என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalithaa"

    • என்னால தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலை.
    • ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது.

    பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    அனைவருக்கும் வணக்கம்.. ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர் தி டாகுமெண்டரி... இதுல அவரைப்பற்றி பேசுவதற்கு மிக்க மகிழ்ச்சி. என்னுடன் நெருங்கிய நெருக்கம், அன்பு, மரியாதை காட்டியவர்களில் மூன்று, நான்கு பேர். அதாவது, பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.பி. சார். இவங்க எல்லாம் இல்லைங்கற போது சில நேரத்தில் ரொம்ப மிஸ் பண்றோம்.

    'பாட்ஷா' 100-வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பேசினேன். அமைச்சர் மேடையில் இருக்கும் போது பேசியிருக்க கூடாது. அப்போ எனக்கு தெளிவு இல்லை. பேசிட்டேன். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.வீரப்பனை, புரட்சித்தலைவி பதவியில் இருந்து தூக்கிட்டாங்க.

    எப்படி அது நீங்க அமைச்சர் மேடையில் இருக்கும் போது ரஜினி, அரசுக்கு எதிராக பேசினால் சும்மா இருக்க முடியும் என்று சொல்லி எம்.ஆர்.வீரப்பனை பதவியில் இருந்து தூக்கினாங்க. அது தெரிந்த உடனே எனக்கு ஆடிப்போச்சு. என்னால தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலை. போன் பண்ணா யாருமே எடுக்கலை. மறுநாள் காலையில் நேரில் போய் சாரி சார் என்னால தான் ஆனது என்று சொன்னார். அவர் எதுவுமே நடக்காத மாதிரி.. அதெல்லாம் விடுங்க... அதைப்பற்றி கவலைப்படாதீங்க... மனசுல வெச்சுக்காதீங்க... நீங்க விடுங்க. சந்தோஷமா இருங்க... எங்க ஷுட்டிங் என்று சாதாரணமா கேட்டார்.

    எனக்கு அந்த தழும்பு எப்போதும் போகாது. போகலை. ஏன் என்றால் நான் தான் கடைசியா பேசினது. நான் பேசினதுக்கு பிறகு அவரு எப்படி வந்து பேச முடியும். மதிப்பிற்குரிய ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது என்றார். 



    • இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றிக் கொண்டிருந்தார்.
    • ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய விஷயங்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

    தமிழக சட்டமன்றக் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது கட்சி எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசினார். இதற்கிடையில் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும்விதமாக எழுந்து பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதாவை விமர்சிக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா? என்று அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தினார்.

    இதனால் சுதாரித்துக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய விஷயங்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

    அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி - செங்கோட்டையன் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் சூழலில் செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவின் முன்னாள் வளர்ச்சி மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    வருகிற 27ந்தேதி கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வருமாறு சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். 

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் அமைதிப்பேரணி நடத்தினர்.
    • மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

    மதுரை

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

    பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பி.எஸ். கண்ணன், வி.கே.எஸ்.மாரிசாமி, முத்து இருளாண்டி,அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையமாரி துரை, மீனவரணி செயலாளர் ராமநாதன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலைபிரபு, கருப்பையா, கொம்பையா,கண்ணன், வேல்முருகன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், மிசா செந்தில் மற்றும் 200 பெண்கள் உள்பட 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    • அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் நடந்தது.

    அவனியாபுரம்

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் வட்ட கழக செயலாளர் கொம்பையா முன்னிலையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கண்ணன், மகாலிங்கம், பவுண்டு ராஜ், வட்டச் செயலாளர் கமலக்கண்ணன், பகுதி இளைஞரணி செயலாளர் ஓம் ஜெயபிரகாஷ், அம்மா பேரவை செயலாளர் பைபாஸ் ரமேஷ், வெள்ளூர் கார்த்திகேயன், ராதா, முத்து, கணேசத்தேவர், திருப்பதி, ஆட்டோ ராஜ கோபால், கலைப் பிரிவு முத்துப்பாண்டி மற்றும் அவனியாபுரம் கிழக்கு மேற்கு மத்திய பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் ஜெயலலிதா நினைவு தின மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.
    • தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா நினைவு தின மவுன அஞ்சலி நடந்தது. பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவை தலைவர் ஆர்.எஸ்.ராமசாமி வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார். இதில் பேரூர் துணைச்செயலாளர் சந்தனத்துரை, நிர்வாகிகள் ராஜேந்திரன், திருப்பதி, முத்து கண்ணன், மருதையா, பொன்ராம், ரங்கராஜ், பிரேம், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

    அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமையில் விராலிப்பட்டி, செம்மினிபட்டி, கச்சைகட்டி, ராமையன்பட்டி. பூச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிளைச் செயலாளர்கள் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • ஓ.எஸ்.மணியன் 4-ந்தேதியே வேளாங்கண்ணி கடற்கரையில் திதி கொடுத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    • கே.சி.பழனிசாமியும் 4-ந்தேதியே ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

    சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்றும் கடைசி வரை எப்படி இருந்தார் என்பதே வெளியே தெரியாமல் மறைந்தும் விட்டார்.

    கண்முன்னே நடப்பதை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு சாவின் உண்மையை கண்டு பிடிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டது தமிழ்நாடு.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் ஆளாளுக்கு ஒரு தகவலை வெளியிட்டார்கள்.

    அவர் இறந்த பிறகும் அதேபோல் தான் இருக்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது.

    ஆனால் ஓ.எஸ்.மணியன் 4-ந்தேதியே வேளாங்கண்ணி கடற்கரையில் திதி கொடுத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

    கே.சி.பழனிசாமியும் 4-ந்தேதியே ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். இருவரும் ஜெயலலிதா மறைந்த நாள் டிசம்பர் 4 தான் என்று அடித்து சொல்கிறார்கள்.

    ஏற்கனவே 5-ந்தேதி இரவு ஜெயலலிதா மறைந்தார் என்று ஆஸ்பத்திரி பதிவேடுகளில் கூறியிருந்தாலும் ஆறுமுகசாமி ஆணையம் அதை மறுத்து விட்டது. 4-ந்தேதியே அவர் இறந்து விட்டதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் கட்சியினரும் தேதி குழப்பத்தில் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தொண்டர்கள் கூறுகிறார்கள்.

    • புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.
    • தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை தஞ்சையில் நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் தான் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை பல இடங்களில் நிருபித்து வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை. ஆனால் ஏன் இவ்வளவு அவசரத்தில் அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என தெரியவில்லை.

    புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து. தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதாவுக்கு துணையாக மட்டும் தானே நீங்கள் இருந்தீர்கள்.
    • சசிகலா அரசியல் வேண்டும் என்று ஏன் இப்போது ரோடு ரோடாக அலைகிறார்.

    சென்னை:

    ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கும், சசிகலாவுக்கும் மோதல் வலுத்து வருகிறது. சசிகலாவுக்கு எதிராக தீபா பரபரப்பான ஆடியோ வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தீபா புதிதாக வெளியிட்டு உள்ள ஆடியோவில் கூறி இருப்பதாவது:-

    ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொள்வது போல் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டார்கள். அது அப்பல்லோ மருத்துவமனையே கிடையாது என்று பலரும் பல தடவை சொல்லி இருக்கிறார்கள்.

    குறிப்பாக அது 2016-ம் ஆண்டு எடுத்த போட்டோ கிடையாது. கமிஷன் விசாரணை நடக்கும்போது அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குள் நான் சென்றேன். அங்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையை காண்பித்தார்கள். அது ரொம்ப பெரிய அறையாக இருந்தது. அது போட்டோவில் இருப்பது போன்று சிறிய அறை அல்ல. ஜன்னல் வழியாக ஒரு மரம் இருப்பது போல் காட்டுகிறார்கள். அது கிடையாது. இதுவும் ஒரு அப்பட்டமான பொய்.

    அந்த வீடியோ வெளியிட்ட அப்போதைய அ.தி.மு.க. பிரமுகர் சசிகலா தரப்பை சேர்ந்தவர். சசிகலா சொல்லி தான் பழைய வீடியோவை தயார் செய்து கொடுத்து வெளியிட்டுள்ளனர். போலி வீடியோ தயார் செய்வதில் சசிகலாவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்கள். அது தான் அவர்கள் தொழிலே. அதை நல்லா ரெடி பண்ணி இருக்கிறார்கள்.

    அவர்களின் சொந்த குடும்பத்தினர் எல்லோருமே அதிகாரத்தை விரும்புவார்கள். டி.டி.வி. தினகரனை அரசியலை விட்டு விலக சொல்லுங்கள். உங்களுக்கு எதற்கு அரசியல். நீங்கள் எப்போதும் நல்லவர்கள் தானே. உங்களுக்கு எதுவும் வேண்டாம் தானே. ஜெயலலிதாவை பாதுகாத்தவர்கள் தானே. அரசியல் வேண்டாம் என்று விலகி விடுங்கள். எதற்கு அதில் இருக்கிறீர்கள்?

    ஜெயலலிதாவுக்கு துணையாக மட்டும் தானே நீங்கள் இருந்தீர்கள். சசிகலா அரசியல் வேண்டும் என்று ஏன் இப்போது ரோடு ரோடாக அலைகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொள்கிறார்.

    மக்களால் விரட்டியடித்து துரத்தப்பட்ட நீங்கள் அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளரா? அப்போது என் வீட்டு வாசலில் எதற்காக வந்து நின்றார்கள். நீங்கள் வேண்டாம் என்று தானே மக்கள் வந்தார்கள். நீங்கள் தியாகத்தலைவி தானே. எல்லாவற்றையும் விட்டு செல்லுங்கள். இப்போது எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் உங்களை எல்லோரும் நம்புவார்கள்.

    எனது தாயாரை பற்றி பேச நீங்கள் யார்? உங்கள் அண்ணி இளவரசி அண்ணியா? யாருக்கு அண்ணி? உங்களுக்கு தானே? எனது தாயார் பெயரை விஜயலட்சுமி என்று சொல்ல நீங்கள் யார்? எனது தம்பியை கெடுத்து, எனது குடும்பத்தை அழித்து, எனது அப்பாவை கொன்று, எனது அத்தையை கொன்று, என் வாழ்க்கையை அழித்து, என் வயிற்றில் வளர்ந்த குழந்தையை அழித்து, பணத்துக்காகவும், அதிகார ஆசைக்காகவும், எவ்வளவு செய்வீர்கள்? நாங்கள் என்ன தவறு செய்தோம். ஏதோ ஒரு மூலையில் தானே வாழ்ந்து கொண்டிருந்தோம். எனது தாயார் சாவுக்குகூட அத்தையை வரவிடாமல் தடுத்து ஏமாற்றியவர் தானே நீங்கள். நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று எனக்குத்தான் தெரியும். என் தம்பி எப்படி உண்மையை சொல்லுவான். நீங்கள் தான் அவரை கைக்குள் வைத்திருக்கிறீர்களே? முதலில் அவரை விடுங்கள்.

    சசிகலா நீங்கள் அரசியலை விட்டு விலகுங்கள். டி.டி.வி. தினகரன், உங்கள் குடும்பம் எல்லோருமே விலகுங்கள். ரூ.5 லட்சம் கோடியை எங்கிருந்து சம்பாதித்தீர்கள். எங்கள் அத்தை தங்க முட்டையிடும் வாத்தா? இப்படித்தானே சொல்லிக்கொண்டு சுற்றுகிறீர்கள். உங்களுக்கு தங்க முட்டை இடுவதற்காக ஜெயலலிதாவை அடிமையாக வைத்திருந்தீர்களா?

    தைரியம் இருந்தால் நீங்கள் என்னிடம் வந்து பேசுங்கள். வாருங்கள் உட்கார்ந்து பேசலாம். நாங்கள் என்ன செய்தோம், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பேசுவோம். எனது அப்பாவுக்கும், அத்தைக்கும், எனக்கும், எனது தாயாருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எப்படியெல்லாம் நல்லுறவு என்று நான் காட்டுகிறேன்.

    அந்த வீட்டுக்குள் இருக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? எதிரில் வீடு கட்டுகிறீர்களா? எப்படி வந்தது பணம். இதையெல்லாம் எல்லோரும் கேட்க வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரும் கேட்க வேண்டும். தமிழக மக்கள் கேட்க வேண்டும். தமிழக அரசு அவர்கள்மீது நடவடிக்கைகளை தள்ளிப் போடாமல் யாருக்கும் கட்டுப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை.

    சசிகலா மற்றும் அவரை சேர்ந்தவர்களால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் நிச்சயமாக ஆபத்து இருக்கிறது. அதற்கு பயந்து தான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். எனது குடும்பத்துக்கு தெய்வம் எனது தாயார். அவர் எனது உயிர். எங்கள் குடும்பத்துக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனது தாயாரை பற்றி பேசினால் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    இவ்வாறு அந்த ஆடியோவில் தீபா கூறியுள்ளார்.

    • வருகிற தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம்.
    • நான் பயந்துகொண்டு ஓடி ஒளிகிற ஆள் இல்லை.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் வி.கே.சசிகலா ஆதரவற்ற முதியோர்களுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார்.

    அப்போது, கேக் வெட்டி, முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, 100 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. சசிகலா முதியோருக்கு உணவு பரிமாறினார்.

    பின்னர் நிருபர்களிடம், வி.கே.சசிகலா கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்குள் அனைவரையும் ஓரணியில் இணைப்பேன். என்னால் நிச்சயமாக முடியும்.

    இருவரும் (எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ்) தனித்தனியாக இருப்பதால் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்கிறார்கள்.

    நான் எல்லோருக்கும் பொதுவாக தான் இருக்கிறேன். என்னை பொறுத்தவரை ஒரு தாய் எப்படியோ அதுபோல தான் செயல்படுகிறேன்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து, வாழ்த்து செய்தி அனுப்பி வருகிறேன். எனக்கென்று தனி ஆட்கள் கிடையாது. ஒருதாய் போல்தான் எல்லோரையும் பார்க்கிறேன். நான் இருக்கும் வரையில் தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள்.

    எல்லோரையும் இணைக்கும் முயற்சியை தொடங்கி விட்டேன். அது நடந்து வருகிறது.

    தனக்கு பிறகு யார் அ.தி.மு.க.விற்கு தலைமை பொறுப்பில் இருந்தால் சரியாக இருக்கும் என்று ஜெயலலிதாவுக்கு தெரியும். அதற்கான முயற்சியும், அப்போதே நடந்துகொண்டு தான் இருந்தது. அதற்குள் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா மறைந்து விட்டார்.

    பெங்களூர் சிறைக்கு நான் செல்லும் முன்பு, அதிமுகவை ஆட்சியில் அமர வைத்து விட்டு தான் சென்றேன். அ.தி.மு.க. கட்சியை யாராலும் அசைக்க முடியாது.

    நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் இருந்து நான் பெங்களூரில் சிறையில் இருக்கும்போது, மூன்று நிபந்தனைகளுடன் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினார்கள். அதில் ஒன்று நேரில் வர வேண்டும் அல்லது வழக்கறிஞர் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

    அதில் ஒன்று எழுத்து பூர்வமாக நான் அனைத்து விளக்கமும் அளித்து விட்டேன். அ.தி.மு.க.வில் எத்தனை பிரிவுகளாக இருந்தாலும், பாராளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்றிணைவார்கள்.

    வருகிற தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம். நான் பயந்துகொண்டு ஓடி ஒளிகிற ஆள் இல்லை. ஒரு வீட்டில் 10 பிள்ளைகள் இருந்தாலும் வீட்டிற்கு தாய் ஒன்று தானே?

    ஒருவரை எதிர்க்க வேண்டும் என்றால் நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஒரு பெண் சிங்கமாக இருந்தேன். கருணாநிதி எங்களுக்கு செய்யாத தொந்தரவா? அந்த தொந்தரவுகளை நாங்கள் தாங்கி 2 பெண்மணிகளும் சாதித்து காட்டினோம். எதிர்த்து நின்று நாங்கள் போராடினோம். எங்களுக்கு ஆட்சியை கொடுங்கள் என்று மக்களிடம் போய் கேட்டோம். நாங்கள் சண்டையிடுவதற்கு பயந்து முதுகுக்கு பின்னால் இருந்து போராடியது கிடையாது.

    நானும், ஜெயலலிதாவும் அப்படிதான் இருந்தோம். அதனால் தான் தமிழக மக்களுக்கு நிறைய நல்ல காரியங்களை செய்ய முடிந்தது. இப்போது எனது எண்ணமும் அதுதான்.

    ஜெயலலிதாவுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் நான் தெளிவாக உள்ளேன். அதை தமிழக மக்களும் புரிந்துகொண்டுள்ளனர்.

    எய்ம்ஸ் டாக்டர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள் கொடுத்த டாக்டர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர்கள், எங்களது அரசு டாக்டர்களும் இருந்தனர்.

    அவர்கள் தினமும் ஜெயலலிதாவின் உடல் நிலையை பற்றி அறிக்கை கொடுத்தனர். அப்படி இருந்த போதும் இதில் மறைக்க ஒன்றுமே இல்லையே.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்த வெளிநாட்டு டாக்டர்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லட்டுமா என்று அவரிடமே கேட்டனர். அதற்கு ஜெயலலிதா வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

    எங்களுக்கு ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஆசை இருந்தது. ஆனால் அவர் ரொம்ப தெளிவாக இங்கே நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள். எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது என்று சொல்லி விட்டார்.

    அவரது சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவர் டி.வி. பார்த்தார். எல்லோரிடமும் நன்றாக பேசினார். நர்சுகளிடமும் அம்மா அன்பாக பழகினார். டிசம்பர் 19-ந் தேதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து செல்ல நாள் பார்த்து இருந்தோம்.

    அதையொட்டி ஜெயலலிதா எல்லோருக்கும் பரிசு கொடுக்க வேண்டும் அதற்கு ஆர்டர் செய்ய வேண்டும் என்றார். நாங்கள் நகைக்கடையில் இருந்து வரச்சொல்லி எல்லோருக்கும் நகையை பார்த்து அவரே தேர்வு செய்தார். இத்தனை செட் எங்களுக்கு செய்து கொடுங்கள் என்பது வரை பேசினோம். டிசம்பர் 15-ந் தேதி எங்களுக்கு டெலிவரி கொடுக்க வேண்டும். அதை ஜெயலலிதா கையால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று தான் திட்டமிட்டு இருந்தோம்.

    தி.மு.க. ஆட்சி 20 மாதங்களாக நடக்கிறது. இன்னும் 4 மாதம் வந்தால் 2 வருடங்கள் பூர்த்தி செய்கிறார்கள். இனி பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதில் 3 மாதங்கள் அரசாங்கம் எந்த வேலையையும் செய்ய முடியாது. எந்த திட்டங்களையும் அறிவிக்க முடியாது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 3 மாதங்கள் போய்விடும். மொத்தம் 6 மாதங்கள் போய்விடுகிறது. அப்போது மக்களுக்கு எதை செய்ய வேண்டுமானாலும் 4 வருடத்துக்குள்தான் செய்ய வேண்டும். அதற்கு ஏற்பதான் திட்டம் வகுக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம். நீங்கள் இதை செய்யுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் நீங்களாகவே வாக்குறுதி கொடுக்கிறீர்கள். வாக்குறுதி கொடுத்ததை செய்ய வேண்டுமல்லவா? டிவியில் விளம்பரப்படுத்தினால் அது மட்டும் ஆட்சி கிடையாது. மக்களுக்கு போய் சேர வேண்டும். அதை செய்யவில்லை என்றால் மக்களே முடிவு செய்வார்கள். நான் 1982-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் வந்தேன். அப்போது ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

    அப்போது பெண்கள் வெளியில் வருவது ரொம்ப கஷ்டம். அந்த சமயத்தில் நாங்கள் வாழ்நாள் முழுவதும் பட வேண்டிய கஷ்டத்தை பட்டு விட்டோம். அதையெல்லாம் மீறிதான் ஆட்சிக்கு வந்தோம்.

    பெண்களுக்கு அம்மா நல்லது செய்வார். நான் தீபா உள்பட யாரையும் திட்டுவதில்லை. அறிவுபூர்வமான விஷயங்களை எடுத்து செல்லுவேன். உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். இதை செய்யுங்கள் என்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏராளமான ஜெயலலிதாவின் விருப்பங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கின்றன.
    • ஜெயலலிதாவால் அங்கீகாரம் பெற்று, கட்சியிலும், ஆட்சியிலும் பதவி பெற்றவர்கள், இன்றைக்கும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

    சமீபத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சைதை துரைசாமி மூலம் ஒரு கல்வி அறக்கட்டளை தொடங்கும் முயற்சியில் ஜெயலலிதா இருந்தார் என்று முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

    இதுகுறித்து என்னிடம் பலரும் விசாரித்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று அவரது நிறைவேறாத கனவை அ.தி.மு.க. தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியது என் கடமை என்றே கருதுகிறேன்.

    நான் பெருநகர சென்னை மேயராக இருந்தபோது, என்னுடைய சொந்த நிதியில் நடத்திவரும் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை பணியை விரிவுபடுத்துவதற்காக அதிக நிதி தேவைப்பட்டது. எனவே, எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ஒரு மதிப்புமிக்க சொத்தை விற்பனை செய்து, அதில் பெரும் தொகையை வைப்பு நிதியாக வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மனிதநேய அறக்கட்டளையை நடத்துவதற்கு முடிவெடுத்தேன்.

    ஜெயலலிதா முன்னிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றுக்கொண்ட காட்சி.

    ஜெயலலிதா முன்னிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றுக்கொண்ட காட்சி.

    நான் மேயராக இருந்ததால், சொத்து விற்பனை குறித்து, ஜெயலலிதாவிடம் அனுமதி பெறுவதற்காக, 2015-ம் ஆண்டு ஒரு கடிதம் கொடுத்தேன். என் கடிதத்தைப் பார்த்ததும் ஜெயலலிதா எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அவரை சந்தித்ததும், 'நீங்கள் மனிதநேய அறக்கட்டளையை யாருடைய உதவியும் இன்றி, சொந்த நிதியில், மிகச்சிறப்பாகவும், மிகத்திறமையாகவும் நடத்திவருவதைப் பார்த்து உண்மையிலே நான் பெருமைப்படுகிறேன். இப்போது சொத்தை விற்பனை செய்வதற்கு என்ன அவசியம்?' என்று கேட்டார்.

    உடனே நான், 'அம்மா… நமது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 12,500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன. அத்தனை கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் படிப்பதற்கும், பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க வேண்டும். மனிதநேயம் தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றேன்.

    உடனே நெகிழ்ந்து போன ஜெயலலிதா, "உங்கள் நோக்கம் மிகவும் சிறப்பானது. மனிதநேயம் அறக்கட்டளைக்காக எந்த ஒரு சொத்தையும் நீங்கள் விற்பனை செய்யக்கூடாது. அவை எல்லாம் உங்கள் மகன் வெற்றிக்குத்தான் சேர வேண்டும். தற்போது நீங்கள் செய்ய விரும்பும் விரிவாக்கப் பணிக்கான அனைத்து உதவிகளையும் நான் செய்து தருகிறேன்'' என்று கூறினார்.

    மேலும் அவர், "நான் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பும் பொறுப்பும் தருகிறேன். என் பெயரிலும் ஒரு அறக்கட்டளை தொடங்கி, நீங்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு சேவை செய்யுங்கள். கடைசி மனிதன் இருக்கும் வரையில் என் பெயரிலான அறக்கட்டளை தொடர்ந்து இயங்க வேண்டும். அறக்கட்டளைக்கு தேவையான வைப்பு நிதியை நான் தருகிறேன். மேலும், சில சொத்துகளை அறக்கட்டளை பெயரில் எழுதி வைக்கிறேன். அந்த வருமானத்தில் இருந்து அறக்கட்டளை எல்லா காலமும் தொடர்ந்து இயங்க வேண்டும்'' என்று கேட்டார்.

    பின்னர் என்னிடம், "நீங்கள் நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படுவதாலே, இந்த அறக்கட்டளை நடத்தும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் பூங்குன்றனை உடன் இணைத்து அறக்கட்டளையை நடத்துங்கள். உங்கள் இருவர் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு அம்மா உணவகம் மூலம் மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தீர்கள். அதேபோல், இந்த அறக்கட்டளைக்கும் மக்களிடம் எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும்'' என்று தனது அக்கறையை வெளிப்படுத்தினார்.

    அதன் பிறகு, 2 முறை ஜெயலலிதாவிடம் இந்த இலவச கல்வி அறக்கட்டளை பற்றி நேரில் சந்தித்தபொழுது கேட்டேன். "விரைவில் உங்களை அழைக்கிறேன்'' என்று உறுதி அளித்தார். ஆனால், அதன்பிறகு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு மற்றும் சில காரணங்களால், அவரது ஆசை அடுத்தகட்டத்துக்கு நகரவே இல்லை. ஜெயலலிதாவின் கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தத்தையே அவரது உதவியாளர் பூங்குன்றன் பதிவாக வெளியிட்டிருக்கிறார்.

    இப்படி ஏராளமான ஜெயலலிதாவின் விருப்பங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கின்றன.

    இப்போதும், பூங்குன்றன் வெளிப்படையாக இதை சொன்னதால், இந்த உண்மையை பொதுவெளியில் வெளியிடுகிறேன்.

    ஜெயலலிதாவால் அங்கீகாரம் பெற்று, கட்சியிலும், ஆட்சியிலும் பதவி பெற்றவர்கள், இன்றைக்கும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அல்லது தனித்தனியாக ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை நிறுவி, அவருடைய லட்சியக் கனவை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

    1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சொன்ன, "நீதான் அ.தி.மு.க.வின் முதல் மேயர்.." என்ற கனவை நனவாக்கி, 5.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் வந்தும் என்னை அங்கீகரித்தவர் ஜெயலலிதா. எனவே ஜெயலலிதாவுக்காக, எம்.ஜி.ஆர். தொண்டன் சைதை துரைசாமி, எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். ஜெயலலிதாவின் புகழ் காலத்தை வென்று வாழட்டும்.

    - பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி

    • ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
    • ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

    முன்னாள் நகர செயலாளர் பக்கரிசாமி, ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, நிர்வாகிகள் அம்சேந்திரன் முன்னாள் தகவல் தொழில் நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் நாடி.செல்வமுத்துக்குமரன், வழக்குரைஞர்கள் ஸ்ரீதர், நெடுஞ்செழியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகளை இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பி.வி.பி. கார்த்தி மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    இதில் அதிமுக நிர்வாகிகள் இறைஎழில், கல்யாணசுந்தரம், சுரேஷ், பரணிதரன், ரவி சண்முகம், விஜயக்குமார், மாலினி, தெட்சிணாமூர்த்தி, ரத்தினவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×