என் மலர்
நீங்கள் தேடியது "rain"
- மழையால் செடிகள் மட்டுமின்றி, காய் மற்றும் பழங்கள் அழுகியுள்ளதோடு பறிக்க முடியாமலும் வீணாகி வருகிறது.
- மழைக்கு தாங்காது என்பதால், வெளி மாவட்ட விவசாயிகள் உடுமலையிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
உடுமலை:
உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. கொடி மற்றும் செடி முறையில், ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்குச்செல்கிறது.
வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், இதனை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். மழையால் செடிகள் மட்டுமின்றி, காய் மற்றும் பழங்கள் அழுகியுள்ளதோடு பறிக்க முடியாமலும் வீணாகி வருகிறது.
மழையில் பறிக்கும் தக்காளி சந்தைக்கு வருவதற்குள் அதிக அளவு அழுகி விடுகிறது. இதனால் அதன் மகசூல் பெருமளவு பாதித்துள்ளது. இதையடுத்து சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.செடிகளிலிருந்து பறிக்கும் தக்காளிகளை உடுமலை பகுதிகளிலுள்ள ரோட்டோரங்களிலும் சந்தை வளாகத்திலும் வீசிச்செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் தக்காளி உடுமலை நகராட்சி சந்தை மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு கொண்டு சென்று ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.மகசூல் சரிந்து, விற்பனைக்கு வரும் தக்காளி வரத்து பெருமளவு குறைந்தாலும் அது விலை சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் 14 கிலோ கொண்ட பெட்டி 700 ரூபாய் வரை விற்றது. தற்போது கொடி தக்காளி ஒரு பெட்டி 160 ரூபாய் வரையும், செடி தக்காளி 100 முதல், 120 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.மழைக்கு தாங்காது என்பதால், வெளி மாவட்ட விவசாயிகள் உடுமலையிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
- வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
- நவம்பர் 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
- இன்று காலை 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியது.
- மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கோப்பணம் பாளையம், இருக்கூர், சேளூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குரும்பலம் மகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, சுள்ளி பாளையம், பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம் , வசந்தபுரம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் என பல்வேறு கடைக்காரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
கடந்த முறை பெய்த கனமழையின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பல்வேறு வகையான பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் மழையின் காரணமாக சாலையின் இருபுறமும் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
காலை முதலே மழை பெய்து வருவதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்து உள்ளார்.
- வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழை.
- தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று கன முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 16ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது.
- கரூர் மாவட்டத்தில் 348.70 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது
- காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை
கரூர்
கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் விடுமுறை அறிவித்தார். மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு மி.மீட்டரில். கரூர் 42.20, அரவக்குறிச்சி 39, க.பரமத்தி 37.60, மைலம்பட்டி 37.40, அணைப்பாளையம் 36.20, கிருஷ்ணராயபுரம், மாயனூர் தலா 34, குளித்தலை 27.30, பஞ்சப்பட்டி 17.60, தோகைமலை 17, பாலவிடுதி 14.90, கடவூர் 11.50 என மொத்தம் 348.70 மி.மீட்டரும், சராசரியாக 29.06 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
- கனமழையால் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது,
- தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
கரூர்:
கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கரூர் சுற்று பகுதியில் உள்ள தான்தோன்றி மலை மற்றும் கணபதி நகர், ஜீவா நகர், அன்பு நகர் உள்ளிட்ட சுற்று வட்டார மேட்டு பகுதிகளிலிருந்து மழை நீர் தாழ்வான பகுதியான கலைஞர் நகரில் வந்து சூழ்ந்துள்ளது, இந்த மழைநீர் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் செல்ல முடியாமலும், வெளியில் வர முடியாமல் பல்வேறு அவதிக்குள்ளாகியுள்ளனர், தொடர்ந்து அப்பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் பள்ளங்களில் தங்கியுள்ள பாம்புகள் மற்றும் விஷ வண்டுகள், பூச்சிகள் அப்பகுதிகளில் வெளியில் வந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனை அறிந்த கரூர் மாநகராட்சி நகர் நல அதிகாரிகள், மற்றும் தூய்மை பணியாளர்கள் வீடுகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை பெய்யும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வழக்கமாக இருந்து வருகின்றது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், இனி மழை காலங்களில் இப்பகுதிக்கு மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர், இப்பகுதி பள்ளமான பகுதி குளம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
- பலத்த மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன.
- இரவு வரை தொடர்ந்து மழை
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தவாறு இருந்தது.
இதில் உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கழுமங்கலம், முனியத்தரியன்பட்டி, தத்தனூர், மணகெதி, வெண்மாண்கொண்டான், சொழங்குறிச்சி, கச்சிப் பெருமாள், துளாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், ஏந்தல், அழிசுகுடி, பருக்கல், காடுவெட்டாங்குறிச்சி, சுத்தமல்லி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக உடையார்பாளையம் பகுதியில் உள்ள வேலப்பன் செட்டி ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மேலும் மழையின் காரணமாக விவசாய்கள் ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமல் தவித்தனர்.
உடையார்பாளையம் கடைவீதியில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு, கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் வெளியூர் சென்று வர முடியாமல் தவித்தனர்."
- கன மழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன
- பெண்கள் உட்பட 6 பேர் பள்ளியில் தங்க வைப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசனே தெரியாதபடிக்கு வங்கக் கடலில் ஏற்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கீழடுக்கு சுழற்சி காரணாமாகவும், வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாகவும் வருண பகவான மழையை வாரிக் கொட்டுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் 17 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் நேற்று வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அதிகாலை 1 மணி முதல் இனறு காலை வரை மழை பெய்து கொண்டே இருந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. கன மழையால் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சியில் வசிக்கும் வையாபுரி மகன் பழனிச்சாமி,
காளிமுத்து மனைவி பாப்பா ஆகியோரது குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதனை அறிந்த வருவாய் ஆய்வாளர் அமிர்தலிங்கம், விஏஓ சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று பழனிச்சாமி, பாப்பா மற்றும் ஆபத்தனா நிலையில் குடிசை வீடுகளில் வசிக்கும் பழனிச்சாமி மனைவி செல்வி, நடேசன் மனைவி பாப்பாத்தி, உலகநாதன் மனைவி தஞ்சாயி, சரவணன் பொட்டுக் கண்ணு என 4 குடும்பங்களை சேர்ந்த 1 ஆண், 5 பெண் உட்பட 6 பேரை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைத்தனர்.
மாவட்ட அளவில் கலெக்டர் வெங்கடபிரியா உத்தரவின் பேரில், மழையால் பாதுக்கப்படுவோரை தங்க வைக்க பள்ளிகள், சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கத.
- பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது.
- 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
பல்லடம் :
பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நேற்று முன்தினம் காலை முதல் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தவண்ணம் உள்ளது. நேற்று அதிகாலை முதலே வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. தொடர்மழையால் பல்லடம் அண்ணாநகர் பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் இரவு முழுவதும் மழைநீரை வெளியேற்றியபடி இருந்தனர். நகராட்சி ஊழியர்கள், மழைநீர் தேங்கியுள்ள அண்ணாநகரில் மோட்டார் வைத்து மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். இதே போல பல்லடம் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைநீர் பாதித்த இடங்களை, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், நகராட்சி ஆணையாளர் விநாயகம்,உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினர். பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறின.
மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம், அவினாசி உள்பட அனைத்து பகுதிகளிலும் மழைநீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் வீடுகளுக்குள் முடங்கினர். சில இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் நேற்று மாலை வரை மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். தாராபுரம், காங்கயம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு :- திருப்பூர் வடக்கு-16, அவினாசி-6, பல்லடம் -32, ஊத்துக்குளி-6, காங்கயம்-28, தாராபுரம்-43, மூலனூர்-34, குண்டடம்-25 திருமூர்த்தி அணை -27, அமராவதி அணை- 39, உடுமலை-38.20, மடத்துக்குளம் -76, திருப்பூர் கலெக்டரேட்-7, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம் -35, திருமூர்த்தி அணை (ஐ.பி.) -25, திருப்பூர் தெற்கு-15, கலெக்டர் முகாம் அலுவலகம் - 20.40,உப்பாறு அணை -75, நல்லதங்காள் ஓடை -34,வட்டமலைக்கரை ஓடை- 56.40. மாவட்டம் முழுவதும் மொத்தம் 638மி.மீ. மழை பெய்துள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் உள்ள நல்லம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் அதிக அளவில் வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் நேற்று காலை முதல் வரும் மழை நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் செல்லும் நொய்யல் ஆற்றில் நேற்று மதியம் 12 மணி முதல் மழைநீர் திடீரென்று அதிக அளவில் வந்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறி பாய்ந்து கரைபுரண்டு செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதன் காரணமாக தரை பாலத்தின் வழியாக செல்லும் பகுதிக்கான சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கனரக, இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மேலும் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழைநீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
- சென்னையில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் மாங்காடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
- முகலிவாக்கத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகாமிட்டு மழை நீரை வடிய வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
சென்னை:
சென்னையில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் மாங்காடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள வெள்ள நீர் கரைபுரண்டு முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதிக்கு வந்ததால் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
முட்டளவுக்கு தண்ணீர் கிடப்பதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று காலையில் அந்த பகுதிக்கு நேரில் சென்றார். சேரும், சகதியுமாக மாறிய சாலைகளில் நடந்து சென்று மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து முகலிவாக்கத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகாமிட்டு மழை நீரை வடிய வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
- கொசஸ்தலை ஆற்றின் கரை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது உடைப்பு ஏற்பட்டது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களாக அதிக அளவு மழை பெய்து உள்ளது.
பொன்னேரி:
கொசஸ்தலை ஆற்றின் கரை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது உடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தேவையான முன் எச்சரிக்கை பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு பாடியநல்லூர் விச்சூர் வெள்ளிவாயல் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கரைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் சா.மு. நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு 20 சென்டி மீட்டர் மழை ஒரே நாளில் பெய்தது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களாக அதிக அளவு மழை பெய்து உள்ளது. முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் குறைவாக உள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் வெள்ள நீர் ஊருக்குள் புகாதவாறு தேவையான நடவடிக்கைகள், பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.