search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "makkalai thedi maruthuvam"

    • மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது.
    • ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

    மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது.

    ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

    ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது

    சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி - கண்காணித்து - மேம்படுத்தி வரும் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

    இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம் பெண் சுகாதார தன்னார்வலர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
    கடலூர்:

    கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்பான திட்டமான மக்களைத் தேடி மருத்துவ பணியில் பகுதி நேர பெண் சுகாதார தன்னார்வலர்களாக சேர்ந்து , கடந்த ஒன்பது மாதங்களாக அனைத்து கிராமத்திலும் தனியாக சென்று கிராம மக்களுக்கு ரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் மற்றும் தொற்று நோய்களை கண்டறிந்து அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று மருந்து மாத்திரைகளை தங்கு தடையின்றி இதுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். நோயாளிகளுக்கு எந்நேரமும் அவசரம் கருதி நோய் தடுப்பு பணிகளை செய்துவருகிறோம். தற்போதுவரை நாங்கள் முழுநேரமும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் . மேலும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு பணியாற்றி வருகிறோம் .

    மேலும் TN - PHR entry , Vaccine entry களை எங்களது Mobile online- ல் செய்துவருகிறோம் . அதுமட்டுமல்லாமல் மொபைல் ரீசார்ஜ் , பேட்டரி, மருந்து பெட்டகம் எடுத்துசெல்ல வாடகை மற்றும் பெட்ரோல் செலவு , அதற்குண்டான நோட்டுகள் அனைத்தும் எங்கள் சொந்த செலவிலேயே செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு ஊதியமாக 4500 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதர சலுகைகள் ஏதும் இல்லை. அதுவும் காலதாமதமாக வழங்கப்படுகிறது .

    மேலும் கடந்த மாதம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் மிகவும் நாங்கள் சிரமப்படுகிறோம் . நாங்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் குடும்ப செலவிற்கு போதியதாக இல்லை . இன்றைய காலகட்டத்தில் உள்ள செலவினங்களை கணக்கிட்டும் , எங்கள் வாழ்வாதார சூழ்நிலையையும் கருதி குறைந்தபட்சமாக கூடுதல் மாத ஊதியம் அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் பணியாற்றுகின்றனர்.
    • மக்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு மாதம் ஒருமுறை அல்லது 2 மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளுக்காக லட்சக்கணக்கானவர்கள் மாத்திரை சாப்பிட்டு வருகின்றனர்.

    அவர்களில் பலர் முறையாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் வேறு பாதிப்புகள் உருவாகி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

    பொதுமக்களில் பலர் பரிசோதனை செய்யாமல் இந்த மாதிரி வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். நோய் முற்றிய பிறகே இவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வருகிறது.

    இதனால் பல்வேறு மற்ற வியாதிகளும் இவர்களை பாதிக்கச் செய்து விடுகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி வைத்தார்.

    இதை தொடங்கிய 6 மாதங்களில் 50 லட்சம் பயனாளர்களை இந்த திட்டம் சென்றடைந்தது. இதற்கான விழா மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் அரசு நடத்தியது.

    அன்று முதல் இன்று வரை பொதுமக்களுக்கு அவர்களது இல்லம் தேடி சென்று மருத்துவ குழுவினர் இடைவிடாமல் மருத்துவ சேவையை செய்து வருகின்றனர்.

    இதில் 10,969 மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வீடு வீடாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் பணியமர்த்தப்பட்ட 4,848 இடைநிலை சுகாதார சேவையாளர்களும் இந்த திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.

    இவர்களிடம் சர்க்கரை வியாதியை அறிந்து கொள்ளும் சுகர் கருவி, ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி ஆகிய இரண்டும் கைவசம் இருக்கும்.

    இதை வைத்து ஒவ்வொரு வருக்கும் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் மருந்து மாத்திரை வாங்கி அவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்த நோயாளிகளின் வீடுகளுக்கு இந்த குழுவினர் தேடிச் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்துகின்றனர்.

    இதில் ஒரு பெண் செவிலியர், ஒரு தன்னார்வலர், ஒரு இயன்முறை மருத்துவர் என குழுவாகவும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது பாராட்டத்தக்கது.

    அதிலும் குழுவில் உள்ள பெண் சுகாதார தன்னார்வலர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை கண்டறிந்து இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்து அவர்களுக்கான மாத்திரைகளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பெற்று நேரடியாக வழங்கி வருகின்றனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு பயனாளியும் மக்கள் நல பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

    இப்போது இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 49 ஆயிரத்து 180 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    இதில் உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சை, நீரழிவு நோய் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை சிறுநீரக நோய்க்கு டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 49 லட்சத்து 180 பேர் ஆவார்கள்.

    தொடர் சேவைகள் மூலம் மறுபடியும் 2-வது முறை மருந்து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 22 ஆயிரத்து 468 பேர் ஆகும்.

    இதன் மூலம் ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியமும் பேணப்பட்டு வருவதாக அதிகாரிகள் பெருமிதம் கொள்கின்றனர்.

    இதுபற்றி பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் பணியாற்றுகின்றனர். மக்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு மாதம் ஒருமுறை அல்லது 2 மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்த வகையில் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் இயன்முறை சிகிச்சை பிசியோதெரபி சிகிச்சை, டயாலிசிஸ் செய்வதற்கு உதவிகள் என பல வகை நோய்களுக்கு சிகிச்சை பெற இவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு இப்போது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் மேற்கண்ட சிகிச்சை மட்டுமின்றி பெண்கள் கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான ஆய்வுக்கு பரிந்துரைப்பதன் மூலமும் ஏராளமான பெண்களும் முன் கூட்டியே சிகிச்சை பெற இந்த திட்டம் உதவிகரமாக அமைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 13 லட்சத்து 47 ஆயிரத்து 210 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கள அளவில் 304 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 15 இயன்முறை மருத்துவர்கள், 15 நோய் ஆதரவு செவிலியர்கள், 180 இடைநிலை சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    மேலும் அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் 78 மக்களை தேடி மருத்துவ செவிலியர்கள் தொற்றா நோய்க்கான மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, கள அளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கும் தொற்றா நோய்களுக்கான தொடர் மருத்துவ சேவைகளை வழங்குகின்றனர்.

    அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இது நாள் வரை ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் 6,259 பேரும், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 5,024 பேரும், கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் 4,574 பேரும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 6,484 பேரும் பயன்பெற்றுள்ளனர்.

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 7,062 பேரும், புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5,763, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 4,837, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 6,908, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 5,249, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4,076, உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 4,414, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 6,832 பேரும் பயன்பெற்றுள்ளனர்.

    திருச்செந்தூர் நகராட்சியில் 2,489பேர், கோவில்பட்டி நகராட்சியில் 5,902 பேர், காயல்பட்டிணம் நகராட்சியில் 2,792 பேர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் 14,765 பேர் என 12 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சியில் பொதுமக்கள் 93 ஆயிரத்து 430 நோயாளிகள் மருத்துவ பயன் பெற்றுள்ளனர். மேலும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 210 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது?
    • ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    29.12.2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது.

    ஆனால் மாநில மருத்துவத்துறை அதிகாரிகள் உண்மையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவரக் குறிப்பும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

    மேலும், நோயாளிகள் பற்றிய புள்ளி விவரங்களில் டூப்ளிகேஷன்-அதாவது ஒரே புள்ளி விவரம், இரண்டு, மூன்று முறை பதிவு செய்யப்பட்டதால், ஒரு கோடி பேருக்குமேல் பயன் பெற்றுள்ளனர் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை என்ற திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி இருக்கிறது.

    ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இப்போதும் முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே விளம்பர ஆட்சி நடத்தி வரும் இந்த அரசு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது என்றும், ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது.
    • கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2021 ஆகஸ்ட் 5-ந்தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தி ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து திட்டத்தை செயலாக்கம் செய்ய வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    அதன்படி தற்போது இந்த திட்டம் கடந்த ஓராண்டில் படிப்படியாக வளர்ந்து ஒரு கோடியாவது பயனாளி என்ற இலக்கை தொட்டு இருக்கிறது. அந்த ஒரு கோடியாவது பயனாளி திருச்சி அருகே உள்ள சன்னாசிப்பட்டியில் கண்டறியப்பட்டு உள்ளார். அவருக்கு திருச்சி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளார்.

    அதுமட்டுமல்லாமல், அதே பகுதியில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பிசியோதெரபி சிகிச்சை பெற்று வரும் நபரையும் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை அவர் தொடங்கிவைக்கிறார்.

    இதில் கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்களையும், தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரூ.2.50 கோடி மதிப்பிலான சி.டி.ஸ்கேன் எந்திரத்தையும் இயக்கி வைக்கிறார்.

    அதுமட்டுமல்லாமல் சன்னாசிப்பட்டி நிகழ்ச்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தத்தை கண்டறியும் எந்திரங்கள் வழங்கும் திட்டத்தையும் 10 பேருக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.

    மேலும், இந்த இடைநிலை சுகாதார செவிலியர்கள், தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்கள் 20 ஆயிரம் பேருக்கு அவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, டீம் இன்சென்ட்டிவ் (குழு ஊக்கத்தொகை) வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கு ஏற்கனவே இந்த நிதியாண்டில் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இந்த திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு பயனாளியும் ரூ.500 முதல் ரூ.1000 வரை தனித்தனியாக ஊக்கத்தொகை பெற உள்ளார்கள். இந்த சன்னாசிப்பட்டி நிகழ்ச்சி பிற்பகல் 2 மணியளவில் நடக்கிறது.

    சீனா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் உருமாறுதல் பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா கட்டுக்குள் வந்ததற்கு தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியதுதான் காரணம். தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

    கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பிரத்யேக ஆய்வகம் சென்னையில் ரூ.4 கோடி செலவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகிறோம்.

    சீர்காழியைச் சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா அரிய வகை தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து அபிநயா முதல்வருக்கு கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது. அது எங்கள் கவனத்திற்கு வந்த பின்பு அபிநயாவை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாத நோய் பிரிவில் அனுமதித்துள்ளோம். சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதேபோல் தனிநபர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    பத்திரிக்கை, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இதுபோன்று கோரிக்கைகள் வரும் பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2019-ல் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் தற்போதும் உள்ளது. இதுதொடர்பாக டி.ஆர்.பாலு எம்.பி. கூட சமீபத்தில் பாராளுமன்றத்தில், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் காம்பவுண்டு சுவருடன் நிற்கிறது என குரல் கொடுத்தார். அப்போது மத்திய மந்திரி வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார். நானும், துறை செயலரும் மீண்டும் மத்திய மந்திரியை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம். விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும். கோவையில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறோம்.

    2024 தேர்தலை மையப்படுத்தி ஒன்றிய அரசு மருத்துவமனையை கட்ட முயற்சித்தாலும் தேர்தலுக்காக செய்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் இன்றைய அவல நிலை குறித்து பலதரப்பட்ட மக்களின் புலம்பல்கள் ஊடகங்களில் வருகின்றன.
    • அரசின் துறைகள் ஒவ்வொன்றும் மக்களின் நலனுக்கான திட்டங்களை தீட்டி செயல்பட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. அரசால் 'அம்மா மினி கிளினிக்' என்று ஆரம்பிக்கப்பட்டு சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளுக்கு அருகே உள்ள 'அம்மா மினி கிளினிக்'குகளுக்கு சென்று மருத்துவ உதவி பெற்று வந்த ஒரு அற்புதமான திட்டத்தை மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஒரு திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கி 'மக்களை தேடி மருத்துவம்' என்ற ஒரு பயன் இல்லாத திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கு பிரமாண்டமாய் ஒரு தொடக்க விழாவை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த விடியா தி.மு.க. அரசு நடத்தியது. தற்போது அந்த திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று தமிழக மக்களுக்கு தெரியவில்லை.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் இன்றைய அவல நிலை குறித்து பலதரப்பட்ட மக்களின் புலம்பல்கள் ஊடகங்களில் வருகின்றன. அரசின் துறைகள் ஒவ்வொன்றும் மக்களின் நலனுக்கான திட்டங்களை தீட்டி செயல்பட வேண்டும். குறிப்பாக மக்கள் நல்வாழ்வு துறை மக்களின் உயிரை காக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

    கடந்த 14 மாத கால தி.மு.க. ஆட்சியில், அம்மா அரசின் பல்வேறு நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கியதோடு அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் பணியை கண்ணும் கருத்துமாக மக்கள் நல்வாழ்வுத்துறை செய்து வருகிறது.

    அம்மா அரசின் ஆட்சியில் கொரோனாவிற்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாத காலத்தில் தனியார் மருத்துவமனைகள் பல இயங்காத நேரத்தில் இப்போதுள்ள அதே அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து கொரோனாவிற்கும், மற்ற அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தனர்.

    குறிப்பாக அரசு மகப்பேறு மருத்துவமனைகள் மூலம் பயனடைந்த தாய்மார்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததை நான் இங்கு நினைவு கூர்கிறேன். அதே அரசு மருத்துவமனைகளுக்கே மக்கள் செல்ல அஞ்சும் நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

    வெற்று விளம்பரத்திற்காக மக்களை தேடி மருத்துவம் என்று அறிவித்து விட்டு முதல்-அமைச்சரை வைத்து போட்டோ ஷூட் நடத்திவிட்டு மக்களை தேடி மருத்துவத்தை தேடி அலைய வைக்கும் போக்கை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    காழ்ப்புணர்ச்சி அரசியலை ஓரம்கட்டிவிட்டு, மக்களின் நலனுக்காக அம்மாவின் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மீண்டும் தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×