என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gujarat election"
- குஜராத்தில் பாஜக 8 முறை அல்ல, 80வது ஜெயித்தாலும் அது கேவலம்.
- ஆளுநர் என்பவர் ஆறாவது விரலை போன்றவர்.
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
வாக்குக்காக மட்டுமே அம்பேத்கரை பற்றி பாஜக பேசி வருகிறது. அம்பேத்கர் இன்னைக்குத்தான் அவர்களது கண்ணுக்கு தெரிகிறார். வல்லபாய் படேலுக்கு ஏன் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிலை வைச்சாங்க. நாட்டின் பெருமை காந்தியா, அம்பேத்கரா, வல்லபாய் படேலா? இந்தியாவை தாண்டி மலேசியா, சிங்கபூர் நாடுகளில் கூட வல்லபாய் படேலை தெரியாது.
என்.எல்.சியில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்காததை கண்டித்து மிக விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். உழைப்பில் இருந்து நுட்பமாக தமிழர்களை வெளியேற்றி விட்டனர். அப்போது அந்த உழைப்புக்கு வட இந்தியர்கள் வருகிறார்கள். கிராமங்களில் வட இந்தியர்கள் நாத்து நடுகிறார்கள். கரும்பு வெட்டுகிறார்கள்.
எல்லா இடத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து விட்டால் இந்த நிலத்தின் அரசியலையும், அதிகாரத்தையும் வட மாநிலத்தவர்களே தீர்மானிப்பார்கள். அப்போது நாங்கள் அரசியல் அதிகாரமற்ற அடிமையாவோம். இலங்கையில் நடந்துதான் இங்கும் நடக்கும். அதற்குள் தமிழக மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் களம் இறக்கப்படுவார்கள். குஜராத் தேர்தல் வாக்குப் பதிவின்போது ஒரே ஆள் மொத்த வாக்கையும் பதிவு செய்கிறார். இது குறித்த காணொலி உள்ளது. இதை வெற்றி என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா, இப்படி வெற்றி பெறுவதற்கு பதில் விஷம் குடித்து சாகலாம். அவர்கள் (பாஜக) 8 முறை அல்ல 80 வது முறை ஜெயித்தாலும் அது கேவலம்.
கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது ஆளுநர் என்பவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாது. அப்போது ஆளுநர் சட்டசபையில் மட்டும் பேசி விட்டு போவார். தற்போது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை. ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஏன் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை? ஆளுநர் என்பவர் ஆறாவது விரல் போன்றவர். தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதிக்கும் நாளைதான் தேர்தல் நடக்கிறது.
- இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ம் தேதி (வியாழன்) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு நாளை (5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
93 தொகுதிகளிலும் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். ஆனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது.
தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. பிரதமர் மோடி 31 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார். சூரத், அகமதாபாத் ஆகிய இடங்களில் மிகப்பிரமாண்டமான வாகன பேரணியையும் நடத்தினார்.
அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை 50 கிலோ மீட்டர் தூரம் திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டினார். வழிநெடுக 10 லட்சம் பேர் திரண்டிருந்தனர். இந்த தூரத்தை கடக்க 4 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் பெருமளவில் பங்கேற்கவில்லை. உள்ளூர் தலைவர்களே பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், ஆகியோர் ஆம் ஆத்மிக்கு பிரசாரம் செய்தனர்.
குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜக கடுமையாக போராடியது. அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதிக்கும் நாளைதான் தேர்தல் நடக்கிறது.
இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ம் தேதி (வியாழன்) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
- குஜராத் சட்டசபையின் முதற்கட்ட தேர்தலில் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
- ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் களத்தில் குதித்து உள்ளதால் அங்கு மும்முனை போட்டி உருவாகி உள்ளது.
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதி ( வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
2ம் கட்டமாக நாளை மறுநாள் (5ம் தேதி) மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அகமதாபாத், வதோதரா, காந்திநகர், உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 833 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து அந்த தொகுதிகளில் தங்கி உள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன் பிறகு தேர்தல் நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியாமை உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதையொட்டி தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு முகாமிட்டு அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் ரோடு-ஷோ நடத்தி பிரசாரம் மேற் கொண்டார்.
இதேபோல் காங்கிரசுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் மூத்த தலைவர்கள் உச்ச கட்ட பிரசாரம் செய்தனர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும். டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மட்டும்தான் போட்டி நிலவி வந்தது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் களத்தில் குதித்து உள்ளதால் அங்கு மும்முனை போட்டி உருவாகி உள்ளது.
வருகிற 8ம் தேதி (வியாழக்கிழமை) ஏற்கனவே நடந்து முடிந்த இமாசலப்பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று பிற்பகல் இந்த 2 மாநிலத்திலும் யார்? ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரியவரும்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 முறை நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி கட்டிலில் உள்ளது. பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத்தில் இம்முறை 7வது தடவையாக அக்கட்சி வெற்றி வாகை சூடுமா? என இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்று கம்யூனிஸ்டு கட்சி சாதனை படைத்தது. இதனை சமமாக்கும் விதத்தில் குஜராத்தில் பாஜக சாதனை படைக்கும் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
வருகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
- 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி அழைப்பு.
- முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு எண்ணிக்கையில் பயன்படுத்துமாறு அழைக்கிறேன்.
குஜராத்தில் இன்று முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு எண்ணிக்கையில் பயன்படுத்துமாறு அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- வாக்காளர்களுக்கு பணம், மது, இலவசங்கள் தருவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
- நேர்மையான முறையில் தேர்தலை நடத்த விரும்புவதாக தேர்தல் ஆணையம் தகவல்.
குஜராத் மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில், 788 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இதுவரை ரூ.750 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பணம் கடத்தப்படுவதாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது மோசமான நடைமுறையாகும், நாங்கள் அதை முற்றிலும் தடுக்கும் முயற்சியை செய்கிறோம். குஜராத்தின் அண்டை மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வருவாய் புலனாய்வு இயக்குநரகம், வருமானவரித்துறை, தீவிரவாத தடுப்புப்படை மற்றும் மாநில காவல்துறை இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.
குஜராத்தில் கடந்த 2017 தேர்தலின் போது ரூ.27 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இந்த தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் அளவிற்கு ரொக்க பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கையால் இந்த முறை கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. வதோதராவில் பெரிய அளவில் ஜப்தி நடக்கிறது. ரூ.450 கோடி வரை பறிமுதல் செய்யப்படும். 171 கோடி மதிப்பில் இலவசங்கள் இருந்தன. பணம், மது, போதைப்பொருள் மற்றும் இலவச பொருட்களை வாக்காளர்களுக்கு, வேட்பாளர்கள் வழங்க கூடாது என்று நாங்கள் அதிகாரிகளுக்கு தெளிவாக அறிவுறுத்தி உள்ளோம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதையே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும்.
- பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சூரத்:
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிர பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.நேற்று ஒரே நாளில் கேடா மாவட்டம், நேத்ராங், பருச் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பகுதி மற்றும் சூரத் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது:
குஜராத்தின் தற்போதைய புதிய தலைமுறையினர் அகமதாபாத் மற்றும் சூரத் தொடர் குண்டு வெடிப்புகளைப் பார்த்ததில்லை. தங்களின் வாக்கு வங்கி அரசியல் பாதிக்கும் என்பதால் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுப்பதில்லை. பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் குஜராத் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் அரசியலும் மாறவில்லை. வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சமும் உண்மையானது. 2014- ஆண்டு (லோக்சபா தேர்தல்) உங்களின் ஒரு வாக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது.
இப்போது அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது எல்லைகளில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு முன் 100 முறை யோசிக்கிறார்கள். ஏனென்றால அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து இந்தியா தாக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். நர்மதா அணை திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கிய ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
அணை திட்டத்தை பல ஆண்டுகளாக எதிர்த்தவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட்டு வழங்கியவர்களை குஜராத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. சூரத் மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பண்டித ஜவஹர்லால் நேரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார், ஆனால் அது 50 ஆண்டுகளாக முடங்கியது.
அவர்கள் (போராட்டக்காரர்கள்) யாரும் இந்த அணை திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என்ற நிலையை உறுதி செய்தனர். ஆனால் அவர்களுக்கு ஆம் ஆத்மி டிக்கெட் கொடுத்தது. மூன்று தலைமுறைகளின் எதிர்காலத்தை அழிக்கும் இதுபோன்றவர்களை நம் மாநிலத்தில் காலடி வைக்க அனுமதித்தால் அது பாவம் செய்வது போன்றது.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, மெட்ரோ ரயில் திட்டம், சூரத் நகருக்கு விமான நிலையம் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இரட்டை எஞ்ஜின் அரசு (மத்தியில் பாஜக ஆட்சி) வந்த பிறகு, சூரத்தில் விமான நிலையம் அமைந்தது. மெட்ரோ பணிகள் தொடங்கியுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை எஞ்ஜின் அரசுகள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
- அவர்களுக்கு 27 ஆண்டுகள் கொடுத்தீர்கள், எனக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள்.
- வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், நான் மீண்டும் உங்களிடம் வரமாட்டேன்.
பஞ்சமஹால்ஸ்:
குஜராத் சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி 182 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று பஞ்சமஹால்ஸ் மாவட்டத்தில் உள்ள ஹலோ பகுதியில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த சிலர் மோடி, மோடி என்று ஆதரவு குரல் எழுப்பினர். இதையடுத்து அந்த பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:
சில நண்பர்கள் மோடி, மோடி என்று கூக்குரலிடுகிறார்கள், நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரித்து கோஷம் எழுப்பலாம், ஆனால் உங்கள் குழந்தைகளுக்கான பள்ளிகளை உருவாக்க இருப்பது கெஜ்ரிவால்தான் என்று கூற விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு கோஷம் எழுப்பினாலும், உங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப் போவது கெஜ்ரிவால்தான். எங்களுக்கு யாருடனும் பகை இல்லை. நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரித்து கோஷம் எழுப்பலாம். ஒரு நாள் உங்கள் மனதை வென்று எங்கள் கட்சிக்கு கொண்டு வருவோம்.
மாநிலத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர், அவர்களுக்கு எங்கள் கட்சி வேலைக்கான உத்தரவாதம் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு ரூ 3,000 உதவித் தொகையை வழங்கும். பள்ளிகள் பற்றி பேச இங்கு எந்த கட்சியும் இல்லை. பள்ளிகள், மருத்துவமனைகள், வேலை வாய்ப்புகள், இலவச மின்சாரம் வழங்குவோம் என்று எந்த கட்சியாவது வாக்குறுதி அளித்துள்ளதா? எங்கள் கட்சி மட்டுமே இந்த பிரச்சனைகளை பற்றி பேசுகிறது.
நீங்கள் சிறந்த பள்ளிகளை விரும்பினால் என்னிடம் வாருங்கள். நான் ஒரு பொறியாளர். உங்களுக்கு மின்சாரம், மருத்துவமனைகள் அல்லது சாலைகள் தேவை என்றால் என்னிடம் வாருங்கள். இல்லையெனில் அவர்களிடம் (பாஜகவிடம்) செல்லுங்கள். நீங்கள் அவர்களுக்கு (பாஜகவுக்கு) 27 ஆண்டுகள் கொடுத்தீர்கள், எனக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், நான் மீண்டும் உங்களிடம் வரமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- இந்த தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இங்கு 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றி பெற துடிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. இதில்அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் களமிறங்குகிறது. எனவே தேர்தல் களத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
குஜராத் சட்டசபைத் தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வாக்குகளை வீணடித்து விட வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு சவால் அளிக்கும் கட்சியாக ஆம் ஆத்மியே இருக்கும். இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் நேரடி போட்டி இருக்கப்போகிறது. எனவே காங்கிரசுக்கு வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வீணடித்து விடாதீர்கள் என தெரிவித்தார்.
- பாஜக எவ்வளவு சீட் வாங்க போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் அல்ல இது.
- பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான மணிநகரில் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-
பிரதமர் மோடி, 11ந் தேதி மதியம் 1.50 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் பிற்பகல் 2.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். பிரதமர் மோடிக்கு காந்தி கிராமத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
காந்தி கிராம பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு 4.30 மணிக்கு பிரதமர் விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்கிறார். மகாத்மா காந்தி 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த இந்த கிராம பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பிரதமர் வருகிறார்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் இந்த முறை, பாஜக சரித்திரத்தில் எவ்வளவு சீட் ஜெயிச்சு இருக்கிறதோ அதை விட ஒரு சீட் அதிகமாக ஜெயிக்கும். தமிழக பாஜக தலைவர்கள் பிரச்சாரத்திற்கு குஜராத் செல்கிறார்கள். குறிப்பாக நான் பிரதமரின் சொந்த தொகுதியான மணிநகரில் பிரச்சாரம் செய்ய உள்ளேன். அகமதாபாத்தில் உள்ள அந்த தொகுதியில் 35 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். பரோடா உள்பட பல்வேறு பகுதிகளிலும் பாஜக மூத்த தலைவர்களும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இந்த முறை குஜராத் தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெறும். அதேபோல் இமாச்சல் பிரதேசத்திலும் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும். குஜராத்தல் இரண்டாவது மூன்றாவது இடம் யாருக்கு என்பதுதான் இப்போது போட்டி. காங்கிரஸ் இடத்தை ஆம் ஆத்மி பிடிக்குமா? அதுவும் குறிப்பாக தற்போது நடைபெற்று முடிந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் வாங்கவில்லை.
அதை பார்க்கும் போது காங்கிரஸ் எப்படி பின்னோக்கி சென்றிருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் குஜராத் தேர்தல் என்பது பாஜக எவ்வளவு சீட் வாங்க போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் அல்ல. பல ஆண்டு காலமாக அங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் தேர்தலில் இடமிருக்கிறதா, இரண்டு மூன்று இடங்களிலாவது அவர்கள் ஜெயிப்பார்களா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கப் போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 2-வது கட்டமாக 93 தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது.
- தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும் என்ற நிலையில் ஆம் ஆத்மி 3-வதாக களத்தில் குதித்துள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வியை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. வருகிற 14ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களின் பரிசீலனை 15ம் தேதி நடக்கிறது. 17ம் தேதி மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
2-வது கட்டமாக 93 தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. 17ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பரிசீலனை 18ம் தேதி நடக்கிறது. மனுவை வாபஸ் பெற நவம்பர் 21ம் தேதி கடைசி தினமாகும்.
குஜராத் சட்டசபை தேர்தலில் 4.9 கோடி வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலை நடத்த ரூ.450 கோடி செலவாகும் என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது. 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலை நடத்த ரூ.250 கோடி செலவழிக்கப்பட்டு இருந்தது.
- குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
- தேர்தல் அறிவிப்பு தொடர்பாக இன்று பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.
அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது.
தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்று பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து அறவிக்க உள்ளார்.
- பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் இமாச்சல பிரதேச தேர்தலை நடத்த முடிவு.
- இரு மாநில தேர்தல் தேதி அறிவிப்பு விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத் மாநிலத்தில் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இதேபோல் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 12-ந் தேதி ஒரே கட்டமாக அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் இமாச்சல பிரதேச தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இமாச்சல பிரதேசத்தில் 57 நாட்கள் மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றார். தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இரு மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் குஜராத்துக்கு தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிடும் போது அதை உங்களுக்குச் சொல்வோம் என்று கூறினார்.
இந்நிலையில் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளி வைக்கப்படுவது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, பாஜக மேலும் நலத் திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. பிரதமருக்கு அதிக அவகாசம் அளிக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் ஆச்சரியப்படுவதற்து ஒன்றுமில்லை என்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்