என் மலர்
நீங்கள் தேடியது "Fishing Prohibition"
- தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.
- 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.
ராமேசுவரம்:
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் நாளை (14-ந்தேதி, திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து தொடங்குகிறது. இதையடுத்து கன்னியாகுமரியில் தொடங்கி, சென்னை வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகள் முழுவதும், 60 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1,550 விசை படகுகளும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இத்தடை காலத்தில் இழுவலை விசைப்படகுகள், தூண்டில் வலை விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது. தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில 61 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது ஆழ் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களும் கடலுக்குச் சென்ற மீனவர்களும் நாளை இரவு 12 மணிக்குள் கரைக்கு வந்து சேர வேண்டும் என்றும், அதன் பின் 61 நாட்களுக்கு கடலின் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இத்தடைகாலங்களில் மீனவர்கள் குடும்பத்திற்கு இதுவரை 6 ஆயிரம் வழங்கி வந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சரால் ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் அனைத்து வகையான மீன்களின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
மீன்பிடி தடை காலம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதில் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்படும். அதேபோல் பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை தொண்டி, சோழியக்குடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
தடைக்கால சீசனில் ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரபிக்கடலில் மீன்பிடி தொழிலுக்காக சென்று வருகின்றனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மீனவர்கள் உறுதி செய்கி றார்கள்.
அதேபோல் மீன்பிடி தொழில் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தடை காலத்தையொட்டி மாற்றுத் தொழிலை நாடி செல்கிறார்கள். மேலும் மீன்பிடி வர்த்தகம் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
- எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.
- மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவொற்றியூர்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த தடை மே மாதம் 30-ந் தேதி வரை 45 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதுவரை எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.
இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தங்கள் மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பார்கள். மீன் பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து குறையும். எனவே மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1200 விசைப்படகுகள் உள்ளன. நேற்று மீன்பிடி தடை காலத்துக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வியாபாரிகள், மீன்பிரியர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன்விலையும் அதிகரித்து இருந்தது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, வருகிற 15-ந்தேதி முதல் மீன்படி தடைகாலம் அமலுக்கு வருகிறது. இந்த காலத்தில் படகுகளை சீரமைப்போம். ஆழ்கடலுக்குள் மீனவர்கள் செல்லமாட்டார்கள் என்பதால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வருவது குறைந்துவிடும் என்றனர்.
- மீன்பிடி தடை கால நாட்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, புதிய வலைகளை பின்னுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
- விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த காலங்களில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன் படிப்பதற்கு அனுமதியில்லை. இந்த காலங்களில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும். நாட்டு படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடைகாலம் பொருந்தாது. வழக்கம் போல் அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டு தடைகாலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தடை காலத்தையொட்டி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று நள்ளிரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோநகர், தெர்மல்நகர், புன்னைக்காயல், மணப்பாடு, பெரிதாழை உள்பட மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். தடை காலம் தொடங்கியதால் அவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மீன்பிடி தடை கால நாட்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, புதிய வலைகளை பின்னுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகுகள் மூலமாக மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூந்தங்குழி, பஞ்சல், தோமையார்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் 2 ஆயிரம் நாட்டு படகுகளில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் நாட்டு படகுகளில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்களுக்கு தடைகாலம் பொருந்தாது.
- வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.
- இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.
ராயபுரம்:
தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். விசை படகுகள், மீன்வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங் களை சீரமைக்கும் பணியில மீனவர்கள் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இது வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.
மீன்பிடி தடைகாலம் தொடங்கும் நிலையில் இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின.
இதனால் கடந்த வாரத்தை விட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.
கடந்த வாரத்தில் ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.800-க்கு விற்கப்பட்டது. கடமா எப்போதும் விற்கப்படும் விலையை விட ரூ.200 வரை குறைத்து விற்கப்பட்டும் அதனை வாங்க ஆட்கள் இல்லை.
இதனால் வார இறுதி நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மார்க்கெட் இன்று வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால் இன்னும் 2 மாதத்திற்கு இதே நிலைதான் இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-
வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடமா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகால் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிவிட்டனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் இங்குள்ள மீன் விற்பனை கூடம் இனி 1 ½ மாதத்திற்கு வெறிச்சோடி கிடக்கும். அதே நேரம் கடலுக்கு செல்ல கட்டுமரங்கள், பைபர் படகுகளுக்கு தடை இல்லை என்பதால் அவர்கள் கடற் கரை யோரத்தில் மீன் பிடித்து திரும்பி விடுவார்கள். இதனால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை அதிகமாகும் என்றனர்.
- ஒரு விசைப்படகை கரையேற்ற எந்திரம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை மனித உழைப்புகள் தேவைப்படுகிறது.
- இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று அதிகமாக வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும் போது அதிக அனல் ஏற்படுகிறது.
நாகப்பட்டினம்
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநில மீனவர்களுக்கு 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்கத்தடை விதிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த மீன்பிடி தடைகாலம் கடந்த 15 தேதி அதிகாலை முதல் அமலுக்கு வந்தது.
நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம், செருதூர், கோடியக்கரை, நம்பியார் நகர், நாகூர், புஷ்பவனம், ஆறுகாட்டுதுறை, வேதாரணி யம் உள்ளிட்ட 27 மீனவ பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை துறை முகங்களில் கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் படகில் உள்ள வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுது நீக்கம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது :-
ஒரு விசைப்படகை கரையேற்ற எந்திரம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை மனித உழைப்புகள் தேவைப்படுகிறது. இரும்பு விசைப்படகின் பழுதான சில பாகங்களை கேஸ் கட்டர் மூலம் வெட்டி எடுப்போம். அதேபோல் புதிய இரும்பினை பழுதான இடங்களில் பொருத்தும் போது ஆர்க் வெல்டு செய்வது வழக்கம்.
இந்த வேலை கடும் வெப்பத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று அதிகமாக வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும் போது அதிக அனல் ஏற்படுகிறது. அவ்வப்போது தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்டும் ஈரத்துணியை சுற்றிக்கொண்டும் எங்கள் பணியை தொடர்கிறோம் என்றனர்.
- உணவில், கருவாடுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
- உள்ளூர் சந்தை மட்டுமின்றி வெளியூர்களுக்கும் ஏற்றுமதியாகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டுள்ள பகுதியாக திகழ்கிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் தொழில் மீன்பிடி தொழில் உள்ளது. சுமார் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களாக உள்ளனர். இந்த பகுதியில் கிடைக்கும் இறால்மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையாக மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அன்னிய செலாவணியும் அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால் மீன்களை காய வைத்து கருவாடு ஆக்கினால் அதன் சுவையே தனித்தன்மை கொண்டது.
தமிழர்களின் உணவில், கருவாடுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஆனால் ஏனோ, மீனை உணவில் சேர்த்து கொள்ளும் அளவுக்கு கருவாடை சேர்த்து கொள்வதில்லை. ஒருவேளை அதன் வாடை காரணமாகவும் இருக்கலாம் என்ற கருத்தும், அல்லது அதன் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. எனினும், நிறைய மருத்துவ குணங்களை இந்த கருவாடுகள் ஒளித்து வைத்து இருக்கிறது.
கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பாம்பனில் மீன்களைக் கருவாடாக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அரியவகை மீன்கள் கிடைக்கும் பாம்பன் பகுதியில் விற்பனைக்குப் போக மிஞ்சும் மீன்கள் மற்றும் கருவாட்டுக்கு நல்ல சுவையுள்ள மீன்களைத் தேர்ந்தெடுத்து கருவாடாக்கி வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு தயார் செய்யப்படும் கருவாடு உள்ளூர் சந்தைகள் மட்டுமில்லாமல் வெளியூர்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களைக் கருவாடாக்கும் பணி பாம்பனில் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதால் டன் கணக்கிலான மீன்களைக் கருவாடாக காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் பாம்பன் பாலத்தின் கீழ் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், மருத்துவ குணம் கொண்டுள்ள நெத்திலி, திருக்கை, சாவாளை, வாழை, நகரை, கட்டா, மாசி, கனவாய், பால்சுறா போன்ற மீன்களை அதிகளவில் கருவாடாக்கி வருகின்றனர். தற்போது மீன் வரத்தினை பொறுத்து விலை இருக்கும் நிலையில், தடைக்காலம் என்பதால் கருவாடு விலை அதிகரித்துள்ளது.
அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான். 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் உள்ளது. கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
கருவாடுகளில் ஆண்டி ஆக்ஸிடன்ட் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள் என்பது நம்பிக்கையுடன் கூடிய மருத்துவ முறையாக இன்றும் கருதப்படுகிறது.
சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச்சாறு எடுத்துக்கொள்வது சிறந்த மருந்தாக இருக்கும் என்று கருத்து நிலவுகிறது. கருவாடு சாப்பிடுவதால் பூச்சிகளை அகற்றும். பித்தம், வாத, கப நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த கருவாடுக்கு உண்டு. மாதவிலக்கு பலவீனம், சீரமைப்பிற்கும், உடல் தேற்றத்திற்கும் இந்த சுறா கருவாடு உதவுகிறது. கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.
கொடுவா கருவாடு வாங்கி குழம்பு வைத்தால், அதுவே பலருக்கு மருந்தாகிவிடும். காரணம், கொடுவாமீனை விட கொடுவா கருவாடில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. 100 கிராம் கொடுவா மீன், நமக்கு 79 கலோரி ஆற்றலை தருகிறது என்றால், 100கிராம் கொடுவா கருவாடு, 266 கலோரி ஆற்றலை நமக்கு தருகிறதாம்.
அதாவது, கொடுவாமீனுடன் ஒப்பிடும்போது, புரதச்சத்து 4 மடங்கும், தாதுப்புக்களின் செறிவு 10 மடங்கும், இரும்புச் சத்து 5 மடங்கும், சுண்ணாம்புச்சத்து 2 மடங்கும் அதிகமாக இருக்கிறதாம்.
இந்த கருவாடை சாப்பிட்டால், உடல்பலவீனம் மறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு இந்த கருவாடு. அதுபோலவே, கெளுத்தி மீனைவிட, உப்பங்கெளுத்தி கருவாட்டில்தான் சத்து அதிகம்.
சீலா மீனைவிட, சீலா கருவாட்டில்தான் சத்து அதிகம். இறால் கருவாடை அடிக்கடி உணவில் பயன்படுத்தினால், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறு உப்புசம் போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம். இன்னும் ஏராளமான கருவாடுகள் இருக்கின்றன. ஆனால், எல்லா கருவாடுமே நன்மை தரக்கூடியதுதான்.
- கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்தது.
- மீனவர்கள் கடலில் இறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
இந்த காலங்களில் விசைப்படகு கள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை, திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப் பட்டது.
இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இதற்கிடையில் இந்த மீன்பிடி தடை காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இதைத் தொடர்ந்து இந்த மீன்பிடி தடைகாலம் முடி வடைய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் விசைப் படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர்.
மீனவர்கள் தங்களது பழுதடைந்த விசைப்படகுகளை சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் கரையேற்றி படகுகளின் உடைந்த பகுதியை சீரமைத்து வந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் இறக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். பச்சை நிற வர்ணம் தீட்டு வது, பழுதான என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். மீன்பிடி தடைகாலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைய இருப்பதை தொடர்ந்து வருகிற 15-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.
இந்த விசைப்படகுகள் அன்று இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், திருக்கை, கைக்கொழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2 மாதங்களுக்கு பிறகு வருகிற 15-ந்தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது.
- மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது.
- மீன்களை மக்கள் போட்டிபோட்டு வாங்கிசென்றனர்.
ராயபுரம்:
தமிழகத்தில் 61 நாட்கள் அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
கடந்த வாரம் மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை விசைப் படகு மீனவர்கள் அதிக அளவில் கரை திரும்பாததால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. மேலும் விலையும் குறையாமல் இருந்தது.
இந்த நிலையில் தடை காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு முதலே அதிக அளவு விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப தொடங்கினர்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பியதால் கடந்த வாரத்தை விட பெரிய மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப் பட்டது. இதனால் மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட ரூ.50 முதல் ரூ.200 வரை குறைவாக இருந்தது.
கடந்த வாரத்தில் ரூ.1500 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ரூ.1200-க்கு விற்பனை ஆனது. இதே போல் மற்ற மீன்களில் விலையும் குறைந்து இருந்தது.

இதனால் மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மீன்களை போட்டிபோட்டு வாங்கிசென்றனர். காசி மேட்டில் மீன்வாங்க அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததாலும் நல்ல விற் பனை ஆனதாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். கூடுதல் நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் அடுத்த வாரம் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அடுத்தவாரம் இப்போதைய நிலையை விட கூடுதலாக பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், மேலும் விலையும் குறையும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். காசிமேட்டில் மீன்கள் விலை (கிலோவில்)வருமாறு:-
வஞ்சிரம் - ரூ.1200
வெள்ளை வவ்வால் மீன்- ரூ.1200
கருப்பு வவ்வால் மீன்- ரூ.700
சங்கரா - ரூ.350
ஷீலா - ரூ.250
கிழங்கா - ரூ.300
டைகர் இறால் - ரூ.1000
இறால் - ரூ.300
கடமா - ரூ.300
நண்டு - ரூ.300