என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kamarajar"
- பெரியாருக்கு பிறகு எங்கள் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர்.
- இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய்,
பெரியாருக்கு பிறகு எங்கள் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர். நேர்மையான நிர்வாக செயல்பாட்டிற்கு வழி வகுத்தவர், அவரை எங்களுக்கு வழிகாட்டியாக ஏற்கிறோம். அம்பேத்கர் பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவோர் நடுங்குவார்கள், அவரும் எங்கள் கொள்கை வழிகாட்டி. வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் அவர்களையும் எங்கள் வழிக்காட்டியாக ஏற்கிறோம். பெண் தலைவர்களை அரசியல் வழிகாட்டியாக முன்னிறுத்தும் முதல் கட்சி நாம்தான் என்று பேசினார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்,
* இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
* பா.ஜ.க.வே காமராஜரை கொண்டாடுகிறது.
* காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கே உரிமை உள்ளது என்று கூறினார்.
- முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.
- இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 15-9-2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.
இதன் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.
இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பையும், மாணவ-மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 25-8-2023 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும், சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப்பாடங்களில் கவனம் செலுத்தி படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின், 15-7-2024 அன்று (நாளை) பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைக்கிறார்.
இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.
முதலமைச்சரால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.
இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்.
- பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு அமைச்சர்கள், மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செய்து சிறப்பிப்பார்கள்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் 15-7-2024 அன்று (நாளை) காலை 8.15 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்.
அதேநாளில், சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள், மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செய்து சிறப்பிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆறுகளில் அணைகளை கட்டி நீர்ப்பாசன பரப்பை அதிகப்படுத்தி இன்றைய நவீன தமிழகத்திற்கு அன்று அடித்தளமிட்டவர் காமராஜர்.
- தமிழக காங்கிரசின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் என்றைக்கும் திகழ்பவர் காமராஜர்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவின் தென்கோடியில் உள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்திலிருந்து இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் வரை சென்று இந்திய குடியரசின் நிலைப்பாட்டிற்கு உதவியதை பெருந்தலைவர் காமராஜர் மேற்கொண்ட அரசியல் பயணத்தின் மிகப்பெரிய வெற்றியாக கூறலாம்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 9 ஆண்டுகள் சிறைவாசம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர்ந்து 12 ஆண்டு காலம் பதவி வகித்து, 1954 முதல் 1963 வரை ஒன்பதரை ஆண்டுகாலம் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருமுறை பதவி வகித்து பண்டித நேரு மறைவிற்கு பிறகு மூன்று முறை பிரதமர்களை தேர்வு செய்து இந்திய வரலாற்றில் காலத்தால் அழியாத சரித்திர சாதனை படைத்தவர். பெருந்தலைவர் காமராஜருக்கு 122-வது ஆண்டு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் ஜூலை 15 அன்று கோலாகலமாக கொண்டாட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன்.
அதிகம் படிக்காத, ஆதரவற்ற, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வாழ்வை துவக்கிய மிகமிக சாதாரண மனிதராக இருந்து இந்திய அரசியலில் அற்புதங்களை நிகழ்த்தியவர். தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற 1954 இல் ஆண்டு பட்ஜெட் தொகை ரூபாய் 27 கோடி. 1963 இல் பதவி விலகியபோது பட்ஜெட் தொகை ரூபாய் 120 கோடி. குறைந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு தமிழகத்தில் சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியவர்.
ஈராயிரம் ஆண்டுகளாக தமிழர்களுக்கு கிடைக்காத கல்வி என்ற சொத்தை வழங்க இலவச கல்வி திட்டம், மதிய உணவு திட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், விவசாயத்தில் வளர்ச்சி, கிராமங்கள்தோறும் மின்சாரம் வழங்க மின் உற்பத்தி திட்டங்கள், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி மக்களுக்கே அதிகாரம் வழங்குதல், தொழிற்புரட்சி மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குதல், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு கண்டு பரம்பிக்குளம் - ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் அணைகளை கட்டி நீர்ப்பாசன பரப்பை அதிகப்படுத்தி இன்றைய நவீன தமிழகத்திற்கு அன்று அடித்தளமிட்டவர் காமராஜர்.
சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலங்களில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்வதாக தந்தை பெரியார், அன்றைய முதலமைச்சர் காமராஜரை பாராட்டியது இன்றைக்கும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கிறது. 1961 இல் காரைக்குடியில் தந்தை பெரியார் மரண வாக்குமூலம் வழங்குவதைப் போல, 'காமராஜர் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், தமிழன் உருப்பட வேண்டுமானால் காமராஜரை விட்டால் வேறு ஆளே சிக்காது. எனவே அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆதரியுங்கள்" என்று பகிரங்கமாக பேசியதை எவரும் மறந்திட இயலாது.
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரும், பெருந்தலைவரும் பிரிக்க முடியாத சக்தியாக இருந்ததை வரலாற்று ஏடுகள் மூலம் புரிந்து கொள்ளலாம். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதைப் போல பாராட்டுகளை பெற்ற பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி முறையை தான் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.
தமிழக காங்கிரசின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் என்றைக்கும் திகழ்பவர் காமராஜர். காமராஜரையும், காங்கிரசையும் பிரித்துப் பார்க்க முடியாது. பெருந்தலைவர் காமராஜரின் புகழை பாடுவதற்கு எல்லோரையும் விட நமக்கு அதிகப்படியான உரிமை இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் நமது இயக்கத்தின் உயிர் மூச்சாக இருப்பவர் காமராஜர்.
எனவே, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்குகிற வகையில் கருத்தரங்குகள், ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஏழைப் பங்காளனாக இருந்து வேட்டி கட்டிய தமிழர் எவரும் நிகழ்த்தாத சாதனைகளை இந்திய அரசியலில் செய்து காட்டிய பெருந்தலைவரின் புகழை தமிழகம் முழுவதும் பரப்புகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் அவரது பிறந்தநாளை தேசியத் திருவிழாவாக கொண்டாட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- ஏழை எளிய மாணவர்கள், கற்பதற்காக கல்வி சாலைகளை திறந்து எண்ணற்ற பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர்.
- எங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை:
சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில்,
பெருந்தலைவர் காமராஜர் ஏழை எளிய மாணவர்கள், கற்பதற்காக கல்வி சாலைகளை திறந்து எண்ணற்ற பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர். மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போது சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் காலை உணவு என்கிற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு மகத்தான திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
தற்போது கல்லூரிகளுக்கிடையே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் ஆயிரம் கோடி செலவில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஒரு சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் உயர் கல்வியி னுடைய வளர்ச்சிக்காக முதல்வர் எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகளையே பெருந்தலைவர் காமராஜர் பெயரிலேயே அமைந்திருக்க இந்த திட்டம் அமைந்துள்ளது எனவும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு எங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- கர்மவீரர் காமராஜர் தான் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.
- காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்ப பள்ளிகளை திறந்தார்.
சென்னை:
இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவில் பேசும்போது "கல்வி புரட்சிக்கு வித்திட்டது தி.மு.க என்றும், அதன்பின் தான் தமிழகத்தில் கல்வி கற்பவர் எண்ணிக்கை அதிகரித்தது" என்றும் பேசியிருப்பது வரலாற்றினை மாற்ற நினைக்கும் செயலாக தெரிகிறது.
கர்மவீரர் காமராஜர் தான் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்ப பள்ளிகளை திறந்தார். தமிழகத்தில் கல்வி புரட்சி கொண்டு வந்தது காமராஜர் தான். இதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாராட்டி காமராஜரின் பிறந்தநாளை 2006 -ம் ஆண்டு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- காமராஜர் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது.
- தொழிலாளர்களின் கடின உழைப்பால் 30 நாட்களுக்குள் 40 ஆண்டு காலம் சிதலமடைந்து நின்ற கார் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.
3 முறை தமிழக முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும் பதவி வகித்தாலும் தனது வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார் காமராஜர்.
காமராஜரின் இறப்புக்கு பின்பு அவரது எளிமையான வாழ்க்கையை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறக்கட்டளை சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கம் நிறுவப்பட்டது. அங்கு அவர் பயன்படுத்திய பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான், அவர் பயன்படுத்திய 'செவர்லட்' கார்.
அமெரிக்க நாட்டின் தயாரிப்பான செவர்லட் காரை காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அவர் பயன்படுத்துவதற்காக டி.வி.எஸ். கம்பெனி நிறுவனர் சுந்தரம் ஐயங்கார் இலவசமாக வழங்கினார். இந்த காரை தான் காமராஜர் தனது வாழ்நாள் இறுதிவரை பயன்படுத்தி வந்தார். காமராஜர் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இதனை புனரமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர்.
கடந்த ஜூன் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து எடுத்துவரப்பட்ட அந்த கார் கிருஷ்ணகிரியில் உள்ள பழுது பார்க்கும் ஆலையில் வைத்து புனரமைக்கப்பட்டது.
அமெரிக்க நாட்டின் தயாரிப்பான செவர்லட் கார் 1952 ஆம் ஆண்டு மாடல் கொண்டதாகும். காரின் கதவுகள், இருக்கைகள், என்ஜின் போன்றவை ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு துருப்பிடித்த பாகங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. காரின் கதவுகளுக்கு இடையே வரும் சில்வர் கிரில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஆர்டர் செய்து பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. ஓடாமல் இருந்த கார் என்ஜின் சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
தற்போது புதுப்பொலிவுடன் காமராஜர் பயன்படுத்திய கார் அவரை போலவே கம்பீரமாக தோற்றமளிக்கிறது. தொழிலாளர்களின் கடின உழைப்பால் 30 நாட்களுக்குள் 40 ஆண்டு காலம் சிதலமடைந்து நின்ற கார் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் வலம் வந்த செவர்லட் கார் கிருஷ்ணகிரியில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.
- ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்படும் செய்தியை டி.பி.வி. கருணாகராஜா வாயிலாக அறிந்தேன்.
- காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து கொள்ளவும் போற்றிப்புகழவும் செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்படும் செய்தியை டி.பி.வி. கருணாகராஜா வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மண் சிலை இந்த இடத்தில் இருந்தது.
சிலையின் முன்பு பிரசாரம் செய்தது நினைவுக்கு வருகிறது. காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து கொள்ளவும் போற்றிப்புகழவும் செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே. இன்றைய தலைமுறைக்கு அவரை கொண்டு சேர்ப்பது நம் கடமை. அதை சரியாக செய்யும் ஆலங்குளம் பகுதி மக்கள் அனைவரையும் மனதார பாராட்டி வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறிஉள்ளார்.
- ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் விண்ணைத்தொடும் அளவுக்கு ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் தக்காளியின் பயன்பாடுகளை குறைத்து விட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காமராஜரின் 121-வது பிறந்த நாள் மற்றும் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜாபர்அலி தலைமையில் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து மற்ற கட்சியினரும் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கும், அங்கிருந்த பெண்களுக்கும் இனிப்புக்கு பதிலாக தக்காளி வழங்கினர்.
இதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தக்காளி விலை ஏற்றத்தை பொதுமக்கள் உணரும் வகையில் பொதுமக்களுக்கு தக்காளி வழங்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.
- எம் கருப்புத் தலைவனோ... எங்களுக்கு பாதுகாப்பான... கூரையைத் தந்தான்...
- பெருந்தலைவனே.. கருப்பாயிருந்தாலும் நீ விளக்கு... நீ வெளிச்சம்...
எங்கள் பூட்டன் பாட்டன்களின் சரித்திரம்
புராதன அழுக்கைக் கொண்டது
சிமினி விளக்கை ஏற்றியும்
லாந்தரைக் கொளுத்தியும் அகலாதது
அவர்களைச் சூழ்ந்த இருள்
புழுதியும் சேறும்தான்
அவர்களுடைய பகல்
அத்தைகளைக் கட்டிக்கொடுக்க
வாங்கிய ஆயிரம் ரூபாய்க்கு
அவர்களது இடக்கை பெருவிரல்
வண்டிப்பசை பூசியது
தெருவுக்கு வந்த வெளிச்சத்திலும்
அவர்கள் கண்கள் மூடியேக் கிடந்தது
போய்ச் சேர பேருந்தின்
வண்ணங்களை ஒடுக்குகளை
அடையாளம் கண்டவர்கள்
பாட்டிகள் அத்தைகளின் கதையோ
இன்னும் மோசம்
விறகுப் புகையில் இருமி
பிள்ளைப் பேற்றில்
செத்துப் போனார்கள்
குக்கிராமங்களில்
விலங்குகளைப்போல்
வாழ்ந்த
இவர்களைச் சிந்தித்தான்
ஒரு தலைவன்
அவனும் படிக்காதவன்
ஏழை பாழைகளின்..
பஞ்சைப் பராரிகளின்..
ஏக்கங்களை..
பெருமூச்சை..
கண்ணீரை..
குருதியைப்
படித்த மா மேதை
மண்சுவர் கொண்டு
கூரை வேய்ந்து
ஒரு கோவில் செய்தான்
அதில் ஒரு தண்டவாளத்
துண்டை மாட்டினான்
வயிற்றுத் தீயை
இரண்டு உருண்டை
சோற்றுப் பருக்கைகளால்
அணைத்து வைத்தான்
ஒவ்வொரு குடிசையிலும்
ஔவைப் பாட்டி
வலதுகாலெடுத்து வைத்தாள்
வள்ளுவர் வந்தார்
கம்பர் வந்தார்
ஷேக்ஸ்பியர் வந்தார்
அல்ஜிப்ரா வந்தது
நியூட்டன் வந்தார்
குடிசையிலிருந்து
அப்பா ஆசிரியராய்
வெளிவந்தார்
அக்காக்களுக்கு
டீச்சர் ட்ரைனிங் கனவு
மருமகள்களுக்கு
மருத்துவக் கனவு
எங்களை தெய்வங்கள்கூட
சற்று தூரத்தில்
இடுப்பில் துண்டைக் கட்டி
நிற்க வைத்தது
எம் கருப்புத் தலைவனோ
எங்களுக்கு பாதுகாப்பான
கூரையைத் தந்தான்
ஆண்களோடு பெண்கள்
சமமாக அமர
நாற்காலி தந்தான்
சாதியைக் காட்டி
பிடுங்கிக் கொண்ட
பாடப் புத்தகங்களை
அவனே மீட்டுக் கொடுத்தான்
வேறெப்படி சொல்லமுடியும்
பெருந்தலைவனே..
கருப்பாயிருந்தாலும்
நீ விளக்கு
நீ வெளிச்சம்
சுயமரியாதை கூடிய
இத்தலைமுறை
வாழ்வு நீ தந்தது!
-கவிஞர் கரிகாலன்
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார்.
- த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை:
பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது நினைவிடம், தி.நகரில் உள்ள அவரது இல்லம், ஜிம்கானா கிளப் ஆகிய இடங்களில் உள்ள அவரது சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார். முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமையில் ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு கட்சியினர் மரியாதை செலுத்தினார்கள்.
இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுலஇந்திரா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, முன் னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, டி.சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ், சாய்சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைந்தகரையில் காமராஜர் தொடங்கி வைத்த மாநகராட்சி பள்ளியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதை தொடர்ந்து அங்கு படிக்கும் 300 மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபாஷ்யம், வசந்தராஜ், குலாம், சீனிவாசன், எம்.ஆர்.ஏழுமலை, ராகுல், கொளத்தூர் ரஞ்சன், மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான சிவராஜ சேகரன் ஜாம்பஜாரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
காமராஜர் பிறந்தநாளையொட்டி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கல்வியிலும், தொழில் துறையிலும் தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கான அடித்தளத்தை அறுபதாண்டுகளுக்கு முன்பே அமைத்துக் கொடுத்த பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று 121-ம் பிறந்தநாள். தமிழ் நாட்டை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் வழி நடத்தியதுடன், பிரதமர்களுக்கு எல்லாம் தலைவராக திகழ்ந்தவர் அந்த கர்ம வீரர். அவரது பிறந்தநாளில் அவரது நேர்மையையும், தேசப்பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.
தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் முகம் அவர் தான். எனது வளர்ச்சி அரசியலுக்கான முன்னோடியும் அவர் தான். அவரது வழியில் ஆட்சி நடத்தினால் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறுவதை தடுக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தும் நிலையை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
+2
- நினைவு இல்லத்திற்கு சென்ற கலெக்டர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பதிவு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது என்றார்.
விருதுநகர்:
பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா அவரது பிறந்த ஊரான விருதுநகரில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், மணி மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நினைவு இல்லத்திற்கு சென்ற கலெக்டர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரெங்கப்ப நாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் பெண்கள் நூற்பு வேள்வி நடத்தினர். அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தபின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், பெருந்தலைவர் காமராஜர் நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றியவர். அவரது வழியில் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பதிவு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது என்றார். விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜ் சிலைக்கு நகர சபை தலைவர் மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கமிஷனர் லீனா சைமன், துணைத் தலைவர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்