search icon
என் மலர்tooltip icon

    மகேந்திரசிங் தோனி | Mahendra Singh Dhoni (MS Dhoni) news updates in Tamil

    • ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5 முறை கோப்பையை தோனி வென்று கொடுத்துள்ளார்.
    • இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வாங்கி கொடுத்த ஒரே கேப்டன் ஆவார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டு, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

    ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5 முறை கோப்பையை தோனி வென்று கொடுத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தோனியின் ஆட்டத்தை கடைசியாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்நிலையில் ராஞ்சியில் உள்ள தனது வீட்டின் வெளிப்புறச் சுவரில் சில மாற்றங்களை தோனி செய்துள்ளார். வீடு அவரது கிரிக்கெட் பயணத்திற்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவரில் அவரது ஜெர்சி நம்பரான 7 மற்றும் தோனி என பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டின் சித்தரிப்பும் சுவரின் வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் பாண்ட்யா 53 ரன்கள் குவித்தார்.
    • டி20 கிரிக்கெட்டின் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த தோனி, விராட் கோலியின் சாதனையை பாண்ட்யா முறியடித்துள்ளார்.

    புனே:

    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிவம் துபே 34 பந்தில் 53 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ரிங்கு சிங் 26 பந்தில் 30 ரன்னும் ( 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    இங்கிலாந்து தரப்பில் சகீப் மக்மூத் 3 விக்கெட்டும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால்15 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக் கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த போட்டியின் டெத் ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி டி20 கிரிக்கெட்டின் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த தோனி, விராட் கோலியின் சாதனையை பாண்ட்யா முறியடித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட்டின் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் விவரம்:-

    ஹர்திக் பாண்ட்யா 1068 ரன்கள் (64 போட்டிகள்)

    விராட் கோலி 1032 ரன்கள் (46 போட்டிகள்)

    என் எஸ் தோனி 1014 ரன்கள் (68 போட்டிகள்)

    சூர்யகுமார் யாதவ் 556 ரன்கள் (24 போட்டிகள்)

    சுரேஷ் ரெய்னா 487 ரன்கள் (30 போட்டிகள்)

    • ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் மாதம் 21-ம் தேதி தொடங்க இருக்கிறது.
    • தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடராக இந்த சீசன் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறது. ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் மாதம் 21-ம் தேதி தொடங்க இருக்கிறது.

    இந்த ஐபிஎல் தொடரில் பல அணிகள் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அதில் முதனைமையானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவே இருக்கும். ஏனென்றால் தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடராக இந்த சீசன் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் அணிகள் புதிய ஜெர்சியுடன் களமிறங்கும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    கடந்த சீசனில் சென்னை அணியின் ஸ்பான்சாராக யூரோகிரிப் டயர்ஸ் நிறுவனமும் எதியாட் ஏர்வேஸ் நிறுவனமும் இருந்தது. ஆனால், இந்த முறை முழு நேர ஸ்பான்சராக எதியாட் ஏர்வேஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளது.

    கடந்த வருடம் ஜெர்சியின் பின்பக்கத்தில் இருந்த எதியாட் ஏர்வேஸ் என்று பொறிக்கப்பட்டிருந்த வார்த்தை இந்த முறை முன்பக்கத்தில் உள்ளது. மேலும் முன்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த யூரோகிரிப் டயர்ஸ் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

    கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணிக்காக தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடராக இந்த சீசன் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். வெற்றியுடன் விடைபெறும் என்று தோனி விரும்பும் சூழலில், இந்த சீசனில் தோனியைப் பார்க்க ரசிகர்கள் படையெடுப்பார்கள் என்று கருதப்படுகிறது.

    • ஐபிஎல் 2025 போட்டிக்காக தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • தோனியின் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.

    இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாடா ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 14-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில், பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடப்பு கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருக்கிறார். சிஎஸ்கே அணி கடந்த 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெற்றிக்கோப்பையையும் தட்டிச்சென்றுள்ளது.

    சென்னை அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து வந்த எம்எஸ் தோனி, எதிர்வரும் ஐபிஎல் 2025 போட்டிக்கு தயாராகி, வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

    இந்நிலையில், வலைப்பயிற்சியின் போது எம்எஸ் தோனி செல்போன் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    தோனியின் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. ஆனால் செல்போன் உபயோகிப்பது தொடர்பான புகைப்படங்கள் வைரானது அரிதான ஒன்றாகும். அந்த வகையில் இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

    • ஐ.பி.எல். 2025 தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்.
    • தோனி ஓய்வை அறிவிப்பார் என்று கூறினர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்.

    எம்.எஸ். தோனி பேட்டிங் பயிற்சி செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரோடு கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. பலரும் விரைவில் எம்.எஸ். தோனி ஓய்வை அறிவிப்பார் என்று கூறினர்.

    கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராக தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதன் மூலம் எம்.எஸ். தோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவது உறுதியானது. இது எம்.எஸ். தோனி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

    இந்த நிலையில், எம்.எஸ். தோனி ஐ.பி.எல். 2025 தொடருக்கான பயிற்சியை துவங்கி இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. மார்ச் மாதம் ஐ.பி.எல். தொடர் துவங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் வரவிருக்கும் சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய கேப்டனாக தோனியை பார்க்கிறேன்.
    • தோனி போல பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.

    இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார்.

    யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து எம்.எஸ். டோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில் திடீரென எம்.எஸ். டோனியை புகழ்ந்து யோக்ராஜ் சிங் பேசியுள்ளார்.

    டோனி பற்றி பேசிய யோக்ராஜ் சிங், "மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய கேப்டனாக டோனியை பார்க்கிறேன். அவரிடம் பிடித்ததே, எப்படி பந்து வீசினால் விக்கெட் விழும் என்பதை அறிந்து பவுலரிடம் அப்படியே சொல்லி விக்கெட் எடுத்ததுதான்.

    டோனி பயமற்றவராக இருக்கிறார். ஒருமுறை ஆஸ்திரேலியாவில் மிட்சேல் ஜான்சன் அவரை பணத்தால் அதற்கு அடுத்த பந்திலேயே டோனி சிக்சர் அடித்தார். டோனி போல பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான டோனி, கிரிக்கெட் ஆடுகளத்தில் தனது விளையாட்டு நுணுக்கங்களுக்காவும், கனநேரத்தில் முடிவு எடுக்கும் திறனுக்காகவும் பெரிதும் போற்றப்படுபவர். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றநிலையில் சி.எஸ்.கே அணிக்காக ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடி வருகிறார்.

    ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். குறிப்பாக தனது மகள் ஜிவாவுடன் பொழுதுபோக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள டோனி, மகளுடன் இணைந்து செல்லப்பிராணி பராமரிப்பில் ஈடுபட்டார்.

    தனது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணி நாய்க்கு, டோனி 'சீப்பு'வை கொண்டு வாரி விட்டார். அருகில் உட்கார்ந்திருந்த ஜிவா, தந்தையின் நடவடிக்கையை பார்த்து சிரித்தப்படி நாயுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடக்கிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் தோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த தொடருக்கான அணிகளை வருகிற 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்த வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய பிப்ரவரி 12-வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் எம்எஸ் டோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்கில் வெளியாகி வருகிறது.

    2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைக்கான தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டார். அதில் இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தோனி, தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினார்.
    • விளக்கு பட்டம் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் தோனி ஈடுபட்டார்.

    2024-ம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2025-ம் ஆண்டை உலகமே இன்று வரவேற்ற நிலையில், எம்.எஸ் தோனி தனது மனைவி சாக்ஷி தோனியுடன் புத்தாண்டை கொண்டாடி வரவேற்றார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் வீரருமான தோனி, தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினார்.

    அவர் தனது மனைவியுடன் நடனம் ஆடி பாரம்பரிய முறைப்படி விளக்கு பட்டம் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • நான் ஒருபோதும் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகனாக இருந்தது கிடையாது.
    • எனக்கு வெவ்வேறு மானேஜர்கள் இருந்தனர். அவர்கள் அதை நோக்கி வற்புறுத்தினர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ். தோனி. டி20, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியுள்ளார்.

    சமீபத்தில் ஒரு உரையாடலின்போது, தன்னுடைய மானேஜர்கள் அடிக்கடி பொதுமக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ள பரிந்துரைத்தனர். ஆனால் அதில் இருந்து நான் விலகியே இருந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மகேந்திர சிங் தோனி கூறியதாவது:-

    நான் ஒருபோதும் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகனாக இருந்தது கிடையாது. எனக்கு வெவ்வேறு மானேஜர்கள் இருந்தனர். அவர்கள் அதை நோக்கி வற்புறுத்தினர்.

    நான் 2004-ல் கிரிக்கெட் விளையாட்டை தொடங்கும்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமாகிக் கொண்டிருந்தது. அப்போது மானேஜர்கள் நீங்கள் PR (public relations- மக்கள் தொடர்பு) அமைக்க வேண்டும் என சொன்னார்கள். ஆனால் அதற்கு என்னுடைய பதில் அதே பதில்தான். நான் சிறந்த கிரிக்கெட் விளையாடினால், எனக்கு PR தேவையில்லை.

    அதனால் எனக்கு ஏதாவது இருந்தால் நான் அதை வைப்பேன். இல்லையென்றால் நான் அதை வைக்க மாட்டேன். யாருக்கு எத்தனை பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள், யார் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் நான் கிரிக்கெட்டை கவனித்துக் கொண்டால் மற்ற அனைத்தும் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் என்பது எனக்குத் தெரியும்.

    எனக்கு முன்பு போல இப்போது உடல் தகுதி இல்லை. கிரிக்கெட்டுக்கு உடல் தகுதி பெற நான் மிகவும் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்கிறேன். நான் வேகப்பந்து வீச்சாளர் அல்ல, எனவே தேவைகள் அவ்வளவு தீவிரமானவை அல்ல.

    இவ்வாறு மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

    • உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கிறிஸ்துமசை கொண்டாடியுள்ளார்.

    உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம்.எஸ்.தோனி கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

    அதில் தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து தனது மனைவி மற்றும் மகளுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    மேலும் தோனி தாத்தா வேடம் அணிந்து உள்ள புகைப்படத்தை சிஎஸ்கே அணியும் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் Santa Class என பதிவிட்டுள்ளது. தோனி தாத்தா வேடமணிந்து உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இடையே தனது ஓய்வு முடிவை அறிவித்த 3-வது இந்தியராக அஸ்வின் உள்ளார்.
    • 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தோனி தனது ஓய்வை அறிவித்தார்.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்தது. இந்த தொடரில் அஸ்வின் 2-வது போட்டியில் மட்டுமே விளையாடினார். முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

    இதன் மூலம் எம்.எஸ்.தோனி பாணியில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடருக்கு நடுவே ஓய்வை அறிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய சுற்றுப்பயணத்தின் போது எம்.எஸ்.தோனி தனது ஓய்வை அறிவித்தார். தொடரின் 3-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டனாக இருக்கும் போது அவர் தனது ஓய்வை அறிவித்தார். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38.09 சராசரியில் 4,876 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இடையே தனது ஓய்வு முடிவை அறிவித்த 3-வது இந்தியராக அஸ்வின் உள்ளார்.

    ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அனில் கும்ப்ளே தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கும்ப்ளே ஓய்வு முடிவை அறிவித்தார்.

    இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தோனி 3-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அந்த வகையில் அஸ்வினும் தொடருக்கு நடுவே ஓவ்யு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×