என் மலர்
நீங்கள் தேடியது "gas tanker"
- தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை.
- டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
தூத்துக்குடி:
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் ஒப்பந்தம் செய்து உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு புதிய ஒப்பந்தப்படி சில திருத்தங்களை கொண்டு வருகின்றன. அதே போன்று வாடகையையும் குறைத்து உள்ளன.
இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி தென்மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இதனை தொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை நிரப்ப செல்லாமல் தூத்துக்குடியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கொச்சி துறைமுகத்தில் இருந்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் மூலம் தினமும் சுமார் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும்.
அங்கிருந்து சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை. தற்போது டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
- படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதி.
- கோர விபத்தால் பாலத்தின் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி ஒன்று, பாலம் ஒன்றின் அடியில் சிக்கிக் கொண்டது. அந்த லாரியை நகர்த்த முயன்றபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்தததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்தால் அந்த பாலத்தின் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது. அங்கிருந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மேற்கூரை உடைந்தது. இரண்டு வீடுகள் மற்றும் பல கார்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அரசு அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார்.
- ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தினார்.
- ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பெருமாநல்லூர் :
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கியாஸ் சேமிப்பு கிடங்கில் கியாஸ் இறக்கிவிட்டு சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. லாரியை ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 38) என்பவர் ஓட்டிச் சென்றார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையின் அருகில் லாரிகளை நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தில் ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது டிரைவர் இருக்கையின் இடது புறம் திடீரென தீ பிடித்திருப்பதை கண்ட டிரைவர் ரவி உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்குள் தீ மளமளவென பரவியது. இதையடுத்து டிரைவர் எட்டிக் குதித்து தப்பியோடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு படையினர் 2வாகனங்களில் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
- விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள சக்கன் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென எரிவாயு டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானது.
வெடிப்பின் தீவிரம் மிக அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள ஓட்டல்கள், வீடுகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வெடித்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், எரிவாயு டேங்கரில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பப்பட்டதாகவும், இதனால் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
விபத்து தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம் என்றும் பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறையின் டிசிபி சிவாஜி பவார் தெரிவித்துள்ளார்.
- இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்தது.
- உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை, சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட டேங்கர் லாரி, மற்றொரு லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. எரிவாயு கசிந்து டேங்கர் லாரி வெடித்து சிதறி தீப்பிடித்தது. அத்துடன், அந்த லாரிக்கு அருகில் சென்ற பல வாகனங்கள் தீப்பற்றி ஒன்றுடன் ஒன்று மோதின.
இந்நிலையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே, முதல் மந்திரி பஜன்லால் சர்மா, முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இது குறித்து முதல் மந்திரி சர்மாவிடம் விசாரித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.