search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraud complaint"

    • அரசரை போல் போலியாக கையெழுத்திட்ட இளவரசர் முகமது.
    • இரண்டு குழந்தைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    துபாய்:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது முன்னாள் அதிகாரி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

    ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரைத் தொடங்கும் அரச ஆணையில் தனது தந்தையும் அரசருமான அப்துலஜீசையின் கையொப்பத்தை போலியாக இட்டதாக முன்னாள் மேஜர் ஜெனரலும் உளவுத்துறை அதிகாரியுமான அல்-ஜப்ரி தெரிவித்துள்ளார்.

    கனடாவில் உள்ள அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த 2015-ம் ஆண்டு போா் பிரகடனம் செய்தது. தாக்குதல் நடத்துவதற்கான அரச உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை அரசரை போல் போலியாக கையொப்பமிட்டு இளவரசா் முகமது பின் சல்மான் பிறப்பித்திருந்தாா். அரச ஆணையில் தனது தந்தையின் கையொப்பத்தை போலியாக இட்டார்.

    வயது மூப்பு காரணமாக அரசரின் மூளைத் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அதை பயன்படுத்தி இளவரசா் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் மீது போா் தொடுத்தாா். இளவரசர் முகமது தனது தந்தைக்குப் பதிலாக போரை அறிவிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார். அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

    எனது இரண்டு குழந்தைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறேன். எனவே எனது குழந்தைகள் மற்றும் எனது நாட்டின் நலனுக்காக பேசுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. என்னை கொல்ல இளவரசர் விரும்புகிறார்.

    என் கொலைக்கு அவர் திட்டமிட்டார். நான் இறந்து கிடக்கும் வரை அவர் ஓயமாட்டார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

    முன்னாள் அதிகாரியின் இந்த குற்றச்சாட்டுக்கு சவுதி அரேபியா கருத்து தெரிவிக்கவில்லை.

    • மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
    • வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைகளில் 2 கிராமம் முதல் 8 கிராம் வரை வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த குற்றச்சாட்டின் பேரில் அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கடந்த ஏழு நாட்களாக அடகு வைத்துள்ள நகைகளில் நம்முடைய நகைகளிலும் மோசடி ஏதும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கூட்டம் கூட்டமாக வருகை புரிந்து நகைகளை திருப்பி வருகின்றனர்.

    அப்படி வருகை தந்துள்ள நபர்களில் சிலருக்கு மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தற்சமயம் வங்கி கிளை மேலாளராக இருந்து வருபவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் புதிய மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களைப் போன்ற பொதுமக்கள் பண தேவைக்காக அடகு வைக்கும் தங்க நகைகளை வெட்டியும், பற்றவைத்தும், சுரண்டியும் இருக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.

    மேலும் பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருக்கும் நகைகள் எப்படி, யார் மூலம் இவ்வாறான மிகப்பெரிய மோசடிக்கு உட்படுத்தப்படுகிறது? வங்கிக்குள் எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கண்டறிய வேண்டும் என பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் வங்கி கிளையின் உயர்மட்ட தணிக்கை குழுவும் கடந்த ஏழு நாட்களாக வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் இக்கிளையில் அடகு வைத்திருக்கும் அனைவரும் தங்களது நகைகளை திருப்புவதற்காக மணிக்கணக்கில் நாள்தோறும் காத்துக் கிடந்து திருப்பி வருகின்றனர்.

    நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் வங்கியின் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

    • கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.
    • ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஒருவர், தனது சகோதரி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நிதி நிறுவனம் நடத்தினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கடந்த, 2021-ம் ஆண்டு முதல், 7 கிளைகளுடன், போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தி உள்ளனர். இதில், கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.

    இதை நம்பி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட, ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.

    இது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தை முடித்து திரும்பிய அமைச்சர் சக்கரபாணியிடம் பொது மக்கள் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்.

    அந்த நேரம் காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி உள்ளேன். உங்கள் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • பணத்தை இழந்த ஏராளமானோர் புகார் அளிக்க குவிந்தனர்.
    • மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 3-வது முறையாக முகாம் நடந்தது.

    மதுரை

    மதுரையை தலைமையிட மாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30சதவீத வட்டி தருவதாகவும் தெரி வித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.

    ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததனர்.

    அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி , கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொரு ளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப் பட்டு விலையுயர்ந்த கார்கள் தங்கம் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    நியோமேக்ஸ் நிறு வனத்தின் இயக்குனர்க ளான சைமன் ராஜா, கபில், இசக்கிமுத்து , சகாயராஜா பத்மநாபன், மலைச்சாமி ஆகிய 6 பேரையும் பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள்

    புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவித்தி ருந்தனர். அதன்படி மதுரை, விருதுநகரில் நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் புகார் அளித்தனர். இன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 3-வது முறையாக முகாம் நடந்தது. நியோமேக்சில் முதலீடு செய்து பணத்தை இழந்த மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் புகார் மனு அளிக்க குவிந்தனர்.

    • நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள்

    கோவை:

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் மனு அளிக்க வந்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் பிரபலமான நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் நாங்கள் சேர்ந்துள்ளோம்.

    இந்த கடையின் பங்குதாரர்கள் எங்கள் கடையில் பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், மேற்படி திட்டங்களில் சேர்ந்து பயன் பெறுமாறு எங்களை நம்பிக்கையூட்டினர். இதனை நம்பி நாங்களும் அந்த திட்டங்களில் சேர்ந்து பணம் கட்டினோம்.

    ஆனால் அவர்கள் கூறியபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை கட்டிய பின்னரும், எங்களுக்கு நகையோ, பணத்தையோ கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால், தருவதாகவே கூறி வருகிறார்கள். ஒரு வருடமாகியும் இன்னும் தரவில்லை.

    இந்நிலையில் பணத்தை கேட்டு நாங்கள்அனைவரும் பங்குதாரரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு அவர்களிடம் நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் பணம், நகையை தரமுடியாது என மிரட்டும் தொனியில் பேசினர்.

    இதுநாள் வரை பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தோம். ஆனால் தற்போது அவர்கள் கூறுவதை பார்த்தால் பணத்தை கொடுக்கமாட்டார்கள் என்பது தெரிகிறது.

    மேலும் பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள். எனவே கடையின் பங்குதாரர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர்களிடம் இருந்து நாங்கள் செலுத்திய தொகையினை திரும்ப பெற்று தந்து, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். 

    ×