என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INC"

    • ம.பி.யில் வரும் நவம்பர் மாதம் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது
    • கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது

    இந்தியாவின் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    2018-ல் இங்குள்ள சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை வென்று, கமல் நாத் தலைமையில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.விற்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

    ஆனால், மார்ச் 2020ல், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கமல்நாத் அரசை எதிர்த்து தனது அணியுடன் பா.ஜ.க.வை ஆதரித்ததால், பா.ஜ.க. அரசு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. தற்போது அங்கு அவர் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ம.பி.யில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருக்கிறது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இங்கு கடுமையாக போட்டி போடுகின்றன.

    மத்திய பிரதேச பண்டல்கண்ட் பகுதியில் 6 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சாகர் எனும் பகுதியில், ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு இப்போதுதான் கார்கே முதல்முறையாக மத்திய பிரதேசத்திற்கு வந்திருக்கிறார். கார்கேயின் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இப்பின்னணியில் அவர் உரையில் மக்களுக்கு அக்கட்சி சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

    எதிர்பார்த்ததை போலவே வாக்காளர்களை ஈர்க்கும் பல சலுகைகளை அவரது உரையில் உறுதியளித்தார். அதன்படி, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ.500-க்கு வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். முதல் 100 யூனிட்டுகள் வரை நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும், என்று அவர் தெரிவித்தார்.

    தேர்தல் நெருங்கும் போது இரு கட்சிகளின் சலுகைகளும் முழுவதுமாக தெரிய வரும்.

    • போர் குறித்த கருத்து வேறுபாட்டால் கூட்டறிக்கை வரைவு முடிவாகாமல் இருந்தது
    • 200 மணிநேர பேச்சுவார்த்தை, 300 சந்திப்புகள், 15 வரைவறிக்கைகள் தேவைப்பட்டது

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள மாநில திருவனந்தபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், சசி தரூர் (67). மூத்த அரசியல்வாதியான இவர், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பா.ஜ.க. அரசு எடுக்கும் பல முடிவுகள் குறித்து உலக அரங்கில் முன்வைக்கும் விமர்சனங்கள் மிகவும் பிரபலமாக பேசப்படும்.

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புது டெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. ரஷிய உக்ரைன் போரின் காரணமாக இம்மாநாட்டின் சார்பாக தலைவர்களின் கூட்டறிக்கை வரைவதில் கருத்தொற்றுமை ஏற்படாமல் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

    இம்முறை இந்தியா தலைமையில் இந்த மாநாடு நடைபெறுவதால் கூட்டறிக்கை தாமதமானாலோ அல்லது இடம் பெறாமல் போனாலோ நாட்டிற்கு பின்னடைவாக கருதப்படலாம் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    ஆனால் நேற்று மாலை, அனைத்து தலைவர்களின் 100 சதவீத சம்மதத்துடன் அறிக்கை தயாரானதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதனையடுத்து, டெல்லி பிரகடனம் எனும் பெயரில் அந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

    200 மணி நேர பேச்சுவார்த்தை, 300-க்கும் மேற்பட்ட இருதரப்பு சந்திப்புகள் மற்றும் உலக பிரதிநிதிகளின் பரிசீலனைக்காக 15-க்கும் மேற்பட்ட வரைவறிக்கைகள் என கடின உழைப்பிற்கு பிறகே இது சாத்தியமானதாக இம்மாநாட்டின் ஷெர்பா எனப்படும் ஒருங்கிணைப்பாளர் அமிதாப் காந்த் சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

    இதனையறிந்த மூத்த காங்கிரஸ் தலைவரான சசி தரூர் இந்த முயற்சிகளை வெகுவாக பாராட்டினார். தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில், அமிதாப் காந்த் வெளியிட்டுள்ள செய்தியை பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

    "சிறப்பாக பணி புரிந்துள்ளீர்கள் காந்த். வாழ்த்துக்கள். நீங்கள் சிவில் சேவைக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய வெளியுறவு துறை (ஐஎஃப்எஸ்) பணிக்கு பதில் இந்திய ஆட்சிப் பணியை (ஐஏஎஸ்) தேர்வு செய்ததன் மூலம் ஐஎஃப்எஸ் ஒரு திறமையான அதிகாரியை இழந்து விட்டது. இந்தியாவிற்கு ஜி20 மாநாட்டில் இது ஒரு அற்புதமான தருணம்."

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சரியான எண்ணிக்கை எங்குமே இல்லை
    • பா.ஜ.க.வின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் எதுவும் இல்லை

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகன் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் 230 சட்டசபை இடங்களுக்கான பொதுத்தேர்தல், வரும் நவம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும்.  ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது.

    இன்று, அம்மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தில், களபிப்பல் பகுதியில் ஒரு பொது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரும். இதுவரை அவர்களின் சரியான எண்ணிக்கை எங்குமே இல்லை. நாட்டின் கொள்கைகளையும், சட்டங்களையும் வகுப்பதற்கு பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்களுக்கோ எம்.பி.க்களுக்கோ எந்த அதிகாரமோ பங்களிப்போ இல்லை. கேபினெட் செயலர்கள் மற்றும் 90 அதிகாரிகளை கொண்டுதான் நாடே இயக்கப்படுகிறது. அதிகாரவர்க்கமும், ஆர். எஸ்.எஸ். பிரதிநிதிகளும்தான் நாட்டையே வழிநடத்துகிறார்கள். ஊழலின் ஊற்றுக்கண்ணாக மத்திய பிரதேச மாநிலம் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் 3 விவசாயிகள் மாநிலத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு ராகுல் அறிவித்தார்.

    • ரூ.19,620 கோடிக்கு வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்
    • எதிர்கட்சிகளிடம் வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை என்றார் மோடி

    மத்திய பிரதேச மாநிலத்தின் 230 இடங்களை கொண்ட சட்டசபைக்கு அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க.வின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியமைக்க தீவிரமாக போராடி வருகிறது.

    இந்நிலையில், ம.பி.யில் உள்ள குவாலியர் நகருக்கு இன்று வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.19,260 கோடிக்கான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்து பொது மக்களிடையே உரையாற்றினார்.

    அக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

    மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை "இரட்டை எஞ்சின்" (double engine) என எதிர் கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். "இரட்டை எஞ்சின்" நல்லதுதான். இதன் மூலம் மாநிலம் "இரட்டை வளர்ச்சி" காண முடிகிறது.

    பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளுக்கு காண சகிக்கவில்லை. அவர்களிடம் வளர்ச்சி திட்டமோ அல்லது நாட்டின் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு பார்வையோ எதுவும் கிடையாது. உலகளாவிய மன்றங்களில் இந்தியா இப்போது பாராட்டப்படுவதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் இந்தியாவை புகழும் போது, இங்குள்ள எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அதனால், இந்தியாவிற்கு கிடைக்கும் பாராட்டை காண பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொலை மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

    பின் தங்கிய நிலையில் இருந்த ம.பி. மாநிலம் இன்று வளர்ச்சி பட்டியலில் 10-ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் ம.பி.யின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். ம.பி.யை நாட்டின் முதன்மையான முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். உங்களின் ஒரு ஓட்டு ம.பி.யை முதல் நிலைக்கு கொண்டு செல்லும்.

    இவ்வாறு மோடி தெரிவித்தார்.

    ம.பி.யில் 2003 ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்றது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளது

    கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடர்ந்திருக்கிறது.

    தற்போது 5-வது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.

    இந்நிலையில், சீனா இப்போரில் யாரை ஆதரிக்கிறது என இதுவரை தெளிவாக கூறவில்லை.

    "இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். பகைமையை கைவிட்டு பொது மக்களை காக்கவும், தற்போதைய சூழ்நிலை மேலும் மோசமடையாமல் கண்காணிக்கவும் இரு தரப்பையும் கேட்டு கொள்கிறோம். அனைத்து விதமான வன்முறையையும் பொதுமக்களின் மீதான தாக்குதலையும் கண்டிக்கிறோம்" என சீனா அறிக்கை வெளியிட்டு நிறுத்தி கொண்டது.

    ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரின் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சீனா நடுநிலை வகிக்க முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்துள்ளார் சோனியா காந்தி
    • கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், அவரது மகளும் கட்சியின் பொது செயலாளருமான  பிரியங்கா காந்தியும் சென்னை வந்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள கூட்டணியின் தமிழகத்தின் முக்கிய கட்சியான தி.மு.க.வின் சார்பில் அக்கட்சி எம்.பி. கனிமொழி முன்னிலையில் இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். அங்கு சோனியா மற்றும் பிரியங்கா, தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தனர்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் கட்சி எம்.எல்.ஏ,க்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவருடனும் கட்சி நிலவரம், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கான வழிமுறைகள் மற்றும் தி.மு.க.வுடன் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    முன்னதாக கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுமாறு நிர்வாகிகளுக்கு சோனியா அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

    சுமார் 5 வருடங்கள் கழித்து சோனியா, தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ம.பி. சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று வாக்கெடுப்பு
    • ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நேரிடையாக மோதுகின்றன.

    இந்தியாவில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தின் 230 சட்டசபை இடங்களுக்கு நவம்பர் 17 அன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. டிசம்பர் 3 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

    ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நேரிடையாக மோதுகின்றன.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ததியா (Datia) நகரில், பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகன் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதில் முந்தைய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முந்தைய ம.பி. முதல்வருமான கமல்நாத்தை கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    நான் பதவியேற்ற போது ம.பி. எப்படி இருந்தது என உங்களுக்கு தெரியும். துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், கும்பலாக அப்பாவி மக்கள் கடத்தப்படுவது, கும்பல் கும்பலாக மக்கள் கொல்லப்படுவது, கொள்ளையர்கள் அப்பாவி மக்களை அடித்து நொறுக்குவது போன்றவைதான் ம.பி.யின் அடையாளமாக இருந்து வந்தது. நான் முதல்வரானதும் குவாலியருக்கு வந்தேன். காவல் அதிகாரிகளை சந்தித்து, 'ம.பி.யில் ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது கொள்ளையர்கள் இருக்க வேண்டும்' என கூறி உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். காங்கிரஸ் ம.பி.யை ஆளும் போதெல்லாம் மக்களுக்கு நாசமும் இழப்புமே மிஞ்சுகிறது. காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராக இருந்த போது எந்த நல்ல திட்டத்தை நிறைவேற்றவும் 'பணம் இல்லை, பணம் இல்லை' என புலம்புவதையே வழக்கமாக கொண்டிருந்தார். எதற்கெடுத்தாலும் அழுகின்ற இவரை போன்ற மனிதர் மீண்டும் முதல்வரானால் நன்றாக இருக்குமா?

    இவ்வாறு சவுகன் பேசினார்.

    • ரூ.2.5 லட்சம் கோடி அதானி குழுமம் வருவாய் ஈட்டி வருகிறது
    • பொதுமக்கள் பாக்கெட்டிலிருந்து பணம் கையாடப்பட்டு வருகிறது

    குஜராத் மாநிலத்தை மையமாக கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனம், அதானி குழுமம். அதானி குழுமத்தின் நிறுவனர் குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த கவுதம் அதானி (61).

    உலகெங்கும் துறைமுகங்களின் செயலாக்கம் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல முக்கிய வர்த்தகங்களில் ஈடுபட்டு, பெரும் வருவாய் ஈட்டும் இந்நிறுவனம், கடந்த வருடம் ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.

    இந்நிலையில் அதானி குழுமம், 2019லிருந்து 2021 வரை உள்ள காலகட்டத்தில் மின்சார உற்பத்திக்கான நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு அதிக விலைக்கு இறக்குமதி செய்து மறைமுக மோசடியில் ஈடுபட்டதாகவும் அதன் காரணமாகவே இந்தியாவில் பயனர்களுக்கான மின்சார கட்டணம் உயர்ந்து வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதற்கிடையே பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள 25 கட்சிகளை கொண்ட எதிர்கட்சிகளின் கூட்டணியில் ஒரு அங்கமான மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசிய காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார், சில தினங்களுக்கு முன் கவுதம் அதானியை சந்தித்து பேசியிருந்தார்.

    இச்சந்திப்பு குறித்து இந்திய தேசிய கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் புது டெல்லியில், "அதானி சந்திப்பு பற்றி ஏன் நீங்கள் சரத் பவாரிடம் கேட்கவில்லை?" என கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது பதிலளித்த அவர் கூறியதாவது:

    நான் சரத் பவாரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல. அவர் கவுதம் அதானியை பாதுகாக்கவும் இல்லை. ஆனால், நரேந்திர மோடிதான் இந்திய பிரதமர். அவர்தான் அதானியை பாதுகாத்து வருகிறார். எனவே நாங்கள் அவரைத்தான் கேள்வி கேட்க வேண்டும். இம்முறை மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு சுவிட்சை அழுத்தினால் உடனடியாக அதானி பாக்கெட்டுக்கு பணம் போகிறது. உலகம் முழுவதும் அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன; அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் எதுவும் நடைபெறவில்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • மாநில ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருந்த போது வருமான வரித்துறை சோதனை நடந்தது
    • 2019 செப்டம்பர் மாதம் சிவகுமார் கைது செய்யப்பட்டார்

    கடந்த மே மாதம் முதல், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரை உள்ளடக்கிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 2017 ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க.வின் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, இந்திய வருமான வரித்துறை தற்போதைய துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு தொடர்புடைய புது டெல்லி உட்பட பல இடங்களில் சோதனை நடத்தியது. அதில் ரூ.8 கோடிக்கும் அதிகமாக பணம் கிடைத்ததாகவும் அவரது இல்லத்தில் ரூ.41 லட்சம் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கான நீதிமன்றத்தில் அவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்டது. சிவகுமார் மீது உடனடியாக அமலாக்கத்துறையும் (ED) வழக்கு பதிவு செய்தது.

    2019 செப்டம்பர் மாதம் சிவகுமார் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

    தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு (CBI) மாற்றப்பட்டது.

    இதை எதிர்த்து சிவகுமார் தரப்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கை தள்ளுபடி செய்ய கோரியும் விசாரணைக்கு தடை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த ஏப்ரலில் இதன் மீது தீர்ப்பளித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தாலும், விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை விரைந்து முடிக்குமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில் இன்று, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சிவகுமார் தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இத்தீர்ப்பை அளித்த நீதிபதி கே. நடராஜன், வழக்கை விரைந்து நடத்தி 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிகழ்வை டிகே சிவகுமாருக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கும் அரசியல் விமர்சகர்கள், அவரது துணை முதல்வர் பதவிக்கு சிக்கல் வருவதற்கு அதிகம் வாய்ப்புண்டு எனவும் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி இந்தியாவின் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த தீர்ப்பை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    முதல் தகவல் அறிக்கையில் சிவகுமார் குடும்பத்தினருக்கு 2013 ஏப்ரலில் சுமார் ரூ.34 கோடி அளவில் இருந்த சொத்து மதிப்பு 2018ல் சுமார் ரூ.163 கோடியாக உயர்ந்ததாகவும் இது அவர்களது வருமானத்திற்கும் அதிகமானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2020, ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
    • இது ஒன்றும் ஒரு தனி நபர் நிகழ்ச்சி அல்ல என்றார் குர்ஷித்

    உலகெங்கும் உள்ள இந்துக்களின் தெய்வமான ஸ்ரீஇராமபிரான் அவதரித்த தலமான அயோத்தியில் அவருக்கு ஒரு மிக பிரமாண்ட ஆலயத்தை கட்ட முடிவு செய்து 2.77 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ ராம்ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா" (Shri Ramjanmabhoomi Teerth Kshetra) எனும் ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது அவை முடியும் தறுவாயில் உள்ளன.

    2020, ஆகஸ்ட் 5 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அடிக்கல்லை நாட்டி, கட்டிட திருப்பணிகளை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "பகவான் ஸ்ரீஇராமரின் விக்கிரகம் அடுத்த வருடம் ஜனவரி 22 அன்று இத்திருக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். 'பிரான் பிரதிஷ்டா' எனப்படும் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு டிரஸ்டின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளோம். அவரும் வருவதாக ஒப்பு கொண்டுள்ளார்", என கடந்த அக்டோபர் 22 அன்று இந்த டிரஸ்டின் பொது செயலாளர் சம்பத் ராய் (Champat Rai) தெரிவித்தார்.

    "சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்" என இந்த அழைப்பு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த அழைப்பு குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் தெரிவித்திருப்பதாவது:

    ஒரு கட்சிக்கு (பா.ஜ.க.) மட்டும் தான் அழைப்பிதழா? யார் வருவார்கள், வர மாட்டார்கள் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது. ஆனால், 'கடவுள்' ஒரே ஒரு கட்சிக்கு மட்டும் உரியவராகி விட்டாரா என்ன? அனைத்து கட்சியினரையும் பாகுபாடு இன்றி அழைக்க வேண்டாமா?. இந்த முக்கிய விழா ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான நிகழ்வாக மாறி விட்டது. இது ஒரு கட்சி நிகழ்வோ, தனி நபர் நிகழ்ச்சியோ அல்ல. அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு குர்ஷித் கூறினார்.

    குடும்பங்களில் முக்கிய நிகழ்வுகளுக்கு அழைக்கப்படாத உறவினர்கள் "எனக்கு ஏன் அழைப்பு வைக்கவில்லை?" என குற்றம் சாட்டுவதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பயனர்கள் குர்ஷித்தின் கருத்து குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • 2023 மே மாதம் இந்திய தேசிய காங்கிரஸ், ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது
    • சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக குமாரசாமி அறிவித்தார்

    2007ல் ஜனதா தள் மற்றும் பா.ஜ.க. கூட்டணியின் சார்பாக கர்நாடகா முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்த போது ராமநகரா மாவட்டம் உருவாக்கப்பட்டது. பெங்களூரூவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ராமநகரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வருடம் மே மாதம் முதல் கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி, ராமநகராவை பெங்களூரூவுடன் இணைத்து "பெங்களூரூ தெற்கு" (Bangaluru South) என புது மாவட்டத்தை உருவாக்க முயன்று வருகிறது.

    உருவாக்கப்பட உள்ள இந்த தெற்கு பெங்களூரூ மாவட்டம், ராமநகரா, சென்னபட்டனா, மாகடி, கனகபுரா மற்றும் ஹரோஹல்லி ஆகிய 5 தாலுக்காக்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் என்றும் கனகபுரா, எதிர்காலத்தில் பெங்களூரூவின் ஒரு பகுதியாகும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்தார்.

    இது குறித்து சிவகுமார் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது:

    நீங்கள் பெங்களூரூ மாவட்டத்தை சேர்ந்தவர்கள்; ராமநகரா அல்ல. அதை முதலில் மனதில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தேவையின்றி நம்மை ராமநகரா மாவட்டத்தில் இணைத்தனர். நீங்கள் பிறர் சொல்வதை கேட்காதீர்கள். மீண்டும் பெங்களூரூவை பழையபடி மாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி இது குறித்து தெரிவித்ததாவது:

    ராமநகராவுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிற்கு சொந்தமான சொத்துக்களை காக்கும் முயற்சிதான் காங்கிரஸின் இந்த நடவடிக்கை. நான் சிவகுமாருக்கு சவால் விடுகிறேன். ராமநகராவின் பெயர் மாற்றப்பட்டாலோ, அல்லது அதனை பெங்களூரூவுடன் இணைக்க முயன்றாலோ, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ராமநகராவின் மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை
    • காந்தியின் கோட்பாடுகளே அரசியல் அமைப்பின் அடித்தளம் என்றார் பிரியங்கா

    கடந்த அக்டோபர் 7 முதல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசாவில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

    இந்நிலையில், ஐ.நா. கூட்டமைப்பின் பொதுச்சபையில் (UNGA) நேற்று முன் தினம் ஜோர்டான், "காசாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்க உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசியமான தேவைகளும் தங்கு தடையற்று கிடைக்க வேண்டும்," என்றும் கோரிக்கை வைத்து ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது.

    ஜோர்டானின் தீர்மானத்திற்கு ஐ.நா. உறுப்பினர் நாடுகளில் 120 நாடுகள் ஆதரவும், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன.

    இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    "இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று நடைபெற்ற ஹமாஸ் தாக்குதல் அதிர்ச்சிகரமானது. ஆனால், அது குறித்து தீர்மானத்தில் வாசகங்கள் இடம் பெறவில்லை. பொதுமக்கள் காசாவில் கொல்லப்படுவதும் கவலையளிக்கும் செயல். இதனால் இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்தது" என இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து ஐ.நா. சபைக்கான இந்திய துணை நிரந்தர தூதர் யோஜ்னா படேல் (Yojna Patel) தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கண்டித்துள்ளார்.

    அவர் இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:

    'தன் கண்ணை பிடுங்கியவனின் கண்ணை பிடுங்க வேண்டும் எனும் எண்ணமும், செயலும், உலக மக்கள் அனைவரையும் குருடர்களாக்கி விடும்' என தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியிருந்தார். அகிம்சையும், உண்மையுமே நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளம். உணவு, குடிநீர், மருந்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் அனைத்தும் காசா பொது மக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மிகுந்த துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஜோர்டானின் போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தில் பங்கேற்காததன் மூலம் நம் நாடு எந்த உயர்ந்த எண்ணங்களை தாங்கி பல காலங்களாக நிலை நிற்கிறதோ அவை அனைத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை இப்போது இந்தியா எடுத்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு. இந்த முடிவிற்காக ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன்.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    ×