search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mekadatu dam"

    • தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம்.
    • காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதல்-அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவும், துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது.

    கர்நாடக முதல்- அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

    எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்-அமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும்.
    • டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலைவனமாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பிரச்சனையாக இருந்தாலும், மேகதாது அணைப் பிரச்சனையாக இருந்தாலும் கர்நாடகத்தை ஆண்ட பாரதிய ஜனதா அரசும், காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிராக செய்த துரோகங்களை அம்மாவின் அரசு அவ்வப்போது அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்தது; தடுத்து நிறுத்தியது.

    தி.மு.க. அரசு பதவியேற்ற நாள்முதல், தங்கள் கூட்டாளியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தமிழக நலனை காவு கொடுத்து வருவதை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டசபையிலும் நான் தொடர்ந்து எடுத்துக் கூறி வந்தேன்.

    குறிப்பாக, கடந்த 14-ந்தேதி அன்று சட்டமன்றத்தில் நான், எங்களது ஆட்சிக் காலத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும், 2018-ம் ஆண்டு மேகதாது அணை குறித்த பிரச்சனை மத்திய நீர்வள கமிஷனின் பார்வைக்குச் சென்றபோது எனது அரசு, 5.12.2018 அன்று மத்திய நீர்வள கமிஷனின் அன்றைய இயக்குநர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இன்னும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதுகுறித்து பலமுறை நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் விரிவாகப் பேசியும், அதற்கு பதில் அளிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்துவரும் மிகப்பெரிய துரோகமாகும் என்பதை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்கிறேன்.

    ஆணையம் அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு மேகதாது அணை குறித்த பொருளை (அஜண்டாவை) 28-வது ஆணையக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக ஆணையத்தின் தலைவர் அந்தப் பொருளை அனுமதித்ததோடு, அதை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு. இந்த ஆணையக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கவனமாக அனுப்பி வைத்து அதை எதிர்க்காமல், தமிழகத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க தி.மு.க. அரசு அனுமதித்தது மிகப்பெரிய துரோகமாகும்.

    காவிரி நதிநீர் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலை வனமாகும்.

    மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்திற்கு துரோகத்தை செய்யத் துணியும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து, அ.தி.மு.க. விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
    • உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் இயற்றி, அதனை இந்திய ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தரை கண்டித்து இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். இதில் காவிரி உரிமை மீட்பு குழு பொருளாளர் மணிமொழியன், சாமி கரிகாலன், துரை ரமேசு, தமிழ் தேசிய பேரியக்கம் வைகறை, பழ. ராசேந்திரன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மண்டல செயலாளர் வீர. பிரபாகரன், விவசாயிகள் சங்கம் ஜெய்சங்கர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    அப்போது மணியரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நமக்கான உரிமையை பாதுகாக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தன்னிச்சை தொடரும்.

    அதற்கான ஆரம்ப போராட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் தொடர்ந்து போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம்.
    • அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார். புதிதாக பதவி ஏற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சனையில் சுமூகமாக நடந்து கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் பதவி ஏற்ற ஓரிரு நாளில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னையில் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்-மந்திரியான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
    • பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது.

    மதுரை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து இப்போது பேசப்படுகிறது. ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வாதத்தின் படி ஒரு குற்றம் சுமத்தப்பட்டால் அதற்கான ஆதாரத்தை பார்க்க வேண்டும். முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பின்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்த வீரர்கள், சுப்ரீம் கோர்ட் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரும், புகார் கூறப்பட்டவரை கைது செய்த பின்னர்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவது தவறானது.

    தமிழகத்தில் கவியரசு வைரமுத்து மீது எத்தனை புகார்கள் உள்ளது. அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. விசாரணை நடத்தி பின்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது இலாகா மாற்றம் நடவடிக்கை மதுரை மண்ணுக்கு தி.மு.க. அரசு இழைத்திருக்கும் துரோகம். பி.டி.ஆர். ஒரு தவறும் செய்யவில்லை. முதல்வர் மீது கருத்து சொல்லியதற்காக தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என்றால் இந்த திராவிட மாடலில் யாருக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை எடுத்துரைக்கிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட செல்லும் போது, அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அப்படி தாக்கியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக, மேயராக மற்றும் பதவிகளில் உள்ளவர்கள். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இனி ஒரு அரசு அதிகாரிகள் மீது இது போன்ற செயல்கள் செய்யும் நபர்களுக்கு காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை பெரிய பாடமாக இருக்க வேண்டும்.

    மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் கட்சியின் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது எந்த வகையில் சரியாகும். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது.

    நிச்சயமாக மேகதாது அணையை கட்டினால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது. 6 மாதம் நடக்கும் இந்த நடைபயணத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என தகவல்
    • தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் பங்கேற்பு.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. இந்த கூட்டத்தில் கர்நாடகா கோரிக்கையை ஏற்று மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த கூட்டம் இரண்டு முறை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கூட்டத்தில், தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் மீண்டும் ஜூலை 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6-ந்தேதியும் கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

    • காவேரி மேலாண்மை வாரியம் தனக்குள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படவும், மேகதாது அணை குறித்த பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவேரி மேலாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மேட்டூர் அணையை ஆய்வு செய்துவிட்டு, மாலையில் கல்லணைக்கு வந்து ஆற்றின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    ஆய்விற்குப் பிறகு பேட்டி அளித்த காவேரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், மேகதாது அணை குறித்து 23-06-2022 அன்று நடைபெறவுள்ள காவேரி மேலாண்மை ஆணையக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், இது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று கூறுவதை தவறு என்றும், தமிழ்நாடு அரசிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். இவ்வாறு பேட்டி அளித்த ஆணையத்தின் தலைவர், காவேரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீர்ப்பங்கீட்டை செயல்படுத்துவது தான் தங்கள் கடமை என்றும் கூறி இருக்கிறார். அதாவது, ஒருபுறம் மேகதாது அணை குறித்து காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறிவிட்டு மறுபுறம் நீர்ப்பங்கீட்டை செயல்படுத்துவதுதான் எங்கள் கடமை என்று கூறுவது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீர்ப்பங்கீட்டை செயல்படுத்துவது தான் காவேரி மேலாண்மை வாரியத்தின் பணி என்று அதற்கான ஆய்வு வரம்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, மேகதாது அணை குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனவே, ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் 177.25 டி.எம்.சி. நீரை மாதாந்திர அட்டவணையின்படி அளிக்கிறதா என்பதைத்தான் காவேரி மேலாண்மை வாரியம் உறுதி செய்ய வேண்டும். அதைவிடுத்து, மேகதாது அணை கட்டப்படுவது குறித்து விவாதிக்கப் போகிறோம் என்று காவேரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் கூறுவது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

    காவேரி மேலாண்மை வாரியம் தனக்குள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படவும், மேகதாது அணை குறித்த பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #PMModi #TNCM
    சென்னை:

    பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும்  நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.
     
    இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி தமிழகம் மற்றும் கேரள அரசுகளை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த செப்டம்பரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. கர்நாடக அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால் மேகதாது விஷயத்தில் கர்நாடகாவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு அளித்துள்ளது.



    இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.

    மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்த நிலையில் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Mekadatu #PMModi #TNCM
    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. #MekadatuDam
    புதுடெல்லி:

    கர்நாடக அரசு காவிரியில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சிப்பதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

    அதில் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளோம். இதை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். இந்த விரிவான திட்ட அறிக்கையையும் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. #MekadatuDam
    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #MekadatuDam #MekadatuIssue
    புதுடெல்லி:

    காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. அத்துடன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்தது.


    இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,  தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. #MekadatuDam #MekadatuIssue
    மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே அணைக்கட்ட அனுமதிக்க விட மாட்டோம் என்று பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். #prpandian #mekadatudam

    ஓசூர்:

    ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது வரை காவிரி நீர்பாசன ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணி செல்ல திட்டமிட்டு இன்று புறப்பட்டனர். அவர்களை பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது காவிரி நீர்பாசன ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் உயிரே போனாலும் மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

    தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராசி மணலில் புதிய அணையை ஒன்று கட்ட வேண்டும். அதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராசி மணலில் அணை கட்ட கர்நாடக மாநில அரசு ஒத்துழைப்பும், மத்திய அரசு அனுமதியும் வழங்க வேண்டும்.

    மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து விவசாயம் அழிந்து பாலைவனமாக மாறிவிடும். இதனால் 5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்க மாட்டோம்.

    அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. தமிழக மக்கள் உரிமைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #prpandian #mekadatudam

    ×