என் மலர்
நீங்கள் தேடியது "Panguni Uttaram"
- முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- 16 வகை தீபாராதனை நடந்தது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவையொட்டி பல்லாயிரகணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடினர்.
பங்குனி உத்திர திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பழனி கிரிவல பாதையில் நடைபெறுகிறது. தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்து அருள்பாலிக்க உள்ளார். தேரோட்டத்தையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் பழனி நோக்கி படையெடுத்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலியாக பழனியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.
- பழனியாண்டவர் குடும்பத்தினர் தேங்காயை ஏலம் எடுத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் 350 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தில் திருமாங்கல்யம் சுற்றப்பட்டு வைத்திருந்த தேங்காய் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.5 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் படிப்படியாக உயர்ந்து ரூ.52 ஆயிரத்தில் நிறைவடைந்தது.
போடி குளாளர் பாளையத்தைச் சேர்ந்த பழனியாண்டவர் குடும்பத்தினர் நீண்ட போட்டிக்கு பின்பு அந்த தேங்காயை ஏலம் எடுத்தனர். கடந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் ஒரு தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட ரூ.22 ஆயிரம் கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூஜிக்கப்பட்ட இந்த தேங்காயை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகுவதுடன் குடும்ப ஒற்றுமை, வியாபார விருத்தி உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
- இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து
- தேரோட்டம் நாளை மறு நாள் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 6-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருவிழாவின் சிறப்பு அம்சமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நாளை (10-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருஆவினன்குடியில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மறு நாள் 11-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
பக்தர்கள் தங்கள் கைகளால் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு கவுண்டரில் அனுமதிக்கப்படுகிறது.
நாளை முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் வசதிக்காக நெரிசலை தவிர்க்க குடமுழுக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையை இணைத்து ஒரு வழிப்பாதையாகவும், மலைக்கோவிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக படிப்பாதை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் வசதிக்காக கிரி வீதி, குடமுழுக்கு நினைவரங்கு, யானைப்பாதை, இடும்பன் கோவில், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் போதுமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே நவீன வசதிகளுடன் கூடிய கட்டணமில்லா கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் இரு பாலருக்கும் தனித்தனியாக சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. இடும்பன்குளம், சண்முகாநதியில் பக்தர்கள் நீராடும் போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடமாடும் மருத்துவக்குழு வசதி செய்யப்பட்டுள்ளது.
கிரி வீதியில் 28 பேட்டரி கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பழனி நோக்கி தீர்த்த காவடியுடன் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 10-ந் தேதி திருக்கல்யாணம், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா திருஆவினன்குடி கோவிலில் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகிற 10-ந் தேதி திருக்கல்யாணமும், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து அ திக அளவு பக்தர்கள் வருவதால் கிரிவலப்பாதையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அதிகாலை முதலே தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களுக்கு மட்டும் மலைக்கோவிலில் ரூ.300 கட்டண தரிசன பாதை வழியாக இலவசமாக சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோவில் சாலை, சன்னதி வீதியில் தேர் உலா வரும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர் வரும் வழியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
பங்குனி உத்திர திருவிழாவுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு அதிக அளவு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழனியில் பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவார்கள். இதற்காக கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை வாழைப்பழங்கள் இங்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.
பழனி அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதியில் சாலையோரங்களில் தற்காலிக வாழைப்பழ கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரத்து குறைவால் விலை அதிகரித்து ஒரு பழம் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பக்தர்கள் மொத்தமாக வாழைப்பழங்களை வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த ஆண்டு வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது 50 டன் வாழைப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர கோவில் நிர்வாகம் சார்பில் தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்கவும், அனைத்து ஸ்டால்களிலும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
- பங்குனி உத்திர தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.
- பங்குனி உத்திர தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர்.
பழனி:
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி தைப்பூச திருவிழா முடிந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி, தந்த சப்பரம், வெள்ளி காமதேனு, யானை, ஆட்டுக்கிடா, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் 4 ரதவீதிகளில் உலா வருவார். 10-ந் தேதி திருக்கல்யாணமும், முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் 11-ந் தேதியும் நடைபெறுகிறது.
2ம் நாளான இன்று பழனி ஸ்ரீ தண்டாயுதம் சுவாமி பக்தர்கள் பேரவை சார்பாக 16-ம் ஆண்டு பங்குனி உத்திர தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர். பழனி முருகனுக்கு கொடுமுடியில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்காவடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று மதியம் ஸ்ரீ சண்முகசுவ மண்டபத்தில் புது அன்னதானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பழனி ஸ்ரீ தண்டாயுதம் பேரவை பக்தர்கள் பேரவை சார்பாக அழகர் செய்திருந்தார்.
மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பாதயாத்திரையாக பழனிக்கு வரத்தொடங்கி உள்ளனர். பால், பன்னீர், பறவை காவடி எடுத்துவந்து கிரிவீதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.
கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்ததால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.
- ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் கோவில் அமைந்துள்ளது.
- ஆலயத்தில் பங்குனி உத்திர திருநாள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தான், சேதுக்கு வாய்த்தான் என்னும் மிகப் பழமையான கிராமம். தாமிரபரணி ஆற்றங்கரையில் மிகவும் ரம்மியமான தோற்றத்தில் காணப்படும் அற்புதமான ஊர்.
ராம காவியத்தில் ராமபிரானும் வானர வீரர்களும், சீதா தேவியை தேடி இலங்கைக்கு செல்கிறார்கள். அப்போது அவர்கள் குரங்கணி, குரங்கன் தட்டு மற்றும் அதன் சுற்றுப்பகுதியான சேதுக்கு வாய்த்தான் உள்பட பல தாமிரபரணி கரை கிராமத்தில்தான் அணிவகுத்து நின்றுள்ளனர்.
அதன் பிறகு 'சற்று தெற்கே வந்து விட்டோம்' என ராமேஸ்வரம் நோக்கிச் சென்றதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து சேது சமுத்திரத்தில் ராமர் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி ராமபிரானும், வானர வீரர்களும் தங்கி இருந்த இந்த கிராமம் 'சேது பூமி' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் சேதுக்குவாய்த்தான் என்று மருவியது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சேதுக்குவாய்த்தான் ஊரில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார், சூலுகாத்த சூலுடைய அய்யனார் சாஸ்தா.
கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், சேதுபதி நாதன் என்னும் குறுநில மன்னன். இவர் சேதுக்கு வாய்த்தான் பகுதிகளை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். நீதி தவறாமல் நடந்து வந்த இவரது ஆட்சி காலத்தில், மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தனர்.
மாதம் மும்மாரி மழையும் பெய்தது. வருடம் முழுவதும் மூன்று வேளை விவசாயம் செழிப்பாக விளைந்தது. மக்களும் மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்டு மிகவும் மகிழ்ச்சியாக ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தனர்.
சேதுபதிநாத மன்னனின் ஆட்சிக்குட்பட்ட சேதுக்கு வாய்த்தான் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அழகான சோலை ஒன்றில் தர்ம சாஸ்தாவான அய்யனார் அருள்பாலித்து வந்தார்.

அப்போது அவர் ஓலைக்குடிசலில் தான் அமர்ந்திருந்தார். இவ்வூரில் நல்லதாய் என்ற பெண் வசித்து வந்தாள். ஏழைப்பெண்ணான இவளது கணவன் சின்னத்துரை.
கணவன்- மனைவி இருவரும் தினமும் சேதுக்குவாய்த்தானில் இருந்து குரங்கணி வரை தாமிரபரணி கரையோரமாகச் சென்று விறகு பொறுக்கி வருவார்கள். பணி முடிந்து வீடு திரும்பும்போது, அய்யனாரை வணங்கத் தவறுவது இல்லை. விறகை விற்று அதன் மூலம் பொருளாதாரம் ஈட்டி வந்தனர்.
இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. தங்கள் மனக்குறையைப் போக்க தினமும் குழந்தை வரம் வேண்டும் என ஓலைக்குடிசையில் இருந்த அய்யனாரை வணங்கி நின்றார்கள். அய்யன் இவர்களது கோரிக்கைக்கு செவி சாய்த்தார்.
நல்லதாய் கர்ப்பமானாள். நல்லதாய்க்கு கணவனைத் தவிர சொந்தம் என்று யாரும் இல்லாததால், முன்பு போலவே, கணவன் தன்னுடனேயே மனைவியையும் விறகு பொறுக்கும் பணிக்கு அழைத்துச் சென்று விடுவான். 10 மாதம் கடந்த நிலையில், வயிறு பெருத்து நடக்க முடியாமல் தவித்தாள், நல்லத்தாய். இன்றோ, நாளையோ அவளுக்கு பிரசவம் ஏற்படும் என்ற நிலை.
ஆதரவாக யாரும் இல்லாததால் கணவனுடன் பணிக்குச் சென்றாள். பணி முடிந்து தலையில் பாரம் சுமந்தபடி வந்தபோது, பாதி வழியில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் துடிதுடித்துப் போனாள். சின்னத்துரை மனைவியின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.
அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அய்யனார்கோவில் அருகில் மனைவியை அமர வைத்தான். "அய்யனே என் மனைவியை பார்த்துக்கொள்" என அய்யனாரிடம் ஒப்படைத்தான்.
பின்னர் மனைவியிடம், "ஊருக்குள் போய் உதவிக்கு மருத்துவச்சியை கூட்டி வருகிறேன்" என கூறிவிட்டு அவசர அவசரமாக ஊருக்குள் ஓடினான். அங்கே இருந்த மருத்துவச்சியிடம் தனது மனைவிக்கு பேறு காலம் பார்க்க வரும்படி கோரினான்.
அந்த நேரம் பார்த்து பெருங்காற்றும், தொடர் மழையும் பெய்யத் தொடங்கியது. மருத்துவச்சி வயதானவர் என்பதால், அவரால் அந்த புயல் மழையில் வெளியே வர முடியவில்லை. இதனால் மனம் வருந்திய சின்னத்துரை, "அய்யோ மனைவியை தனியாக விட்டு விட்டு வந்து விட்டோமே" என மீண்டும் கோவிலை நோக்கி ஓடினான்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. அந்த வெள்ளம் இவனையும் சூழ்ந்தது. எனவே மனைவியை காணச் செல்ல முடியாமல் பாதி வழியில் பறிதவித்து நின்றிருந்தான். அப்படி நின்ற இடத்தில் இருந்து அய்யனை நோக்கி கை கூப்பி வணங்கினான். "அய்யனே என் மனைவியையும், குழந்தையையும் காப்பாற்று" என்று மன்றாடினான்.
இவனின் குரல் அய்யனாரின் காதுகளில் விழுந்தது. தனது கோட்டைக்குள் மனைவியை கொண்டு வந்து விட்டுச் சென்ற கணவனின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய அய்யனார், மருத்துவச்சி வடிவத்தில் அங்கு தோன்றி, நல்லதாய்க்கு பிரசவம் பார்த்து, அவள் நல்ல சுகப் பிரசவத்துடன் ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.
வீசி அடிக்கும் காற்றையும், பேய் மழையையும் தன் கண் அசைவில் நிறுத்தினார் அய்யனார். அதன் பின் அய்யனாக சென்று கோவிலுக்குள் ஐக்கிய மானார்.
மழை நின்றவுடன் மருத்துவச்சியை அழைத்துக்கொண்டு ஓடியே வந்தான் சின்னத்துரை. இதற்கிடையில் மயக்கம் தெளிந்த நல்லதாய் குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். "இந்த மருத்துவச்சித் தான் எனக்கு பேறுகாலம் பார்த்தாள்" என்று மருத்துவச்சிக்கு நன்றி கூறினாள்.
மருத்துவச்சியும், அவளது கணவரும் அதிர்ச்சி அடைந்தனர். "என்னம்மா சொல்கிறாய்.. நான் இப்போது தானே வருகிறேன்" என்றாள் மருத்துவச்சி. அப்போதுதான் அவர்கள் மூவருக்கும் ஒரு உண்மை புரிந்தது, அந்த அய்யனாரே, மருத்துவச்சியாக வந்து பிரசவம் பார்த்துச் சென்றிருக்கிறார். இதனால் அவர்கள் மனம் நிறைந்து அய்யனுக்கு நன்றி செலுத்தினர்.
நிறைமாத கர்ப்பிணியான நல்லதாய், பிள்ளைபெற மருத்துவச்சியாக உதவி செய்ததால், இத்தல அய்யனாரை 'சூலுடையார் அய்யனார்' என்று அழைத்தனர். இவர் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு, அருளை அள்ளித்தந்து மகிழ்கிறார்.
இவரின் அருள் பரவிய காரணத்தால், இங்கு வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் ஓலை குடிசையில் இருந்த அவர், பின்னர் பெரிய கல் கட்டிடத்திற்கு மாறினார்.
இந்த ஆலயத்தில் அரசு வேலை கிடைக்கவும், இழந்த பொருளை மீட்கவும், கடன்தொல்லை நீங்கவும் நேரில் வந்து தரிசனம் செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்களும், சுகப் பிரசவம் வேண்டுபவர்களும் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.
இந்த திருக்கோவில் வெளிப் பிரகாரத்தில் சங்கிலி பூதத்தாரும், பேச்சியம்மன், சுடலைமாடசாமி என பரிவார தெய்வங்களும், உள் பிரகாரத்தில் விநாயகரும், வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியரும் காட்சியளிக்கின்றனர். வெளிப் பிரகாரத்தில் வன்னிய ராஜா கோவில் உள்ளது.
இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர திருநாள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த சாஸ்தாவை குலதெய்வமாக கொண்டவர்கள் தேடிவந்து வணங்கி நிற்கிறார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
இந்த ஆலயம் ஏரலுக்கு மறுகரையில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து ஏரலுக்கு பேருந்து வசதி உண்டு.
- பங்குனி உத்திரம் அன்று மேற்கொள்ளும் விரதத்தை ‘கல்யாண விரதம்’ என்று அழைப்பார்கள்.
- பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு.
பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில், பல்வேறு சிறப்புமிகு நிகழ்வுகள் நடைபெற்றிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த சிறப்பான நாளில்தான், பல தெய்வத் திருமணங்கள், தெய்வ அனுகூலம் ஏற்பட்ட பல காரியங்கள் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
மாதம் தோறும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம்தான் 'பங்குனி உத்திரம்' என்று சிறப்பித்து கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம், ஆண்டாள்- ரெங்கநாதர் திருமணம், ராமர்- சீதை திருமணம் உள்ளிட்ட பல தெய்வங்களின் திருமணங்கள் இந்நாளில் நடந்தேறி இருக்கின்றன. எனவே பங்குனி உத்திர நாளில் மேற்கொள்ளும் விரதத்தை 'கல்யாண விரதம்' என்றும் அழைப்பார்கள்.

இந்த சிறப்புமிக்க நாளில் சிவபெருமானையும், அவரது மகன் என்று புராணங்கள் சொல்லும் முருகப்பெருமானையும் விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணம் தடைப்படுபவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.
பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளும் தெய்வங்களை, தேவர்கள் பலரும் இந்த பங்குனி உத்திர நாளில் வழிபட்டு வரம் பெற்றுள்ளனர். விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் இடம் பிடித்தது, இந்த விரதத்தை கடைப்பிடித்துதான்.
தேவர்களின் தலைவனான இந்திரனும் இந்த விரதத்தை மேற்கொண்டு, இந்திராணியை கரம் பிடித்திருக்கிறான். பிரம்மன் சரஸ்வதியை தன் நாவில் குடிகொள்ளச் செய்ததும், சந்திரன் இருபத்து ஏழு அழகு வாய்ந்த நட்சத்திரப் பெண்களை மணம் முடித்ததும் கூட இந்த விரதத்தை மேற்கொண்டுதான்.
இந்த விரதத்தை கடைப்பிடித்தவர்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் எண்ணிலடங்காதவர்கள். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய விரதம் இது.
பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒருமுறை சாபம் காரணமாக, தக்கன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள், உமாதேவி. தாட்சாயணி என்ற பெயருடன் சிறுவயது முதலே சிவனின் மீது விருப்பம் கொண்ட அன்னை, தவம் இருந்து சிவனை மணம் செய்து கொண்டாள்.
ஆனால் தக்கன், சிவபெருமானுக்குரிய மரியாதையை வழங்கவில்லை. அவருக்கு சேரவேண்டிய அவிர்பாகத்தைக் கூட கொடுக்காமல், மற்ற தேவர்கள், முனிவர்களை அழைத்து யாகம் செய்தான். இதனால் வெகுண்டெழுந்த தாட்சாயிணி யாக குண்டத்தில் விழுந்து, அந்த யாகத்தை பலனற்றதாக மாற்றினாள்.
தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கி கொள்வதற்காக, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினாள். காஞ்சிபுரத்தில் கம்பை ஆற்றில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டார்.
திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. ஆற்று நீரில் மணல் லிங்கம் சிதைந்து விடுமே என்று, அந்த லிங்கத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பார்வதியின் அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன், சிவலிங்கத்தில் வெளிப்பட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும். பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

விரதம் இருக்கும் முறை
பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திரம் அன்று விரதம் இருப்பவர்கள் காலை எழுந்து நீராடி விட்டு, சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக, ஆராதனை செய்து தூப - தீபம் காட்டி, நைவேத்தியங்களை படைத்து வழிபட வேண்டும்.
அந்த பூஜை நேரத்தில் ஒரு தம்பதியினரை அழைத்து வந்து, அவர்களை வணங்கி தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும்.
பின்னர் சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.
அன்று முழுவதும் இறைவனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும்.
துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப்படுக்கவேண்டும்.
தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.
- ஏப்ரல் 11-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
- பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின் பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இத்திருவிழாவின் போது பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத்திருவிழா ஏப்ரல் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருஆவினன்குடி கோவிலில் காலை 11 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி தங்க குதிரை வாகனம், தங்க மயில், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
6ம் நாள் நிகழ்ச்சியாக ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் வள்ளிநாயகி அம்மன், திருமுருகன், திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 7ம் நாளான ஏப்ரல் 11-ந் தேதி பங்குனி உதிரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு கிரி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் நிறைவாக ஏப்ரல் 11-ந் தேதி இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறும். பங்குனி உத்திரம் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.
- பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
- கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, தேரோட்டம், திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மதுரை
தமிழ் மாதங்களில் 12-வது மாதமாக வரும் பங்குனி மாதத்தில் நட்சத்திரங்களில் 12-வதாக இருக்கும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் விழா பங்குனி உத்திரமாகும். பங்குனி உத்திரத்தில் தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு உகந்த நாளாக பக்தர்கள் கருதி இந்த நாளில் முருகன் கோவில்களில் வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, தேரோட்டம், திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை மீது உள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இன்று பாலாபிஷேகமும் நடந்தது.
மதுரை நேதாஜி ரோட்டில் அமைந்திருக்கும் தண்டாயுதபாணி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பூப்பல்லக்கில் 4 மாசி வீதிகளில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பூங்கா முருகன் கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். பங்குனி உத்திரத்தை யொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- முன்னோர் வழிபாடே குல தெய்வ வழிபாடாக மாறியதாக சொல்கிறார்கள்.
- குல தெய்வ வழிபாட்டின் மகிமை சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால்தான் குல தெய்வ வழிபாடு முறை தோன்றியது.
2. தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது.
3. மறைந்த முன்னோர் வழிபாடே காலப் போக்கில் குல தெய்வ வழிபாடாக மாறியதாக சொல்கிறார்கள்.
4. குல தெய்வ வழிபாட்டின் மகிமை பற்றி சிலப் பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. குல தெய்வ வழிபாடுதான் நாளடைவில் பலரும் வணங்கும் சக்தியுள்ள தெய்வ வழிபாடாக மாறி இருக்கலாம் என்று பிரபல அறிஞர் ஆறு.ராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
6. குல தெய்வ வழிபாடு கிராமமக்களை நெறிப் படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது.
7. குல தெய்வ வழிபாடு என்பது உலகின் பல நாடுகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது.
8. வீரத்தோடு வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்வது சங்க காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அதில் இருந்து குல தெய்வ வழிபாடு உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
9. குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.
10. கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் குல தெய்வமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
11. மதுரை வீரன், கருப்பன் ஆகிய குல தெய்வங்கள் நடுகல் வழிபாட்டு முறையில் இருந்து வந்தது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
12. இஷ்ட தெய்வ வழிபாடு போல் அல்லாமல் குல தெய்வ வழிபாடு என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையுடனும் பின்னிப்பிணைந்துள்ளது.
13. நீர் வளம் தரும் அய்யனாரையும் நோயில் இருந்து காக்க மாரியம்மனையும் குல தெய்வமாக கருதும் வழக்கம் பின்னணியில் ஏற்பட்டது.
14. சமுதாயத்தில் நடக்கும் தவறுகளுக்கு நீதி கேட்கும் வகையில் ஆங்காங்கு குலதெய்வ வழிபாடு முதலில் நடந்தது. தவறு செய்பவர்கள் குலதெய்வங்களுக்கு பயந்து ஒழுக்கமாக வாழ்ந்தனர்.
15. சாதிகள் தோன்றிய பிறகு குல தெய்வ வழிபாடும் சாதி வட்டத்துக்குள் சென்று விட்டது.
16. தமிழ்நாட்டில் சமய வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்த ராபர்ட் ரெட் பீல்ஸ் என்ற சமூகவியல் அறிஞர், தமிழ்நாட்டில் பெருந்தெய்வ வழிபாடு நடக்கும் அதே அளவுக்கு குல தெய்வ வழிபாடும் உள்ளதாக எழுதி உள்ளார்.
17. குல தெய்வ வழிபாடு அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதாக கருதப் படுவதால், அந்த வழிபாடு தமிழ்நாட்டில் தொய்வே இல்லாமல் நடந்து வருகிறது.
18. பெரும்பாலான குல தெய்வ வழிபாடுகள் சூலம், பீடம், மரம், கரசம், கல், பெட்டி போன்ற அடையாள குறியீடுகளைக் கொண்டே நடத்தப்படுகின்றன.
19. நோய்கள் நீங்கவும், பிள்ளைவரம் கிடைக்கவும், மழை பெய்யவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு.
20. ஊருக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த 100 ஆண்டுகளில் கிராமங்களில் நடக்கும் குல தெய்வ வழிபாடுகள் மிக, மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன.
21. குல தெய்வம் இருக்கும் இடத்தில் நிச்சயம் வேப்பமரம் அல்லது வில்வ மரம் இருக்கும்.
22. காணிக்கை அளித்தல், மொட்டை போடுதல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல், பொங்கலிடுதல் போன்றவை குல தெய்வங்களுக்காக நடத்தப்படுகின்றன.
23. தமிழ்நாட்டில் இன்றும் 90 சதவீத குலதெய்வ கோவில் வழிபாடுகளில் பலியிடுதல் நடைபெறுகிறது.
24. குல தெய்வங்களுக்கு இதிகாச அடிப்படை எதுவும் கிடையாது.
25. இடம், தோற்றம், வாழ்க்கை நிலை போன்றவற்றைக் கொண்டே குல தெய்வ வழிபாடு நிர்ணயமாகிறது.
26. தென் இந்தியாவின் குல தெய்வ வழிபாடுகளை முதன் முதலாக ஹென்றி ஒயிட்ஹெட் என்பவர் ஆய்வு செய்து நூலாக வெளியிட்டார்.
27. குல தெய்வ வழிபாடு ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு வகையில் இருக்கும்.
28. குல தெய்வ வழிபாடுகளில் பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் இஷ்டப்படியே நடக்கும்.
29. குல தெய்வங்களுக்கு கருவாடு, சுருட்டு, கஞ்சா, சாராயம் போன்றவற்றை படையல் செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
30. குல தெய்வ வழிபாடுகளில் உயர்சாதி இந்துக்கள் பூசாரிகளாக இருக்க மாட்டார்கள். உள்ளூர் பெண்களே பூசாரிகளாக இருப்பதுண்டு.
31. குல தெய்வ வழிபாடுகளின் போது சாமி ஆடுபவர்கள் அருள்வாக்கு சொல்வதுண்டு.
32. குல தெய்வங்களின் சிறப்புகள் கல்வெட்டுக்களாக இருப்பது இல்லை. பெரும்பாலும் செவி வழிக்கதைகளாகவே இருக்கும்.
33. தமிழ் நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளன.
34. குல தெய்வ கோவில்கள் ராஜகோபுரம், மாட வீதிகள் என்று இருப்பதில்லை. சிறிய கோவில் அமைப்பாகத்தான் இருக்கும்.
35. குல தெய்வ கோவில்கள் ஆகம விதிப்படி கட் டப்பட்டிருக்காது. இடத்துக்கு ஏற்பவே அமைந்திருக்கும்.
36. குல தெய்வ கோவில்களில் திருவிழா நடத்துவது உள்பட எல்லா காரியங்களும் குல தெய்வத்திடம் உத்தரவு கேட்டே நடத்தப்படும்.
37. குல தெய்வ வழிபாடுகளில் மிகுந்த தீவிரமாக இருப்பவர்கள் தங்களை வருத்திக் கொண்டு வழிபாடு செய்வார்கள்.
38. குல தெய்வ கோவில்கள் பெரும்பாலும் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே கட்டப்பட்டிருக்கும்.
39. குல தெய்வ கோவில்களில் பரிவார தேவதைகளுக்கும் இடம் கொடுப்பதுண்டு.
40. சில சமுதாயத்தினர் குல தெய்வ வழிபாட்டை ஆண்டுக்கு ஒரு முறையே நடத்துகின்றனர். ஆனால் குல தெய்வ வழிபாடு செய்பவர்கள் தினமும் பூஜைகள் செய்ய வேண்டியது அவசியமாகும்.
41. குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது.
42. தங்கள் குறைகளை தீர்க்குமாறு குல தெய்வங்களை வேண்டிக் கொள்பவர்கள், அக்குறை தீர்ந்ததும் பொங்கலிடுதல், பலியிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தவறாமல் செய்வதுண்டு.
43. குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது.
44. கிராமங்களில் இன்றும் குல தெய்வ வழிபாடுகளில் ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
45. குல தெய்வ வழிபாட்டில் கன்னிமார் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும்.
46. குல தெய்வ வழிபாடுகளில் ஆகாச பூஜை என்பது தனிச் சிறப் புடையது. ஆட்டின் ரத்தத்தை சோற்றுடன் கலந்து ஊர் எல்லைக்கு கொண்டு சென்று ஆகாசத்தை நோக்கி எறிவார்கள். அந்த பிரசாதத்தை சிறு தெய்வங்கள் பெற்றுக் கொள்வதாக நம்பப்படுகிறது.
47. சில சமுதாய மக்கள், தங்கள் குடும்பம் அல்லது ஊர் தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பு, 'பூக்கட்டிப் போட்டு பார்த்தல்' மூலம் முடிவு எடுப்பது வழக்கம்.
48. குல தெய்வத்துக்கு குறை வைத்தால் வம்ச விருத்தி ஏற்படாது என்பார்கள்.
49. ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு குடும்பத்தினர் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், தங்கள் குல தெய்வத்திடம் சென்று வழிபாடு செய்து, ஒருவர் கையால், மற்றவர் திருநீறு வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என்பது பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது.
50. நவீன மாற்றங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது குல தெய்வ வழிபாடுகளின் பூஜைகள், நேர்த்திக் கடன்கள், திருவிழாக்களிலும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் குல தெய்வம் மீதான பயமும், பக்தியுணர்வும் கொஞ்சமும் குறையவில்லை.
- கிராமத்தில் முக்கிய வீதி வழியாக வலம் வந்த தேரினை பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து தரிசனம் செய்தனர்.
- சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை முதலே அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் பிற்பகலில் தேரோட்டம் நடைபெற்றது சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
கிராமத்தில் முக்கிய வீதி வழியாக வலம் வந்த தேரினை பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம், வில்வாரணி, மேலாரணி, போளூர், புதுப்பாளையம், செங்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
போரூர்:
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிப்பூ தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.100-க்கு விற்ற சாமந்தி ரூ.220 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ஆப்பிள் சீசன் முடிந்து உள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இந்தியன் ஆப்பிள் ஒரு கிலோ ரூ180-க்கும், ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. மாதுளை கிலோ 180-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.50-க்கும், கொய்யா கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை விவரம் கிலோவில் வருமாறு:-
சாமந்தி - ரூ.150 முதல் ரூ.220 வரை, மல்லி - ரூ.500, பன்னீர் ரோஜா ரூ.80 முதல் ரூ.100வரை, சாக்லெட் ரோஜா ரூ.100 முதல் ரூ.120 வரை, அரளி - ரூ.250, செவ்வரளி - ரூ.400, கனகாம்பரம் - ரூ.600, சம்பங்கி - ரூ.180, முல்லை - ரூ.600, ஜாதிப்பூ - ரூ.500.