என் மலர்
நீங்கள் தேடியது "Minister Sivasankar"
- போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
- அரசு போக்குவரத்து கழகத்தில் 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
கோவை:
கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 13 புதிய அரசு பஸ்கள் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்கள் கொண்டாட்டத்தை மறந்து பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில், அரசு பஸ் மூலமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது.
இதற்கிடையே போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவார்கள் என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். அவ்வாறு ஒரு நாளும் நடைபெறாது. அரசு போக்குவரத்து கழகம் ஒரு போதும் தனியார் மயமாகாது.
அரசு போக்குவரத்து கழகத்தில் 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு முன்பு பழைய பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 11,000 புதிய பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நலிவடைந்த நிலையில் இருந்த அரசு போக்குவரத்து கழகம் தற்போது இன்று புத்துயிர் பெற்று வருகிறது.
எனவே தனியார் மையம் என்ற தகவல் தவறானது. இப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களும் நடத்துனர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள்.
இதற்காக அவர்களுக்கு உயர பிரச்சனை காரணம் ஏற்பட்டபோது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு 10 சென்டிமீட்டர் உயரத்தை குறைத்து அவர்களும் பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினார்.
எனவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் செல்வம், கலெக்டர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, ஏர்போர்ட் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர்.
- இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை :
தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கி உள்ளன. அப்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசகையில், இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசும் 'ஜல் ஜீவன் திட்டம்' மூலம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்குகிறது என்றார்.
புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர். அதனால் அதனை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரன், சுற்றுலாத்துறை மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி நிலைக்கு ஏற்ப கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.
இதனிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். மழைக்காலங்களில் ஏர்போர்ட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
- தினசரி 40 லட்சம் பெண்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
- கொரோனா காலத்தில் நிறுத்தி வைத்த பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் இருந்தால், உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், விராலிமலையில் இருந்து துவரங்குறிச்சி வரை நகரப் பேருந்துகள் இயக்க அரசு ஆவண செய்யுமா எனவும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
விராலிமலையில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் தூரம் 32 கிலோ மீட்டர். இது திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழித்தடம் என்பதால் 5 முதல் 10 நிமிடத்திற்கு ஒரு முறை புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மூன்று நகர பேருந்துகள் இயக்கப்படு கிறது. கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தி.மு.க. அரசு பொறுப்பேற்றப்பின், திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொண்டு உள்ளனர். தினசரி 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா காலத்தில் நிறுத்தி வைத்த பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் இருந்தால், உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது.
- சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை :
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்றிரவு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
12-ந்தேதி சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 586 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு 1,220 பஸ்கள் இயக்கப்பட்டு 61 ஆயிரத்து 225 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7 மணி நிலவரப்படி, தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களில் 1,544 பஸ்களும், 1,855 சிறப்புப் பஸ்களில் 904 பஸ்களும் இயக்கப்பட்டு 1 லட்சத்து 32 ஆயிரத்து 192 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 2 நாட்களில் (நேற்று இரவு 7 மணி நிலவரம்) சென்னையில் இருந்து 5 ஆயிரத்து 134 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
14-ந்தேதி (இன்று) சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது. சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு வாயிலாக ரூ.10 கோடியே 3 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந்தேதி அன்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை, குயின்ஸ் லேண்ட் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு இலவச பயணம், புதுமை பெண் திட்டம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- இலவச பேருந்து பயண திட்டம் ஏழை பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஆதரவு கேட்டு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு இலவச பயணம், புதுமை பெண் திட்டம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இலவச பேருந்து திட்டத்தில் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் அரசு பஸ்சில் இலவச பயணம் செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர்.
இலவச பேருந்து பயண திட்டம் ஏழை பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதன் மூலம் 800 முதல் ஆயிரம் ரூபாய் வரை குடும்பத்திற்கு மிச்சப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசின் வழித்தடத்தில் அதன் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- டீசல் விலை கூடினாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பாதுகாத்து வருகிறார்.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னைக்கு தினமும் வந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பஸ் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்க கன்சல்டன்ட் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
இவை அமைக்கப்பட்ட பிறகு 3 மாதத்தில் ஆய்வு செய்து சாதக, பாதகம் குறித்து அறிக்கை தரும். அதன் பிறகுதான் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் மாநகர பஸ் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
மாநகர பேருந்துகள் தனியார் மயமில்லை. பதட்டப்பட வேண்டாம். அரசின் வழித்தடத்தில் அதன் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதனால் பள்ளி மாணவர்கள், பெண்கள் இலவச பயண சலுகை பாதிக்காது.
தனியார் பஸ்களிலும் பயணம் செய்யலாம். அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை தான் பின்பற்றுகிறோம். கேரளா, டெல்லி, பெங்களூருவில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
இத்திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். போராட்டத்தை கைவிட வேண்டும். டீசல் விலை கூடினாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பாதுகாத்து வருகிறார். கடந்த ஆண்டு 1000 பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கினார். இந்த ஆண்டும் புதிய பஸ் வாங்க நிதி ஒதுக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயணிகள், பொதுமக்கள் 24 மணி நேரமும் தங்கள் குறைகள், புகார்களை தெரிவித்திட 1800 599 1500 என்ற உதவி எண் தொடங்கப்பட்டது.
- பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ‘அரசு பஸ்' என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் கே.கோபால், அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், தனி அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவர்கள், போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் சிவசங்கரிடம் விவரித்து கூறினார்கள்.
அப்போது அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், "முதல்-அமைச்சரால் நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் கட்டணமில்லா திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் தனிக்கவனம் செலுத்தி மிக சிறப்பாக செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். பஸ்கள் இயக்க பயணக் கட்டண வருவாயை தவிர பிற வழிகளில் வரும் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு அவற்றை விரிவாக்கம் செய்திட வேண்டும். போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை அவ்வப்போது கனிவுடன் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு போக்குவரத்து அலகுகளை முழுவதுமாக பயன்படுத்தி போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்திட தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகர பஸ்களில் 7 ஆயிரத்து 164 சாதாரண நகர பஸ்கள் (74.47 சதவீதம்) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை மகளிர் 258.06 கோடி பயண நடைகளை மேற்கொண்டு பயன் அடைந்துள்ளனர்.
மேலும், கட்டணமில்லா பயண வசதியினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் துணையாளர்களால் 2.05 கோடி பயண நடைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 1,000 புதிய பஸ்களை வாங்கவும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பஸ்களை புதுப்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிரின் பஸ் பயண பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 'நிர்பயா' திட்டத்தின் மூலம், மாநகர பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்களில் கேமராக்கள் மற்றும் அவசரகால பொத்தான்கள் பொருத்தப்பட்டு 2 ஆயிரத்து 500 பஸ்கள் மற்றும் 66 பேருந்து முனையங்கள், பணிமனைகள் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.
பயணிகள், பொதுமக்கள் 24 மணி நேரமும் தங்கள் குறைகள், புகார்களை தெரிவித்திட 1800 599 1500 என்ற உதவி எண் கடந்த 9.3.2023 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 302 அழைப்புகள் பெறப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 154 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் 'அரசு பஸ்' என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்து கழகத்தில் உள்ள வடபழனி, திருவான்மியூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய பணிமனைகளை நவீனமயமாக்கிட முன் தகுதி நிர்ணயத்திற்காக முதல் கட்டமாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும்
- பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று அமைச்சர் சிவசங்கர் பேசியபோது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு சிறப்பு பயண சலுகை வழங்கப்படுகிறது. ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால், அவர்கள் ஆறாவது பயணம் முதல் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும்.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்த மகளிர் சுய உதவி குழுக்கள் முன்வந்தால் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
- அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இடமாறுதலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட அறை, பணிக்காலங்களில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார். மேலும் குழந்தையை அவரது காலடியில் வைத்து தனக்கு பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தார்.
இதனை பார்த்த அதிகாரிகள் குழந்தையை கையில் தூக்கி கொண்டனர். தொடர்ந்து அவர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே தேனியில் உள்ள எனது பிள்ளைகளை என்னால் கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன்.
பெற்றோர்களுக்கு வயதானதால் அவர்களை இங்கு அழைத்து வந்து குழந்தைகளை பார்த்து கொள்வதிலும் சிரமமாக உள்ளது.
எனவே எனக்கு சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும். பலமுறை இது தொடர்பாக பொதுமேலாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்த டிரைவர் கண்ணன் கோவையில் இருந்து திண்டுக்கல் மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்படவில்லை.
- விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 600 டிரைவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
கொரோனா காலத்தில் பல்வேறு பஸ்கள் நிறுத்தப்பட்டது. அந்த பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என சட்டசபையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்படவில்லை. போதுமான டிரைவர், கண்டக்டர் இல்லாத காரணத்திற்காகவே நிறுத்தப்பட்டது.
மேலும், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 600 டிரைவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற போக்குவரத்து கழகத்திலும் புதிய டிரைவர்கள், கண்டக்டர்களை நியமிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிரைவர், கண்டக்டர் பணி நியமனத்திற்குப் பின் நிறுத்தப்பட்ட வழிதடங்களில் மீண்டும் பஸ்கள் இயக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்த ஆண்டு 2023 ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முடிந்து சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக இன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 1213 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3313 பேருந்துகள் இயக்கப்படுகிறது மற்றும் பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு செல்லும் வகையில் 1846 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
- பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கும் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம் மற்றும் இதர கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பேரில் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து நிர்ணயித்த கட்டணங்களில் இருந்து 30 சதவீதம் குறைப்பு செய்து இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதனை மீறி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது பிரபாகரன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.