என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kollidam river"
- கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அந்த மின் கோபுரத்தின் அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.
- கொள்ளிடம் ஆற்றில் உள்ள மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
ஸ்ரீரங்கம்:
திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே, ஆற்றுப்பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் ராட்சத கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அந்த மின் கோபுரத்தின் அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.
எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கோபுரம் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்ததால் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று வழியில் மின்சாரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு ஆற்றுப்பகுதியில் உள்ள மின் கோபுரத்தின் அடிப்பகுதி முழுவதுமாக அரித்து செல்லப்பட்டதால் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் ராட்சத கோபுரம் சாய்ந்து ஆற்றில் விழுந்தது.
மின் கோபுரம் இரவில் சாய்ந்ததாலும், மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்ததாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
- சுமார் 30 அடி ஆழம் வரை உள்ள பகுதிக்கு சென்றபோது 4 பேரும் திடீரென்று தண்ணீரில் மூழ்கினர்.
- கோபாலகிருஷ்ணன் மட்டும் ஒருவழியாக தப்பி கரையேறினார்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் பட்டர் குலம் என்ற பெயரில் வேதபாடசாலை இயங்கி வருகிறது. இதனை ஆடிட்டர் பத்ரிநாராயணன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இங்கு 50-க்கும் மேற்பட்டோர் வேதம் பயின்றனர். நேற்று முன்தினத்துடன் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நிறைவடைந்தன. இதையடுத்து பெரும்பாலான பெற்றோர் ஸ்ரீரங்கம் வந்து தங்களது மகன்களை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் தவிர திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஹரி பிரசாத் (13), ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (12) மற்றும் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அபிராம் (13) ஆகிய 4 பேர் மட்டும் தங்கியிருந்தனர்.
அவர்கள் இன்று (திங்கட்கிழமை) ஊருக்கு செல்ல முடிவெடுத்து இருந்தனர். இதற்கிடையே நேற்று காலை 6 மணியளவில் யாத்ரி நிவாஸ் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக வேத பாடசாலையில் அனுமதி பெற்று 4 பேரும் சென்றனர்.
சுமார் 30 அடி ஆழம் வரை உள்ள அந்த பகுதிக்கு சென்றபோது 4 பேரும் திடீரென்று தண்ணீரில் மூழ்கினர். இதில் கோபாலகிருஷ்ணன் மட்டும் ஒருவழியாக தப்பி கரையேறினார். மற்ற 3 பேரையும் காப்பாற்றுமாறு கூச்சல் போட்டார்.
ஆனால் அங்கு யாரும் இல்லாததால் ஓடிச்சென்று வேதபாடசாலையில் தெரிவித்தார். அதன்பேரில் பாடசாலை நிர்வாகிகள் உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் அதற்குள் தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் போனது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 25 பேர் ஆற்றுக்குள் இறங்கியும், பைபர் படகுகள் மூலம் அந்த பகுதி முழுவதும் தேடினர். அப்போது விஷ்ணு பிரசாத் என்ற மாணவர் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற 2 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை வரை தேடியும் பலனின்றி போனது.
அதே சமயம் இரவு நேரம் வந்ததால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 2-வது நாளாக ஆற்றில் மூழ்கி மாயமான 2 மாணவர்களை தேடும் பணிகள் தொடங்கின.
முன்னதாக முக்கொம்பு தடுப்பணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் பாசனத்திற்காக 1,903 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. மாணவர்களை தேடும் பணிக்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களாக கம்பரசம்பேட்டையை அடுத்த மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் பகுதியில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளுக்காக கிணறுகள் தோண்டப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
அதனை அறியாமல் மாணவர்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றதால் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தங்கள் மகன்கள் உயிருடன் கிடைத்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களது பெற்றோர் கொள்ளிடம் ஆற்றின் கரையில் சோகத்துடன் காத்திருக்கிறார்கள். மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி 30 மணி நேரத்தை கடந்துவிட்டதால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர் தேடுதல் பணியில் ஹரிபிரசாத் என்பவரது உடல் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் நாணல் புற்கள் வளர்ந்துள்ளதால் அதற்கிடையே மேலும் ஒரு மாணவரின் உடல்கள் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- கம்பரசம்பேட்டை அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கிணறு தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
- காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் நீரோட்டம் அதிகரித்தது.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகருக்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்து வேதம் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட பாடசாலையில் படிக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஹரி பிரசாத் (14), ஆந்திராவை சேர்ந்த அபிராம் (13), கோபாலகிருஷ்ணன் (12) ஆகிய 4 மாணவர்கள் சுற்றுலா பயணிகள் தங்கும் இடமான யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை 6 மணி அளவில் குளிக்கச் சென்றனர்.
பின்னர் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து சுழலில் சிக்கிய அவர்களை ஆற்று தண்ணீர் இழுத்துச் சென்றது. இதில் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவன் அதிர்ஷ்டவசமாக தடுமாறி தப்பி கரைக்கு ஓடி வந்தான்.
பின்னர் தன்னுடன் குளிக்க வந்த சக மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய தகவலை தெரிவித்துள்ளான். உடனடியாக வேத பாடசாலையில் இருந்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 25 பேர் விரைந்து வந்து வெள்ளத்தில் மூழ்கிய அந்த 3 மாணவர்களையும் தேடினர்.
அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இரு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
தற்போது கம்பரசம்பேட்டை அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கிணறு தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் நீரோட்டம் அதிகரித்தது.
இதனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் குளிக்க சென்ற 4 பேரும் நிலைகொள்ள முடியாமல் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நீர் தேங்கிய பகுதியில் காலை வைத்தவர் நீருக்குள் தவறி விழுந்து விட்டார்.
- கிராமமக்கள் சுக்காம்பார் சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி - கல்லணை சாலையில் அமைந்துள்ள கல்லணை அருகே சுக்காம்பார் கிராமம் கீழ்த் தெரு கோவிந்தராஜ் என்ற விவசாய கூலி தொழிலாளி மகன் சஞ்சு (வயது 11) இவர் கோவிலடி கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு தனது நண்பர் ரிஷிக்குமரனுடன் சென்றுள்ளார்.
கொள்ளிடத்தில் நீர் தேங்கிய பகுதியில் காலை வைத்தவர் நீருக்குள் தவறி விழுந்து விட்டார்.
உடனே அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்வதற்குள் நீரில் மூழ்கிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அருகில் உள்ள இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றில் குதித்து தேடி சிறுவனின் உயிரற்ற உடலை மீட்டனர்.
மணல் அள்ளியதால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சிறுவன் இறந்தாக கூறி கிராமமக்கள் சுக்காம்பார் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்ய முயன்றனர்.
உடனடியாக அங்கு வந்த தோகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யா பிள்ளை சாலை மறியல் செய்யக்கூடாது என வலியுறுத்தி தகுந்த நட வடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
இதை அடுத்து தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சிறுவன் பிரேதத்தைப் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்ததால் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பும் சரிந்துள்ளது
- இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மழை நீர் வரத்து 17 ஆயிரம் கனஅடியாக குறைந்திருப்பதாக முக்கொம்பு நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்
திருச்சி:
மேட்டூர் அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
எனவே ஆங்காங்கே பெய்யும் மழை நீரும் காவிரியில் சங்கமிப்பதால் காவேரி நீர் வரத்து உயர்ந்தது. நேற்றைய தினம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 15 ஆயிரம் கன அடி நீர் மற்றும் 22,000 கன அடி மழை நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து 5000 கன அடி நீர் காவிரி ஆற்றிலும், மீதமுள்ள 32 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மழையின் வேகம் குறைந்ததால் நீர்வரத்தும் சரிந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மழை நீர் வரத்து 17 ஆயிரம் கனஅடியாக குறைந்திருப்பதாக முக்கொம்பு நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதில் வழக்கம்போல் 5000கன அடி நீர் காவிரி ஆற்றிலும், மீதமுள்ள 27 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் முக்கொம்பு மேலனை நீர்வரத்தினை கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டு நீர்வளத்துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அதன் பின்னர் முத்தரசநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பினை சரி செய்ய உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு முகாமிட்டு குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கலெக்டர் ஆய்வின்போது கூட்டு குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ராஜசேகர், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாக ஆனந்த், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், தாசில்தார் குணசேகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது.
- இன்று காலை 6 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதில் 41 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும், மீதமுள்ள 95 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டது.
திருச்சி:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையிலிருந்து அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.
இதனால் திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கினால் லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சாலை தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு விவசாயிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. நேற்று இரவு நிலவரப்படி 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது.
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நேற்று காலை 6 மணி அளவில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதில் 40 ஆயிரம் கன அடி நீர் காவிரியிலும், 93 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டது. பின்னர் மாலையில் நீர்வரத்து 1 லட்சத்து 36 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதில் 41 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும், மீதமுள்ள 95 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டது. நேற்று இரவு மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்த வெள்ள நீர் இன்று மதியத்துக்குள் முக்கொம்பு மேலணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முக்கொம்பு அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் உயரும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே காவிரி பாய்ந்து ஓடும் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் மீண்டும் மூட்டை முடிச்சுகளுடன் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தற்போதுதான் வெள்ளம் குறைந்து சமீபத்தில்தான் வீடு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் அதிக அளவில் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
- திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
- கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருச்சி :
கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு ஆர்ப்பரித்து வந்ததையடுத்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வந்த உபரிநீர் முழுவதுமாக திறந்து விடப்பட்டது.
இதனால் காவிரியில் 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வரை வெளியேற்றப்பட்டது. இடையில் பவானிசாகர், அமராவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் கரூர் மாவட்டம் அருகேயுள்ள திருமுக்கூடலூரில் சேர்ந்து மாயனூர் கதவணை வந்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது. உபரி நீர் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் ஒன்றரை லட்சம் கனஅடி நீர் வரை வெள்ள நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கரையோரம் வசித்த மக்கள் மேடான பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். லால்குடி, உத்தமர் சீலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழைப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. உத்தமர்சீலி பகுதியில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதால் மூன்று நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
இதற்கிடையே நீர் வரத்து படிப்படியாக குறைந்தது. கடந்த 16-ந்தேதி முக்கொம்பு அணைக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் 18-ந்தேதி மேலும் சரிந்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து அன்று காலை முதல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் கர்நாடகாவில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்படும் தண்ணீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே முழுவதுமாக திறக்கப்படுகிறது.
எனவே மீண்டும் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் இடைவெளிக்கு பிறகு காவிரி ஆற்றில் தற்போது மீண்டும் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதையடுத்து கொள்ளிடத்தில் 40 ஆயிரம் கனஅடி நீரும், காவிரியில் 21 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
- திருச்சி கொள்ளிடம் ஆற்றின் இரும்பு பாலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக 17-வது தூண் இன்று இடிந்து விழுந்தது
- பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டு ரூ.3.10 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க இருந்தது
திருச்சி:
திருச்சி திருவானைக்காவல்-சமயபுரம் டோல்கேட்டை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928-ல் 12.5 மீ. அகலம், 792 மீ. நீளத்தில் 24 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் பயன்பாட்டில் இருந்து வந்த இப்பாலம் வலுவிழந்ததால், இப்பாலத்தில் 2007 முதல் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்த பழைய பாலத்துக்கு மாற்றாக அதனருகிலேயே ரூ.88 கோடியில் சென்னை நேப்பியர் பால வடிவத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு, 14.2.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அதற்குப்பின் அனைத்து வாகனங்களும் புதிய பாலத்தில் சென்று வரத் தொடங்கியதால், பழைய பாலத்தை பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக 2018 ஆகஸ்டு 16-ந்தேதி கொள்ளிடத்தில் பெருக்கெடுத்த பெருவெள்ளத்தில் கொள்ளிடம் பழைய பாலத்தின் 18, 19-வது தூண்கள் அடித்துச் செல்லப்பட்டன.
பழைய பாலத்தை அப்படியே வைத்திருந்தால் காலப்போக்கில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழுந்தால், அருகிலுள்ள புதிய பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி விடும். எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டு ரூ.3.10 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.
இந்தநிலையில் இருபதாவது தூண் மணல் அரிப்பு காரணமாக தண்ணீரில் முற்றிலுமாக மூழ்கும் நிலையில் உள்ளது. இந்த சூழலில் 17 ஆவது தூண் கடந்த மூன்று தினங்களாக மெல்ல மெல்ல சரிந்து வந்து நிலையில் இன்று காலை 17-வது தூண் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே நீரின் வேகம் காரணமாக ஒவ்வொரு தூணும் இடிந்து வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கொள்ளிடம் பழைய பாலம் திருச்சியின் பெருமையாக விளங்கி வரும், அதே வேளையில் மண் சரிவால் அருகில் உள்ள புது பாலத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்ற நிலை உள்ளதால் உடனடியாக பழைய அகற்ற வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.
- ஆற்றின் கரையை தொட்டுக் கொண்டு வெள்ளநீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
- கோவில் மூலவர் சன்னதியில் தண்ணீர் புகுந்து விடும் சூழல் காணப்படுகிறது.
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையில் கடந்த 2 நாட்களாக 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. தா.பழூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கரையை தொட்டுக்கொண்டு வெள்ள நீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமழபாடியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் உள் பிரகாரத்திலும், தண்ணீர் புகுந்தது. வாசலிலும் நீர் சுவற்றில் இடையே உள்ள துளைகள் போன்றவற்றின் வழியாக தண்ணீர் புகுந்து வருகிறது.
மேலும் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்தால், கோவில் மூலவர் சன்னதியிலும் தண்ணீர் புகுந்து விடும் சூழல் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகின. கோவில் சுவரில் உள்ள ஒரு துளையில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பட்டு வருகின்றன.
- கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ செல்ல வேண்டாம்.
- பாலங்களை தவிர நீர்நிலைகளை கடந்து செல்லும் இதர பாதைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செல்ல வேண்டும்.
அரியலூர்:
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம். மேலும் கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும், பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் செல்போனில் 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகளவு வரும் என்பதால் அந்த பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகளை விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை நீர்நிலைகளின் அருகே மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்கவும் வேண்டும். பாலங்களை தவிர நீர்நிலைகளை கடந்து செல்லும் இதர பாதைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விக்கிரமங்கலம் அருகே கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தண்ணீர் தொட்டுச்செல்வதால் கரையோர பகுதிகளான முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது உள்ளிட்டவற்றுக்காக செல்லக்கூடாது, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கும் வகையில் நேற்று காலை அந்தந்த ஊராட்சிகளில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் விக்கிரமங்கலம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகளின் மாடுகள் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று மேய்ச்சலில் ஈடுபட்டு திரும்புவது வழக்கம். அதன்படி ஆற்றின் நடுத்திட்டு பகுதிக்கு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றுக்கு காவிரி ஆற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீரின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இதனால் மாடுகள் கரைக்கு திரும்பவில்லை.
இதையடுத்து விவசாயிகள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் அங்கு வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரி மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மிதவை படகு மூலம் மாட்டின் உரிமையாளர்களை நடுத்திட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். மேலும் அங்கிருந்து கரைப் பகுதியை நோக்கி மாடுகளை விரட்டினர். ஆனால் தண்ணீர் அதிக அளவு சென்றதால் மாடுகள் மீண்டும் நடுத்திட்டு பகுதிக்கே திரும்புவதற்கு முயற்சித்தன. இதனால் அவற்றை மீட்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் அதிகாரி அம்பிகா தலைமையில் ஆற்றின் கரையில் இருந்து நடுத்திட்டு பகுதிக்கு மிதவை படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் கொண்ட 50 பேர் அடங்கிய குழுவினர் சென்றனர். அவர்கள், மாடுகளை மீண்டும் தண்ணீரில் இறக்கி கோடாலிகருப்பூர் கரைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாடுகள் மீண்டும் நடுத்திட்டு பகுதிக்கு சென்றன.
இதையடுத்து தீயணைப்பு வீரர் முத்துகுமார், ஒரு மாட்டை தன்னோடு அணைத்தவாறு தண்ணீருக்குள் இறங்கி நீச்சல் அடித்து கோடாலிகருப்பூர் கரையை நோக்கி வரத் தொடங்கினார். அந்த மாட்டை தொடர்ந்து மேலும் சில மாடுகள் வரத் தொடங்கின. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் முதலில் சென்ற மாடு சோர்ந்து விடாமல் இருக்க தீயணைப்பு வீரர் முத்துக்குமார் அந்த மாட்டை தட்டிக்கொடுத்து கரையை நோக்கி அழைத்து வந்தார். முதல் கட்டமாக 28 மாடுகள் கரைக்கு வந்து சேர்ந்தன.
இதைப் பார்த்த சில மாட்டு உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாடுகளை அணைத்தவாறு தண்ணீருக்குள் இறங்கி மாடுகளை கரைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டாவது கட்டமாக 37 மாடுகள் கரை சேர்ந்தன. முடிவில் மீதமிருந்த 3 மாடுகளையும் மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் கரை சேர்த்தனர்.
இதையடுத்து மாடுகளை கரை சேர்த்த தீயணைப்பு வீரர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உதவிக்கு வந்த விவசாயிகள், அவர்களை சரியாக வழிநடத்திய அதிகாரி அம்பிகா ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர். மீட்புக்குழுவினருக்கான உதவிகளை ஊராட்சி தலைவர் இளங்கோவன் செய்தார். தீயணைப்பு வீரர்களுக்கு மாடுகளின் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்