search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Omicron"

    • தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தை எட்டுகிறது.
    • இது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகள் ஆகும்.

    வாஷிங்டன் :

    உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது.

    அங்கு கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்து விட்டது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே 7 ஆயிரத்து 330 ஆகும்.

    இந்தத் தொற்றால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தை எட்டுகிறது. அங்கு இதுவரை சரியாக 10 லட்சத்து 88 ஆயிரத்து 280 பேர் இறந்துள்ளனர்.

    இது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகள் ஆகும்.

    • புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
    • தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 97 சதவீதம், 2ம் தவணை தடுப்பூசி 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    சீனா, ஹாங்காங், ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப்-7 ஒமைக்ரான் வைரசை சுட்டிக்காட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

    இதற்கிடையே பிஎப்-7 ஒமைக்ரான் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சீனாவுடனான விமான போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இந்நிலையில், சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, மத்திய சுகாதார இயக்குனரகத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

    அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது, தொற்று எண்ணிக்கை 49 என்ற நிலையிலும் உயிரிழப்பு இல்லாத நிலை உள்ளது என கூறி உள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 97 சதவீதம், 2ம் தவணை தடுப்பூசி 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், சீனா, ஹாங்காங்  ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • சீன விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
    • சீனாவில் அதிகரித்து வரும் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என டாக்டர் சங்கீதா ரெட்டி கூறுகிறார்

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், முகக்கவசம் கட்டாயம் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    தற்போது சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப்-7 ஒமைக்ரான் இந்தியாவிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. எனவே சீனா-இந்தியா இடையிலான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும், இந்தியாவில் இருந்து சீனா செல்லும் விமானங்களுக்கும் தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பரவும் தொற்று மற்றும் இந்தியாவில் ஒரு புதிய ஆபத்தான கொரோனா திரிபு பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றும் மணீஷ் திவாரி யோசனை கூறி உள்ளார்.

    அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி கூறுகையில், 'சீனாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானப் பயணம் தொடர்பான நமது கொள்கையின் மீது அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்' என்றார். 'பயனுள்ள தடுப்பூசிகளுடன் இந்தியாவில் விரிவான தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்படுவதால், சீனாவில் அதிகரித்து வரும் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. இருப்பினும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது' என்றும் டாக்டர் சங்கீதா ரெட்டி கூறியுள்ளார்.

    சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தபோதும், சீன விமானங்கள் இந்தியாவுக்கு வருவது தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பான்மையான இந்தியர்கள் கூறி உள்ளனர். சமூக நலன் சார்ந்த லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற வலைத்தளம் நடத்திய சர்வேயில், சீன விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று 10-ல் 7 இந்தியர்கள் (71 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளனர். 

    • இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் மூன்று பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை உயரவில்லை

    புதுடெல்லி:

    சீனாவில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் மனித பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்தியாவில் பெருமளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், முகக்கவசம் கட்டாயம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்தநிலையில், சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் மாதம் குஜராத்தில் 2 பேரும் ஒடிசாவில் ஒருவரும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மூன்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட போதிலும், நாட்டில் கோரோனா பாதிப்பு எண்ணிக்கை பெரிய அளவில் உயரவில்லை.

    சீனாவில் இந்த ஒமைக்ரான் திரிவு கவலை அளிக்கும் வகையில் வேகமாக பரவி வந்தாலும், மற்ற இடங்களில் பெரிதாக பரவவில்லை. இந்தியாவில் அக்டோபர் மாதம் பிஎப்.7 திரிபின் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது. இருப்பினும், நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்குப் பிறகு நாட்டில் பாதிப்பு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒமைக்ரான் தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்தது.
    • இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது.

    சென்னை

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல மனித உயிர்களை பறித்தது. மக்களை கடும் அச்சத்திலும் ஆழ்த்தியது. இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்த தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனா தொற்று டெல்டா, ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களாக உருமாறியது. ஒமைக்ரான் தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்தது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது.

    தற்போது ஒமைக்ரான் பி.எப்.7 என்ற வைரசாக உருப்பெற்றிருப்பதாகவும், இந்த தொற்று வேகமாக பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்று நுழைந்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்று உருமாறி எந்த வைரஸ் வடிவில் வந்தாலும் அதனை கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி மாநில அரசுகளிடையே தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இந்த கருவி ஒன்றிய அரசு சார்பில் 14 இடங்களில் இருக்கிறது.

    கொரோனா, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் இருந்தால் அவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரையில் ஒமைக்ரான் பி.எப்.7 தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    தமிழ்நாட்டில் அந்த தொற்று நுழையவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவிலும் முதல்முறையாக பிஎப்.7 வகை ஒமைக்ரான் தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
    • கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது.

    புதுடெல்லி:

    சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் பரவல் வேகம் வெகுவாக குறைந்து விட்டது.

    இருந்தாலும் கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாறி புதிய வகைகளில் பரவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒமைக்ரான் வைரசின் புதிய திரிபான பிஎப்.7 சீனாவில் கண்டறியப்பட்டது.

    இந்த வகை தொற்று மிகவும் எளிதாக பரவும் தன்மை கொண்டது. இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது தடுப்பூசி போடப்பட்டாலும் கூட பிஎப்.7 மாறுபாடு பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

    சீனாவில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் கண்ட றியப்பட்ட இந்த வகை தொற்று பரவலால் மீண்டும் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வகை தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இந்தியாவிலும் முதல்முறையாக பிஎப்.7 வகை ஒமைக்ரான் தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள சில மாதிரிகளை குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்தபோது அதில் பிஎப்.7 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், உடல் சோர்வு, இருமல் போன்றவை இந்த வகை தொற்றின் அறிகுறிகளாக உள்ளன. தற்போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரம் தொற்றுகள் புதிதாக கண்டறியப்பட்டு வருகின்றன.

    கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுக்க தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • கொரோனா வைரஸ் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாதிப்பை ஏற்படுத்துவது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • கொரோனா முதல் அலை உருவான போது பீட்டா வகை கொரோனாக்கள் மன அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை போன்ற பின் விளைவுகளை ஏற்படுத்தின.

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

    பல நாடுகளில் கொரோனா வைரஸ் பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்றெல்லாம் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இதில் கடந்த நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. ஒமைக்ரானில் பிஏ1, பிஏ2, பிஏ3, பிஏ4, பிஏ5 என்று 5 ஒமைக்ரான் உட்பிரிவு வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்த 5 பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து வேறு புதிய குட்டி ஒமைக்ரான்களும் உருவாகி உள்ளன. இந்த ஒமைக்ரான் வைரஸ்கள் தான் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    கொரோனா வைரஸ் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாதிப்பை ஏற்படுத்துவது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலை உருவான போது பீட்டா வகை கொரோனாக்கள் மன அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை போன்ற பின் விளைவுகளை ஏற்படுத்தின.

    கொரோனா 2-வது அலை டெல்டா வடிவத்தில் தாக்கிய பிறகு காலில் ரத்த ஓட்டம் அடைப்பு என்ற பிரச்சினை மிகப்பெரிய பின் விளைவாக உலகம் முழுக்க உள்ளது. இந்த வைரஸ் டெல்டா பிளசாக மாறி 3-வது அலையை உருவாக்கியபோது நுரையீரல் பாதிப்பு மிகப்பெரிய பிந்தைய பாதிப்பை கொடுத்தது.

    அந்த வகையில் ஒமைக்ரான் வைரசின் புதிய வடிவமான பிஏ2.75 வகை வைரஸ் இந்தியாவில் அதிகளவில் பரவி இருப்பதால் அது எத்தகைய பிந்தைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வு செய்யப்பட்டது.

    இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும் போது, "ஒமைக்ரானின் புதிய மாறுபாடான 'பி.ஏ.2.75' வைரஸ் பற்றி முழுமையாக இன்னும் ஆய்வு செய்யவில்லை. ஆனால் இந்த மாறுபாடு ஸ்பெக்புரத்தில் சில பிறழ்வுகள் உள்ளன" என்று தெரிவித்தது.

    பி.ஏ.2.75 வைரஸ் இந்தியாவிலும் சுமார் 10 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசால்தான் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறும்போது, "பி.ஏ.2.75 மாறுபாடு முந்தைய மாறுபாடுகளில் இருந்து வித்தியாசமாக தெரிகிறது. ஆனால் கடுமையான நோய் தொற்றுக்களை ஏற்படுத்துமா? என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல முடியாது என்றார்.

    இந்த நிலையில் ஒமைக்ரான் புதிய வகை மாறுபாடு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது:-

    புதிய துணை மாறுபாடு வைரசுக்கு பரவல், தன்மை செயல் திறன் இருந்த போதிலும் பெரிய அளவில் குறிப்பிட்ட பகுதிகளில் பரவவில்லை. புதிய துணை மாறுபாடு பாதிப்பில் பெரிய அதிகரிப்பு அல்லது தீவிர நோய் அபாயத்துக்கு வழிவகுக்கவில்லை.

    இந்த பாதிப்புகள் ஆங்காங்கே உள்ளன. ஓரிரு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தால் கவலைப்படுவேன். இதன் மூலம் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் அல்லது பல கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதல்ல என்பது தெரிகிறது.

    ஒமைக்ரான் புதிய மாறுபாட்டால் இந்தியாவில் 4-வது கொரோனா அலை வராது. தொற்று நோயின் 4-வது கட்டத்தில் இந்தியா நுழையவில்லை. ஒமைக்ரானின் 3-வது அலையின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். தற்போதைய வைரஸ்கள் ஒமைக்ரானின் துணை வகைகள். அதை பற்றி எந்த கவலையும் கொண்டிருக்கவில்லை. இந்த துணை வகைகள் கடுமையான அல்லது தீவிரமான நோய்களை ஏற்படுத்துமா? என்பதுதான் முக்கியமானது. அதைதான் நாம் பார்க்க வேண்டும் என்றார்.

    ஏற்கனவே ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் என்றும் ஆனால் அதனால் அதிக பாதிப்பு ஏற்படாது என்று நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த வைரஸ், அதிவேகமாக பரவக்கூடியதாகும்.
    • இந்த வைரஸ், பிஏ.2. வைரசின் இரண்டாம் தலைமுறை வைரஸ் ஆகும்.

    ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.2.75 வைரஸ், அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ், அதிவேகமாக பரவக்கூடியதாகும். இந்த புதிய வகை வைரஸ், இந்தியாவில் மராட்டியம், கர்நாடகம், காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

    இந்த வைரஸ், பிஏ.2. வைரசின் இரண்டாம் தலைமுறை வைரஸ் ஆகும். இது நமது நாட்டில் தொற்று பெருக்கத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் ஆபத்தானதா, இது வேகமாக பரவுகிற ஆபத்தைக் கொண்டுள்ளதா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

    இதற்கு பதில் அளிக்கிற வகையில் நம்பிக்கையூட்டும் தகவல்களை மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவை வருமாறு:-

    * தற்போது உலகமெங்கும் ஒமைக்ரான் வகை வைரஸ்கள் உலகளவில் பரவி வருகின்றன. பிஏ.2. வைரஸ், பிஏ.1 வகை வைரசை மாற்றி உள்ளதாக பார்க்கப்படுகிறது.

    * இந்தியாவில் பிஏ.2.75 வைரஸ், குறைந்த அளவில்தான் பரவலில் உள்ளது. இதுவரை அது நோய் தீவிரத்தை ஏற்படுத்த வில்லை. பரவலையும் அதிகரிக்கவில்லை.

    * பிஏ.2 பரம்பரை வளர்ச்சி அடைந்து வருவதால், அதன் துணைப் பரம்பரைகள் இப்போது தனித்துவமான மாறுபாடுகளின் தொகுப்புடன் உருவாகி வருகின்றன. பிஏ.2.75 என்பது பிஏ.2-ன் ஒத்த துணை பரம்பரை ஆகும்.

    * இந்த துணை பரம்பரை வைரஸ் பரவல்களையும், பிற ஒமைக்ரான் துணை பரம்பரை வைரஸ்களையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வர வேண்டியது முக்கியம் ஆகும். மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் சோதனைகளை விரிவுபடுத்தவும் வேண்டும். இந்த வைரஸ்களை முன்கூட்டியே கண்டுபிடித்து விட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒமைக்ரான் வைரசான பி.ஏ-2 பாதிப்பு அதிகம் இருக்கிறது.
    • புதிய வைரசின் மாறுபாடுகள் கர்நாடகத்தில் இருக்கிறது.

    பெங்களூரு:

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நபர்களிடம் பெறப்பட்ட மாதிரியை ஆய்வு நடத்தியதால் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ஒமைக்ரான் வைரசான பி.ஏ-2 பாதிப்பு அதிகம் இருக்கிறது. கர்நாடகத்தை பொருத்த வரையில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை டெல்டா வைரஸ் பாதிப்பும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது.

    கடந்த மாதம் (மே) முதல் இந்த மாதம் (ஜூன்) வரை ஒமைக்ரான் பி.ஏ.-2 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புதிய வைரசின் மாறுபாடுகள் கர்நாடகத்தில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒமைக்ரான் அதிகம் பரவும் தன்மையை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • ஒமைக்ரான் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் மேற்பரப்பில் 8 நாட்களுக்கு மேலும் உயிர் வாழ்கிறது.

    கொரோனா வைரஸ் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபட்ட திரிபுகளுடன் பரவி உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. தற்போது கொரோனா மூன்றாவது அலை ஒமைக்ரான் ரூபத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.

    இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது, லேசான அறிகுறிகளை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டாலும், பல இடங்களில் வேகமாக பரவுகிறது. இதற்கான காரணத்தை கண்டறிய உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஜப்பானில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒமைக்ரான் அதிகம் பரவும் தன்மையை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது சருமத்தில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பொருட்களின் மேற்பரப்பில் 8 நாட்களுக்கு மேலும் தங்கி இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் மற்ற திரிபுகளை விட இது நீண்ட காலம் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஜப்பானில் உள்ள கியோட்டோ பிரிபெக்சுரல் யூனிவர்சிட்டி ஆப் மெடிசின் நிறுவன விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். சீனாவின் ஊஹானில் தோன்றிய அசல் கொரோனா வைரசின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட வைரசின் பிற வகைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை பகுப்பாய்வு செய்வதை இந்த ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளது.

    கொரோனா வைரசின் திரிபுகளான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகளை வுஹானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த வைரஸ் திரிபுகளை வுஹானில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது அவை தோல் உள்ளிட்ட சருமம் மற்றும் பிளாஸ்டிக்கில் இரண்டு மடங்கு அதிக காலம் உயிர்வாழ்கின்றன. குறிப்பாக ஒமைக்ரான் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் மேற்பரப்பில் 8 நாட்களுக்கு மேலும் உயிர் வாழ்கிறது.

    அதனுடன் ஒப்பிடும்போது, வுஹானின்​ அசல் திரிபு தோலில் 8.6 மணிநேரமும், பிளாஸ்டிக் பொருட்களில் 56 மணிநேரமும் மட்டுமே தங்கி இருக்கும் தன்மை கொண்டது.

    இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆல்பா மாறுபாடு, தோலின் மேற்பரப்பில் 19.6 மணி நேரமும், பிளாஸ்டிக்கில் 191.3 மணி நேரமும் நிலைத் திருக்கும். இதேபோல், தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா மாறுபாடு, தோலில் 11 மணி நேரமும், பிளாஸ்டிக் பொருட்களில் 156.6 மணி நேரமும் தங்கி இருக்கும்.

    பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட காமா மாறுபாடு, தோலில் 11 மணி நேரமும், பிளாஸ்டிக்கில் 59.3 மணி நேரமும் உயிர்வாழும்.

    இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டையே உலுக்கி, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி, இரண்டாவது அலையை இயக்கிய டெல்டா வைரஸ் தோலில் 16.8 மணி நேரமும், பிளாஸ்டிக் பொருட்களின் மேற்பரப்பில் 114 மணிநேரமும் உயிர் வாழும் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இந்த வைரஸ் திரிபுகளில் ஒமைக்ரான் சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மையை கொண்டுள்ளது. அதன் வேகமான பரவல் பிற திரிபுகளின் தன்மையை மாற்றும் திறனை கொண்டுள்ளது. ஆல்பா மற்றும் பீட்டா வகைகள் உயிர் வாழும் நேரங்களில் பெரிய அளவில் மாறுபாடு இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், அனைத்து வைரஸ் திரிபுகளும் 35 சதவீதம் ஆல்ஹகால் உள்ளடக்கிய பொருட்களில் 15 வினாடிகளுக்குள் செயலிழந்து போய்விடும். இது கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சானிடைசர் பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    • பிஏ.2.38 வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 73 சதவீதம் பேருக்கு காய்ச்சல் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
    • மேலும் 23 சதவீதம் பேருக்கு சளி, 17 சதவீதம் பேருக்கு உடல்வலி, 15 சதவீதம் பேருக்கு தொண்டை வலி, 13 சதவீதம் பேருக்கு தலைவலி ஏற்படுவது தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கு ஒமைக்ரானின் புதிய வகை திரிபான பிஏ.2 வகை தொற்று பரவுவதே காரணம் என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

    அதிலும் பிஏ.2 வகையில் துணை திரிபான பிஏ.2.38 வகை தொற்றுகள் மெல்ல, மெல்ல தனது ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வகை பிரிவுகள் வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர். அதே நேரம் இந்த வகை தொற்றால் தீவிர பாதிப்பு ஏற்படுவது இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இந்த வகை தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், சளி, உடல் வலி, தொண்டை வலி, தலைவலி ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.

    பிஏ.2.38 வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 73 சதவீதம் பேருக்கு காய்ச்சல் ஏற்படுவது தெரியவந்துள்ளது. மேலும் 23 சதவீதம் பேருக்கு சளி, 17 சதவீதம் பேருக்கு உடல்வலி, 15 சதவீதம் பேருக்கு தொண்டை வலி, 13 சதவீதம் பேருக்கு தலைவலி ஏற்படுவது தெரியவந்துள்ளது.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமல்லாது குஜராத், டெல்லி, கர்நாடகா, அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்பட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொற்று பாதிப்பு உயர்வதற்கு இந்த வகை தொற்றுகளே காரணமாக அமைந்துள்ளது எனவும் சுகாதரத்துறையினர் கூறுகின்றனர்.

    புதிய தொற்றால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் எந்த அளவிற்கு வேகமாக பரவுகிறது என்பதை அரிய மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    புதிய வகை ஒமிக்ரான் தொற்று 10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
    வங்காளதேசம்:

    தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

    இந்தப் புதிய வகை தொற்று 10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இதன் எதிரொலியால், இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கொரோனாவின் புதிய மாறுபாட்டு தொற்று பரவலின் எதிரொலியால் தென் ஆப்பிரிகாவில் இருந்து வரும் பயணிகள் நுழைவதற்கு வங்காள தேசத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வங்காச தேசத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜாகித் மாலே கூறியதாவது:-

    ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாறுபாடு கொண்ட கொரோனா தொற்று மிகவும்ஆக்ரோஷமானது. அதனால், தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து வங்காள தேசத்திற்கு வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 

    மேலும், அனைத்து துறைமுகங்களிலும் தீவிர சோதனை நடைமுறைகளையும் அரசு வலுப்படுத்தி வருகிறது.
    இவ்வாறு அவர் கூறினார்.

    ×