்டது.

    வனத்துறை சார்பில் காப்பு காட்டுக்குள் வன விலங்குகளுக்கான தண்ணீர் நிரப்ப தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் தண்ணீர் நிரப்ப வில்லை. எனவே வனத்துறையினர் தண்ணீர் நிரப்ப வேண்டும் என வன ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர். 

    சிவகாசியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை நாய்கள் கடித்து குதறியதை தொடர்ந்து குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சிவகாசி:

    சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள அரசன் காம்பவுண்டில் வசித்து வருபவர் வெங்கடேசன். அச்சக தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஜான் (வயது 4), ஜாய்தெரசா (2) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். மாலையில் குழந்தை ஜாய்தெரசா தனது வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியில் குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் கழிவுப் பொருட்களை தின்று கொண்டிருந்த நாய்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு குரைத்த படி சிதறி ஓடி உள்ளன.

    அப்போது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நாய்கள் சுற்றி நின்று கடித்து குதறியுள்ளன. இதில் ஜாய்தெரசாவுக்கு காது, தலை, கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தையை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிவகாசியில் பல இடங்களில 500-க்கும் மேற்பட்ட நாய்கள் தற்போது உள்ளன. பல இடங்களில் பள்ளி குழந்தைகளையும், முதியவர்களையும் நாய்கள் துரத்தி கடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பை கொட்டப்படும் இடத்தில் கோழி மற்றும் மீன் கழிவுகளை சிலர் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் குப்பை கொட்டும் பகுதிக்கு வரும் நாய்கள் அதே பகுதியில் சுற்றி திரிந்து பொதுமக்களை கடித்துவிடுகிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 
    ×