search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meghadatu Dam"

    • மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பி உள்ளது

    தஞ்சாவூா்:

    மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு ஆதரவான ஆணையத்தின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ராசி மணல் அணைக்கட்டுமானத்தை தொடங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதியம் தஞ்சை அருங்காட்சியகத்தில் காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து பேரணியாக விவசாய சங்க நிர்வாகிகள் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டு மத்திய மற்றும் தமிழக, கர்நாடக அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறே தஞ்சை சாந்த பிள்ளைகேட் நீர்வளத்துறை காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு வந்தடைந்தனர்.

    இதையடுத்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் பேரிக்கார்டு உள்ளிட்ட தடுப்புகள் கொண்டு தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . மேலும் விவசாயிகள் நடுரோட்டில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.


    அப்போது பி. ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    இதனை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேகதாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி எங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றார்.

    • தமிழ்நாட்டில் 3.50லட்சம் ஏக்கரில் குறுவை கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது.
    • மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தமிழ்நாட்டில் 3.50லட்சம் ஏக்கரில் குறுவை கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது.

    சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு நேரில் தலையிட்டு கர்நாடகாவில் உரிய தண்ணீரை பெற்று தமிழக விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

    மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசு அதனை கைவிட வேண்டும்.

    தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

    தமிழகத்தில் காவிரி நீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் சார்பில் திருவாரூரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் மாசிலாமணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆர்ப்பா ட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சேகர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர்கள் பாஸ்கர், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
    • கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்றார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

    சென்னை:

    மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும் என்றும், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என கர்நாடக மாநில துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதைத் தொடர்ந்து டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    • கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரான துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த மே மாதம் 30-ம் தேதி, அத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற மத்திய மந்திரியை நேரில் சந்திப்பேன் என கூறினார்.

    இதற்கு தமிழ்நாடு அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தது.

    இந்நிலையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் டி.கே.சிவக்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    எங்களுக்கு தமிழ்நாடு மீது விரோதம் இல்லை. போரிடும் நோக்கமும் இல்லை. அங்கு இருப்பவர்கள் நமது அண்ணன்-தம்பிகள். யார் மீதும் எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. மேகதாது எங்களுடைய திட்டம். இதனால் தமிழகத்திற்கு பயன் ஏற்படும்.

    கடலுக்குச் செல்லும் நீரை தடுத்து நிறுத்தி அதை காவிரி படுகையில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவோம். காவிரியில் உள்ள அணைகளின் சாவி மத்திய அரசின் கையில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு எப்போது எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். சண்டை போட்டது போதும்.

    கர்நாடகத்தில் மின் உற்பத்தி திட்டத்தை தொடங்குவதால் தமிழக அரசுக்கு என்ன தொந்தரவு ஏற்படுகிறது? நீரை சேகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தினர் ஆதங்கப்பட தேவை இல்லை. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த தொந்தரவும் கிடையாது.

    நாம் சண்டை போட்டு கோர்ட்டுக்கு அலைந்து திரிந்தது போதும். நல்லிணக்கத்துடன் குடிநீர் மற்றும் தமிழக விவசாயிகளுக்கு பயன் ஏற்படும் இந்த மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது.
    • ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதுரை விமான நிலையம் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவோம் என்று கூறியுள்ளது தமிழக அரசு அனுமதி பெறாமல் அணை கட்ட முடியாது. தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள குறைபாடுகளை நீக்கி மீண்டும் அங்கீகாரம் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர். ராஜ் மோகன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஊராட்சி தலைவர் முத்தையா, வழக்கறிஞர்கள் சரவணன், சுந்தரா, முருகேசன், மாரிசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சியேயாகும்.
    • கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமைகளைப் புரிந்தன.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சியேயாகும்.

    கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆண்ட காங்கிரசு-பா.ஜ.க. இரு கட்சிகளும், ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி, காவிரி நீரைத் தடுத்து நிறுத்தி கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமைகளைப் புரிந்தன.

    கடந்த 5 ஆண்டு காலமாக கர்நாடக மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க., மேகதாது அணை கட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து, தமிழர்களுக்கு எதிரான அதே துரோக வரலாற்றைத் தொடர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு முன்பாகவே மேகதாது அணைகட்ட ரூ.9,000 கோடிகளை ஒதுக்குவதாக காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துள்ளது, இந்தியக் கட்சிகள் எப்போதும் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும் எதிராகவே செயல்படும் என்பதையே மீண்டும் ஒருமுறை நிறுவுகிறது.

    மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அணை கட்ட நிதி ஒதுக்கப்படும் என்ற காங்கிரசு கட்சியின் அறிவிப்பு அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி, இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

    அதுமட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பா ளர்களை வெற்றிபெற செய்யத் தேர்தல் பணிக்குழு அமைத்துப் பாடுபட வேண்டும் என்று கர்நாடக மாநில தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தி தி.மு.க. தலைமை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதற்கான காங்கிரசு கட்சியின் தேர்தல் வாக்குறுதி தி.மு.க.விற்கு தெரியுமா? தெரியாதா? ஆதரவு தெரிவிப்பதற்கு முன் மேகதாது அணையைக் கட்ட எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்ற உறுதிமொழியை காங்கிரசு கட்சியிடம் தி.மு.க. ஏன் பெறவில்லை? காங்கிரசு கட்சியின் வெற்றிக்குப் பாடுபடுவதன் மூலம் காவிரியில் மேகதாது அணை கட்ட தி.மு.க. மறைமுக ஆதரவு அளிப்பது தமிழ்நாட்டிற்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும். கர்நாடக தேர்தலில் காங்கிரசு கட்சியை ஆதரிக்கும் முடிவை தி.மு.க. கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×