என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Industry"

    • பரமக்குடியில் தொழில் பழகுநர் தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுபவர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம்,தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம்,தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரடியாக தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் ஐ.டி.ஐ-யில் என்.சி.வி.டி,எஸ்.சி.வி.டி பயிற்சி முடித்த வர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும்.
    • நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் தொழில் தொடங்க நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு நமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துத் தருகிறது. உதாரணமாக தமிழக அரசு அளிக்கும் 'ஸ்டார்ட் அப் டி.என்' என்ற திட்டம் மிகவும் உபயோகரமாக உள்ளது. அதனை, பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் இளம் தலைமுறையினர் தங்களது யோசனைகளை முன் வைத்தால் மட்டுமே போதுமானது. நல்ல யோசனைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்றவாறு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

    கடனாக அல்லாமல் உதவியாகவே வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 'ஆன்ட்ரப்ரனர்ஷிப்' என்ற வகுப்பை உருவாக்கி தொழில் தொடங்கும் ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கற்று தருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்லாமல் நிறுவனம் தொடங்கலாம் என்ற மனநிலைக்கு மாறுகின்றனர். நானும் அத்தகைய வகுப்புகளை கல்லூரிகளில் நடத்தி வருகின்றேன். எனவே தொழில் தொடங்க விரும்புபவர்கள் நல்ல யோசனைகளை மட்டும் முன்வைத்து இத்தகைய திட்டங்களை பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது.

    முதலாவது, நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள், ஆரம்ப காலகட்டத்தில் பணிக்கு நிறைய ஆட்களை சேர்க்கக்கூடாது. உங்களால் எவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும் என்பதை பொறுத்து குறைவான ஆட்களை சேர்த்தால் போதுமானது. இரண்டாவது ஊழியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும். குறைவான சம்பளம் கொடுத்தால் அவர்கள் அனுபவத்தை பெற்றுக்கொண்டு, மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்ற சென்று விடுவார்கள்.

    இதனால் நாம் மீண்டும் பணத்தை செலவழித்து ஆட்கள் சேர்க்கும் நிலை ஏற்படும். நிதியை நிர்வகிக்க, கணக்கு வழக்குகளை பார்க்க ஆட்களை பணியில் அமர்த்தியிருந்தாலும், ஒரு நிறுவனராக நாமும் அதனை கவனிக்க வேண்டும். இப்பொழுது ஆரம்பிக்கப்படும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைய இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும்.

    சமூகம் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசினாலும், ஒரு பெண் சுயமாக நிறுவனத்தை தொடங்கினாலும் சிலர் எதிர்மறையாக பேசத்தான் செய்வார்கள்.

    பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதுதான் பெண்களுக்கான பெருந்தடை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். ஏட்டுப் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும். உங்களிடம் திறமையும், நிதி மேலாண்மையும் இருந்தாலே போதும். நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பெண்கள் பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.
    • முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள்.

    கண் மை, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகுக்காகவும், மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆரம்ப காலத்தில் பசுங்கற்பூரம், நெய், தாவர எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. தற்போது, வணிக ரீதியான லாபம் பெற இயற்கை பொருட்களுடன் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலவகை கண் மைகளில் 'ஈயம்' மூலக்கூறுகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இவை கண் தசைகளை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பார்வைத் திறனையும் பாதிக்கக்கூடும். எனவே, இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் கண் மைகளைப் பயன்படுத்துவது நல்லது.

    ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கண்களுக்கு பிரகாசத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். கண்களின் தசைகளை வலுப்படுத்தி பார்வைத் திறனை மேம்படுத்தும்.

    ஆர்கானிக் சாதனம் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இது பெண்கள் பெரிதும் விரும்பும் அழகு சாதனப் பொருள் என்பதால், இதனை தயாரித்து விற்பனையும் செய்யலாம். பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.

    எந்த ஒரு பொருளையுமே, விற்பனை செய்யும் முன்பு முதலில் அதனை நாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய தயாரிப்பைப் பற்றி நம்பிக்கையுடன் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள். பிறகு சந்தைப்படுத்த ஆரம்பிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய அளவு மண் அகல் - 1

    சந்தனத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    வெள்ளை நிற பருத்தி துணி - 1 சிறிய துண்டு

    பசுநெய் - 3 டேபிள் ஸ்பூன்

    பாதாம் பருப்பு - 1 சிறிய

    அகலமான கண்ணாடி குப்பி - 1

    டீஸ்பூன் - 1

    செய்முறை: சந்தனத்தூளில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, டீஸ்பூன் மூலம் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். அதில் பருத்தித் துணியை நன்றாக நனைத்து நிழலில் உலர்த்துங்கள். பிறகு, அதைத் திரி போல சுருட்டிக் கொண்டு, அகல் விளக்கில் வைத்து நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுங்கள். விளக்கின் இரண்டு பக்கமும் நீளமான டம்ளர்களை ஸ்டாண்ட் போல வைத்து, எவர்சில்வர் அல்லது மண் தட்டு ஒன்றை அவற்றின் மீது கவிழ்த்து வையுங்கள்.

    பாதாம் பருப்பை ஒரு இடுக்கியால் பிடித்துக் கொண்டு விளக்கில் காண்பிக்க வேண்டும். அது நன்றாக எரிந்ததும் ஆறவைக்கவும். பின்பு அதை ஒரு சிறிய உரலில் போட்டு இடித்து தூளாக்கிக்கொள்ளவும். அகலில் நெய் தீர்ந்ததும் அதை அணைத்து, அதன் மேலே கவிழ்த்திருக்கும் தட்டை சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு தட்டை எடுத்து பார்த்தால் அதன் மீது கரி படிந்திருக்கும்.

    அதனை டீஸ்பூனால் சுரண்டி சேகரித்து கண்ணாடி குப்பியில் கொட்டவும். அதனுடன் பொடித்து வைத்திருக்கும் பாதாம் கரியையும் கலந்து கொள்ள வேண்டும். கண்ணாடி குப்பியை காற்று புகாமல் மூடி வைக்கவும். இதை நெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாகக் குழைத்து பயன்படுத்தலாம்

    • கொரானாவால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு விசாவுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பரவலால் வேலையிழந்து 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் நாடு திரும்பிய தமிழர்கள் இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்ப தாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேலாகவும், அதிகபட்ச வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் திட்டங்க ளுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    திட்ட தொகையில் பொதுப் பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கடவுசீட்டு, விசா நகல், கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திற னாளிகளாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் திட்ட விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    அரசு மானியமாக திட்ட தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன்தொகையில் ஈடு செய்யப்படும். திட்டத்தின் சிறப்பு அம்சமாக கடன் வழங்கப்பட்ட பின் 6 மாதங்கள் கழித்து முதல் தவணைத் தொகையை வங்கியில் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையை திரும்ப செலுத்த வேண்டும்.

    கொரோனா பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்த, இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விருதுநகர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுயதொழில் செய்யும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
    • தென்னை நார் மருத்துவ குணம் கொண்டதுடன், எளிதில் கிடைக்கக்கூடியது.

    வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. அதற்கான கடன் உதவி, வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல் என பல்வேறு வகையிலான திட்டங்களை அரசும், தனியார் அமைப்புகளும் உருவாக்கி, சுயதொழிலில் ஈடுபடும் பெண்களை ஊக்கப்படுத்தி வருகின்றன. எனினும், நாம் செய்யும் தொழிலின் தயாரிப்பும், உற்பத்திப் பொருளும் தனித்துவமாக இருந்தால் அதில் அதிக லாபம் பெற முடியும்.

    அந்த வகையில், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் 'தென்னை நார் கால்மிதியடி தயாரிப்பு' தொழில் குறித்த விளக்கமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

    பொதுவாக நாம் தயாரிக்கும் பொருள் இயற்கையாகவும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும் இருந்தாலே அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த வகையில் தென்னை நார் கால் மிதியடி, பயன்படுத்துபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதத்திலும் கெடுதல் அளிக்காது. ஆகையால், இவற்றை விற்பனை செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.

    இது தவிர, நாம் உற்பத்தி செய்யும் பொருளின் சிறப்பம்சம் மற்றும் நன்மைகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமான ஒன்று. தென்னை நார் மருத்துவ குணம் கொண்டதுடன், எளிதில் கிடைக்கக்கூடியது. விலை குறைவானது. எளிதில் பயன்படுத்தக்கூடியது. மேலும், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் துணியால் செய்யப்பட்ட கால்மிதியடிகளை விட பாதுகாப்பானது, உடல் நலம் மற்றும் சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காது.

    கால்மிதியடிகள் தயாரிக்க தேங்காய் நார், கயிறு திரிக்கும் இயந்திரம் மற்றும் மேட் தயாரிக்கும் இயந்திரம் தேவைப்படும். இதை இயக்குவது மிகவும் எளிதானது. அரசு மானியத்தின் மூலம் அல்லது சுயதொழில் கடன் உதவி மற்றும் மகளிர் சுய உதவி மூலமாக மானிய முறையில் இயந்திரம் வாங்கலாம். இந்த இயந்திரத்தில் முதலில் தேங்காய் நாரை கயிறாக திரிக்கும் வசதி இருக்கும்.

    அதைப் பயன்படுத்தி கயிறு திரித்து பின் அதை சீராக்கி, கால்மிதியாக தயாரிக்கலாம். இதற்கான பயிற்சி, மத்திய கயிறு வாரியத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு கிலோ தேங்காய் நாரில் 2 கால்மிதியடிகள் தயாரிக்கலாம். குறைந்த பட்சமாக ஒரு வாரத்தில் 100 கிலோ தேங்காய் நார் கொண்டு 200 கால்மிதியடிகள் தயாரிக்க முடியும். ஒரு கிலோ தேங்காய் நாரின் இப்போதைய விலை 50 ரூபாய்.

    ஆனால், நேரடியாக தென்னை சாகுபடி செய்பவர்களிடம் மொத்த விலைக்கு வாங்கும்போது இதன் விலை மேலும் குறையலாம். தவிர, தயாரிப்பு செலவுகள் சேர்த்து ஒரு 'மேட்' தயாரிக்க சுமார் 70 ரூபாய் ஆகும். ஒரு மேட்டை 90 முதல் 120 ரூபாய் வீதம் நேரடியாக சந்தையில் விற்கலாம். அல்லது மொத்த விலைக் கடையில் பங்குதாரர் முறையில் விற்கலாம். ஆன்லைனில் தனியாகவும், மொத்தமாகவும் விற்கலாம்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தொழில் மேம்பாட்டு திட்டத்தில் இளைஞர்கள் சுயதொழில் செய்கின்றனர்.
    • மேற்கண்ட தகவலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ், 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10.00 லட்சம் முதல் 5 கோடி வரை 25சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்படுகிறது.

    மேலும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வியாபாரம் , சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்கிட முறையே ரூ.5லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை 25சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பரமக்குடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் கூறும்போது, குறைந்த பட்சம் 4 நபர்களுக்காவது, வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழில் தொடங்கிட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவாகவும், லட்சியமாகவும் இருந்தது.

    இந்த நிலையில், தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மிஷின் ஷாப் சேவைகள் தொழில் தொடங்கிட வேண்டி விண்ணப்பித்து ரூ.10 லட்சம் கடனுதவி பெற்றேன். இதற்கு அரசு மானியமாக ரூ.3.84 லட்சம் கிடைத்தது. இதனை கொண்டு தொழில் தொடங்கி தற்போது நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறேன். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த காளிஸ்வரன் கூறும்போது, நான் பொது சேவை மையம் நடத்துவதற்கு போதிய பண வசதியில்லாமல் இருந்தேன். இந்த நிலையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ரூ.3.95 லட்சம் வங்கி கடன் பெற்றேன். இதற்கு அரசு மானியமாக ரூ.1.04 லட்சம் கிடைத்தது. இதன் மூலம் சேவை மையம் தொடங்கி நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறேன். இதற்கு உதவிய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மேற்கண்ட தகவலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் தெரிவித்தனர்.

    • வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    • ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள்.

    வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு முன்பு குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டியதில்லை. அலுவலகப் பணிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் திருமணமாகிவிட்டால், குடும்ப நிர்வாகத்தையும் அவர்கள் சேர்த்து சுமக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு பணிகளையும் சேர்த்து கவனிக்கும் பெண்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது வருத்தத்தோடு இரண்டு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறார்களா? என்பதை எல்லாம் அலசும் வித்தியாசமான சர்வே இது!

    * குடும்ப நிர்வாகம், அலுவலகப் பணி இரண்டையும் கவனிப்பது உங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு..?

    - 51.8 சதவீத பெண்கள் 'மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட வேறு வழியில்லை' என்று சற்று சலிப்பு கலந்த நிலையில் பதில் கூறியிருக்கிறார்கள்.

    - மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பதில், 37.5 சதவீத பெண்களிடமிருந்து கிடைத்திருக்கிறது.

    - கொஞ்சம்கூட மகிழ்ச்சியில்லை என்று 10.7 சதவீதம் பேர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

    * நீங்கள் குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே சென்று வேலையும் செய்ய என்ன காரணம் என்ற கேள்விக்கு..?

    - ஊதியத்திற்காக என்று 55 சதவீதம் பேரும், வேலை தரும் ஆத்ம திருப்திக்காக என்று 40 சதவீதம் பேரும் கூறியுள்ளார்கள்.

    - மீதமுள்ள பெண்கள் 'சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் கிடைக்கும் கவுரவத்திற்காகவும்- வீட்டிலே இருந்தால் போரடித்துப்போவதை தவிர்க்கவும்' வேலைக்குப் போவதாக சொல்கிறார்கள்.

    தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் கணிசமான அளவினர், குடும்பம் மற்றும் வேலையால் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இரவில் தூங்கச் செல்லும்போது மறுநாள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை உணவு என்ன தயாரிப்பது, கியாசை அணைத்தோமா, வீட்டை பூட்டினோமா.. என்றெல்லாம் நூறு கேள்விகள் மூளையை மொய்த்துக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவதாகவும், திடுக்கிட்டு விழிக்கும்போது விடிந்துவிடுவதாகவும் அலுப்போடு சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தொடங்கி, ஒரே மாதிரி முடிப்பது எரிச்சலை தருவதாகவும் சொல்கிறார்கள்.

    * வீட்டு நிர்வாகத்தைவிட அலுவலகப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு..?

    - 60.7 சதவீத பெண்கள், இரண்டையும் சமமாக பாவிப்பதாக சொல்கிறார்கள்.

    - அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்போது வீட்டை மறந்துவிடுவதாக 25 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள்.

    - 13 சதவீத பெண்கள், 'வீட்டில் இருந்து தேவையான அன்பு கிடைக்காதபோது, அலுவலக வேலையில் மூழ்கிவிடுவதாக' சொல்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள் 'கணவரோடு சண்டையிட்டால் கவனம் முழுவதும் வேலையில் திரும்பி விடும்' என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    * அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப தாமதமானால், வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு..?

    - அமைதியாக வரவேற்று, அடுத்து செய்யவேண்டிய வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்கள் என்று 54.6 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

    - அரைகுறை மனதோடு வீட்டு வேலைகளில் உதவுவார்கள் என்று 30 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள்.

    - பத்து சதவீதம் பேர், வீட்டில் எடக்கு மடக்காக கேள்வி கேட்பார்கள் என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள், 'அன்று முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் இறுக்கமாக காணப்படுவார்கள்' என்று கூறியிருக் கிறார்கள்.

    * உங்கள் வேலைச் சுமையை உணர்ந்து, கணவர் உங்களுக்கு உதவுவாரா என்ற கேள்விக்கு..?

    - வேலைச் சுமையை உணர்ந்துகொள்வார். ஆனால் எப்போதாவதுதான் உதவுவார் என்பது 39.3 சதவீத பெண் களின் கருத்து.

    - தாமாகவே முன்வந்து உதவுவார் என்று கூறி, 32.1 சதவீத பெண்கள் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

    - 20 சதவீதத்தினர், 'உதவி செய்வது என்பது அவரது அப்போதைய மனநிலையை பொறுத்தது' என்று கூறியிருக்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். 'திரும்பிக்கூட பார்ப்பதில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    பொதுவாக வேலைக்கு செல்லும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் தன்னால் முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்றுதான் கணவர் விரும்புகிறார். 'இன்று வீட்டு வேலைகளை நீ செய். குழந்தைகளை நான் கவனித்துக்கொள்கிறேன்' என்று மனைவியிடம் சொல்லவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்காது. கடைசியில் எல்லா வேலைகளும் சேர்ந்து வழக்கம்போல் மனைவி தலையில்தான் விழும். அதனால் இந்த விஷயத்தில் கணவர் கொடுக்கும் வாக்குறுதி காற்றில் பறந்துவிடுவதால், மனைவி மார்கள் பெரும்பாலும் அவர்களை நம்புவதில்லை.

    அதே நேரத்தில் 'வேலை முடிந்து வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுதல்' என்ற சிந்தாந்தம் மறைந்துகொண்டிருக்கிறது. ஏன்என்றால் முன்பெல்லாம் பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் என்ற நிலை இருந்தது. அதனால் அவர்கள் வேலைமுடிந்து, அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நிலை அதுவல்ல. ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீடு திரும்புகிறார்கள். அதனால் இரவு, நள்ளிரவு, தாமதம் என்பன போன்றவை எல்லாம், வேலைக்குப் போகும் பெண்களிடமிருந்து வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன.

    * பஸ், ரெயிலில் பயணம் செய்து வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு..?

    - 61 சதவீதம் பேர், சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடிவதில்லை என்றும், அதுபோல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்ப முடியவில்லை என்றும் கூறியிருக் கிறார்கள்.

    - 27 சதவீதம் பேர், பயணத்திலே அதிக நேரத்தை செலவிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

    - 12 சதவீத பெண்கள் பாலியல்ரீதியான தொந்தரவுகள் பயணத்தில் உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    • கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றலாம்.
    • புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம்.

    நவீன காலத்து உடை நாகரிகம் பற்றியும், 'பொட்டிக்' எனப்படும் பிரத்யேக ஆடை வடிவமைப்பு தொழில் கலாசாரம் பற்றியும், அதன் மூலம் பெண்களுக்கு உருவாகி இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    'பொட்டிக்' என்பது காஸ்டியூம் டிசைனர்கள் எனப்படும் உடை வடிவமைப்பாளர்களால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக உடை கடை. இங்கு, பேஷன் டிரெண்டிங்கான உடைகளை வடிவமைப்பார்கள். அதேபோல வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற, பிரத்யேக உடைகளையும் வடிவமைத்து கொடுப்பார்கள். இதில், எல்லா கலாசார உடைகளும் அடங்கும். அது சுடிதாராக இருக்கலாம். டிசைனிங் வேலைபாடுகள் நிறைந்த சேலை பிளவுஸ்களாக இருக்கலாம். பிரைடல் பிராக், லெஹெங்கா, ஸ்கர்ட், பட்டுப்புடவைகளில் இருந்து தைக்கப்படும் நவ-நாகரிக உடைகள், குறிப்பிட்ட விழாக்களை அழகாக்கும் தீம் மற்றும் கஸ்டமைஸ்ட் உடைகள், பிறந்த குழந்தைகளுக்கான விஷேச உடைகள்... இப்படி உடை கலாசாரத்தில் வரும் எல்லா வகைகளையும், தைத்துக் கொடுக்கலாம். ரெடிமேட் துணிகளுக்கு மாற்றாக, நமக்கு வேண்டியதை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் தைத்துக் கொடுப்பதுதான், பொட்டிக் கடைகளின் அடிப்படை.

    முன்பை விட, இப்போது நிறைய மக்கள் கஸ்டமைஸ்ட் ஆடைகளை அணிய ஆசைப்படுகிறார்கள். ஒருகாலத்தில் திருமண வரவேற்புக்கு மட்டுமே 'கஸ்டமைஸ்ட்' ஆடைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. நிச்சயதார்த்தத்தில் தொடங்கி, திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோஷூட்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், ஹனிமூன் பயணங்கள், கர்ப்ப கால போட்டோ ஷூட், குழந்தை பிறப்பு, குழந்தையின் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம்... இப்படி எல்லா விஷேசங்களுக்கும், அவர்களுக்கு பிடித்த மாதிரியில், பிடித்த நிறங்களில், பிடித்த தீம் (கருப்பொருளில்) ஆடைகளை வடிவமைத்து அணிகிறார்கள். இது, இன்றைய டீன்-ஏஜ் வயதினரின் தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. அதனால் 'காஸ்டியூம் டிசைனிங்' துறையிலும், பொட்டிக்கடை களிலும் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

    கிரியேட்டிவிட்டி, குவாலிட்டி, டெலிவரி மற்றும் பிட்டிங்... இவை நான்கையும், சிறப்பாக பின்பற்றினால், பொட்டிக் தொழிலில் வெற்றி பெறலாம். கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றல் வெளிப்படும் வகையிலான உடைகளை உருவாக்குவது அவசியம். அதேசமயம், லாப நோக்கத்திற்காக துணிகளின் தரத்தில் (குவாலிட்டி) எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது. அதேபோல, 2 நாட்களில் தைத்து கொடுப்பதாக (டெலிவரி) கூறி, அதை 4 நாட்களாக தாமதப்படுத்தி கொடுக்கக்கூடாது. இறுதியாக, நாம் தைத்து கொடுப்பது அவர்களின் உடலோடு சரியாக பொருந்தக்கூடிய அளவில் பிட்டிங் துல்லியமாக இருக்க வேண்டும். இவை நான்கையும் சரியாக கடைப்பிடித்தால், வெற்றி பெறலாம்.

    புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம். அதில் உருவானதுதான், இந்த டெக்னிக். எல்லோர் வீட்டிலும், அம்மா, பாட்டிகளின் நினைவுகளை தாங்கிய பழைய புடவைகள் இருக்கும். அதை இப்போது உடுத்து பவர்களும் உண்டு. பழைய டிசைன் என்ற தயக்கத்தினால், உடுத்த தயங்குபவர்களும் உண்டு. அப்படி தயங்குபவர்களுக்காகவே, இந்த முயற்சி. பழைய புடவையை புடவையாகத்தான் அணியவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த வகையில், சுடிதாராக அணியலாம். இல்லையென்றால் அனார்கலி, கவுன், லாங் பிராக், ஸ்கர்ட், அம்பர்லா கவுன், குர்த்தி... இதுபோன்ற பேஷன் வடிவங்களுக்கும் மாற்றிக்கொள்ளலாம்.

    சில பெண்கள், அவர்களது அம்மா புடவையில் தங்களுக்கும், மகளுக்கும் ஒரே டிசைனில் உடை தைத்து அணிகிறார்கள். ஏதோ ஒரு வகையில், முன்னோர்களுக்கும், அவர்களுக்குமான பந்தத்தை உடை வடிவில் தொடர விரும்புகிறார்கள்.

    கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றலாம். புடவையின் கிழிந்த பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் மற்ற புடவை துணிகளிலும், நவ-நாகரிக உடைகளை தைக்கலாம். அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப, ஆரி வேலைப்பாடுகள் செய்து, புடவைகளை அழகாக்கலாம். அதேபோல, கறை படிந்த பட்டுப்புடவைகளை கூட ஆடைகளாக மாற்றலாம்.

    ஆடம்பரமாக காட்சியளிக்கும் உடைகளை 'லைட் வெயிட்' முறையில் லேசாக வடிவமைப்பதும், அணிவதும்தான் இப்போதைய டிரெண்ட். இதனுடன், அம்மா-மகள் உடைகள், தீம் முறையில் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான உடைகள், விஷேசங்களுக்கு ஏற்ற கஸ்டமைஸ்ட் உடைகள், பட்டுப்புடவைகளில் உருவாகும் பல உடைகள்... என எந்த வரம்பிற்குள்ளும் சிக்காமல், ஆடைகளின் டிரெண்ட் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

    தையல் கலையை பொறுத்தவரை, வாய்வழி செய்திகளாகவே பெரும் விளம்பரம் நடக்கும். நீங்கள், உங்களுக்கு தெரிந்த தோழிகளிடம் பரிந்துரைப்பீர்கள். அவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் பரிந்துரைப்பார்கள். இதோடு கொஞ்சம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தள புரோமோஷன் இருந்தால் போதும், சிறப்பாக முன்னேறலாம்.

    • கல்வியோடு தொழிலையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
    • அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வர வேற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி் செயலர் செல்வ ராஜன் தலைமை தாங்கி னார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ேபாலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி கலந்து ெகாண்டு 'எண்ணமே வாழ்வு' என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதா வது:-

    இந்தியாவின் மாபெரும் சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை ஆகும். கோடிக்க ணக்கான மாணவர்கள் பள்ளிப்படிப்போடு நின்று விடும் சூழலில் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் கல்லூரியில் சென்று கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தி னால் மேற்படிப்புக்காக கல்லூரியில் சேர்த்துள்ளனர் என்பதை உணர்ந்து கல்விக் கற்க வேண்டும்.

    கல்வி ஏழைகளுக்கு விளக்கு போன்றது. அது பெண்களுக்கு பாதுகாப்பை நல்குகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனுக்கு உதவக் கூடியது கல்வி ஒன்றே. கல்வி மட்டுமே நாட்டையும் வீட்டையும் உயர்த்தும். உலகை மாற்றும் சக்தி வாய்ந்தது. பெற்ற பிள்ளை கள் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது.

    மாணவர்கள் கல்லூரி பருவத்தில் மகிழ்ச்சியை மட்டும் வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளாமல் படிப்பையும், திறமையையும் தம் இருகண்களாக கொண்டு செயல்பட வேண்டும். கல்வியோடு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முத்து லட்சுமி வரவேற்றார். வணி கவியல் கணினி பயன்பாட்டி யல் துறையின் தலைவர் நளாயினி சிறப்பு விருந்தி னரை அறிமுகம் செய்தார். முடிவில் அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.

    • காற்றாலை மற்றும் சோலார் எரிசக்தி உற்பத்தி செய்து தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
    • சர்வதேச சந்தைகளில் 'வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், கவுரமும் கிடைக்கிறது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த 2009-11 காலங்களில் ஏற்பட்ட மின்தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. காற்றாலை மற்றும் சோலார் எரிசக்தி உற்பத்தி செய்து தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

    மத்திய, மாநில அரசுகளும் மின்சாரத்தை மட்டுமே சார்ந்து இயங்காமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. திருப்பூர் பனியன் தொழிலை பொறுத்தவரை, ஒட்டுமொத்த மின்தேவைக்கு அதிகமாகவே காற்றாலை மற்றும் சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

    சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறுசுழற்சி தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. சர்வதேச சந்தைகளில் 'வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், கவுரமும் கிடைக்கிறது.

    தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளும், காற்றாலை மற்றும் சூரியஒளி மின் உற்பத்தி செய்து, தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இதனால், மின் கட்டண உயர்வு அவர்களை பாதிப்பதில்லை. மின்சார பயன்பாட்டுக்கான நிலை கட்டணத்தில் மட்டும் சலுகையை எதிர்பார்க்கி ன்றனர்.

    கோவையில் நடந்த தமிழக அரசின் தொழில்நுட்ப குழு கூட்டத்தில் புதுப்பித்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அதனால் சர்வதேச சந்தைகளில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு உயரும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் சங்க (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழகத்தில் காற்றாலை மற்றும் சோலார் கட்டமைப்பு வாயிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், நூற்பாலைகளின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உள்ளது. காற்றாலையில் மட்டும் 3,500 மெகாவாட் கொள்திறன் அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகிறது. இதேபோல் சோலார் மூலமாகவும், அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகிறது.

    வெளிநாட்டு சந்தைகளில் பசுமை சான்றிதழ் பெற்ற நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமையும், வர்த்தக வாய்ப்புகளும் கிடைக்கிறது. தமிழக அரசு காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, பசுமை சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    கட்டண அடிப்படையில் வழங்கினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என தொழில்நுட்ப குழு கூட்டத்தில் வலியுறுத்தினோம். கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் காந்தி மற்றும் அரசு செயலர்கள் விரிவான அறிக்கையாக வழங்கினால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

    சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி செய்து வரும் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பசுமை சான்று வழங்குவது மிகுந்த பயனளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • பட்டுப் புழு வளர்ப்பு தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
    • பெண்கள் நிலையான வருமானத்தைப் பெற முடியும்.

    பெண்கள் முழு நேரம் அல்லது பகுதி நேரத் தொழிலாக செய்து, வருமானம் ஈட்டக்கூடிய சுய தொழில்களில் ஒன்று 'பட்டுப்புழு வளர்ப்பு'. இதில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும், நிலையான வருமானத்தைப் பெற முடியும். பெண்கள் பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளும், சில தனியார் நிறுவனங்களும் சிறப்பு பயிற்சி அளிக்கின்றன.

    அவற்றை பயன்படுத்திக் கொண்டால், பட்டுப் புழு வளர்ப்பு தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம். பட்டுப்புழு கூடாரம், தேவையான கருவிகள் என அனைத்துக்கும் ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஒரு முறை முதலீடு செய்வது போதுமானது. பட்டுப்புழு வளர்ப்புக்கு சுத்தமான சுற்றுச்சூழலும், சீரான சீதோஷ்ண நிலையும் அவசியம்.

    எஸ் 35 பட்டுப்புழு அல்லது வி1 வகை பட்டுப்புழுக்களை எளிதாக வளர்க்கலாம். இதற்கு பெரிய அளவில் இடம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்குக் கிடைக்கும் இடத்தின் அளவைப் பொறுத்து, பட்டுப்புழு வளர்ப்பு முறையைத் தேர்வு செய்யலாம்.

    பட்டுப்புழுவுக்கு உணவாகும் மல்பெரி செடி வளர்ப்புக்கு ஏற்றவாறு சொட்டுநீர்ப் பாசனம் அமைப் பதற்கு இணை வரிசை நடவு முறையை (90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ) பின்பற்றலாம். இது இடை உழவு செய்வதற்கும், எளிதாக அறுவடை செய்வதற்கும் ஏற்றதாக இருப்பதுடன், ஈரப்பதம் குறைவதையும் தடுக்கும்.

    ஒரு வருடத்தில் தொழு உரத்தை 2 முறையும், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை 5 முறையும் உரமாக இட வேண்டும். 80 முதல் 120 மில்லி மீட்டர் அளவில் வாரம் ஒரு முறை நீர் பாசனம் செய்யலாம். தினமும் மூன்று முறை புழுக்களுக்கு உணவு அளிக்க வேண்டும். 80 நாட்கள் இடைவெளியில், வருடத்துக்கு 5 முதல் 10 முறை வரை அறுவடை செய்யலாம். அரசு, மூன்று நிலையான பட்டுப்புழு வளர்ப்பு அமைப்புக்கு ரூ.63 ஆயிரம் முதல் 87 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. மேலும், அரசின் திட்டம் மூலமாகவும் வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.

    பட்டுப்புழுவை பாதிக்கும் நோய்கள்

    வருடம் முழுவதும் புழுக்களை வளர்ப்பதாலும், காலத்துக்கு ஏற்றபடி மாறும் சீதோஷ்ண நிலையின் காரணமாகவும், பட்டுப்புழு எளிதாக நோய்க்கிருமிகளால் தாக்கப்படும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பெப்ரைன் நோய்கள் பட்டுப்புழுவை அதிகம் தாக்கும். வைரசால் ஏற்படும் 'கிராஸரி நோய்' பட்டுப்புழுவை வெகுவாகப் பாதிக்கும்.

    இது புழுவின் தோலில் மினுமினுப்பையும், எண்ணெய்த் தன்மையையும் உண்டாக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட புழுக்கள், ஒரே இடத்தில் இருக்காமல் அங்கும் இங்கும் நகர்ந்துக்கொண்டே இருக்கும். கால்கள் பிடிமானத்தை இழந்து புழுக்கள் தலைகீழாகத் தொங்கத் தொடங்கும். புழுக்களின் தோல் மெலிந்து, வெள்ளை நிற திரவம் வெளியாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட புழுக்கள் 7 நாட்களில் உயிரிழக்கும். இதனால் லாபம் வெகுவாகக் குறையும்.

    • குடிசைத் தொழிலாக வீட்டிலேயே தொடங்கலாம்.
    • பெண்கள் வீட்டிலிருந்தே சுயதொழில் செய்து வருமானம் ஈட்டலாம்.

    வேலைக்கு செல்லும் பலரின் கனவு சொந்தமாக தொழில் தொடங்கி நாமும் முதலாளியாக வேண்டும் என்பதாக இருக்கும். அப்படி இருந்தாலும் பலர் அதற்கு நிறைய முதலீடுகள் வேண்டும் அல்லது தங்களுக்கு ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட அளவு பணம் தேவை என தொழில் தொடங்கும் கனவை ஓரம் வைத்துவிட்டு வேலைக்கு சென்று மாதம் சம்பளம் வாங்குவதையே குறிக்கோளாக வைத்து இருப்பார்கள்.

    ஆனால் நவீன காலத்திலும் கூட குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் சில உள்ளன. பெண்கள் குடும்ப சூழ்நிலைகளால் பணியிடங்களுக்கு சென்று வேலை செய்ய முடிவதில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டிலிருந்தே சுயதொழில் செய்து வருமானம் ஈட்டலாம். ரூ. 10 ஆயிரம் இருந்தாலே சிறுதொழில்களை தொடங்கலாம். ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடங்கக்கூடிய சிறுதொழில்கள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா..!

    * பிளாக் எழுதுதல்

    உங்களிடம் இணையதளம் மற்றும் கணினி இருந்து கட்டுரை எழுதும் திறன் இருந்தால், குறைந்தது 500 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலை வீட்டிலேயே தொடங்க முடியும். தனித்துவமாக உங்களது பிளாக் இருக்கும்போது சில மாதங்களில் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும். இதேபோல, கிராபிக் டிசைன், டி.டி.பி. ஆபரேட்டர், ஆன்லைன் சேவை மையம் ஆகியவற்றை ரூ.10 ஆயிரம் முதலீட்டிலேயே தொடங்க முடியும்.

    * டிராவல் ஏஜென்சி

    இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழிலென்றால் டிராவல் ஏஜென்சி. ரெயில், பேருந்து, விமானப் பயணச்சீட்டை பதிவு செய்தல் போன்ற சேவையை ரூ.10 ஆயிரம் முதலீட்டில் அளிக்க முடியும். இதற்கான கிளைச் சேவைகளை பல்வேறு பெரு நிறுவனங்களிடம் பெற முடியும். இல்லையெனில் தனியாகவும் தொடங்கலாம்.

    * ஈவன்ட் மேனேஜ்மென்ட்

    ரூ.10 ஆயிரம் முதலீட்டில் சிறிய அலுவலகமும், வேலைக்கு 10 ஆட்களும் (நண்பர்கள்) இருந்தால் போதும் இந்த நிறுவனத்தை தொடங்கிவிட முடியும். பந்தல்கால் நடுவதில் தொடங்கி பந்தி வரைக்கும் அனைத்தும் செய்துதர முடியும். எல்லா நிகழ்வுகளுக்கும் மக்கள் விரும்பும் வகையில் ஏற்பாடு செய்து தருவதால் இந்த தொழிலுக்கு தற்போது சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. பெரு நிறுவனங்கள் பலவும் இத் தொழிலை தொடங்கியுள்ள நிலையில் சிறிய அளவில் சேவையாக தொடங்கும் வாய்ப்புள்ளது. மாதத்துக்கு குறைந்தபட்சம் 5 நிகழ்ச்சிகளை நடத்தி தந்தாலே அனைத்து செலவுகளும்போக (ஊழியர்கள் ஊதியமும் சேர்த்து) ரூ.30 ஆயிரம் லாபம் உறுதி.

    * செயற்கை பூக்கள் கடை

    இயற்கையான பூக்களால் தயாரிக்கப்படும் பொக்கேக்களின் ஆயுள், சில நாட்களில் முடிந்து விடுகிறது. நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்படும் செயற்கை பூ பொக் கேகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. செயற்கையாக சிங்கிள் ரோஸ் பொக்கேகளை தயாரித்து விற்பது லாபகரமானது. தரை, சேரில் அமர்ந்தோ அல்லது டேபிளில் வைத்தோ தயாரிக்கலாம் என்பதால் வீட்டின் சிறிய அறை போதுமானது. பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. ரூ.10 ஆயிரம் போதுமானது. கலை உணர்வும், திறமையும் தான் முதலீடு. மாதம் ரூ.20 ஆயிரம் வரை லாபம் ஈட்ட முடியும்.

    * சோப் தயாரிப்பு

    குடிசைத் தொழிலாக வீட்டிலேயே தொடங்கலாம். ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க குறைந்தது ரூ.28,850 செலவாகும். ஒரு டன் சோப்பை ரூ.30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.

    * பிரெட் தயாரிப்பு

    மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரெட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க முடியும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு பப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம். கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப தொழிலை விரிவுபடுத்த முடியும்.

    தையலகம்

    எம்பிராய்டரி மற்றும் சிறிய அளவிலான தையல் கூடத்தை ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடங்க முடியும். வேலைக்கு 5 நபர்களை கூட அமர்த்திக் கொள்ளலாம். குடிசைத் தொழிலாகப் பதிவு செய்யவும் முடியும். ஆடை வடிவமைப்பு நிறுவனங்களின் ஆர்டர்களை பெற்று லாபம் ஈட்டலாம். குறைந்தபட்சம் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஆர்டர்களுக்கேற்ப வருமானம் ஈட்டலாம்.

    ×