search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "launched"

    • மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
    • தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

    கோவை,

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில், கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட மதுவிலக்கு, அமலாக்கப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவை ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா கூறியதாவது:-

    கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது, கடத்துவது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 7604010581 என்ற செல்போன் எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளோம்.இந்த எண் மூலம் வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

    குறிப்பாக முக்கிய பகுதியாக கருதப்படும் சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர், துடியலூர், தடகாம், காரமடை, மேட்டுப்பாளையம், வடவள்ளி, ஆலாந்துறை, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

    அதில் உள்ள செல்போன் எண் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்டணம் இல்லா தொலைபேசி சேவை எண் 155304 திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • புகார் தெரிவித்ததும் அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 'ஒரு குரல் புரட்சி' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த 300-க்கும் மேற்பட்ட பிரிவு புகார்களை தெரிவித்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் கட்டணம் இல்லா தொலைபேசி சேவை எண் 155304 திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பல்துறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவித்ததும் அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு அந்த குறைகள் நிவர்த்தி செய்து அது தொடர்பாகவும் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் அந்தப் புகார் நிவர்த்தி செய்யாத பட்சத்தில் மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வை வரை அந்த புகார் சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இந்த சேவை தொடங்கி உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம், நகர் பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என். நேரு பங்கேற்று ஆய்வு செய்தார்.திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    தமிழகத்தில் தலைமை தபால் நிலையங்களில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. #Passport #PostOffice
    சென்னை:

    தமிழகத்தில் தலைமை தபால் நிலையங்களில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பித்து பயனடையலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி பி.கே.அசோக்பாபு கூறினார்.

    தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகங்களின் கீழ் 12 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் தமிழகத்தில் சென்னை (வடக்கு) கடற்கரை ரெயில் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டை, ஆரணி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராஜபாளையம், போடிநாயக்கனூர், ராமநாதபுரம், குன்னூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய 12 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டு சேவை மையங்களை, மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்.

    இதில் சென்னை மண்டல அலுவலகத்தின் கீழ் 7 தலைமை தபால் நிலையங்களில் 7 புதிய சேவை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் அனுப்பப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி பி.கே.அசோக்பாபு கூறியதாவது:-

    பாஸ்போர்ட்டு வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவதற்காக பல்வேறு ஒருங்கிணைந்த சேவையை மேம்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு பாஸ்போர்ட்டு சேவா திட்டதை அறிமுகப்படுத்தியது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் பாஸ்போட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதில் தொடங்கி, நேர்காணலுக்கு நாள் குறித்தல் பயோமெட்ரிக் பதிவு செய்தல் மற்றும் பாஸ்போர்ட்டு வழங்குவது வரை அனைத்து செயல்முறைகளும் மின்னணு பரிவர்த்தனை மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. தற்போது விரைவாக பாஸ்போர்ட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மண்டலத்தின் கீழ் சென்னை, எண் 1/10, ராஜாஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், காஞ்சீபுரம், எண்.46, ரெயில்வே சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், திருவள்ளூரில், எண். 37, ஜே.என்.சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டையில், ஆற்காடு சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ஆரணியில், என்-2ஏ, சூரியகுளம் வடக்கு தெருவில் உள்ள தலைமை தபால் நலையம், கள்ளக்குறிச்சியில், எண்-23, காந்தி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், தர்மபுரியில் எண்-16-ஏ, நாச்சியப்பா தெருவில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் செயல்படும்.

    இந்த மையங்களில் புதிய பாஸ்போர்ட்டு விண்ணப்பம், பழைய பாஸ்போர்ட்டு புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் அளிக்கலாம். அத்துடன் பாஸ்போர்ட்டு பெறுவதற்காக முன்அனுமதியும் பெறலாம். விண்ணப்பதாரர் புகைப்படம் எடுப்பது மற்றும் கைவிரல் ரேகை பதிவு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பாஸ்போர்ட்டு கட்டணங்களையும் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்தப்பட வேண்டும்.

    சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 4 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையமும், புதுச்சேரி மற்றும் சென்னையில் சாலிக்கிராமம், அமைந்தகரை, தாம்பரம் ஆகிய 4 இடங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையமும் செயல்பட்டு வருகிறது.

    தற்போது திறக்கப்பட்ட மையங்களுடன் சேர்த்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் 11 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு கேட்டு விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையிலான பாஸ்போர்ட்டு சென்னை, அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. காவல் துறை சான்றிதழ் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி அல்லது சென்னையில் உள்ள பாஸ்போர்ட்டு சேவை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு ரூ.10,400 கோடி செலவில் 30 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும், 10 கனரக ராக்கெட்டுகளையும் உருவாக்க ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு இவ்வளவு அதிகமான தொகைக்கு நிதி ஒதுக்கியது இஸ்ரோ வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த செயல் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிநவீன இணையதள வசதி கிடைக்கும். விவசாயத்திற்காக சாட்டிலைட் உருவாக்கப்படும். நம் நாட்டில் அன்னிய செலாவணி சேமிக்கப்படும்.

    மீனவர்களுக்கு நவீன கருவிகள்

    இந்த ராக்கெட்டுகள் இந்தியாவில் உள்ள உபகரணங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நமது நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பணிகள் அதிகமாக கிடைக்கும். ஜி.சாட் 29, ஜி.சாட் 11 ஆகிய செயற்கைகோள்கள் தயாராகி வருகிறது.

    இந்த ஆண்டுகளுக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும். இதேபோல் தகவல் தொழில்நுட்பத்திற்கான ராக்கெட்டுகளும் தயாராகி இருக்கிறது. மீனவர்களுக்கு தேவையான நவீன கருவிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 500 கருவிகள் கேரள மாநிலத்திற்கும், 200 கருவிகள் தமிழக மீனவர்களுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடி தடைகாலம் முடிந்ததும் இந்த கருவிகள் மீனவர்களிடம் வழங்கப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு மாதத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று உடுமலையில் நடந்த விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஒரே ஒரு கல்வி மாவட்டம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த கல்வி மாவட்டத்தை 4 ஆக பிரித்து திருப்பூர், உடுமலை, தாராபுரம், பல்லடம் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.

    இதன்காரணமாக உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் கல்வி பணி சம்பந்தமாக திருப்பூர் செல்ல வேண்டியதில்லை. உடுமலையில் உள்ள புதிய கல்வி மாவட்ட அலுவலகத்திற்கே செல்ல வேண்டும் என்ற நிலை உருவானது.

    இதன்படி உடுமலையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலகம் உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த புதிய கல்வி மாவட்டத்தின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செ.சாந்தி வரவேற்று பேசினார்.

    உடுமலையை தலைமையிடமாக கொண்ட புதிய கல்வி மாவட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். புதிய கல்வி மாவட்ட அலுவலகத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.

    விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த ஆண்டு பள்ளி கல்வி துறைக்கென ரூ.27 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளனர். இதன் மூலம் பல கல்விபணிகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்து உள்ளது. முன்பு 67 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தன. பின்னர் ஒரு கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு 68 ஆக இருந்து வந்தது. அது தற்போது 120 கல்வி மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக கல்வி மாவட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    உங்கள் பணிகள் அந்தந்த பகுதியிலேயே நடைபெற வேண்டும் என்பதால் தான் புதிய கல்விமாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறந்த கல்வியை தருகிறீர்கள். நல்ல மதிப்பெண் பெறுகிறவர்கள்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் நிலை உள்ளது. கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்களை சிறந்தமாணவர்களாக உருவாக்கும் திறமை ஆசிரியர்களிடம் உள்ளது. முந்தைய காலத்தில் ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருக்கும். இப்போது அந்தநிலை மாறியுள்ளது. இந்த அரசு உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும். இந்த அரசு உங்கள் அரசாக இருந்து ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாது உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அரசாக இருக்கும்.

    தனியார் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுத்து அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களை ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் அளவுக்கு நீங்கள் உருவாக்குகிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் மூலம்தான் கல்வியில் புரட்சியை ஏற்படுத்த முடியும். அந்த சக்திபடைத்தவர்கள் நீங்கள். தேர்வு முடிவை 2 நிமிடங்களில் தெரிந்து கொள்ளும் வகையில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பியது தமிழகத்தில் மட்டும்தான்.

    நீங்கள் அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஆசிரியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உங்களை நிறைவாக வைத்துக்கொண்டால்தான் கல்வி வளர்ச்சி அடையும். பள்ளி கல்வித்துறையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். இவ்வாறு மாற்றி அமைக்க 2 ஆண்டுகள் ஆகும். ஆனால் 8 மாதத்தில் பாடத்திட்டத்தை மாற்றியுள்ளோம். இதற்கான பணியில் 1,700 ஆசிரியர்கள் பணியாற்றினார்கள்.

    ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி அளிக்க ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களில் இருந்து 600 பயிற்சியாளர்கள் வர உள்ளனர். அடுத்த மாதம் (ஜூலை) முதல் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ்-2 முடிந்ததும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டு வருகிறது.

    16 மாவட்டங்களில் சி.ஏ. (சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) பயிற்சி அளிக்க 500 பேர் தயாராக உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை திரும்பிப்பார்க்கும் அளவுக்கு தமிழக கல்வித்துறை தொலைநோக்கு சிந்தனையுடன் பலமாற்றங்களை கொண்டு வந்து செயல்படும். 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி வருகிறோம். ஆனால் ஆசிரியர்கள் கையில் மடிக்கணினி இல்லை. மாணவர்கள் கையில் உள்ளது. நீங்கள் கவலைப்பட தேவையில்லை. மகிழ்ச்சியான செய்தி வரும்.

    கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். ஒருமாதத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக ஆகலாம்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

    விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தமிழக மக்கள் வாழ்வு மேம்பாடு அடைவதற்கு எண்ணற்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நடப்பாண்டில் 50 ஆயிரம் நாட்டுக்கோழி தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் தமிழகத்தில் செயல்படும் 6 கல்லூரிகள் இந்தியாவிலேயே சிறந்த கல்லூரிகளாக விளங்குகின்றன. மேலும் கால்நடை பராமரிப்புத்துறை மேம்பாட்டுக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு மக்களின் முன்னேற்றத்திற்காக வழங்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவை வழங்கவேண்டும் என்றார்.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தம், முன்னாள் வாரிய தலைவர் கா.லியாகத் அலிகான், கல்வியாளர்கள் அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, முதல்-அமைச்சர் தலைமையில் ஒவ்வொரு துறையிலும் வரலாறு படைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கல்வியில் மாற்றம் என்பது அவசியம் என்றார்.

    முடிவில் உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் நன்றி கூறினார். 
    திருவாரூரில் இலவச தாய், சேய் வாகன சேவை கலெக்டர் நிர்மல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய சுகாதார இயக்கம், தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் வழங்கப்பட்ட இலவச தாய், சேய் வாகன சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் இலவச தாய், சேய் வாகன சேவையானது, திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமான திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு இலவச தாய், சேய் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சேவை வாகனம் மூலம் அரசு தாய், சேய் மருத்துவமனைகளில் பிரசவித்த தாய் மற்றும் குழந்தையை அவர்களது இல்லத்திற்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகிறது. அதன் பின்னர் ஒரு ஆண்டிற்கு தடுப்பூசிக்காகவும், குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுகிறது. இந்த சேவை பயன்படுத்தி கொள்ள இலவச தொலைபேசி 102 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செந்தில் குமார், இந்திய செஞ்சிலுவை சங்க திருவாரூர் மாவட்ட கிளை தலைவர் ராஜ்குமார், செயலாளர் வரதராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×