என் மலர்
நீங்கள் தேடியது "kidney"
- தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
- தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க ராஜேஷ்-ன் தாய் முன்வந்தார்.
டெல்லியில் சிறுநீரக கோளாறால் அவதியுற்ற 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க அவரது தாய் முன்வந்தார்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தாயாரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமானது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- சர்க்கரை வியாதி, இதய நோய் போல் கிட்னி பாதிப்பும் பெருமளவில் இருக்கிறது.
- சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 10 பேரில் 6 பேருக்கு சிறுநீரக பாதிப்பு வருகிறது. எனவே கவனம் தேவை.
உலக கிட்னி விழிப்புணர்வு தினம் இன்று. சர்க்கரை வியாதி, இதய நோய் போல் கிட்னி பாதிப்பும் பெருமளவில் இருக்கிறது.
இதில் இருந்து ஒவ்வொருவரும் தன்னை தற்காத்து கொள்ள என் னென்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றி பிரபல கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்திரராஜன் விளக்கினார்.

அவர் கூறியதாவது:-
அறிகுறி தெரியாது:
எனக்கு கிட்னி பாதிப்பு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. சிறுநீர் கழிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீர் நிறையவும் செல்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பு தவறு.
சிறுநீரக பாதிப்பு என்பது வெளியே எளிதாக தெரிவதில்லை. 90 சதவீதம் சிறுநீரகம் செயலிழக்கும் வரை எந்தவிதமான அறிகுறிகளும் வெளியே தெரியாமல் கூட இருக்கும்.
அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதும் சிறுநீரக பாதிப்பின் காரணமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இதயம் ஒன்றே ஒன்று தான். அதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பெரும் பாலும் அறிகுறி தென்பட்டு விடும். அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது என்று ஏதாவது பிரச்சினை இருக்கும்.
ஆனால், கிட்னி இரண்டு இருப்பதால் 90 சதவீதம் பாதிக்கும் வரை அது தனது வேலையை செய்து கொண்டே இருக்கும். நமக்கு வெளியே தெரியாது. கிட்னி செயலிழப்பு என்பது 'சைலன்ட் கில்லர்' போன்றது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 10 பேரில் 6 பேருக்கு சிறுநீரக பாதிப்பு வருகிறது. எனவே கவனம் தேவை.
சிறுநீரக பாதிப்பு:

தமிழ்நாட்டை பொறுத்தவரை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்த பிறகு தான் கிட்னி பாதிப்பு, டயாலிசிஸ் என்பது பிரபலமானது.
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டார்.
அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த தஞ்சை மருத்துவ குழுவில் நானும் இருந்தேன். சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக முடிவு செய்து குளுகோஸ் ஏற்றப்பட்டதும் அவர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார்.
ஆனால், அவரது ரத்த மாதிரியை நான் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு அறிகுறி இருப்பதாக மருத்துவ வல்லுனர் டீன் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அடுத்த சில நாளில்
எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது சிறுநீரகம் செயலிழந்து இருந்ததை கண்டுபிடித்து உடனடியாக அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி சென்னை திரும்பினார்.
டயாலிசிஸ்

அந்த கால கட்டத்தில் டயாலிசிஸ்சும் பிரபலமாக வில்லை. எனது மனைவி தமிழிசை இரண்டு டயா லிசிஸ் கருவியை வைத்து 200 ரூபாய் கட்டணத்தில் வீட்டில் வைத்தே சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலி சிஸ் செய்து வந்தார்.
அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஹர்ஷவர்தன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார். அந்த நேரத்தில் டயாலிசிஸ் அவசிய தேவை பற்றி அவரிடம் பேசி கொண்டு இருந்தோம். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து டயாலிசிஸ் திட்டம் தொடர்பாக புள்ளி விபரங்களை மத்திய அரசு கேட்டு பெற்றது.
தமிழக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்போது சிறுநீரக பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
டாலிசிஸ் சென்டர்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அடுத்த இரண்டே மாதத்தில் வள்ளுவர் கோட்டம் அருகிலும், பெரம்பூர் ரெயில் நிலையம் அருகிலும் டயாலிசிஸ் மையங்களை திறந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்து கவுரவப்படுத்தினார். இந்தியாவிலேயே முதல் முதலாக மாநகராட்சி சார்பில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டது சென்னையில்தான்.
அந்த பெருமை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சேரும். இப்போது எல்லா மாவட்டங்களிலும் டயாலிசிஸ் வசதி கிடைக்கிறது.
இதயமும், சிறுநீரகமும் மாமன் மைத்துனன் மாதிரி. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன் என்று ஒன்றை தொடர்ந்து இன்னொன்றும் பாதிக்கும்.
கிட்னியின் நிலையை அறிந்து கொள்ள 'ஆல்புமின், கிரியேட்டின் அளவு, அடிவயிற்றுக்கு ஒரு ஸ்கேன் ஆகிய 3 பரி சோதனை மேற்கொண்டால் போதும்.
பொதுவாக 32 வயதை கடந்தவர்கள் ஆண்டு தோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் யாராவது கிட்னி பாதிப்புக்கு ஆளாகி இருந்தால் மற்றவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம். பெற்றோரிடம் இருந்து சொத்து மட்டுமல்ல.
இந்த மாதிரி வியாதிகளும் கிடைக்கலாம். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நம் உடலில் இருந்து நச்சுப் பொருள்களை வெளியேற்றுவது முதல் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது வரை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காப்பதில் சிறுநீரகங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
ஆனால், நாம் நமது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு நம் சிறுநீரகங்களை நாம் கவனித்துக் கொள்கிறோமா?
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிகப்படியான மருந்துகள், வலி நிவாரணி களைத் தவிர்ப்பது சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கும். முக்கியமாக சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
உடலை நீர் ஏற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும். குடிப்பழக்கம், புகைப் பழக்கத்தை தவிர்த்தல் வேண்டும். ரத்த அழுத்தத்தை அன்றாடம் சரிபார்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, தவறாத உடற்பயிற்சி, உடல் பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது சிறுநீரக நோய் ஏற்படுவதை தவிர்க்கும்.
- புகைப்பிடிப்பது ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்வகிப்பதில் சிறுநீரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் கழிவுகள், அதிகப்படியான நீர், உடலில் சேரும் நச்சுகள் உள்ளிட்டவற்றை வெளியேற்றுவது சிறுநீகரத்தின் முக்கியமான பணியாகும். இந்த கழிவு பொருட்கள் சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன.
உடலில் பி.எச் அளவு, உப்பு, பொட்டாசியம் போன்றவற்றின் அளவை சம நிலையில் வைத்திருக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும் துணைபுரிகின்றன. ஆகையால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவது அவசியமானது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு உதவும் பயனுள்ள விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
1. திரவ உணவை உண்ணுங்கள்:
தினமும் எந்த அளவுக்கு திரவ உணவுகளை உட்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும். தண்ணீர் மட்டுமல்ல, இளநீர், பழ ஜூஸ் போன்ற ஊட்டச்சத்து பானங்களை பருகுவதும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்றும்.
2. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்:
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். சிறுநீரக நோய் ஏற்படுவதையும் தவிர்க்கும். ரத்த அழுத்த அளவை குறைக்கவும் வித்திடும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம் கூட சிறுநீரகங்களுக்கு சிறந்தது. எனவே தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள்.
3. புகைப்பழக்கம் மற்றும் மதுப் பழக்கத்தை தவிருங்கள்:
புகைப்பிடிப்பது ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் சிறுநீரகங்கள் உட்பட உடலின் முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் வீரியம் குறைந்துவிடும். சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். அதுபோல் மதுப்பழக்கமும் சிறுநீரகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலிருக்கும் ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். இறுதியில் உடல் பருமன், கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும்.
4. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்:
அன்றாட உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் சிறுநீரகங்களுக்கு நன்மை பயக்கும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் சீராக உடல் எடையை பராமரிப்பது சிறுநீரக நோய் அபாயத்தை குறைக்க உதவும். பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்வது சிறுநீரகங்களின் ஆரோக்கியம் காக்க துணைபுரியும்.
5. உப்பின் அளவை குறையுங்கள்:
உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைப்பது சிறுநீரகங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் ஆரோக்கியமானது. உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வது சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கல் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும். சிறு நீரில் உள்ள புரதத்தின் அளவு அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே சிறுநீரக நோய் இருந்தால் நிலைமை மோசமாகக்கூடும்.
6. பரிசோதனை மேற்கொள்ளுங்கள்:
சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சிறந்த வழி, அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வதுதான். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தால் ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்துவிடலாம். ஏற்கனவே சிறுநீரக நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் தவறாமல் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.
- உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது அவசியமாகும்
- 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
உங்களுக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்பது உறுதியானால் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமானது. குறிப்பாக என்ன சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்பதை அறிவதன் மூலம் சிறுநீரக கல் பிரச்சினையிலிருந்து முழுமையாக வெளிவரலாம்.
உணவில் சேர்க்க வேண்டியவை
* நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பரங்கிக்காய் (பூசணிக்காய்), சுரைக்காய், புடலங்காய், செளசெள போன்ற காய்களை எடுத்துக் கொள்ளலாம்.
* இதனோடு வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிசாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்தவற்றை சாறாக்கி குடித்து வருவதும் நன்மை பயக்கும். சிறு தானியங்களையும் உணவில் சேர்த்து வரவேண்டும். எனினும் திரவ உணவுகள் சிறுநீரக கற்களை வெளியேற்றுவதோடு மீண்டும் வரவிடாமல் தடுப்பதால் திரவ ஆகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், காரட், பாகற்காய் போன்ற காய்கள் சிறுநீரகக்கற்களின் படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கிறது.
* சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவது கூட கல்லை கரைத்து வெளியேற்ற உதவும். மேலும் வாழைப்பழம், அண்ணாச்சி, தர்பூசணி, பப்பாளி, மாதுளை, நெல்லி போன்றவை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
* நாம் அதிகமான அளவு நீர் அருந்துதல், இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்துதல் போன்றவை சிறு நீரககற்களை குறைக்க உதவியாக இருக்கும். பொதுவாக சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க தினமும் 3-4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது அவசியமாகும்.
தவிர்க்கக் கூடிய உணவுகள்:
* உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது அவசியமாகும். மேலும் காரம், புளி, மசாலா போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், நெய், வெண்ணெய், பால்கோவா, பால் அல்வா போன்ற கால்சியம் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* காபி, தேநீர், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பாஸ்பேட் நிறைந்த உணவுகளை உண்பதை நிறுத்திக் கொள்வது அவசியம்.
* மேலும் இத்துடன் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
Dr. செ.பொன்ராஜ், MBBS, M.S., Mch (Uro) DLS, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், பொன்ரா மருத்துவமனை, திருநெல்வேலி.
- காபி, டீ அதிகம் அருந்துபவர்களுக்கும் பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும்.
- சிறுநீரகத்திற்குள் ஏற்படும் கற்களால் ஒரு வலியும் இருக்காது.
காட்பாடி இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர், சிறுநீரக கற்கள் எதனால் உண்டாகிறது, அதற்கு அளிக்கப்படும் அதிநவீன லேசர் சிகிச்சை குறித்து கூறியதாவது:-
சிறுநீரகத்தில் ஒரு கோளாறு என்றால் அது சிறுநீரக கற்களால் ஏற்படும் வியாதியாக இருக்கும். இந்த சிறுநீரக கற்கள் ஒருவருக்கு உருவாகி இருந்தால் அந்த நபருக்கு திடீரென்று வயிற்று வலி, வாந்தி, உடலில் அதிக வேர்வை வருதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஆகியவை ஏற்படும்.
அதிகம் தண்ணீர் அருந்தாமல் இருப்பதாலும், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும், துரித உணவு சாப்பிடுபவர்களுக்கும், அதிக தூரம் பிரயாணம் செய்பவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உண்டாகும். அதிக வாகன ஓட்டிகளுக்கும், காபி, டீ அதிகம் அருந்துபவர்களுக்கும் பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும்.
சிறுநீரக கற்களின் அறிகுறிகள்
சிறுநீரகத்தை மூன்று பகுதியாக பிரிக்கலாம். சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீரகப்பை ஆகியவை ஆகும். இந்த 3 பகுதியில் எந்தப் பகுதியிலும் சிறுநீரக கற்கள் ஏற்படலாம். ஆனால் அந்தந்த இடத்தில் ஏற்படும் வலிக்கான அறிகுறிகள் வேறுபடும்.
உதாரணத்திற்கு சிறுநீரகத்திற்குள் ஏற்படும் கற்களால் ஒரு வலியும் இருக்காது. 3 சென்டிமீட்டர் அளவுக்கு கல் இருந்தாலும் அது வலியை தராது. ஆனால் அதுவே சிறுநீர் குழாயில் ஒரு சிறிய அளவு 4 மில்லி மீட்டர் அளவு கற்கள் அடைப்பு ஏற்பட்டாலும் அதிக வயிற்று வலி, வேதனை, வாந்தி, சிறுநீரக எரிச்சல், காய்ச்சல் வருதல் ஆகியவை ஏற்படும். இதில் மூன்றாவது வகை, சிறுநீரகப் பையில் ஏற்படும் கற்களால் சிறுநீர் போகும் போது எரிச்சல், ரத்தம் கலந்த சிறுநீர் கழித்தல், சிறுநீரில் கடுப்பு ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது கஷ்டப்பட்டு கழித்தல், சொட்டு சிறுநீர் ஆகியவை அறிகுறிகள் ஆகும். இதனால் வெவ்வேறு பகுதிகளில் கற்களினால் ஏற்படும் அறிகுறிகள் வித்தியாசப்படும்.
லேசர் சிகிச்சை
பழைய முறையில் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் சிறுநீர் பையில் கற்கள் இருந்தாலும் சிறுநீர் குழாயில் கற்கள் இருந்தாலும் அறுவை சிகிச்சை முறையில் மட்டுமே கற்கள் அகற்றப்பட்டது.
ஆனால் இப்போது அறுவை சிகிச்சை இல்லாமல் வயிற்றுப் பகுதியில் ஒரு கீறலும் இல்லாமல், லேசர் சிகிச்சையின் மூலம் கற்களை கரைத்து சிறுநீர் வழியாக ஸ்டண்ட் வைத்து அதை வெளியேற்றலாம்.
சிறுநீரக குழாயில் மற்றும் சிறுநீரகத்தில் செய்யப்படும் லேசர் முறையால் கற்களை சிறு, சிறு துகள்களாக உடைப்பார்கள் அந்த துகள்கள் வெளியேறுவதற்கும் சிறுநீரக குழாயில் அடைப்பு ஏற்படாமல் ஒரு வீக்கம் வருவதை தடுப்பதற்காக இந்த ஸ்டண்ட் வைக்கப்படுகிறது. இது பொதுவாக 15 நாட்களில் இருந்து 25 நாட்களுக்குள் அகற்றப்படும்.
பழைய அறுவை சிகிச்சை முறையில் 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டி இருந்தது. தற்போது லேசர் சிகிச்சை செய்பவர்கள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்தில் வீடு திரும்பலாம்.
திரும்ப கற்கள் உண்டாகுமா?.
சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ரத்தத்தின் அளவில் அதிகமாக இருப்பதால் இது போன்ற கற்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு, கால்சியம் அளவு எதனால் அதிகம் இருக்கிறது என்பதை ரத்த பரிசோதனை செய்து அதற்கு வேண்டிய சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்கள், நீர் அருந்துதல், துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு செய்து நம்முடைய வாழ்க்கை முறையை சிறிது மாற்றிக் கொண்டால், சிறுநீரக கற்களில் இருந்து பூரண விடுதலை பெறலாம் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்புமுறைகளும் உள்ளன.
- கால்சியம், வைட்டமின் ‘டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
சிறுநீரகக் கற்களுக்கு சித்த மருத்துவம்: சிறுகன்பீளை, நெருஞ்சில் விதை, மூக்கிரட்டை இவைகளை பொடித்து வைத்துக்கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்து, காலை, மாலை என இருவேளை குடிக்கவும். மாவிலங்கப்பட்டை, தொட்டால் சிணுங்கி, வெட்டிவேர் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
கல்லுருக்கி இலை (Scoparia dulcis) மற்றும் இரணகள்ளி இலை (Kalanchoe pinnata) போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர ேநாய் குணமாகும். சித்த மருந்துகளில், வெடியுப்புச் சுண்ணம் 50 மி.கி., நண்டுக்கல் பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை நீர்முள்ளிக் குடிநீரில் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். அமிர்தாதி சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, மாலை இருவேளை சாப்பிட வேண்டும்.
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்புமுறைகள்: விட்டமின் 'ஏ' குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதாலும், சிறுநீரக கற்களை கரைப்பதாலும், பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாகுவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும். கால்சியம், வைட்டமின் 'டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். கால்சியம் அளவில் குறைந்தால் அது ஆக்சலேட் உடன் இணைந்து கற்களை உருவாக்கும். ஆகவே, கால்சியம் நம் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.
இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ரூட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை சிறுநீரகக் கல் உள்ளவர்கள் உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இதன் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளதால், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும். வெண்பூசணி, கோவைக்காய், முள்ளங்கிக்காய், சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்கவேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை திரிபலா எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- சிறுநீரக கற்கள் வரக்காரணத்தையும், பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
- சிறுநீரகக் கற்கள் வந்தால் பின்பக்க விலாவில் வலி ஏற்படும்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அமுதம் ஆயுஷ் கூட்டுறவு மருத்துவமனையில் ஓமியோபதி டாக்டராக தினேஷ்குமார் பணியாற்றி வருகிறார். அவர் சிறுநீரக கற்கள் எதனால் உருவாகிறது, அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறினார். அவர் கூறியதாவது:-
சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சிலேட், யூரிக்ஆசிட், கார்பனேட் போன்ற தாதுக்கள் படிந்து நாளடைவில் அது சிறுநீரக கற்களாக உருவாகிறது. முறையற்ற உணவு பழக்க வழக்கங்களாலும், மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேற்றத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகம் சிறுநீரக கற்கள் உருவாகிறது. அண்மைக்காலமாக இளம் வயதினருக்கும், மாணவர்களுக்கும் சிறுநீரக கற்கள் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தங்களுடைய கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த சிறுநீரக கற்கள் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காரணிகள்
சிறுநீரக கற்கள் அதிக அளவு அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும், புகை பிடிப்பவர்கள் மற்றும் அதிக அளவு மது குடிப்பவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்பு அதிகம். சரியான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, உப்புத்தன்மை நிறைந்த குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற குடிநீரை எடுத்துக் கொள்வதாலும் சிறுநீரக கற்கள் உருவாகும். அதிக அளவில் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
சிறுநீரகக் கற்கள் வந்தால் பின்பக்க விலாவில் வலி ஏற்படும். முதுகு வலி ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும். வலியுடன் குமட்டல் வாந்தி உருவாகும். சிறுநீரில் ரத்தம் காணப்படுதல், அடிவயிற்றில் வலி, சிறுநீர் இயல்பாக வெளியேறாமல் சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். சிறுநீரில் கிருமி தொற்று பரவி காய்ச்சல் உண்டாகும். இடுப்பின் பின்புறம் மற்றும் முதுகுத்தண்டு அருகில் வலி ஏற்படும். சிறுநீரில் மணல் போன்ற கற்கள் காணப்படும். சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உடல் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். இவை சிறுநீர் கற்கள் இருப்பதனால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும்.
உணவு பழக்க வழக்கங்கள்
சிறுநீரக கற்கள் வராமல் தவிர்க்க அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடக்கூடாது. பால் சார்ந்த பொருட்களையும், கீரைகளையும் சாப்பிடக்கூடாது. தக்காளி விதை, கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க சுரைக்காய், வெண்பூசணி, வாழைத்தண்டு, வெள்ளரி, எலுமிச்சை சாறு, பீன்ஸ், பார்லி கஞ்சி ஆகியவற்றை அருந்த வேண்டும். தினமும் ஒருவர் மூன்று முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஓமியோபதி சிகிச்சை முறை
பொதுவாக ஒரு முறை சிறுநீரக கற்கள் உருவாகினால் மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. சரியான உணவுப் பழக்கம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தின் மூலம் மீண்டும் கற்கள் உருவாவதை தவிர்க்க முடியும். சிறுநீரக கற்களுக்கு நிரந்தர தீர்வு ஓமியோபதி மருத்துவத்தில் உள்ளது. சிறுநீரக கற்களின் அளவு, கற்கள் உருவாகி இருக்கும் இடம், அதன் தன்மை போன்றவற்றை ஆராய்ந்து அவர்களின் தனித்தன்மையை பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படும். பக்க விளைவுகள் இல்லா நிரந்தர தீர்வுக்கு ஓமியோபதி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்றைய காலக்கட்டத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சினையால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
- ஓமியோபதி மருத்துவம் உலக அளவில் 2-வது பெரிய மருத்துவ முறையாக உள்ளது.
சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஓமியோபதி மருத்துவத்தில் தீர்வு உள்ளதாக வேலூரை சேர்ந்த பி.பீ.ஆர். மருத்துவமனை நிறுவனரும், 30 ஆண்டு அனுபவமிக்க ஓமியோபதி மருத்துவரும், தென்னிந்திய ஓமியோபதி மருத்துவ சங்க மாநில தலைவருமான பி.பீ.ஆர். என்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நமது உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் அதற்கு சிறுநீரகங்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது. நமது உடலில் இருக்கும் நச்சு கழிவுகள் சிறுநீரில் வெளியேற்றப்பட்டால் தான் உடலின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக செயல்படும். இன்றைய காலக்கட்டத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சினையால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு ஓமியோபதி மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உள்ளது.
ஓமியோபதி மருத்துவம் உலக அளவில் 2-வது பெரிய மருத்துவ முறையாக உள்ளது. இந்த ஓமியோபதி மருத்துவம் மூலம் சிறுநீரக கற்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். கோடைக்காலம் தொடங்கி விட்டது. இக்காலக்கட்டத்தில் தான் பலருக்கு சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுகிறது.
துரித உணவுகள்
சிறுநீரக பாதையில் அமார்பஸ் பாஸ்பேட் உப்பு அல்லது கால்சியம் ஆக்சலேட் உப்பு போன்ற தாதுக்கள் சிறிய வடிவில் நெருஞ்சி முள் போன்ற உருண்டையாக உருவாகிறது. உடலில் உருவாகும் தேவையற்ற அதிகப்படியான கால்சியம் போன்ற வகை உப்புகள் சிறுநீர் வழியாக வெளிறே வேண்டும். சிறுநீரகத்தில் அமிலத்தன்மை, காரத்தன்மை சமநிலையின்மையால் இவை வெளியேறாமல் சிறுநீரகப்பாதையை அடைத்துக் கொண்டு நிற்கும்போது அவை படிமங்களாக படிந்து நாளடைவில் கற்களாக உருவாகிறது. அவை நகர்வதால் கடுமையான வலி வருகிறது. இதனை சிறுநீரக கல் நோய் என்று கூறுகிறோம்.
அவ்வாறு உருவாகும் கற்களில் பல வகைகள் உண்டு. ஜங்க் புட் எனப்படும் துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுதல், மன அழுத்தம், தைராய்டு சுரப்பி நீர் கோளாறு, சரியாக குடிநீர் அருந்தாமை, உடல் பருமன், தூக்கமின்மை, கிருமி தொற்று போன்ற காரணங்களாலும் இந்த கல் உருவாகிறது.
கல் இருப்பது உறுதியானால் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால் ஆபத்தில்லாமல் கற்களை வெளியேற்றிவிடலாம். மேலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சி.டி. ஸ்கேன் செய்வதன் மூலம் கற்கள் இருப்பதை உறுதிப்படுத்தலாம்.
திரவ ஆகாரம்
கற்கள் பெரிதாக இருக்கும்போது வலி முதுகுபுறத்தில் இருந்து தொடங்க ஆரம்பிக்கும். சிலருக்கு வயிற்றில் கடுமையான வெட்டும் வலி, வாந்தி, அதிகமாக வியர்த்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவை அறிகுறிகளாகும். கற்கள் சிறிதாக இருக்கும் பட்சத்தில் அதை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் திரவ ஆகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 2 லிட்டருக்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கு இணையான பழச்சாறுகளும், அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். தினமும் இளநீர், பார்லி வேகவைத்த நீர், நீர்மோர் போன்றவை நன்மை பயக்கும். நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பரங்கிக்காய் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச்சாறு குடிக்கலாம். சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு பழம், சாத்துக்குடி, திராட்சை, வாழைப்பழம், அன்னாசி பழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதும், எலுமிச்சை சாறு சேர்ப்பதும் நல்லது.
மதுஅருந்தக் கூடாது
கல் பிரச்சினை இருப்பவர்கள் உலர் பழங்கள், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தினை வகையில் கேழ்வரகு, கீரையில் பசலை கீரை இவற்றை தவிர்ப்பது நல்லது. ஐஸ்கிரீம், சாக்லேட் வகைகளையும், செயற்கை குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
கால்சியம் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் சிறுநீரக கல் இருப்பது உறுதியானால் மருத்துவர் ஆலோசனையுடன், அவரது பரிந்துரையின் பேரில் அதை தவிர்ப்பது நல்லது. உணவில் உப்பினை அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. எடை அதிகமாக இருப்பது கூட சிறுநீரக கற்கள் உண்டாக காரணமாக அமைகிறது. எனவே அதிகளவு கொழுப்பு இருக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது.
மதுவுக்கு சிறுநீரக கற்கள் உருவாக்கத்தில் எந்த ஒரு நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும் தன்மை மதுவுக்கு உண்டு. ஆல்கஹாலில் இருக்கும் பியூரின், யூரிக் அமில கற்கள் உருவாக காரணமாக இருக்கலாம்.
20 மில்லி மீட்டர் அளவுள்ள கற்களையும் ஓமியோபதி மருந்துகள் மூலம் அறுவை சிகிச்சையின்றி கரைத்து விடலாம். ஓமியோபதி மருத்துவத்தில் உணவு பத்தியம் இல்லை. பெண்கள் கர்ப்பகாலத்திலும் ஓமியோபதி மருந்துகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து ஓமியோபதி மருந்துகளை உட்கொள்ளலாம். சிறுநீரக கற்கள் திரும்ப வராமல் நிரந்தரமாக தடுக்க ஓமியோபதி மருத்துவம் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. பின்விளைவுகள் அற்ற மருத்துவமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது உடலில் உள்ள எதிர்ப்பு தன்மை சார்ந்த ஒரு வைத்திய முறை.
- ஒன்று முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
மதுரை உத்தங்குடி சாஸ்தா கிட்னி மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியின் சேர்மனும், சிறுநீரகவியல் நிபுணருமான டாக்டர் பழனிராஜன் கூறியதாவது:-
நாள்பட்ட சிறுநீரக செயல் இழப்பிற்கு தொடர் டிஅலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக அறுவை சிகிச்சை இரண்டுமே பரவலாக நடைமுறையில் உள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக டிஅலிசிஸ் சிகிச்சை என்பது அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கின்றது. டிஅலிசிஸ் செய்து கொள்பவர்களில் சுமார் ஒன்று முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
இந்த குறைவான எண்ணிக்கைக்கு பல்வேறு விதமான மருத்துவ, பொருளாதார, மற்றும் குடும்ப காரணங்கள் உள்ளது அனைத்தும் நாம் அறிந்ததே. அவற்றை பற்றி நாம் இங்கு விவாதிக்க போவதில்லை. ஏனென்றால் அவை ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். நாம் இங்கு பார்க்க போவது ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து வசதி வாய்ப்புகள், சிறுநீரக தானம் தருவதற்கான டோனோர் தயாராக இருந்தும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத ஒரு ஆபத்தான சூழ்நிலை பற்றியதே.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது உடலில் உள்ள எதிர்ப்பு தன்மை சார்ந்த ஒரு வைத்திய முறை. எந்த ஒரு தனி நபரின் உடலில் உள்ள செல்களும் அவரவரின் மரபணுக்களுக்கு ஏற்ப தனி அடையாளம் கொண்டிருக்கும். ஒரே போல தோற்றம் கொண்ட இரட்டையருக்கு கூட மரபணுக்களின் உண்டாகும் செல்கள் முழுவதும் பொருந்திருக்காது. அப்படி இருக்கும் போது, நெருங்கிய உறவினர் என்னும் தாய், தந்தை, சகோதர உறவுகளுக்கு 50 சதவீத பொருத்தம் மட்டுமே இருக்கும்.
உடலின் நோய் எதிர்ப்பு தன்மை தன்னுடைய செல்களை தவிர வேறு எந்த செல்கள் உடலுக்குள் வந்தாலும் அவற்றை கண்டறிந்து பின்னர் அந்த செல்களுக்கு எதிராக ஆன்டிபாடிஸ்யி உருவாக்கி அவற்றை கொன்று விடும். அதனால் தான் நாம் நம்மை தாக்கும் பல்வேறு கிருமிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றி ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடிகின்றது. இந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு உடலுக்குள் வரும் எல்லாமே அது கிருமியாக இருந்தாலும் அல்லது மாற்று உறுப்பு கிட்னியாக இருந்தாலும் ஒரே விதமான நிகழ்வு தான்.
புதிதாக பொருத்தப்பட்ட சிறுநீரகங்களை, அதன் செல்களை கண்டறிந்து அதற்கான எதிர்ப்பு பொருட்களை உருவாக்கி 5 முதல் 7 நாட்களுக்குள் அந்த சிறுநீரகத்தை அழித்து விடும். இதற்கு ரெஜெக்ஷன் என்று பெயர். இந்த ரெஜெக்ஷன் உடலுக்குள் சிறுநீரகம் பொருத்திய 3-5 நாட்களுக்கு பின் தான் மெல்ல, மெல்ல தூண்டப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு உடலில் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தி புதிதாக பொருத்திய சிறுநீரகங்களை முற்றிலுமாக அழித்து விடும்.
சிறுநீரக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்கு பின்னர் தரப்படும் மிக முக்கிய சக்தி வாய்ந்த மருந்துகள் இந்த எதிர்ப்பு தன்மையை கட்டுப்படுத்தி சிறுநீரகங்கள் தொடர்ந்து நல்லமுறையில் செயல்பட வைக்கின்றன. இந்த புதிய மாற்று சிறுநீரகம் உடலுக்குள் பொருத்துவதற்கு முன்னரே அந்த நபரின் உடலில் ஒருவேளை எதிர்ப்பு, பொருட்கள் உருவாகி இருந்தால் என்ன நடக்கும். அறுவை சிகிச்சையின் மூலம் சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களில் உடல் அந்த மாற்று உறுப்பை எதிர்த்து அழித்து விடும்.
இதற்கு ஹைப்பர் ஆக்டிவ் ரெஜெக்ஷன் என்று பெயர். இது போன்ற ஒரு எதிர்ப்பு தன்மை ஒருவர் உடலில் ஏற்பட்டால் அவர் எப்போதும் தன்னுடைய எதிர்ப்பு தன்மை தூண்டப்பட்ட நிலையிலேயே இருக்க நேரிடும். இதனை கிராஸ் மேட்ச் என்ற பரிசோதனை மூலம் அறுவை சிகிச்சைக்கு முன்பே கண்டறிந்து இது போன்ற ஒரு ஆபத்தை தவிர்க்க முடியும். ஆனால் இந்த கிராஸ் மேட்ச் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியாத வேறு ஒரு எதிர்ப்பு தன்மையும் உண்டு. இது போன்று தூண்டப்படும் எதிர்ப்பு தன்மை வாழ்நாள் முழுவதும் நிலை பெற்று விடுவதால் அந்த நபரால் எப்போதும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாது. டிஅலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பின் ஒரு வெளிப்பாடாக ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிகப்பு அணுக்கள் குறைபாடாக இருக்கும். இதனை அதற்கான ஊசிகள் மூலம் மட்டுமே குணப்படுத்த வேண்டும்.
மாறாக பல சந்தர்ப்பங்களில் ரத்தம் ஏற்றப்படுகிறது. சில சமயங்களில் 3 மாத இடைவெளிகளில் அடிக்கடி ரத்தம் ஏற்றப்படும் ஒரு சூழ்நிலையும் உள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒரு செயல் ஆகும். இது போல் ஏற்றப்படும் ரத்தம் சில சந்தர்ப்பங்களில் உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டி விட்டு அவர்களால் மாற்று உறுப்பை ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு நிலையை உண்டாகும். சமீபத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராக வந்தவர்களில் 5 நபர்களுக்கு இது போல ஒரு தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தின் மூலம் ஏற்பட்டு தற்போது மட்டும் அல்ல எப்போதுமே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியாத சூழலில் உள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. எனவே டிஅலிசிஸ் சிகிச்சையில் ரத்தம் ஏற்றி கொள்வது என்பது உடலுக்கு நல்லது செய்யும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று தவறாக எண்ணாமல் அதன் ஆபத்தை உணர்ந்து தவிர்ப்பதே நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- தற்போது இரண்டு வகையான டயாலிசிஸ் சிகிச்சைகள் உள்ளன.
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) என்பது உலக அளவில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகி வருகிறது. ஒரு ஆய்வு அறிக்கையில் இந்த நோய் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் 13வது இடத்தில் இருந்தது. மேலும் 2040ம் ஆண்டில் இது உலக அளவில் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயர்இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் ஆகியவை சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும். ஒரு கட்டுப்பாடற்ற நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளி ஒரு இறுதி நிலை சிறுநீரக நோயாளியாக (End Stage renal disease) எளிதாகவும், விரைவாகவும் முன்னேறலாம். இந்நோயின் ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை.
இருதய நோயாளிகள் , நீரழிவு நோயாளிகள், இரத்த கொதிப்பு நோயாளிகள், குடும்பத்தில் மற்றவர்களுக்கு சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்கள் அவ்வப்போது சிறுநீரக பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
எடை இழப்பு, பசியின்மை, கை-கால் வீக்கம், மூச்சு திணறல், உடல் சோர்வு, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தல், தூக்கம் இன்மை, தோல் அரிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஏற்படலாம்.
நோயின் ஆரம்ப நிலைகளில் சரியான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மருந்துகள் உட்கொள்வதன் மூலம் நோய் முற்றிய நிலையை அடைவதை தடுக்க முடியும். சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடலில் நீர் மற்றும் நச்சுப் பொருள்கள் அதிக அளவில் ரத்தத்தில் கலந்து இருந்தால் அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும். நவீன டயாலிஸிஸ் சிகிச்சை மூலம் இந்நோயாளிகளின் சராசரி வாழ்நாள் சற்று உயர்ந்துள்ளது.
தற்போது இரண்டு வகையான டயாலிசிஸ் சிகிச்சைகள் உள்ளன. ஒன்று ஹீமோ டயாலிசிஸ் , மற்றொன்று பெரிட்டோனியல் டயாலிஸிஸ். ஹீமோ டயாலிசிஸ் என்பது உடம்பில் உள்ள ரத்தத்தை ரத்தக்குழாய் (AV Fistula) மூலம் வெளியே எடுத்து ஹீமோ டயாலிசிஸ் இயந்திரத்தினுள் செலுத்தி சுத்திகரிப்பு செய்து மறுபடியும் உடம்பினுள் செலுத்துவதாகும். இது ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்றவாறு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தேவைப்படும் சிகிச்சைக்கு. இச்சிகிச்சைக்கு ஒவ்வொரு முறையும் நோயாளி மருத்துவ நிலையத் திற்கு செல்ல வேண்டியது இருக்கும்.
பெரிடோனியல் டயாலிசிஸ் சிகிச்சை வீட்டிலிருந்து தினமும் செய்யக்கூடிய சிகிச்சை முறை ஆகும். இதற்காக நோயாளி ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.
சிறுநீரக செயலிழப்பிற்கு சிறந்த சிகிச்சையாக தற்போது இருப்பது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Renal Transplantation) ஆகும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள் சாதாரண மனிதர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழமுடியும். எனினும் மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பது தற்போது அரிதாகி வருகிறது. எனவே சிறுநீரக செயலிழப்பு நோயின் நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் நிரந்தர சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும்.
கமலா ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, கோவில்பட்டி
Dr.R. கிருஷ்ணன்M.D., DM (Nephro)
- சிறுநீரக பாதிப்பு நோயாளிகளின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்த எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எங்கள் இலக்கை அடைய பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை மூலக்குளம் ஈஸ்ட்கோஸ்ட் மருத்து வமனையில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பல ஆண்டாக சிறுநீரக செயலிழப்புடன் போராடி வந்த 36 வயது இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தப் பட்டுள்ளது. அவருக்கு தன்னலம் பாராமல் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் தனது சிறுநீரகத்தை ஒருவர் தானம் கொடுத்தார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முருகேசன் தலைமையில் டாக்டர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் மற்றும் டாக்டர்கள் வெற்றிகரமாக இந்த அறுவை சி கிச்சையை செய்தனர். சிறுநீரகம் தானம் பெற்றவர், தானம் கொடுத்தவர் இருவரும் நலமுடன் உள்ளனர்.
இதுகுறித்து தலைமை சிறுநீரகவியல் நிபுணர் முருகேசன் கூறியதாவது:-
தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பட்ட ஆராய்ச்சியின் உதவியோடு பல நோயாளிகளின் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை இந்த தருணம் உணர்த்துகிறது.
புதுவை, அண்டை மாவட்டங்களில் உள்ள சிறுநீரக பாதிப்பு நோயாளிகளின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்த எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம். பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர், இறந்தவர்கள் தானம் செய்யும் சிறுநீரகத்தை பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எங்கள் இலக்கை அடைய பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.
கடந்த ஆண்டு எங்கள் மருத்துவமனைக்கும், சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ நிபுணர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
பெருநகரங்களுக்கு இணையான தரத்தில், அதைவிட குறைவான கட்டணத்தில் புதுவையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்
- டயாலிஸ் சிகிச்சையும் ஓரளவிற்கு மேல் கைகொடுக்கவில்லை. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தார்
அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2018-ம் ஆண்டு அவரின் 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. அப்போது மாசசூசெட்ஸ் Massachusetts மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் உயிர் பிழைத்தார்.
ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து ஐந்து வருடங்களுக்குள்ளாகவே மீண்டும் அவருக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. ஆகவே அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையிலேயே அவருக்கு டயாலிஸஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் உதவியால் உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனாலும் டயாலிஸ் சிகிச்சையும் ஓரளவிற்கு மேல் கைகொடுக்கவில்லை. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தார்.
அப்போது, மருத்துவர் டாட்சுவோ கவாய், தனது கடைசி முயற்சியாக நோயாளியான ரிக்ஸ்லாய்மென்னிடம், பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி பார்க்கலாம் என்று அனுமதி கேட்டுள்ளார்.
நோயாளியும் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருந்ததால், மருத்துவரின் ஆலோசனைக்கு ஒத்துக்கொண்டார். இதனால், மருத்துவர்கள் குழுவானது இவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய, மருத்துவர் டாட்சுவோ கவாய், "பன்றியின் சிறுநீரகம் மனித சிறுநீரகத்தின் அளவை ஒத்ததாக இருக்கும். பன்றியின் இரத்த நாளங்களை நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கும் பொழுது, நாங்கள் எதிர்பார்த்தபடி உடனடியாக அது வேலை செய்ய ஆரம்பித்து, நோயாளியின் உடலிலிருந்து சிறுநீர் பிரிய ஆரம்பித்தது. இது எங்கள் ஆராய்ச்சி குழுவிற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முறை வெற்றிபெற்றால், பல நோயாளிகள் பலனடைவார்கள். விலங்குகளின் உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுதலால் உறுப்பு பற்றாக்குறை குறையும்" என்றும் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிக் ஸ்லாய்மெனின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இவர் வீட்டிற்கு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.