என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Financial fraud"
- கடன் வாங்கிய பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், குண்டூர் கே.வி.பி காலனியை சேர்ந்தவர் மது பாபு ஆட்டோ டிரைவர். இவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுவதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பல லட்சங்களை கடனாக வாங்கினார்.
கடன் வாங்கிய பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார்.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர்.
இந்த நிலையில் பேஸ்புக் ஒன்றில் சிறுநீரகத்தை தானம் செய்தால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என பதிவிடப்பட்டு இருந்தது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த விஜயவாடாவை சேர்ந்த பாஷா என்ற நபரை மது பாபு செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது பாஷா தானும் சிறுநீரகம் தானம் செய்து ரூ.30 லட்சம் பெற்றதாக தெரிவித்தார்.
தனது கடனை அடைக்கவும், குடும்ப வருமையை ஒழிக்கவும் சிறுநீரகத்தை தானமாக வழங்க மது பாபு ஒப்புக்கொண்டார். அதன்படி கடந்த மாதம் 15-ந் தேதி விஜயவாடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு மதுபாபுவின் ஆதார் அட்டை, பிற அடையாள அட்டைகளில் அவரது விலாசத்தை மாற்றி நோயாளியின் உறவினராக மாற்றி சிறுநீரகத்தை தானமாக வழங்கியதாக எழுதிக் வாங்கிக் கொண்டனர்.
பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மது பாபுவின் சிறுநீரகம் அகற்றப்பட்டு வேறு ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு பாஷா ரூ.50 ஆயிரத்தை மட்டும் கொடுத்தார். மீதி பணத்தை கேட்ட போது உனது நண்பருக்கு உடல் உறுப்பு தானம் செய்ததாக கையெழுத்து போட்டு இருக்கிறாய். அதனால் மீதி பணத்தை தர முடியாது என மதுபாபுவை பாஷா மிரட்டி அனுப்பினார்.
தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மதுபாபு இது குறித்து குண்டூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் ஆஸ்பத்திரி நிர்வாகம் பல பேரிடம் சிறுநீரகம் பெற்று மோசடி செய்து வருவதாகவும், ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இங்கிலாந்து அரச குடும்பத்தினர் இவர்களின் வாடிக்கையாளர்கள்
- 20 நிமிடங்களில் கணக்கிலிருந்து ரூ. 16,18,31,197.92 காணாமல் போனது
ஒப்பனை சாதனங்களில் உயர்ரக தலை வாரும் சீப்புகள் மற்றும் பிரஷ் போன்ற 250க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கும் பிரபல இங்கிலாந்து நிறுவனம், கென்ட் பிரஷஸ் (Kent Brushes). 1777ல் தொடங்கபட்ட இந்நிறுவனம், இத்தொழிலில் 245 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை தற்போது நடத்தி வருபவர் ஸ்டீவ் ரைட் (Steve Wright).
இவர்களின் வாடிக்கையாளர்களில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் வங்கி கணக்கை பார்க்லே வங்கி கையாண்டு வந்தது.
கடந்த ஜூலை மாதம், அந்நிறுவன நிதி நிர்வாக அதிகாரிக்கு, வங்கியிலிருந்து அழைப்பதாக தொலைபேசி அழைப்பு வந்தது. வங்கி பணம் களவாடப்படும் சூழல் இருப்பதாகவும் அதனை தடுக்க சில தரவுகள் தேவை எனவும் அந்த அழைப்பில் கேட்கப்பட்டது. அதை நம்பிய அவர், கேட்கப்பட்ட விவரங்களை தொலைபேசியிலேயே வழங்கினார். கடவுச்சொல் உட்பட முக்கிய தகவல்கள் கேட்கப்பட்டதால் அதனையும் தெரிவித்தார்.
இதையடுத்த 20 நிமிடங்களில் அந்நிறுவன வங்கி கணக்கிலிருந்து ரூ.16,18,31,197.92 (1.6 மில்லியன் பவுண்ட்) தொகை காணாமல் போனது.
அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி ஸ்டீவ் ரைட்டிற்கு தகவல் தர, அவர்கள் வங்கியை தொடர்பு கொண்டு அங்குள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து ஸ்டீவ் ரைட் கூறியதாவது:
பார்க்லே வங்கி எங்கள் பணத்தை மீண்டும் வழங்கி விடும் என நம்பினோம். ஆனால், இதுவரை வங்கி எங்கள் இழப்பிற்கு ஈடு எதுவும் தரவில்லை; காவல்துறையும் எவரையும் கைது செய்யவில்லை. இதுவரை இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மிக பெரும் குற்றத்தை துப்புதுலக்க இது வழிமுறை அல்ல. புகார் அளித்த ஒரு மாதம் கடந்து "வழக்கு முடிந்து விட்டது" (case closed) என வங்கியிலிருந்து ஒரு கடிதம் வந்தது; அவ்வளவுதான். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான குற்றங்கள் தரப்பட வேண்டும்.
இவ்வாறு ஸ்டீவ் தெரிவித்தார்.
"எந்த வாடிக்கையாளரிடமும் கடவு சொல் உட்பட முக்கிய விவரங்களை எந்த வங்கியும் கேட்பதில்லை. இது போன்ற மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்பது மட்டுமே பார்க்லே வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக அளவில் இத்தகைய மோசடிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது இங்கிலாந்திலும் போலி தொலைபேசி அழைப்பு மூலம் இது போன்ற மோசடிகள் நடைபெறுவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
- திருப்பூர் மாவட்டம் காங்கயம் வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இயங்கி வந்துள்ளது.
- திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் உத்தரவின்படி தனிப்படை போலீசார் இந்த பணம் மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இயங்கி வந்துள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் வேலை பார்த்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் போல குழு கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழிற்கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி விளம்பரம் செய்தது. அதன்படி இந்த நிதி நிறுவனத்தில் உறுப்பினராக பதிவு செய்தால் மட்டுமே கடன் உண்டு. தனிநபருக்கு பதிவு கட்டணமாக ரூ.1,341-ம், 10 பேர் கொண்ட குழு என்றால் ரூ.13 ஆயிரத்து 400-ம் செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை அந்த நிதி நிறுவனம் கூறியது.
கடன் கிடைக்கும் என்ற ஆசையில் காங்கயம், வெள்ளகோவில், திருப்பூர் பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பெண்களும், குழுவினரும் பதிவுக்கட்டணம் செலுத்தினர். பதிவுக்கட்டணம் செலுத்தியவர்கள் கடன் கேட்டபோது அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஒரு சில பெண்கள் ரூ.5 லட்சம், ரூ.7 லட்சம் கடன் கேட்டு அதற்கான முன்பணமாக ரூ.25 ஆயிரமும், ரூ.35 ஆயிரமும், சிலர் ரூ.70 ஆயிரமும் செலுத்தினர்.
ஆனால் இந்த பணம் செலுத்திய பின்னரும் அந்த நிறுவனம் கடன் கொடுக்கவில்லை. இதையடுத்து பணம் செலுத்திய பெண்கள் அந்த நிதி நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது அந்த நிதி நிறுவனம் சார்பில் தனியார் வங்கி காசோலை கொடுக்கப்பட்டது. அந்த காசோலையை வங்கிக்கு சென்று மாற்ற முயன்றபோது அந்த வங்கி கணக்கில் பணம் இல்லை என்று ெதரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் காங்கயத்தில் உள்ள அந்த நிதி நிறுவனத்திற்கு திரண்டு வந்தனர். ஆனால் அந்த நிதி நிறுவன அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. ஊழியர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. நிதி நிறுவன பெயர் பலகையை கூட காணவில்லை. நேரம் செல்ல செல்ல அங்கு ஏராளமானவர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காங்கயம் போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த மோசடி குறித்து போலீசார் கூறுகையில்,
இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தில் காங்கயம், அவினாசி, சோமனூர், பொன்னமராவதி, அன்னூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை என 7 இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகமானது தர்மபுரியில் உள்ளது. இந்த நிதி நிறுவனம் கடன் வழங்குவதாக கூறி எத்தனை பேரிடம் மோசடி செய்தது என்று தெரியவில்லை. காங்கயம் அலுவலகத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்து இருக்கலாம். இதனால் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஜாமீன் இல்லாமல் பல லட்சம் கடன் கிடைக்கும் என்ற ஆசையில் ஏராளமானவர்கள் பணம் கட்டி ஏமாந்து இருக்கலாம். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் உத்தரவின்படி தனிப்படை போலீசார் இந்த பணம் மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மினால் பட்டேல் ஜார்ஜியா மாநிலத்தில் லேப் சொல்யூஷன்ஸ் பெயரில் மருத்துவ ஆய்வகம் நடத்தி வந்தார்
- இதை தவிர, தனிப்பட்ட முறையில் ரூ.175 கோடி மோசடியாக பெற்று கொண்டார்
உலகின் முன்னணி நாடான அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் மிக அதிகம் என்பதால், அங்குள்ள மக்கள் காப்பீடு மூலம்தான் தங்களுக்கு தேவைப்படும் மருத்துவ செலவினங்களை செய்து கொள்ள முடியும்.
இதற்கு பல காப்பீடு நிறுவனங்கள் இருந்தாலும், மெடிகேர் எனும் அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் காப்பீடுகளைத்தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதன்படி பயனாளிகளுக்கு தேவைப்படும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட ஆய்வக பரிசோதனகள், ஸ்கேன் உள்ளிட்ட இமேஜிங் பரிசோதனைகள் மற்றும் உயர்-ரக தொழில்நுட்ப உடற்கூறு பரிசோதனைகளுக்கான தொகை, மெடிகேர் நிறுவனத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஆய்வக மற்றும் பரிசோதனை கூடங்களுக்கு செலுத்தப்பட்டு விடும்.
இது சம்பந்தமான ஊழல் ஒன்று அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ளது லேப் சொல்யூஷன்ஸ், எல்.எல்.சி. எனும் மருத்துவ ஆய்வகம். இதை மினால் பட்டேல் (44) எனும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நடத்தி வருகிறார். இவர் பெரும் பணம் சம்பாதிக்க ஒரு திட்டம் தீட்டி மெடிகேர் பயனாளிகளை குறி வைத்தார்.
பயனாளிகளுடன் தொடர்பில் உள்ள சில முகவர்கள், கால் சென்டர்கள் மற்றும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் அகியவற்றை தொடர்பு கொண்டார். இவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மூலம், பயனாளிகளுக்கு அவசியம் இல்லாத சில புற்றுநோய் சம்பந்தமான அதிநுட்ப மரபியல் சோதனைகளை பயனாளிகள் செய்து கொண்டே ஆக வேண்டும் என நம்ப செய்தார்.
இந்த பரிசோதனைகள் காப்பீட்டுக்கு உட்பட்டது என கூறி அவர்களை பரிசோதனைகளை செய்து கொள்ள வைத்தார். இதற்காக அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஒப்புதல்களையும் மோசடி செய்து பெற்றார். தேவையற்ற இந்த பரிசோதனைகளுக்கான செலவுகளுக்கு ரசீதுகளை மெடிகேரில் செலுத்தி பணத்தையும் பெற்றுக் கொண்டார்.
இந்த வழிமுறையில் மினால் பட்டேல் ஜூலை 2016 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.3 ஆயிரத்து 850 கோடிக்கு ($463 million) மேல் மோசடி செய்தார்.
மத்திய புலனாய்வு அமைப்பின் சுகாதார ஊழல் தடுப்பு படைக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆபரேஷன் டபுள் ஹெலிக்ஸ் எனும் பெயரில் மினாலை பிடிக்க ஒரு ரகசிய திட்டம் போட்டது. இதில் அவர் பொறி வைத்து பிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்தது. இறுதியில் நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இருக்கிறது.
ஆகஸ்ட் 25 அன்று அவரது சொத்துக்களை முடக்குவது தொடர்பான விசாரணை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
- ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
திருப்பூர்:
ஈரோடு, திருப்பூர், கோவையில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தினர் நிதி மோசடியில் ஈடுபட்டதால் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புங்கந்துரை கிராமத்தில் உள்ள நிலம் மற்றும் காங்கேயம் கண்டியன் கோவில் கிராமத்தில் உள்ள அசையா சொத்துக்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று பகல் 12 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (அறை எண்:202) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர் ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 அன்று மாலை 5மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.
- ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து வருமாறு ராமசாமியிடம் அந்த நபர் கூறியுள்ளார்.
- போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவிநாசி:
திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த திருக்குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 64). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் துரைசாமி கடைக்கு தேவையான பிரிட்ஜ் வாங்குவதற்காக கடந்த வாரம் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பிரிட்ஜ் விலையை கேட்டு வந்துள்ளார்.
இதை தொடர்ந்து துரைசாமியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான் பிரிட்ஜ் வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அறிமுகமாகி உள்ளார். மேலும் தங்களுக்கு தேவையான பிரிட்ஜ்க்கான முன்பணம் ரூ.15 ஆயிரம் என்றும், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வந்தால் உங்களை அழைத்து சென்று பிரிட்ஜ் வாங்கி தருவதாகவும் துரைசாமியிடம் கூறியுள்ளார். இதன் பின்பு செல்போனில் பேசிய நபர் துரைசாமி மளிகை கடைக்கு வந்து அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
மோட்டார்சைக்கிளில் ஏறிய உடன் அந்த நபர் முதியவரி–டம் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு பெருமாநல்லூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு ஜெராக்ஸ் கடை அருகில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து வருமாறு ராமசாமியிடம் அந்த நபர் கூறியுள்ளார். ராமசாமி ஜெராக்ஸ் எடுத்துவிட்டு வந்து பார்த்த போது அந்த நபர் அங்கு இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து முதியவர் ராமசாமி நடந்த சம்பவம் குறித்து பிரிட்ஜ் கடைக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார்.
இதுகுறித்து துரைசாமி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தருவதாக கூறி யாரேனும் போன் செய்தால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என்றும், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.
- ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
- தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னை:
செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்று பணத்தை பறிக்கும் வட மாநிலத்தவர்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி பொதுமக்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் வடமாநில வாலிபர்கள் உங்கள் செல்போன் எண்ணில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வலை விரிக்கிறார்கள்.
எதிர்முனையில் பேசும் பொதுமக்கள், நாங்கள் உணவு ஆர்டர் செய்யவில்லையே என்று கூறியதும்... என்ன சார் இப்படி சொல்றீங்க... உங்கள் செல்போனில் இருந்துதானே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இப்படி சொன்னால் எப்படி? என்று எதிர்கேள்வி கேட்கும் வடமாநில வாலிபர் சரி... உணவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன். உங்கள் நம்பருக்கு ஓ.டி.பி. வரும் அதை சொல்லுங்கள் என்பார்.
அதேபோன்று சம்பந்தப்பட்ட நபரின் சொல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்ததும் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருக்கும் வட மாநில வாலிபர் அதனை கூறுமாறு சொல்வார்.
ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
இப்படி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஒருவர் பறி கொடுத்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பொது மக்களை உஷார்படுத்தி உள்ளனர். உங்கள் செல்போனுக்கு இதுபோன்று யாராவது தொடர்பு கொண்டு பேசினால் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்பை துண்டித்து விடுங்கள்.
அதுதான் நல்லது. இல்லையென்றால் நீங்கள் பணத்தை இழப்பது உறுதி என்று போலீசார் தெரிவித்தனர். எப்போதுமே தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
- இடைத்தரகர்கள் மூலமே பெரும்பாலும் துணிகள் விற்பனை நடந்து வருகிறது.
- பல்லடம், அவிநாசி, ஈரோடு என பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களிலும் மோசடி கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தமிழகத்தில் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் நகரத்தில்திருப்பூர், பல்லடம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல லட்சங்களில் முதலீடு செய்து உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வரை கொண்டு செல்ல தொழில்துறையினர் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.
சமீப காலமாக மோசடி செய்யும் கும்பல் ஒன்று, தொழில் துறையினரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி கொண்டு தலைமுறைவாகி வருவது அதிகரித்துள்ளது.
இது குறித்துதிருப்பூரை சேர்ந்த தொழில் துறையினர் சிலர் கூறியதாவது:-
இடைத்தரகர்கள் மூலமே பெரும்பாலும் துணிகள் விற்பனை நடந்து வருகிறது. அவ்வாறு லட்சக்கணக்கான மதிப்பிலான துணிகளை பெற்றுச்செல்லும் சில இடைத்தரகர்கள், பணத்துடன் கம்பி நீட்டுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக ஈரோட்டைச் சேர்ந்த தந்தை மகன் என இருவர், இடைத்தரகர்களாக செயல்பட்டு பல கோடிகள் சுருட்டி மோசடி செய்துள்ளனர்.
கடந்த4ஆண்டுக்கு முன் பல்லடம், அவிநாசி வட்டார பகுதிகளில் 60க்கும் மேற்பட்டவர்களிடம், துணிகளை பெற்றுக்கொண்டு ரூ. 4.75 கோடி, ஈரோட்டை சேர்ந்தவரிடம், ரூ.3.75 கோடி , பல்லடத்தை சேர்ந்த இருவரிடம்ரூ.1.68 கோடி , அவிநாசியை சேர்ந்தவரிடம் 90 லட்சம் ரூபாய் என பல கோடிகள் மோசடி செய்துள்ளனர்.ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்கள், செல்போன் எண்கள் பயன்படுத்தி மோசடியை அரங்கேற்றி உள்ளனர். நம்பிக்கை காரணமாக துணிகளை கொடுத்து ஏமாறும் பலர் புகார் அளிக்க வருவதில்லை.இருப்பினும், பல்லடம், அவிநாசி, ஈரோடு என பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களிலும் மோசடி கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடி ஆசாமிகளால், தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் புகார் அளிக்கவும் வழியின்றி, எண்ணற்ற தொழில் துறையினர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் செல்போன் எண்ணிற்கு ரூபாய் 2,09,972 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
- சைபர் கிரைம் இணையதள முகவரியில் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் புகார் பதிவு செய்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன். இவர் துபாய் செல்வதற்காக அவருடைய கிரெடிட் கார்டில் சர்வதேச பண பரிவர்த்தனையை பதிவு செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24 -ந்தேதி அவரது செல்போன் எண்ணிற்கு (இந்திய மதிப்பில் ரூபாய் 2,09,972/-) அமெரிக்க டாலர் பணம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மேற்படி ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் அவரது கிரெடிட் கார்டை பிளாக் செய்து சைபர் கிரைம் இணையதள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன். தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் ஒருமுறை பதிவு எண் எதுவும் கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது.இதனால் சம்மந்தப்பட்ட வங்கி மேற்படி தொடர்புடைய பண பரிவர்த்தனையை உடனடியாக நிறுத்தம் செய்து ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் இழந்த பணத்தை திருப்பி அவருடைய கிரெடிட் கார்டில் வரவு வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ராமசாமி வெங்கட சுப்பிரமணியனை நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணம் வரவு வைக்கப்பட்டதிற்கான ஆவணங்களை நேற்று வழங்கினார்.
மும்பையை சோ்ந்த தொழில் அதிபர் நிதின் பாரய் பாந்திரா போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எஸ்.எப்.எல். பிட்னஸ் நிறுவன இயக்குனர் காசிப்கான், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்கள் தங்கள் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 51 லட்சத்தை முதலீடு செய்யுமாறு என்னிடம் கூறினர். இதற்காக எஸ்.எப்.எல். பிட்னஸ் நிறுவனத்தின் சார்பில் புனேயில் உள்ள ஹடாப்சர் மற்றும் கோரேகான் பகுதிகளில் ஜிம், ஸ்பா திறந்து தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து நான் பணத்தை முதலீடு செய்தேன். ஆனால் சொன்னது போல அவர்கள் செய்யவில்லை. மேலும் என்னிடம் பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, என்னை மிரட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரை அடுத்து போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஷில்பா ஷெட்டி இந்த குற்றச்சாட்டை மறுத்து வருத்தம் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்