என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naam tamilar katchi"

    • வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.

    அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்பு சட்ட விரோத பேச்சாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    • சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

    இது தொடர்பாக சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு சம்பவத்துக்காக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மாறாக தனக்கெதிராக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து தனக்கெதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த முதல் தகவல் அறிக்கைகள் எங்கே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    இதனையடுத்து, எந்த விவரங்களும் இல்லாமல் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • காரில் இருந்த சீமான், அண்ணாமலையை கண்டதும் நலமா இருக்கீங்களா என்று கேட்டார்.
    • விட்டுடாதீங்க அண்ணா.. Bye அண்ணா" என்று கூறினார்.

    பா.ஜ.க. நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்தார்.

    காரில் இருந்த சீமான், அண்ணாமலையை கண்டதும் நலமா இருக்கீங்களா என்று கேட்டார்.

     

    பதிலுக்கு சீமானுக்கு கைகொடுத்த அண்ணாமலை, "Fight பண்ணிட்டே இருங்கண்ணா.. Strong-ஆ இருங்க.. விட்டுடாதீங்க அண்ணா.. Bye அண்ணா" என்று கூறினார்.

    அவருக்கு பதிலாக thumbs up-ஐ சீமான் காட்டினார்.

    • 6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிடுவோம்.
    • தி.மு.க.வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிடுவோம். மத்திய அரசின் மனு அவசியமற்றது. இந்த விடுதலை நீண்ட நாள் போராட்டமாகும்.

    6 பேர் விடுதலை விவகாரத்தில் எனக்குள்ள வலி அண்ணாமலைக்கு இருக்க வாய்ப்பு இல்லை. அது அவர்களின் கட்சி கோட்பாடு. விடுதலை செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது. அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    தி.மு.க.வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை. இதற்காக பாரதிய ஜனதாவை எப்படி உள்ளே விட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தே.மு.தி.க, அ.ம.மு.க ஆகிய கட்சியினர் தனித்து போட்டியிடப்படுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர்.
    • அ.தி.மு.க. சார்பிலும், ஓ.பி.எஸ். அணி சார்பிலும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இதேப்போல் தே.மு.தி.க, அ.ம.மு.க ஆகிய கட்சியினர் தனித்து போட்டியிடப்படுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர். பா.ம.க, சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட போவதில்லை என்று அறிவித்து விட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது.

    பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் நிலைப்பாடு இன்னமும் தெரியவில்லை. அ.தி.மு.க. சார்பிலும், ஓ.பி.எஸ். அணி சார்பிலும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டிட்ட பெண் வேட்பாளர் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அதாவது அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு அடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10 ஆயிரம் வாக்குகள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இது 7.65 சதவீதமாகும்.

    இதனால் தற்போது இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஈரோடு மரப்பாலத்தில் இன்று மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவிக்க உள்ளார். கடந்த முறை போன்று பெண் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
    • தமிழகத்திற்கு வேலைக்காக வந்துள்ள வடமாநிலத்தவர்களால் ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கிறது

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    இது ஈ.வே.ரா.வின் மண் என்றும், பெண்ணியம் பேசக்கூடிய மண் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை, திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை. இந்த கட்சிகள் தேர்தல்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

    பண பலமும் பதவி பலமும் இருக்கக் கூடிய இந்த அரசியல் களத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என்று என்னை இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் பல இருக்கின்றன. குறிப்பாக குடிநீரே இப்போது நஞ்சாக மாறியிருக்கிறது. சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் மாநகரம் இப்போது கேன்சர் சிட்டியாக மாறி வருகிறது. இதையெல்லாம் முதலில் மாற்ற வேண்டும். அதேபோல் எங்களுக்கு அதிகாரம் வந்தால், மக்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் இழுத்து மூடுவோம்.

    தமிழகத்திற்குள் நுழைந்துள்ள வடமாநிலத்தவர்கள் தமிழர்களை அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காவல்துறை மீதே கைவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் இங்கே வந்து ஏதோ தொழில் செய்கிறார்கள் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் தொழிலை மீறி தவறான வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. அவர்களால் ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கிறது. இதை நிச்சயம் தடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அண்ணன் (சீமான்) சொல்வது சரிதான்.

    ஒரு பேனாவைக் கொண்டு கடலுக்கு நடுவில் வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்? கலைஞரின் நினைவாக, மக்களுக்காக அனைத்து வசதிகளையும் கொண்ட உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை அமைத்து கொடுங்கள். அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஐயா கலைஞரை மக்களும் சந்தோஷமாக நினைப்பார்கள். அல்லது, ஐயாவின் நினைவாக பள்ளிக்கூடம் அமைத்துகொடுக்கலாம். இதையெல்லாம் மீறி பேனாவைத்தான் வைப்பேன், அதையும் கடலில்தான் வைப்பேன் என்று சொன்னால் கோபம் வரத்தான் செய்யும். இந்த விஷயத்தில் அண்ணன் சொல்வது சரிதான். பள்ளிகளை சீரமைக்க பணம் இல்லாதபோது, பேனா வைக்க எங்கிருந்து பணம் வரும்? என்று அண்ணன் கேட்பது நியாயம்தானே? பேனா சின்னம் வைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசின் மனச்சான்றற்ற செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

    மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும், வீதியில் இறங்கி போராடியும் கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போலத் தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை என்பது கொடுங்கோன்மையாகும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக..

    * அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    * அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    * அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையையும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டையாக மாற்றித் தரவேண்டும்.

    * பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் அளிக்கும் நரம்பியல் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்கி, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் நரம்பியல் மருத்துவர்கள் உறுதியாகப் பணியமர்த்தப்பட வேண்டும்

    * மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் சுழற்சி முறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதோடு, அம்மருத்துவ முகாம்களிலேயே அவர்களுக்கான பேருந்து மற்றும் ரயில் பயண, கட்டண சலுகை அட்டையைப் புதுப்பிக்கும் வசதியை செய்துதர வேண்டும்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கான மின்கல சக்கர நாற்காலிகளைப் பழுதுபார்க்கும் சேவை மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.

    * உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    * அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் மற்றும் கழிவறை வசதிகளை உடனடியாக அமைத்துதர வேண்டும்.

    அடிப்படை உரிமைகளான மேற்கண்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தந்து, அனைவரையும் போலவே மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    • ஆதித்தமிழர் கட்சி சார்பில் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் திடீரென சீமானின் 2 உருவ பொம்மைகளை எரித்தனர்.
    • பட்டியலின மக்களை சீமான் அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    நெல்லை:

    ஆதித்தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நெல்லையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கோர்ட்டு எதிரே உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபம் முன்பு ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் திடீரென சீமானின் 2 உருவ பொம்மைகளை எரித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு சென்று தீயை அணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள், ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் பட்டியலின மக்களை சீமான் அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இதேபோல் திராவிட தமிழர் கட்சி திருக்குமரன் தலைமையில், நிர்வாகிகள் வண்ணார்பேட்டையில் சீமான் உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட நிதி செயலாளர் தமிழ்மணி தலைமையில், நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினர். 

    • சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் சீமான் பேசி இருப்பதாக புகார் வந்தது.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த வாரம் முதல் கட்ட பிரசாரம்செய்தார்.

    கடந்த 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து கடந்த 18-ந் தேதி இரவு நாம் தமிழர் கட்சியினர் ராஜாஜிபுரம் பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்களை வாக்கு கேட்டு வரக்கூடாது என்று பொதுமக்கள் தடுத்தனர். இதில் நாம் தமிழ் கட்சி நிர்வாகி அன்பு தென்னரசு என்பவரது மண்டை உடைந்தது.

    இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மறுநாள் (19-ந்தேதி) சீமானை கைது செய்யக்கோரி திருநகர் காலனியில் சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து சீமானுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சீமான் மீது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் புகார் செய்தனர்.

    இந்நிலையில் சீமான் பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தேர்தல் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி தேர்தல் அதிகாரி ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் சீமான் பேசி இருப்பதாக புகார் வந்தது. எனவே இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் பதில் அனுப்பவில்லை என்றாலோ அல்லது பதில் திருப்தியாக இல்லை என்றாலோ அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
    • ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    கடந்த 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

    சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து வந்தனர்.

    இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    தேர்தல் அதிகாரியின் பரிந்துரையின்பேரில் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் சீமான் ஈரோடு பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தபோது அங்கு வந்த போலீசார் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டனர்.
    • அனுமதி வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தாலும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரச்சாரம் செய்யக் கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. ஈரோடு சம்பத்நகர், காளைமாட்டு சிலை அருகில், பன்னீர் செல்வம் பார்க் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டனர். இந்நிலையில் பிரசாரம் செய்த நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் 40 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    இது பற்றி தெரிய வந்ததும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார் அதில் நாங்கள் அனுமதி பெற்று தான் பிரசாரம் செய்கிறோம்.

    ஆனால் போலீசார் எங்கள் தொண்டர்களை அனுமதி இல்லை என்று கூறி அழைத்து சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி அனுமதி இன்றி பிரசாரம் செய்தால் என்னிடம் அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் அனுமதி வாங்கிக் கொண்டு பிரசாரம் செய்தாலும், சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்.

    • திடீரென நெஞ்சு வலிப்பதாக மனைவி ஆலீசிடம் கூறி உள்ளார்.
    • பரிசோதனை செய்த டாக்டர், அருள்தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் தச்ச கோடு பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது40). இவர் அழகிய மண்டபம் பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வருகிறார்.

    நாம் தமிழர் கட்சியின் முளகுமூடு பேரூர் சுற்று சூழல் பாசறை செயலா ளராகவும் அருள்தாஸ் செயல்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது அடிமை மறுவாழ்வு மையத்தில் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டில் இருக்கும் போது திடீரென நெஞ்சு வலிப்பதாக மனைவி ஆலீசிடம் கூறி உள்ளார். உடனே அவரை அழகிய மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அருள்தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    இது சம்மந்தமாக அவரது மனைவி ஆலீஸ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அருள்தாஸ், காதல் திருமணம் செய்தவர். இவர்களுக்கு ஜோசப் பிராங்கோ, ஜோசப் காஸ்ரே என்ற 2 மகன்கள் உள்ளனர். 

    ×