என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric attack"

    சேலம் அருகே கொண்டலாம்பட்டியில் மின்சாரம் தாக்கி விசைத்தறி உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், கொண்டலாம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் வீட்டில் விசைத்தறி வைத்து சேலைகள் உற்பத்தி செய்து வந்தார். மேலும் வீட்டில் நெய்யப்படும் இந்த சேலைகளை வெளியே கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் மணி விசைத்தறியில் சேலை நெய்து கொண்டிருந்தபோது, எந்திரத்தின் பெல்ட் திடீரென துண்டாக அறுந்தது. இதை மணி மாற்ற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே மணி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அவரது மகன் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

    வந்தவாசியில் மின்சாரம் தாக்கி தாய், பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சுமதி (32). இவர்களது ஒரே மகன் மணிகண்டன் (16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்கள், கறவை மாடுகளையும் பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில், கார்த்திக் வேலை நிமித்தமாக நேற்று வெளியூர் சென்றிருந்தார். வீட்டு அருகே அத்திப்பாக்கம் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த தங்களது கறவை மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக நேற்றிரவு 7 மணியளவில் தாய் சுமதி, மணிகண்டன் சென்றனர்.

    அப்போது, வயல் வரப்பில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் இருவரும் மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கியதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இரவு நேரம் என்பதால் 2 பேரும் பலியான தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை.

    இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர், சுமதியும், அவருடைய மகனும் மின்சாரம் தாக்கி இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கிராம மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டு உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    தகவலறிந்ததும், வந்தவாசி வடக்கு இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே, மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள், விவசாயிகள் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    டி.எஸ்.பி. பொற்செழியன் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதன்காரணமாக, ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    கோவை ரெயில் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் வாலிபர் உயர்மின் அழுத்த வயரை பிடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கோவை:

    கோவை ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார்.

    6-வது பிளாட்பாரத்துக்கு சென்ற அவர் அங்கு நின்று கொண்டு இருந்த ரெயில் என்ஜின் மீது ஏறினார். இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கீழே இறங்குமாறு சத்தம் போட்டனர். எதையும் காதில் வாங்கி கொள்ளாத அந்த வாலிபர் திடீரென அந்த வழியாக சென்ற உயர்மின் அழுத்த வயரை பிடித்தார். கண்இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் அந்த வாலிபர் உடல் கருகி உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த ரெயில் பயணிகள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 80 சதவீத காயங்களுடன் உடல் கருகி உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்.

    ரெயில்வே போலீசார் சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜான் (வயது 20) என்பதும், வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் சரியாக பேச முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்த முடியவில்லை. கோவை ரெயில் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் வாலிபர் உயர்மின் அழுத்த வயரை பிடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சூளைமேட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் அரிகரராஜன்(வயது 23). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

    அப்போது மழை பெய்ததால் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு அங்கிருந்த இரும்பு கதவில் மின்சாரம் பரவியது. இந்த நிலையில் இதை அறியாமல் அரிகரராஜன் வீட்டின் கதவை திறந்ததால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழை காலங்களில் மின் விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்று கோவை மின்வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.
    கோவை:

    கோவை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழை காலங்களில் மின்விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டி, இழுவை கம்பிகள் அருகே செல்லக்கூடாது. வீட்டில் மின்அதிர்ச்சி ஏற்பட்டால் ரப்பர் செருப்பை அணிந்து சுவிட்சை அணைத்த பின்னர் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

    தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கவோ, நடமாடவோ கூடாது. இடி- மின்னலின்போது மின் கம்பிகள், கம்பம், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவைகள் இல்லாத தாழ்வான பகுதியில் தஞ்சமடைய வேண்டும். இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதனப் பொருட்களை பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    மின் கம்பி அறுந்து கிடந்தால் அதனை மிதிக்காமல் உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களில் பந்தல் அமைக்க விளம்பர பலகைகளை பொருத்த கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பி அருகிலோ அல்லது மின்மாற்றி அருகிலோ நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கவோ கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகே இருக்க வேண்டாம்.

    ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மறறும் விளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது. மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால் நடைகளை கட்ட வேண்டாம். மின்சாரத்தினால் ஏற்படும் தீயிணை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சி செய்ய கூடாது. மழை காலங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் விழிப்போடும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு மின் விபத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ஊத்துக்கோட்டை அருகே வயலில் தாழ்வான மின்கம்பி உரசியதில் பெண் பலியானார். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள உப்பரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் தனது வயலில் நாற்று நடவு பணிகளுக்காக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள கண்ணாவரம் பகுதியில் இருந்து 25 பெண் தொழிலாளர்களை அழைத்து வந்து இருந்தார்.

    உப்பரபாளையம் பகுதியில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது வயல்வெளி பகுதியில் இருந்த மின்கம்பம் ஒன்று சாய்ந்ததில் மின் வயர்கள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தெரியப்படுத்தியும் மின் கம்பம் சரி செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் வயலில் நாற்று நடவு பணியில் ஈடுபட்டிருந்த முனியம்மாள் (வயது 50) மீது தாழ்வாக தொங்கிய மின் வயர் உரசியது.

    இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற பெண் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பென்னாலூர்பேட்டை போலீசார் முனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கால் முனியம்மாள் பலியாகி உள்ளார். இது தொடர்பாக ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர், போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர், லைன்மேன், உதவியாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    செங்கத்தில் பலத்த சூறை காற்றுடன் கொட்டித்தீத்த மழையால் வீட்டின் மேற்கூரை மீது முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி மாணவன் பலியானான்.
    செங்கம்:

    செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 45) இவரது மனைவி கார்த்திகா (37) தம்பதியின் மகன் தனுஷ் (15) 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை செங்கம் பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. அப்போது தனுஷ் வீட்டின் அருகே இருந்த மரம் முறிந்து அவரது வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது.

    அந்த மரக்கிளையை அப்புறப்படுத்துவதற்காக தனுஷ் வீட்டின் மேற்கூரை மீது ஏரி மரக்கிளையை பிடித்து தூக்கினார். அப்போது எதிர்பாராமல் மேலே சென்ற மின் கம்பி மீது மரக்கிளை உரசி தனுஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் தூக்கி வீசபட்ட தனுஷ் பலத்த காயமடைந்தார்.

    அவரை மீட்ட உறவினர்கள் செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தனுஷ் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணியிலும் சேற்று கனமழை பெய்தது. இதில் மார்க்கெட்டில் இருந்த 3 கடைகள் சேதமடைந்து இன்று காலை இடிந்து விழுந்தது. விடியற்காலை நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்:-

    நகராட்சிக்கு சொந்தமான கடைகளின் கட்டிடம் கட்டி 37 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் பெரும்பாலான கடைகளில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த கடைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

    ×