என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government employees"

    • சிறப்பு விடுப்பு ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவோ பயன்படுத்த முடியாது.
    • பெற்றோர் அல்லது மாமியார் இல்லாதவர்கள் அதற்குத் தகுதி பெற மாட்டார்கள்.

    அசாம் அரசு தனது ஊழியர்கள் தங்களது பெற்றோர் அல்லது மாமியார் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக வரும் நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் சிறப்பு சாதாரண விடுப்பு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இந்த சிறப்பு விடுப்பு ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவோ பயன்படுத்த முடியாது என்றும், அல்லது பெற்றோர், மாமியார் இல்லாதவர்கள் இந்த விடுப்புகளைப் பெறத் தகுதியற்றவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா தலைமையில், 2024-ம் ஆண்டு நவம்பர் 6 மற்றும் 8ம் தேதிகளில் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது மாமனார்- மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடபட்டுள்ளது.

    இந்த விடுப்பு "வயதான பெற்றோர் அல்லது மாமனார், மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அவர்களை கவுரவப்படுத்தவும், மதிக்கவும், பராமரிக்கவும், தனிப்பட்ட மட்டுமே தவிர தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல" என்று கூறப்பட்டுள்ளது.

    நவம்பர் 7 ஆம் தேதி சத் பூஜை விடுமுறை, நவம்பர் 9 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் நவம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் சிறப்பு விடுப்பை பெறலாம் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் படிப்படியாக இதைப் பெறலாம் என்றும், பெற்றோர் அல்லது மாமியார் இல்லாதவர்கள் அதற்குத் தகுதி பெற மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

    அரசு ஊழியர்களுக்கு பெற்றோர் மற்றும் மாமியார்களுடன் நேரத்தை செலவிட இரண்டு சிறப்பு சாதாரண விடுப்புகளை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா 2021ல் பதவியேற்ற பிறகு தனது முதல் சுதந்திர தின உரையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு படேல் தடை விதித்தார்
    • பிரதமர் வாஜ் பாய் தலைமையிலான பாஜக அரசு ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்கவில்லை

    அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தற்போது நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.

     

     

    சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1966 வாக்கில் பசுக்கொலைகளுக்கு போராடுகிறோம் என்று வெகுஜன ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு திரட்டி போராட்டம் நடந்தத் துவங்கியது. இதன் உச்சமாக பாராளுமன்றத்தில் பசுக்கொலைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார். இடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினோடு நெருங்கிய தொடர்புடைய பாஜக ஆட்சி அமைந்த போதும் பிரதமர் வாஜ் பாய் ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்காத நிலையில் தற்போது 3 வது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

    நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மோடி மீது ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தியில்  இருப்பது  சமீப காலமாக பொது வெளியில் அவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. இந்த விரிசலை சரி செய்யவே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இந்த உபகாரத்தை மோடி செய்து கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் தடையை நீக்கியதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கதசிகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.

    இந்த தடை நீக்கம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முதன்முறையாக தடை விதிக்கப்பட்டது.
    • சில வருடங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

    1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.

    சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. பின்னர், 1966 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார்.

    அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அண்மையில் நீக்கியது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்க, 1972ம் ஆண்டில் விதிக்கப்பட்ட தடையை, 52 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் மாநில பாஜக அரசு நீக்கியுள்ளது.

    ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநில அரசுகள், அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைக்கும் கட்டுப்பாடுகளை ஏற்கனவே நீக்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
    • மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது.

    புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    • அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும், கோரிக்கையை நிறைவேற்றுவதும் திமுகதான் என்பதை அவர்களே அறிவார்கள்.
    • மொட்டை காகித அறிக்கை என்றால் அது அதிமுகதான் என்பது உலக வரலாறு

    ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். அரசு ஊழியர்கள் திமுக பக்கம்தான் நிற்பார்கள் என்பதை தேர்தல் வரலாறு சொல்லும் என்று நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை 'மொட்டை'த் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இருக்கிறது. 'சசிகலா காலில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க முடியும்' என அரசியலில் புதிய Thesis படைத்து Ph.D. பட்டம் பெற்ற பழனிசாமி 'கபட வேடதாரி' என்றெல்லாம் பேசலாமா?

    அரசு ஊழியர் தொடர்பாகத் தி.மு.க. வெளியிட்ட விளக்க அறிக்கையை 'மொட்டைக் காகித அறிக்கை' எனச் சொல்லியிருக்கிறார் திரு. பழனிசாமி. மொட்டைக் காகித அறிக்கை என்றால், அதனை எப்படிப் பத்திரிகைகள் பிரசுரித்திருக்கும்? டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டிருக்கும்? என்ற அடிப்படைகூட தெரியாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பாரா?

    'மொட்டைக் காகித அறிக்கை' என்றால் அது அ.தி.மு.க. என்பதுதானே உலக வரலாறு! ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்கும் சேர்த்து 'மொட்டையாக' வேட்பாளர் பட்டியல் வெளியானது; 2007-இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 'எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் வாக்களிக்கப் போனார்கள்' என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது; டான்சி வழக்கில், 'ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை' என ஜெயலலிதா சொன்னது எல்லாம் அ.தி.மு.க அடித்த மொட்டைதானே!

    அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான் ஒரு அரசின் கடமை. அரசு ஊழியர்கள்கூட குடிமக்கள்தான். ஆனால், அவர்களை அ.தி.மு.க. என்றைக்குமே மதித்ததில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அரசு ஊழியர்களைக் கனிவாகவே தி.மு.க. நடத்தும். ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என யார் ஆட்சியில் இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. உரிமைக்காகப் போராடியவர்கள் மீது வழக்குகளும் துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்பதுதான் கடந்தகால வரலாறு.

    2001-இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 24-7- 2001 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் பேசும்போது ''அரசின் வரி வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது" என்று சொல்லி அரசு ஊழியர்கள் மீதான வெறுப்பை வெளிக்காட்டினார். அதோடு அரசு ஊழியர்கள் அனுபவித்து வந்த பல சலுகைகளை அதிரடியாகப் பறித்தார்.

    அதனை எதிர்த்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்கள் 2003 ஜூலை 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அடக்குமுறையைப் பிரயோகித்து ஒடுக்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை விசாரணை நடத்தாமல் டிஸ்மிஸ் செய்யும் எஸ்மா சட்டத்தை 04-07-2003-இல் பிறப்பித்தார் ஜெயலலிதா. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை எல்லாம் நள்ளிரவில் வீடு தேடிப் போய்க் கைது செய்து சிறையில் அடைத்தனர். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர். ஒன்றரை இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்தனர். 'ஸ்டிரைக் செய்ய மாட்டோம்' என்ற உறுதிமொழியுடன் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிப் பலரை மீண்டும் வேலைக்குச் சேர்த்தார்கள். ''கடமையைச் செய்யக் காத்திருக்கிறோம் அரசு ஊழியர்களுக்கு மறுவாழ்வு தாருங்கள்'' என முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கன் விடுத்த கோரிக்கையை எல்லாம் ஜெயலலிதா புறந்தள்ளினார்.

    ஜெயலலிதாவுக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல பழனிசாமி. ஜெயலலிதாவின் வழித்தோன்றலான பழனிசாமிதான் முதலமைச்சராக இருந்தபோது தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டு ''இவ்வளவு சம்பளமா?'' என இழிவுபடுத்தினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய அரசு ஊழியர்களையும் , ஆசிரியர்களையும் பார்த்து ''அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?'' என தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.

    பழனிசாமி ஆட்சியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2019 ஜனவரியில் போராட்டத்தை நடத்தியது. அன்றைக்கு பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கமான கேலி கிண்டல் பத்திரிகையாளர் சந்திப்பைப் போலவே அந்தப் போராட்டத்தையும் டீல் செய்தார். ''கோரிக்கையை ஏற்க முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்'' என்றெல்லாம் மிரட்டல் விடுத்தார். ''அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்'' எனக் காட்டமாகச் சொன்னார்.

    அரசு ஊழியர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது 2019 ஜனவரி 27-ஆம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. `பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்' எனச் சொல்லி அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தையும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு அரசு ஊழியர்களை அவமானப்படுத்தியது யார்? 'தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்குப் போராட்டம்?' என அந்த விளம்பரத்தில் கேள்வி எழுப்பியது எல்லாம் பச்சைப் பொய் பழனிசாமிக்கு மறந்துவிட்டதா? இந்த விளம்பரத்தை அனைத்து நாளிதழ்களிலும் அனைத்துப் பதிப்புகளிலும் அந்த விளம்பரத்தை வெளியிடுவதற்காக 50 லட்சம் ரூபாயைச் செலவழித்தனர்.

    இதேபோலதான் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் ஒடுக்கியது பழனிசாமி அரசு. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தைப் போலவே பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஊதிய உயர்வு விவரங்களைத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்காக அன்றைக்கு 46,54,361 ரூபாய் செலவிட்டனர்.

    பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது செப்டம்பர் 7,2017-ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, 7-வது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் போராட்டத்தையும் கோரிக்கைகளையும் சிறிதும் மதிக்காமல் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த அரசுதான் அ.தி.மு.க. அரசு. இப்போராட்டங்களுக்குப் பிறகுதான் அன்றைய அ.தி.மு.க. அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது. இன்று அதனைத் தனது சாதனையாக குறிப்பிடும் பழனிசாமி அவர்களின் உள்ளத்தில் உண்மை இருந்தால் அதைச் சொல்வதற்குக் கூசியிருக்க வேண்டும்.

    அனைத்திற்கும் மேலாக 2016, 2017, 2019 ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மீது குற்றக் குறிப்பாணைகள் (17B), இடமாற்றம், பணியிடைநீக்கம், வழக்கு போன்ற ஒடுக்கு முறைகளை ஏவிய பழனிசாமி "எங்களது ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்த முடியும்" எனக் கூறுவது பச்சைப் பொய்யாகும். "கெட்டிக் காரன் புளுகு எட்டு நாளைக்கு" என்பார்கள் ஆனால் பழனிசாமி அடித்து விடுகின்ற பொய்கள் எட்டு நிமிடத்திற்குக் கூட தாங்காது.

    ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். ''பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்' எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. ஆட்சியில் இருந்தபோது Sadist Government போல ஆட்சி நடத்தி அரசு ஊழியர்களை ஒடுக்கியவர்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாரால், எப்போது திரும்பப் பெறப்பட்டது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் இல்லை. 2021-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் 13.10.2021 அன்று வெளியிட்ட அரசாணையில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.

    அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளை நீக்கிய அரசு திராவிட மாடல் அரசு. மேலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் செயல்படும் இந்த அரசு அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் கடமையை என்றும் கைவிட்டதில்லை. அரசு ஊழியர்களுக்கும் தி.மு.க.விற்கும் இடையிலான உறவு மிகவும் வலிமையானதாகும். அதில் பிளவு ஏற்படுத்தலாம் என பகற்கனவு காணும் பழனிசாமியின் மீது அனுதாபம் கொள்ளலாமே தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

    தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டும் அரசாக விளங்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாத்தும் அவர்கள் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. அதற்குச் சாட்சியமாய் விளங்குவதுதான் தொடர்ந்து தேர்தல்களில் மக்கள் தி.மு.க.விற்கு அளித்து வரும் வெற்றிகள்.

    'கபட வேடதாரி' பழனிசாமியையும் அ.தி.மு.க.வையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள். அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தி.மு.க.தான் என்பதை அரசு ஊழியர்கள் அறிவார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வெறுப்பு அ.தி.மு.க.வின் உதிரத்திலேயே ஊறியிருக்கிறது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பழனிசாமி இன்று வடிக்கும் முதலைக்கண்ணீரைப் பார்த்தால் முதலையே தோற்றுவிடும் போலிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய வரிகள் மூலம் அரசின் வருமானம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும், இந்த கோரிக்கையை நிறைவேற்றாது தி.மு.க. அரசு காலத்தைக் கடத்துவதைப் பார்த்தால், இந்த கோரிக்கை நிறைவேறாதோ என்ற அச்சம் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்பதற்கேற்ப அ.தி.மு.க. ஆட்சியின் மீது பழிபோடாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தான்.
    • தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைவது போல மகிழ்ச்சி அடைந்தேன்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தான்.

    நான் எம்.எல்.ஏ.வாக திண்டுக்கலில் 22 ஆயிரம் ஓட்டில் வெற்றி பெற்று, கையெழுத்து போடப்போகும்போது துணை தாசில்தார் ஓடி வந்தார்.

    தபால் ஓட்டு எண்ணுகிறோம். கொஞ்ச நேரம் இருங்கள். கையெழுத்து போடாதீர்கள் என்று கூறினார்.

    சரி வரட்டும். 1000, 2000 ஓட்டுகள் அதிகமாக கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். 5000 ஓட்டு உங்களுக்கு குறைந்து போய் விட்டது என்றார்கள்.

    தபால் ஓட்டுகள் திமுகவிற்கு போய் விட்டது. 5000 குறைத்து 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்தீர்கள் என்று கூறினார்கள்.

    அதையாவது எனக்கு கொடுங்க... நான் ஜெயித்து விட்டேன்ல. அதுபோதும் என்றேன்.

    தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைவது போல மகிழ்ச்சி அடைந்தேன்.

    என் தொகுதியில் 1 தபால் ஓட்டு கூட எங்களுக்கு வரவில்லை. எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பாருங்கள். அடக்கொலைகாரப் பாவிகளா...

    தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் குடும்பத்தினர் ஓட்டு 80 லட்சம் ஓட்டு. விளையாட்டு கிடையாது தோழர்களே என்று அவர் பேசினார்.

    • 2023- 2024ம் ஆண்டிற்கான சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.
    • பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    2023- 2024ம் ஆண்டிற்கான சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.

    சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    சி,டி பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.

    சி, டிபிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

    பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
    • ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் வருகிற 12-ந் தேதி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு முன் மாதிரியாக போலீசார் மற்றும் அனைத்து அரசு துறை அரசு ஊழியர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய செய்ய வேண்டும் என போக்குவரத்து சீனியர் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு பரிந்துரை செய்திருந்தார்.

    அதன் அடிப்படையில், நிர்வாக சீர்த்திருத்த துறை அனைத்து அரசு துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அதில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை மிஷன் ஜீரோ திட்டத்தின் கீழ் உயிரிழப்பினை தடுக்க வருகிற 12-ந் தேதி முதல் ஹெல்மெட் உபயோகத்தை கட்டாயமாக அமல்படுத்த உள்ளது. இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும். இது உங்களது தனிப்பட்ட பாதுகாப்பின் நலனுக்காக அறிவுறுத்தப்படுகிறது.

    ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நிறுத்தி வைக்கப்படும்.ஹெல்மெட் அணியாதது குறித்து பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், சொசைட்டிகளின் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்படும்.

    அனைத்து நிர்வாக செயலாளர்கள், டி.ஜி.பி., துறைத் தலைவர்கள் இதனை உறுதி செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பர்.

    இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
    • செலவுகளை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    அண்டைநாடான பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் பெரும் தொகையை கடனாக பெற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை ஏற்று பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது.

    அதே சமயம் கடனை வழங்க பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் முதன்மையானது பாகிஸ்தான் அரசு தனது செலவுகளை குறைக்க வேண்டும் என்பதாகவும். எனவே செலவுகளை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் நிதி மந்திரி முகமது அவுரங்கசிப் "அரசு துறைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து, 1½ லட்சம் வேலைகளை ஒழிக்க அரசு முடிவு செய்திருக்கிறது" என கூறினார்.

    • அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது.
    • சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    மக்கள் தங்களுக்கு தேவையான பல திட்டங்களை அரசுத்துறைகளின் மூலமாகவே பெறவேண்டி இருக்கிறது. இதனால் அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது. அதனைத்தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் லஞ்சம் பெறுவது நடந்தபடியே இருக்கிறது.

    அரசுத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களில் இதுபோன்று லஞ்சம் வாங்கு பவர்கள் தங்களின் பதவி மற்றும் பணிக்கு தகுந்தாற்போல் சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதையும், லஞ்சம் வாங்குவதையும் தடுக்க லஞ்ச ஒழிப்பு துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

    தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக, அவர்களது செல்போன் உரையாடல்களை காவல்துறை, உளவுத்துறை மற்றும் குற்றப்பிரிவினர் ஒட்டு கேட்கின்றனர்.

    அந்த கோரிக்கையை தான் கேரள லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அரசிடம் கேட்டுள்ளது. கேரள மாநில லஞ்ச ஒழிப்பு துறையின் தலைமை டி.ஜி.பி. யோகேஷ் குப்தா தான் அந்த கோரிக்கையை மாநில அரசிடம் வைத்துள்ளார்.

    அதாவது கேரள மாநி லத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை லஞ்ச ஒழிப்பு துறை "ஹேக்" செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கையாக இருக்கிறது.

    இதன் மூலமாக ஊழலில் ஈடுபடும் மற்றும் லஞ்சம் வாங்கக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வழக்கில் சிக்க வைக்க முடியும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை கேரள மாநில அரசிடம் தெரிவித்திருக்கிறது.

    லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.யின் இந்த கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கினால், அரசின் முன் அனுமதியின்றி யாருடைய போனையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் 7 நாட்களுக்கு "ஹேக்" செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தடை செய்துள்ளன.
    • சாம் ஆல்ட்மேன் இந்தியா வருகை தந்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார்.

    உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

    அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ உருவாக்கிய சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கார்க் ஏஐ ஆகியவற்றுடன் தற்போது சீனாவின் டீப்சீக் ஏஐ புதிதாக அறிமுகமாகியுள்ளது.

    இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சாட்ஜிபிடி, டீப் சீக் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களை அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.

    இவற்றால் அரசின் பாதுகாக்கப்பட்ட தரவுகள், ஆவணங்கள் ஆகியவற்றின் ரகசியத்தன்மை சீர்குலையும் அபாயம் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி டீப்சீக் பயன்பாட்டை தடை செய்துள்ளன.

    இதற்கிடையே சாட்ஜிபிடி உடைய தாய் நிறுவனமான ஓபன் ஏஐ  சிஇஓ சாம் ஆல்ட்மேன்  இந்தியா வருகை தந்துள்ள நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    ×