என் மலர்
நீங்கள் தேடியது "g20 summit"
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்
- புதின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று இந்தோனேசிய அரசு அதிகாரி கூறி உள்ளார்.`
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் பாலியில் அடுத்த வாரம் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்தபிறகு முதல் முறையாக, அமெரிக்க அதிபர் பைடனும், ரஷிய அதிபர் புதினும் இந்த உச்சிமாநாட்டில் ஒன்றாக கலந்துகொள்வார்கள் என எதிர்பாக்கப்பட்டது.
ஆனால், ரஷிய அதிபர் புதின் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என இந்தோனேசிய அரசு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். உக்ரைன் போர் விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான மோதல் போக்கை தவிர்ப்பதற்காக இந்த மாநாட்டில் இருந்து புதின் ஒதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று ஜி20 நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் லஹட் பின்சார் பாண்ட்ஜைத்தான் கூறி உள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியிலிருந்து பாலி நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
- ஜி20 தலைவர்கள் சிலரையும் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார்.
புதுடெல்லி:
இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியிலிருந்து பாலி நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார். மேலும் உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் மோடியும் மற்ற நாடுகளின் தலைவர்களும் விவாதிக்கவிருப்பதாகவும் குவாத்ரா கூறினார். இதுதவிர ஜி20 தலைவர்கள் சிலரையும் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார்.
இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
தற்போது ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பில் இந்தோனேசியா உள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் வருகிறது.
- மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார்.
- இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் இந்தோனேசியாவுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக செல்கிறார்.
ஜி-20 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க உள்ளனர்.
உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றும், சுகாதாரம் தொடர்பான 3 முக்கிய அமர்வுகளில் மோடி பங்கேற்க உள்ளார்.
ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1 முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க இருக்கிறது. எனவே பாலி மாநாட்டில் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெறும். மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார்.
அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இதர நாடுகளின் தலைவர்களுக்கு மோடி இந்த மாநாட்டின்போது அழைப்பு விடுப்பார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபபர் இமானு வேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.
நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து பேசுகிறார். இதுதவிர பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலியில் பிரதமர் மோடி 45 மணி நேரம் செலவிட இருக்கிறார். அங்கு அவர் சுமார் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
மாநாடு நிகழ்வுகள் முடிந்து 16ம் தேதி பாலியில் இருந்து மோடி நாடு திரும்புகிறார்.
3 நாள் பயணத்துக்குமுன் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இதில் கலந்து கொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நேரில் சந்திக்க உள்ளேன். இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறு ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி இந்தோனேசியா புறப்படும் முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கியமான வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்ட மைப்பு ஜி-20 ஆகும். இதில் அர்ஜென்டினா, ஆஸ்தி ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற நாளை தொடங்குகிறது.
- மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் அமெரிக்க, சீன அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசி வருகிறார். மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும்.
- கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது.
பாலி:
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மாநாட்டில் பங்கேற்க பாலிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ வரவேற்றார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர், கை குலுக்கிக்கொண்டனர். மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனையும் சந்தித்த பிரதமர் மோடி, சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இந்நிலையில் ஜி20 மாநாட்டில் இன்று உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பருவ நிலை மாற்றம், கொரோனா தொற்றுநோய், உக்ரைன் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்சனைகள் ஆகியவை உலகில் அழிவை ஏற்படுத்தியுள்ளன. மேலும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் சிக்கலில் உள்ளன. உணவு மற்றும் உரங்களைப் பொருத்தவரை போதுமான விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
உக்ரைன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும். உக்ரைனில் போர்நிறுத்தம் மற்றும் இராஜதந்திர பாதைக்குத் திரும்புவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன்.
கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. அதன் பிறகு அக்காலத் தலைவர்கள் அமைதி நிலவ தீவிர முயற்சி மேற்கொண்டனர். இப்போது நமது முறை. கொரோனா காலத்திற்குப் பிந்தைய காலத்திற்கு ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஜி20 மாநாட்டில் பங்கேற்க கம்போடியா பிரதமர் ஹன்சென் புறப்பட்டு சென்றுள்ளார்.
- கம்போடியா பிரதமர் ஹன்சென்னை சந்தித்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாம்பென்:
இந்தோனேசியாவில் பாலி நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க கம்போடியா பிரதமர் ஹன்சென் புறப்பட்டு சென்றுள்ளார். அவருக்கு நேற்று மாலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சமீபத்தில் கம்போடியாவின் நாம்பென் நகரில் நடந்த ஆசியன் மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுடன் 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்கள் கம்போடியா பிரதமர் ஹன்சென்னை சந்தித்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது பேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது நாட்டுக்கு திரும்பினார்.
- ஜி20 என்பது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளையும், ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பு.
- ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று தொடங்கியது.
பாலி:
ஜி-20 அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள ஜலன் நுசாதுவாவில் இன்று தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளனர்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளையும் ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பாக ஜி-20 உள்ளது.
இதற்கிடையே, ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று தனி விமானம் மூலம் இந்தோனேசியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்களுடன் மோடி சிறிது நேரம் உரையாடினார்.
இந்நிலையில், இன்று காலை ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு உலக தலைவர்கள் வந்தனர். அவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். காலை தொடங்கிய மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார்.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். இருவரும் கை குலுக்கியபடி சிரித்துக் கொண்டு பேசினார். மேலும் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று உலகம் ஜி-20 அமைப்பிடம் இருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. சவாலான உலகளாவிய சூழலில் ஜி-20 மாநாட்டுக்கு தலைமை தாங்கிய இந்தோனேசியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் என அனைத்தும் சேர்ந்து உலகில் அழிவை ஏற்படுத்தியுள்ளன.
உலகளாவிய விநியோக சங்கிலிகள் அழிவில் உள்ளன. உலகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஏழைகளுக்கு ஏற்கனவே வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் நெருக்கடி மிகவும் கடுமையானது. அதை கையாள்வதற்கான நிதி திறன் அவர்களுக்கு இல்லை.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஐ.நா. போன்ற பல தரப்பு நிறுவனங்கள் தோல்வியடைந்து உள்ளன என்பதை ஒப்புக் கொள்ள நாம் தயங்கக் கூடாது. அவற்றில் பொருத்தமான சீர்திருத்தங்களை செய்ய தவறிவிட்டோம்.
கொரோனா தொற்று நோயின்போது இந்தியா தனது 130 கோடி குடிமக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. அதே நேரத்தில் பல நாடுகளுக்கு உணவு தானியங்களும் வழங்கப்பட்டன.
உணவுப் பாதுகாப்பின் அடிப்படையில் உரங்களின் தற்போதைய பற்றாக்குறை மிகப்பெரிய நெருக்கடியாக உள்ளது. இன்றைய உரத் தட்டுப்பாடு நாளைய உணவு நெருக்கடியாகும். உரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகிய இரண்டின் விநியோக சங்கிலியையும் நிலையானதாகவும் உறுதியுடனும் பராமரிக்க பரஸ்பர ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.
இந்தியா இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. நிலையான உணவுக்காக தினை போன்ற சத்தான மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களை மீண்டும் பிரபலப்படுத்தி வருகிறது.
உக்ரைனில் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன்.
கடந்த நூற்றாண்டில் 2-ம் உலக போர் உலகில் அழிவை ஏற்படுத்தியது. அதன்பிறகு அக்கால தலைவர்கள் அமைதியின் பாதையில் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டேன். இப்போது அது நமது முறை.
கொரோனா காலத்துக்குப் பிறகு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது.
உலகில் அமைதி, நல்லிணக்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூட்டு உறுதியை காட்டவேண்டியது காலத்தின் தேவையாகும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது.
2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும். எரிசக்தி விநியோகத்தில் எந்த கட்டுப்பாடுகளையும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
தூய்மையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. வளரும் நாடுகளுக்கு காலக்கெடு, மலிவு நிதி, தொழில் நுட்பத்தின் நிலையான வழங்கல் ஆகியவை உள்ளடக்கிய ஆற்றல் மாற்றத்திற்கு அவசியம்.
அடுத்த ஆண்டு புத்தர் மற்றும் காந்தியின் தேசத்தில் ஜி-20 மாநாடு நடைபெறும்போது உலகிற்கு அமைதிக்கான வலுவான செய்தியை தெரிவிக்க நாம் அனைவரும் உடன்படுவோம் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
- ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு திட்டமிடப்படவில்லை.
பாலி:
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று முக்கிய சந்திப்பை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்தனர். இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு மூலோபாய கூட்டுறவை வலுவாக்குதல், குவாட் கூட்டமைப்பில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்த அமெரிக்க அதிபர் பைடனின் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்தனர்.
மேலும், ஜி20 மாநாட்டில் இரவு உணவு விருந்தின்போது பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் ஒருவொருக்கொருவர் வணக்கம் செலுத்திக்கொண்டு நலம் விசாரித்தனர். எனினும் இரு தலைவர்களுக்கும் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு குறித்து எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை.
- காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் டிஜிட்டல் தீர்வுகள் உதவியாக இருக்கும்.
- ஜி-20க்கு தலைமை ஏற்கும் இந்தியாவின் கருப்பொருளாக ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று இருக்கும்.
இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி பேசியதாவது:-
டிஜிட்டல் மாற்றம் என்பது நமது சகாப்தத்தின் குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்துவது வறுமைக்கு எதிரான பல சகாப்தகால உலகளாவிய போராட்டத்தின் சக்தியை பெருக்கும்.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் டிஜிட்டல் தீர்வுகள் உதவியாக இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் அணுக்கலை பொதுவெளியில் உருவாக்கி இருக்கிறோம். ஆனால் சர்வதேச அளவில் இன்னும் பெரிய டிஜிட்டல் பிளவு உள்ளது.
டிஜிட்டல் கட்டமைப்பை உள்ளடக்கியதாக உருவாக்கினால் அது சமூக, பொருளாதார மாற்றங்களை கொண்டு வரமுடியும் என்பது இந்தியாவின் கடந்த சில ஆண்டுகால அனுபவம் காட்டுகிறது.
இந்தியா டிஜிட்டல் பொது பொருட்களை உருவாக்கி உள்ளது. அதன் அடிப்படை கட்டமைப்பு ஜனநாயக கொள்கைகளை கொண்டுள்ளது.
ஜி-20க்கு தலைமை ஏற்கும் இந்தியாவின் கருப்பொருளாக ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று இருக்கும். டிஜிட்டல் மாற்றத்தின் பலன்கள் மனித இனத்தின் சிறிய பகுதிக்கு மட்டும் செல்லக்கூடாது என்பது ஜி-20 தலைவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.
- மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.
- அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நேற்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றார்கள்.
நேற்றைய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினார். மேலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். பின்னர் அமெரிக்கா அதிபர் ஜோபைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தினார்.
மேலும் செனகல் அதிபர் மேக்சி சால், நெதர்லாந்து அதிபர் மார்க்ரூட் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரை சந்துத்து நலம் விசாரித்தார்.
பிரதமர் மோடி இன்று பாலி தீவில் உள்ள அலையாத்தி காடுகளை பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பது, கரியமில வாயுக்களை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக அந்த காடுகளை உலக நாடுகள் பராமரித்து அழிவில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அலையாத்தி காடுகளை உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அலையாத்தி காடுகளை பார்வையிட்டனர்.
தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது அரணாக இருந்து பாதிப்பை தடுத்ததில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகித்தன.
மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூக், ஜெர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. ஜி-20க்கு இந்தியா தலைமை தாங்குவதையடுத்து அதற்கான செயல்முறைகளை பிரதமர் மோடியிடம் இந்தோனேசியா அதிபர் விடோடோ முறைப்படி வழங்கினார்.
உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார்.
இதன்மூலம், டிசம்பர் 1ம் தேதி ஜி-20 தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடி உலக தலைவர்களின் தலைவரானார்.
- சதுப்பு நிலக்காட்டை பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்வையிட்டனர்.
- மோடி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் சேர்ந்த ஜி20 மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. நிறைவு நாளான நேற்று அங்குள்ள சதுப்பு நிலக்காட்டை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்வையிட்டனர். அப்போது மோடி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடிக்கு 'சல்யூட்' அடித்தார். உடனே மோடியும், இருக்கையில் அமர்ந்தவாறு தனது கையை தூக்கியவாறு 'ஹாய்' என்று கூறினார்.
இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் வணக்கம் கூறிக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது.
- இந்தோனேசியாவில் ‘ஜி-20’ உச்சி மாநாடு நடந்தது.
- உலகத்தலைவர்களுக்கு பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
இந்தோனேசியாவில் 'ஜி-20' உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத்தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் நாட்டின் கலாசார செழுமையை, பாராம்பரியத்தை பறைசாற்றும் கலை படைப்புகளை, பொருட்களை பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளாக வழங்கினார். இதுபற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:-
* அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 'சிருங்கர் ராசா'வை சித்தரிக்கும் காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
* இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு வழங்கிய நினைவுப்பரிசு, குஜராத்தில் பெண் தெய்வ கோவில்களுக்கு காணிக்கையாக வழங்குகிற கைத்தறி ஆடை ஆகும்.
* ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசுக்கு அவர் தந்தது, குஜராத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைப்பொருளான பித்தோரா.
* இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசு, 'படன் படோலா' துப்பட்டா ஆகும்.
* பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோருக்கு நினைவுப்பரிசாக தந்தது, குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைப் பொருளான 'அகேட்' கிண்ணங்கள் ஆகும்.
* 'ஜி-20' உச்சி மாநாட்டை நடத்திய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு குஜராத்தின் சூரத் நகரின் திறமையான தொழிலாளிகளால் செய்யப்பட்ட தனித்துவமான, நேர்த்தியான வேலைப்பாடு கொண்ட வெள்ளிக் கிண்ணம், இமயமலைப்பகுதியில் சிறப்பு வாய்ந்த கின்னவுர் சால்வை ஆகியவற்றை பிரதமர் மோடி வழங்கினார்.