search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kosasthalaiyar river"

    • புதிய தடுப்பணையின் மூலம் சுமார் 30 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கமுடியும்.
    • வருடத்திற்கு 2 போகம் நெல்விளைவிக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக் கட்டில் இருந்து வெளியேறும் நீர், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, கொசஸ்தலை ஆற்றில் கலந்து, திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், வழியாக பாய்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடையும்.

    ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரி நிரம்பியதும், தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

    இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து திருத்தணி இழுப்பூரில் தற்போது கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 30 கிராமமக்கள் பயன்பெறுவார்கள். மேலும் வருடத்திற்கு 2 போகம் நெல்விளைவிக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் திருவாலங்காடு அருகே லட்சுமிவிலாசபுரம் பகுதியில் 230 மீட்டர் அகலத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் புதிதாக ஒரு தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கான பணி ரூ.22 கோடியில் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய தடுப்பணையின் மூலம் சுமார் 30 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கமுடியும். இதன் மூலம் சுற்றி உள்ள கிராமமக்கள் பயன் பெறுவார்கள். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். புதிய தடுப்பணை பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாலங்காடு அருகே எல்விபுரம் கொசஸ்தலையாற்றில் புதிதாக தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்து மண் பரிசோதனை செய்தனர். இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனையும் தொடங்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பாலத்தின் நடுவே உடைப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு சாலை துண்டானது.
    • நெடியம் கிராமத்தில் இருந்து சொரக்காய் பேட்டை கிராமத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று கனமழை பெய்யத் தொடங்கியது. பயங்கர இடி, மின்னலுடன் விடிய, விடிய மழை பெய்ததால் ஆந்திர மாநிலத்தில் உள்ள லவா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பள்ளிப்பட்டு அருகே இருக்கும் சானா குப்பம் கிராமத்தில் லவா ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் சிதைந்து போனது.

    பாலத்தின் நடுவே உடைப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு சாலை துண்டானது. இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பள்ளிப்பட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அந்த கிராமம் தீவு போல் மாறியது.

    மேலும் பள்ளிப்பட்டு வடக்கு பகுதியில் இருக்கும் ஆந்திர மாநிலம் புல்லூர் காட்டுப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் லவா ஆறும், பள்ளிப்பட்டுக்கு மேற்கு பகுதியில் அம்மபள்ளி என்ற இடத்தில் இருந்து உற்பத்தியாகும் குசா ஆறும் பள்ளிப்பட்டு - சோளிங்கர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே ஒன்றாகி கொசஸ்தலை ஆறாக பாய்கிறது.

    இந்த ஆற்றில் லவா ஆற்றில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் கலந்ததால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிராம பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக சென்று இந்த வெள்ளப்பெருக்கை பார்த்து வியந்தனர்.

    இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் கொசஸ்தலை ஆற்றில் நெடியம் அருகே கடந்த மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த தரைப்பாலம் மேலும் சேதமடைந்து பாலத்தின் மீது வெள்ளம் ஓடியது.

    இதனால் நெடியம் கிராமத்தில் இருந்து சொரக்காய் பேட்டை கிராமத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மழை காலத்தில் சேதம் அடைந்த இந்தப் பாலத்தை அதிகாரிகள் இது நாள் வரை சீர்செய்யாமல் மண்ணைக் கொட்டி அதை தற்காலிகமாக சீர்செய்து இருந்ததால், தற்போது பெய்த கன மழையில் அந்த பாலம் மேலும் சேதம் அடைந்துள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது.
    • மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மீன்களும், நண்டு, இறால்களும் கிடைக்கும்.

    இதில் எண்ணூரை சுற்றி உள்ள எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம். காட்டுகுப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. தொழிற்சாலை கழிவு நீரை ஆற்றில் கலந்ததால் இந்த மாசு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.

    இதற்கிடையே நேற்று மாலை கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து கலக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மீன்கள் இறப்பதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக நவீன் குமார் உடலை தேடி வந்தனர்.
    • வாலிபர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் முட்செடிகளுக்கு இடையே சிக்கி இருந்த உடலை மீட்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் ஊராட்சியை சேர்ந்த ஆரிக்கம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நவீன்குமார் (வயது20) என்ற வாலிபர் கடந்த புதன்கிழமை மாலை தனது நண்பர்களுடன் ஆரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்று செல்பி எடுத்தபோது திடீரென தவறி கொசஸ்தலை ஆற்று வெள்ள நீரில் விழுந்தார்.

    உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு கிராமமக்கள் தகவல் அளித்தனர். மேலும், ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக நவீன் குமார் உடலை தேடி வந்தனர். ட்ரோன் கேமரா, பைபர் படகு உள்ளிட்டவைகளின் உதவிகளுடன் தேடினர்.

    இந்நிலையில், அந்த வாலிபர் விழுந்த இடத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் திருக்கண்டலம் தனியார் செங்கல் தொழிற்சாலைக்கு எதிரே ஆற்றின் நடுவில் முட்செடிகளுக்கு இடையே சிக்கி இருந்த அவரது உடலை மீட்டனர். இதன் பின்னர் வெங்கல் காவல் நிலைய போலீசார் நவீன் குமார் உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டனர்.
    • ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    பெரியபாளையம்:

    மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீரின் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரியின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டனர். எனவே, ஆற்றங்கரையில் வசிக்கும் பொது மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஆற்றில் யாரும் குளிக்க கூடாது, துணி துவைக்க கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் ஊராட்சியை சேர்ந்த ஆரிக்கம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நவீன்குமார்(வயது20) என்ற வாலிபர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஆரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர், நவீன்குமார் செல்பி எடுத்தாராம். அப்போது நவீன்குமார் திடீரென தவறி கொசஸ்தலை ஆற்று வெள்ள நீரில் விழுந்துள்ளார்.

    இதனால் செய்வது அறியாமல் நண்பர்கள் கூக்குரல் இட்டனர். ஆனால் நவீன் குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதைக் கண்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். மேலும், ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். 10 பேர் கொண்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்து ட்ரோன் கேமரா, பைபர் படகு உள்ளிட்டவைகளின் மூலம் இன்று காலை முதல் தேடி வருகின்றனர். ஆனால், நவீன்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9 -ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, மெய்யூர், அணைக்கட்டு, ஜனப்பம் சத்திரம் வழியாக பாய்ந்து எண்ணூர் பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.

    இந்தநிலையில் வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது.

    மேலும் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீரும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்தது.

    இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9 -ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தரைப்பாலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    பொது மக்கள் தரைப் பாலத்தை கடப்பதை தடுக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்று மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன.

    ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் வாகனங்கள் சீத்தஞ்சேரி, வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வழியாக இயக்கப்படுகின்றன. அதேபோல் இதே மார்க்கத்தில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதனால் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் இன்று 2-வது நாளாக ஒதப்பை தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    • பொதுமக்கள் கொசஸ்தலை ஆற்றை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • உயர்மட்ட மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக்கொடுக்க பொது மக்கள் வேண்டுகோள்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்றுவர இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று புழல் ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெய்யூர்- மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    மேலும், இப்பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று விடியற்காலை முதல் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் ஒன்று கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பணி நிறைவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் கொசஸ்தலை ஆற்றை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

    எனவே, சேதமடைந்த இந்த தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும். உயர்மட்ட மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுத்து அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என இப்பகுதி கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை மற்றும் கொசஸ்தலையாறு ஆகிய இரண்டும் மாநிலங்களுக்கு இடையே உள்ளன.

    சென்னை:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள முக்களகண்டிகை மற்றும் கதரப்பள்ளி கிராமங்களுக்கு அருகில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே இரண்டு அணைகள் கட்ட ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் ஆற்று நீரை நம்பி வாழும் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை மற்றும் கொசஸ்தலையாறு ஆகிய இரண்டும் மாநிலங்களுக்கு இடையே உள்ளவை என்பது தாங்கள் அறிந்ததே. மாநிலங்களுக்கு இடையேயான நதியாக இருப்பதால், கீழ் கரையோர மாநிலத்தின் அனுமதியின்றி, கொசஸ்தலையாற்றின் குறுக்கே மேல் கரையோர மாநிலம் எந்த புதிய கட்டமைப்பையும் திட்டமிடவோ, ஒப்புதல் அளிக்கவோ, கட்டவோ முடியாது.

    கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, இவ்வாறு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள்.

    இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடக்கவில்லை என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரை முருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். . #ADMK #Jayakumar #DuraiMurugan
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “கிருஷ்ணாநீரைத் தேக்கி வைக்க தனியார் நிலம் கையகப்படுத்தாததால் நீர்த்தேக்கம் அமையாமல் 186 கோடி ரூபாய் பாழ்” என்ற ஒரு பொய்யான அறிக்கையை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் நடைபெற்ற 400 கோடி ரூபாய் ஊழலை விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கினை திசை திருப்பும் நோக்கில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

    சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கும்மிடிப்பூண்டி கண்ணன் கோட்டை கிராமத்தின் அருகே தேர்வாய்கண்டிகை மற்றும் கண்ணன் கோட்டை ஆகிய இரண்டு கண்மாய்களை இணைத்து ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைக்க கடந்த ஜனவரி 2012-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

    நில உரிமையாளர்கள், கூடுதல் தொகை கேட்டு வழக்கு தொடர்ந்ததால், பணி தாமதமானது.

    ஆனாலும் வழக்குகள் முடிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 சதவீதமும், நீர்தேக்க கட்டுமானப் பணிகள் 65 சதவீதமும் முடிந்துள்ளது. குறிப்பிட்ட காலகெடுவுக்குள் இந்த திட்டங்கள் முடிக்கப்படும்.

    2015-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை கொசஸ்தலை ஆற்றில் சுமார் 83,000 கன அடி வெள்ள நீர் சென்ற போது அருகில் உள்ள பட்டா நிலங்கள் வழியாக உபரி நீர்புகுந்து மண் அரிப்பு ஏற்படுத்தி மீண்டும் ஆற்றின் வழியே சென்றது.

    துரைமுருகன் கூறுவது போல 1966-ல் கொசஸ்தலையாற்றில் 92,260 கன அடிவெள்ள நீர் சென்றது என்பது தவறாகும். 59,760 கன அடி மட்டுமே வெள்ள நீர் சென்றது.

    65000 கன அடி வெள்ள நீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த தடுப்பணையில், 2015-ல் வரலாறு காணாத மழை பெய்து, மிக அதிக அளவான வெள்ள நீர் விநாடிக்கு 83,000 கனஅடி சென்றதாலும், 100 ஆண்டுக்கு ஒருமுறை ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாகவும் இந்த தடுப்பணை சேதமடைந்தது.


    வெள்ளத்தில் சேதமடைந்த இந்த தடுப்பணையினை சரி செய்ய ஏற்கனவே ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக துரைமுருகன் தெரிவித்த செய்தி தவறானதாகும். இந்த பெருவெள்ளத்தில் சேதம் அடைந்த இந்த தடுப்பணையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரூ.18.17 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 1,20,000 கனஅடி வெள்ள நீர் செல்லும் வகையில் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    1971-1976-ல் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு அணை கட்டப்பட்டு அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் அணை உடைந்தது.

    அதே போல் 1974-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முக்கொம்பில் உள்ள காவேரி கதவணையில் ஒரு தூண் சேதமடைந்து பின்னர் தி.மு.க. அரசால் சரி செய்யப்பட்டது.

    நிலைமை இவ்வாறு இருக்க, தி.மு.க. ஆட்சியின் தவறுகளை மறைக்க, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை துரைமுருகன் வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #ADMK #Jayakumar #DuraiMurugan
    கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள நெய்யூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மாட்டுவண்டிகளில் மணல் திருடப்படுவதாக கிராம அதிகாரிக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து நெய்யூர் கிராம அதிகாரி பாஸ்கர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது 6 பேர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

    அவர்களை அதிகாரிகள் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 6 பேரும் அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோவன் பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் விசாரணை செய்தார். இதில் நெய்யூரை சேர்ந்த வெங்கடேசன், மணிகண்டன், முனுசாமி, அண்ணாதுரை, ராஜேஷ், பொ.வெங்கடேசன் ஆகியோர் அதிகாரிகளை தாக்கியதும், கொலை மிரட்டல் விடுத்தும் தெரிய வந்தது.

    இவர்களில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை தாக்கிய சம்பவம் பெரியபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையை உடைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த முடியவில்லை.

    இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த பள்ளிபுரம் கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கொசஸ்தலை ஆற்றின் கரையை உடைத்து லாரியில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    அவர்களில் கொண்டக்கரையை சேர்ந்த முனுசாமி, மகேந்திரன், சுப்பாரெட்டிபாளையத்தை சேர்ந்த வாசு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் மணல் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
    அத்திப்பட்டு புதுநகர் கொசஸ்தலை ஆற்றில் ‘கியாஸ்’ குழாய் பதிக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    பொன்னேரி:

    எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மணலி தொழிற்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு குழாய் மூலம் திரவ இயற்கை வாயு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் கொசஸ்தலை ஆற்று படுகையில் கியாஸ் குழாய் அமைக்கப்படுகிறது.

    இதற்கு எண்ணூர் அனைத்து மீனவ கிராமங்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கியாஸ் குழாயில் பாதிப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் கியாஸ் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதுபற்றி அறிந்ததும் ஏராளமான மீனவர் கிராம கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்கள் கியாஸ் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது, ‘‘கொசஸ்தலை ஆற்றில் கியாஸ் குழாய் பதிக்கப்படுவதால் விபத்து ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

    ஏற்கனவே வட சென்னை அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கொசஸ்தலை ஆறு வழியாக கியாஸ் குழாயை பதிக்க விடமாட்டோம்.

    இந்த திட்டத்துக்காக கடற்கரை மண்டல ஒழுங்கு முறை அறிவிப்பாணை, சுற்றுப்புறசூழல் ஆணையரிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறப்படவில்லை. மேலும் காற்று மற்றும் நீர் மாசு தடுப்பு சட்டத்தின் கீழ் எந்தவித அனுமதியும் பெறவில்லை’ என்றனர். #tamilnews
    ×