என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sabarimalai"
- சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு.
- நடை சாத்தப்பட்டிருந்தாலும் 18-ம் படியில் ஏற அனுமதி
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.
பக்தர்கள் கூட்ட நெரி சலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது.
அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னி தானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.
மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவதால் பதினெட்டாம்படி உள்ளிட்ட சன்னிதான பகுதியில் கூட்ட நெரிசல் என்பது இல்லை.
மேலும் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் வருகை அதிகரித்தபடி இருக்கிறது. இன்று காலை சபரிமலை பகுதியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத் தாமல் பக்தர்கள் மலை யேறிச் சென்றனர். மேலும் பதினெட்டாம் படி ஏறுவ தற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றனர்.
இந்தநிலையில் சபரி மலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள்.
ஆனால் அதற்கு குறை வாகவே தினமும் பக்தர்கள் வருகிறார்கள். ஸ்பாட் புக்கிங் முறையில் தற்போது வரை அதிகபட்சமாக ஒரு நாளில் 5,982 பேரே பதிவு செய்து சன்னிதானத்துக்கு சென்றிருக்கிறார்கள்.
பதினெட்டாம்படியில் பக்தர்களை விரைவாக ஏறச் செய்தல், தரிசன நேரத்தை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகளால் பக்தர்கள் நெரிசலில்லாத சுமூகமாக தரிசனத்தை பெற முடிந்தபோதிலும், பக்தர்களின் வருகை எதிர் பார்த்த அளவுக்கு இல்லை.
இதன் காரணமாக சபரி மலைக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாய் பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
மேலும் அரவணை மற்றும் அப்பம் உள்ளிட்ட பிரசாத விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிகிறது.
இந்த காரணங்களுக்காக பக்தர்களின் வருகையை அதிகப்படுத்த ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்கவும், ஸ்பாட் புக்கிங்கை தொடர்ந்து 10 ஆயிரமாக தொடரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
- வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கம்.
- சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன்.
"கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போகும் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.
பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஐயப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள். அவர்களின் வழி பின்பற்றி ஐயப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.
அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும். அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும். கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.
மேலும் கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது. யார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை காண்கிறார்களோ அவர்களுக்கு 7½ நாட்டு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது.
ஏன் என்றால் சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன். இது தொடர்பாக கூறப்படும் கதை வருமாறு:-
இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகு கின்றவன் சூரிய பகவான். அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு.
இந்த உஷா விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். இந்த விஸ்வகர்மா தான் தேவலோகத்து தேவர்களின் ஆணைப்படி பல கட்டிடங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் செய்பவர். தேவலோக சிற்பி ஆவார்.
இன்றும் விஸ்வகர்மா வகுப்பினர் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணலாம். சூரியன்- உஷா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். 2 பேர் மகன்கள். ஒரு மகள்.
1. வைவஸ்வத மனு - மகன்,
2. எமதர்ம ராஜன் - மகன்,
3. யமுனா தேவி - மகள்.
எனவே தான் யமுனா நதி கருப்பாக உள்ளது. (யமதர்ம ராஜனின் சகோதரி என்பதால்).
சூரியனின் வெப்பத்தை அவரது மனைவியான உஷா தேவியால் கூட தாங்க இயலவில்லை. இங்கு உஷா தேவியினை மக்களாகவும் கருதி சிந்திக்க வேண்டும்.
"வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்" எனவே உஷா தேவி தன் நிழலை உருவமாக்கி "சாயா தேவி"என்று மாறினாள். "சாயா"என்றால் நிழல் என்றும் பொருள் வரும். சூரியனை விட்டுவிட்டு விஸ்வகர்மாவாகிய தன் தந்தையிடம் உஷா சென்றுவிட்டாள்.
இந்த சூரியன் மனைவியாகிய சாயாதேவி தன் கணவரிடமும், உஷா தேவியின் குழந்தைகளிடமும் பிரியமாக நடந்து கொண்டாள்.
நாளடைவில் இந்த சாயா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.
1. சாவர்ணி மனு - மகன்
2. ச்ருத கர்மா - மகன்
3. பத்ரை - மகள்
தனக்கு குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி உஷா தேவியின் குழந்தைகளை வெறுக்கத் தொடங்கினாள். குழந்தைகளிடம் கடுமையாகவும் நடந்து கொண்டாள். இதனால் எமதர்மன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான்.
ஒரு சமயம் எமதர்மன் காலை தூக்குவதை கண்ட "சாயா தேவி" தன்னைத்தான் உதைக்க வருவதாக எண்ணி அவன் கால் எழுகக்கடவது என சாபமிட்டாள்.
தாய் சாபமிடுவதை கண்ட எமன் சந்தேகமுற்றான். நல்ல தாய் தன் மகனை ஒருக்காலும் சபிக்கமாட்டாள். தன் சந்தேகத்தினை சூரிய பகவானான தந்தையிடம் கூறினான்.
சினம் கொண்ட சூரியன் உண்மையினை கூறும்படி கட்டளையிட்டார். சாயா தேவியும் தான் உஷா தேவி அல்ல என்ற உண்மையினை ஒத்துக்கொண்டாள்.
சூரிய பகவானும் எமதர்ம ராஜனை பூலோகம் சென்று தாயின் நோய் தீர்க்கும் தயாவான தத்துவனாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை நோக்கி தவம் செய்து சாப விமோசனம் பெற வழிகாட்டினார்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனை உணர்ந்த எமன் பூலோகம் வந்து தவம் இருந்து வேண்டினார்.
அவனது தவ வலிமையினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றினார். சாப விமோசனம் தந்து எமலோகத்திற்கு அதிபதியாக்கினார்.
இப்படிப்பட்ட உயர்ந்த நிலையினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுகிரகத்தினால் எமன் கிடைக்கப்பெற்றதனை அறிந்த ஸ்ரீ சாயா தேவியின் இளைய மகனாகிய "ச்ருத கர்மா" தானும் பூலோகம் வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தாவை காலையும் மாலையும் பூஜை செய்து வழிபட்டான்.
பின்னர் கடும் தவம் மேற்கொண்டு சகல வரங்ளையும் அருளும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவினையே தியானம் செய்து வந்தான். அவனது அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத்தில் கிரக நிலையினை அருளினார்.
அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) "சனீஸ்வரன்"என்ற பெயரும் சூட்டினார். வாரத்தின் கடைசி நாளையும் அவன் பெயரில் அழைக்க அருள் பாலித்தருளினார்.
மேலும் அந்த சனிக்கிழமையினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று ஐயப்பன் அருள் செய்தார். இதற்கு பிரிதி உபகாரமாக சனிபகவானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய ஐயப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார்.
எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7½ சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.
- பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்.
- கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வழக்கமாக விரதமிருந்து வரும் பக்தர்கள் மற்றும் கன்னி ஐயப்பமார்கள் அதிகளவில் வருவதே இதற்கு காரணம்.
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும்போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை செய்துகொடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும்.
அதனை வெற்றிகரமாக மேற்கொள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்துகிறது.
அதே நேரத்தில் யாத்திரை வரக்கூடிய பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகிறது. சபரிமலை யாத்திரையில் பக்தர்கள் கடை பிடிக்கவேண்டிய விஷயங்களை இந்த ஆண்டும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
செய்ய வேண்டியவை
* பக்தர்கள் மலை ஏறும் போது 10 நிமிட நடைக்கு பிறகு 5 நிமிடம் ஓய்வெடுங்கள்.
* மரக்கூட்டம், சரம்குத்தி, நடைபந்தல் - பாரம்பரிய பாதையை பயன்படுத்தி சன்னிதானம் செல்லவும்.
* பதினெட்டாம்படியை அடைய வரிசை முறையை பின்பற்றவும்.
* திரும்பும் பயணத்திற்கு நடைபந்தல் மேம்பாலத்தை பயன்படுத்தவும்.
* சிறுநீர் கழிப்பதற்கும், உடல் கழிவுகளை அகற்றுவதற்கும் கழிவறைகளை பயன்படுத்துங்கள்.
* சன்னிதானத்தில் நிலவும் கூட்டத்தின் நிலையை கண்டறிந்து, பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லுங்கள்.
* டோலியை பயன்படுத்தும் போது, தேவசம் கவுண்டரில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை வைத்துக் கொள்ள வேண்டும்.
* பாதுகாப்பு சோதனைச்சாவடிகளில் உங்களை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துங்கள்.
எந்த உதவிக்கும் காவல்துறையை அணுகவும்.
* சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
* உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே உண்ணக்கூடிய பொருட்களை வாங்கவும்.
* பம்பை, சன்னிதானம் மற்றும் மலையேற்ற பாதைகளை சுத்தமாக வைத்திருங்கள்.
* ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.
* கழிவுப் பெட்டிகளில் மட்டுமே கழிவுகளை இடுங்கள்.
* தேவைப்பட்டால், மருத்துவ மையங்கள் மற்றும் ஆக்சிஜன் பார்லர்களின் வசதிகளை பெறவும்.
* குழந்தைகள், வயது முதிர்ந்தோர், மாளிகாபுரம் (பெண்கள்) முகவரி மற்றும் தொடர்பு எண்கள் கொண்ட அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிடப்பட வேண்டும்.
* குழுக்கள் அல்லது உடன் வந்த நண்பர்களிடமிருந்து தனிமை படுத்தப்பட்டால், பக்தர்கள் காவல் உதவி நிலையங்களில் புகார் செய்யலாம்.
செய்ய கூடாதவை
* கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
* பம்பை, சன்னிதானம் மற்றும் யாத்திரை செல்லும் வழியில் புகைபிடிக்க வேண்டாம்.
* மது அல்லது போதை பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.
* வரிசையில் குதிக்க வேண்டாம். வரிசையில் இருக்கும்போது அவசரப்பட வேண்டாம்.
* ஆயுதங்கள் அல்லது பிற வெடிபொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.
* அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களை மகிழ்விக்க வேண்டாம்.
* கழிப்வறைக்கு வெளியே சிறுநீர் கழிக்காதீர்கள். கழிவறைக்கு வெளியே உடல்களை சுத்தம் செய்யாதீர்கள்.
* எந்தவொரு சேவைக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம்.
* எந்த உதவிக்கும் காவல்துறையை அணுக தயங்க வேண்டாம்.
* குப்பை தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பைகளை வீசக்கூடாது.
* பதினெட்டாம்படியில் தேங்காய் உடைக்க வேண்டாம்.
* பதினெட்டம்பாடியின் இருபுறமும் ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர வேறு எங்கும் தேங்காய் உடைக்க வேண்டாம்.
* புனித படிகளில் ஏறும் போது பதினெட்டாம்படியில் மண்டியிட வேண்டாம்.
* நடைப்பந்தல் மேம்பாலத்தை தவிர வேறு எந்த பாதையையும் திரும்பப் பயணத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
* மேல் திருமுட்டம் அல்லது தந்திரிநாடு எங்கும் ஓய்வெடுக்க வேண்டாம்.
* நடைபந்தல் மற்றும் கீழ் திருமுட்டம் ஆகியவற்றில் விரிகளுக்கு (தரையில் பாய்கள்) பாதைகளை பயன்படுத்த வேண்டாம்.
பாதுகாப்பு
* பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
* ஆயுதங்கள் அனுமதிக்கப்பட வில்லை.
* சன்னிதானத்தில் சமையல் எரிவாயு, அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. அப்படி தீ எரித்தால் தீயை உபயோகித்த உடனே அணைக்க வேண்டும்.
* பதினெட்டாம் படியில் ஏறும் முன் உங்களையும், உங்கள் பொருட்களையும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துங்கள்.
- பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கிடையே சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சபரிமலை சீசனையொட்டி இந்த ஆண்டு ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் செய்யப்பட்ட நவீன மாற்றங்கள் காரணமாக பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,800 பக்தர்களுக்கு குறையாமல் தரிசனம் செய்கிறார்கள். 18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். அதாவது 15 நிமிடங்களுக்கு பின் ஓய்வு அளிக்கப்படுகிறது. இதனால் 18-ம் படியில் அதிக அளவில் பக்தர்கள் ஏற்றி விடப்படுகிறார்கள்.
சிரமமின்றி தரிசனம் செய்ய பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு வலியநடை பந்தலில் தனிவழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தரிசனம் முடிந்து மலை இறங்கும் பக்தர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் கடந்த ஆண்டு வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து களபாபிஷேகத்திற்கான சந்தனம் வாங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சந்தனத்தை அரைக்க 3 அரவை எந்திரங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த எந்திரங்கள் மூலம் தற்போது சந்தனம் அரைக்கப்பட்டு களபாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சபரிமலையில் ஏற்கனவே 40 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது தினமும் 1 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.
- சபரிமலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பு.
1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.
2. அவதார நோக்கமான மகிஷி சம்ஹாரம் முடிந்ததும், சின் முத்திரைக்காட்டி யோக பட்டம் தரித்து தவக்கோலத்தில் அமர்ந்த ஐயப்பன், தவத்தின் நிறைவாக, பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார். அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
3. ஆதிகாலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை மகர சங்கராந்தி, அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன. அதனால்தான் இன்று சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
4. ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோகபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவர் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து, நான்கு வகையான முத்திரைகளைக் காட்டுபவர் என்கிறது பூதநாததோ பாக்யானம், தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரை தரித்தும், கிருக நாரீயபீட ஆசனத்தில் யோகப் பிராண முத்திரையுடனும், குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடும் அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும் வீற்றிருந்து அருள்கிறார் ஐயப்பன்.
5. ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயர் வந்ததன் காரணமாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. பந்தளராஜன் மகனாக வளர்ந்த மணிகண்டன், அவதார நோக்கம் முடித்து, பந்தளராஜனை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தது.
அந்த சமயத்தில் கலங்கி நின்ற தனது வளர்ப்புத் தந்தையிடம் நான் இனி வனத்தில் வாசம் செய்வேன். என்னை காண வேண்டும் என நீங்கள் நினைத்தால், கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியே வர வேண்டும். வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான் என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார்.
தன் மைந்தன் மணிகண்டனைப் பார்க்க சென்ற போதெல்லாம் பந்தளராஜன் காடு, மலைக்களைக் கடக்க மிகவும் சிரமப்பட்டார். அப்போது ஐயனே, அப்பனே என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகளே இணைந்து ஐயன், அப்பன் ஐயப்பன் என்றாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.
வழிநடை சரணங்கள்
சுவாமியே ஐயப்போ- ஐயப்போ சுவாமியே
பகவானே பகவதியே- பகவதியே பகவானே
தேவனே தேவியே- தேவியே தேவனே
வில்லாளி வீரனே- வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே- வில்லாளி வீரனே
பகவான் சரணம்- பகவதி சரணம்
பகவதி சரணம்- பகவான் சரணம்
தேவன் சரணம்- தேவி சரணம்
தேவி சரணம்- தேவன் சரணம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு- சபரிமலைக்கு பள்ளிக்கட்டு
பாத பலம்தா- தேக பலம்தா
தேக பலம்தா- பாத பலம்தா
கல்லும் முள்ளும்- காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்- குண்டும் குழியும்
தாங்கி விடப்பா- ஏந்தி விடப்பா
ஏந்தி விடப்பா- தாங்கி விடப்பா
தூக்கி விடப்பா- ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம்- தூக்கி விடப்பா
சாமி பாதம் ஐயன் பாதம்- ஐயன் பாதம் சாமி பாதம்
யாரைக்காண- சாமியை காண
சாமியை கண்டால்- மோட்சம் கிட்டும்
கற்பூர ஜோதி- சுவாமிக்கே
நெய் அபிஷேகம்- சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம்- சுவாமிக்கே
முத்திரைத் தேங்காய்- சுவாமிக்கே
காணிப்பொன்னும் சாமிக்கே- வெற்றிலை அடக்கம் சாமிக்கே
கதலிப்பழம் சாமிக்கே- விபூதி அபிஷேகம் சாமிக்கே
கட்டுக்கட்டு- இருமுடிக்கட்டு
யாரோட கட்டு- சாமியோட கட்டு
சாமிமாரே- ஐயப்பமாரே
ஐயப்பமாரே- சாமிமாரே
பம்பா வாசா- பந்தள ராஜா
பந்தள ராஜா- பம்பா வாசா
சாமி அப்பா ஐயப்பா- சரணம் அப்பா ஐயப்பா
வாரோம் அப்பா ஐயப்பா- வந்தோம் அப்பா ஐயப்பா
பந்தள ராஜா ஐயப்பா- பம்பா வாசா ஐயப்பா
கரிமலை வாசா ஐயப்பா- கலியுக வரதா ஐயப்பா
- எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும்.
- போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19 தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும்படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.
2. துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.
3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும்.
ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்தில் இருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.
5. மலைக்குச் செல்ல கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழு பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சாரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.
7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.
8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
10. எண்ணெய் தேய்த்து குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.
11. மற்றவர்களிடம் பேசும் பொழுது, 'சாமி சரணம்' எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் 'சாமிசரணம்' எனச் சொல்ல வேண்டும்.
12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.
13. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.
14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் 'நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்' என்று சொல்லக்கூடாது.
பயணம் புறப்படும் பொழுது 'போய் வருகிறேன்' என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.
15. மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறு சுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.
16. மாலை அணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.
17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக்காவது அன்னமிடுதல் மிக்க அருள் பாலிக்கும்.
18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்ப மார்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டிய திருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.
19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும். எனவே எந்த பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். மாதவிலக்கான பெண்களை காணக்கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.
20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.
22. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்தில் இருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையில் இருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.
23. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.
24. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.
25. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.
26. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பில் இருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
27. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
28. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக்கொள்ள வேண்டும்.
29. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களில் எல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.
30. ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன் மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியில் இருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செய்கிறார்கள்.
என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டுகளிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.
31. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.
32. யாத்திரை இனிது நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.
- இன்று மாலை வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது.
- இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பூஜை காலங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நாளை (16-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் மேல் சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார்.
பின்பு இரவு 7 மணிக்கு சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோவில்களின் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதிரியும், மாளிகை புரம் கோவில் மேல் சாந்தி யாக வாசுதேவன் நம்பூதிரியும் பதவி ஏற்கிறார்கள். இன்று மாலை வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.
அதன் பிறகு நாளை (16-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்ப தத்தன் ஆகியோர் முன்னிலையில் புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.
கோவிலின் நடை திறக்கப்பட்டதும் நிர்மால்ய தரிசனமும், அதிகாலை 3:30 மணிக்கு கணபதி ஹோமமும் நடைபெறும்.
அவை முடிந்ததும் அதிகாலை 3:30 மணிக்கு நெய் அபிஷேகம் தொடங்குகிறது. தொடர்ந்து காலை 7 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும்.
பின்னர் காலை 7:30 மணிக்கு உஷ பூஜை நடைபெறுகிறது. அது முடிந்ததும் காலை 8:30 மணி முதல் 11 மணி வரை மீண்டும் நெய் அபிஷேகம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் 11:30 மணி வரை அஷ்டாபி ஷேகமும், பகல் 12:30 மணிக்கு உச்ச பூஜையும் நடைபெறும். அதன் பிறகு பிற்பகல் ஒரு மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும்.
மாலை 6:30 மணிக்கு சிறப்பு தீபாரா தனையும், இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபி ஷேகமும், இரவு 9:30 மணி முதல் அத்தாள பூஜையும் நடைபெறும். பின்பு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.
மண்டல பூஜை காலத்தில் இந்த பூஜைகள் அனைத்தும் தினமும் நடைபெறும். அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை என தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகின்றனர்.
ஸ்பாட் புக்கிங் மூலம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது அதன் நகலை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போட்டும் அவர்கள் கொண்டுவரலாம்.
ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்குவதற்காக பம்பையில் 7 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் எரிமேலி மற்றும் வண்டி பெரியாரிலும் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் செயல்படுகின்றன.
பக்தர்கள் வரக்கூடிய வாகனங்களை நிறுத்த நிலக்கல், பம்பை மலை உச்சி, சக்குபள்ளம் ஆகிய 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இந்த ஆண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
பம்பையில் பக்தர்கள் வரக்கூடிய கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வருவதற்காக நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சங்கிலி தொடர் போன்று பஸ்கள் தொடர்ச்சி யாக இயக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் இயக்கப்படும் தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் பம்பை வரை சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கிறது.
மேலும் பக்தர்கள் தங்கு வதற்காக பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் நடைப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பம்பையில் 7 ஆயிரம் பேர் தங்கும் வகை யில் 9 நடை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சன்னிதானத் தில் 10 ஆயிரம் பேர் தங்கும் வகையிலும், நிலக் கல்லில் 8 ஆயிரம் பேர் தங்கும் வகையிலும் நடை பந்தல்கள் அமைக்கப்பட்டு இருக்கின் றன.
அது மட்டுமின்றி சபரி மலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு யாத்திரை செல்லக்கூடிய பக்தர்களுக்கு வழங்கு வதற்காக 3 ஆயிரம் இரும்பு தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்களுக்கு தண்ணீர் நிரப்பி விநியோகிக்கப்படும்.
பத்தர்கள் மலையில் இருந்து இறங்கும்போது அந்த பாட்டிலை திருப்பி கொடுத்து விட வேண்டும். இதேபோல் பக்தர்களுக்கு சுக்கு தண்ணீர் வழங்குவ தற்காக சரங்குத்தி முதல் சன்னிதானம் வரை 60 கவுண்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன.
மேலும் பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்க பம்பையில் இருந்து சன்னிதானம் வரையிலான மலை பாதையில் பல இடங்களில் மருத்துவ சிகிச்சை மையங்கள் இருக் கின்றன. மேலும் பக்தர்கள் அமருவதற்காக ஆயிரத் துக்கும் மேற்பட்ட இரும்பு நாற்காலிகள் வைக்கப்பட் டுள்ளன.
இந்தநிலையில் சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை முடிந்துவிட்டது. அடுத்த மாதத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
ஆன்லைன் முன்பதிவு செய்த நாளில் வர முடியாத பக்தர்கள், தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யப்படும் முன்பதிவு டிக்கெட்டுகள் ஸ்பாட் புக்கிங் செய்யக்கூடிய பக்தர்களுக்கு வழங்கப்படும்.
மண்டல பூஜை நாளை தொடங்குவதை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் இன்றே வரத்தொடங்கினர். இதனால் எரிமேலி மற்றும் பம்பையில் பக்தர்கள் கூட்ட மாகவே காணப்பட்டது. மதியம் ஒரு மணி முதல் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு மலை யேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக் கப்பட்டார்கள்.
பக்தர்களை ஒழுங்கு படுத்தி அனுப்புதல் மற்றும் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சபரிமலையில் பணியமர்த்தப்பட்டு உள்ள னர். மேலும் அதிவிரைவு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி கமாண்டோ வீரர்களும் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது.
- எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் 'சின்' முத்திரை.
சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள்.
சபரிமலையில் அருளும் ஐயப்பன், தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். 'சித்' என்றால் அறிவு எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.
எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த 'சின்' முத்திரையாகும். இந்த முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்ணாரக் கண்டு தரிசிப்பதால், பிறவிப் பயனை அடைந்த மகிழ்ச்சி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் நடை அடைக்கப்படும் போதும், கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அந்த விபூதி, 'தவக்கோல விபூதி' என்று அழைக்கப்படுகிறது.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு 'தவக்கோலம்' என்று பெயர்.
அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்குமாம்.
மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது, உலகத்தின் பார்வை அந்த கோவிலுக்குள் படும் வேளையில் ஐயப்பனின் தவக்கோலம் கலைவதாக நம்பிக்கை.
அடுத்த நிமிடம் கோவிலில் ஏற்றிய விளக்கும் அணைந்துவிடும். மனித மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதனால் தான் ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், எப்போதும் ஐயப்பனின் திருநாமங்களை சத்தம் போட்டு சரணகோஷமாக சொல்கிறார்கள்.
இவ்வாறு ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி, பக்தி அதிர்வை ஏற்படுத்தும்.
இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால்கூட அவர்களது கவனத்தையும் ஐயப்பனை நோக்கி திரும்ப வைக்கும்.
- இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
- 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
இந்த சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.
திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அடையாள சின்னத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 'சுவாமி சாட்பாட்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த செயலி மூலம் சபரிமலை கோவில் நடை திறப்பு, அடைப்பு, சிறப்பு பூஜை விவரம், அருகில் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முழு விவரங்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.
- புதிய நடைமுறைகளை தேவசம் போர்டு அறிவித்திருக்கிறது.
- சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்)-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை திறக்கப்படுகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகளை தேவசம் போர்டு அறிவித்திருக்கிறது.
அதன்படி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் 'ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர்.
அது மட்டுமின்றி பக்தர்கள் தங்களின் இருமுடி கட்டுகளில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் ஆகியவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்பாட் புக்கிங் கிற்கு ஆதார் அட்டை கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதேபோல் பல்வேறு புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சபரி மலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பம்பையில் நிறுத்த கோரள கோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது.
சபரிமலையில் பக்தர்களுக்கான வசதிகள் தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அனில் நரேந்திரன், முரளி கிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-
சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு விழாவில் பம்பை மலை உச்சி மற்றும் சக்குபாலம் பகுதியில் பக்தர்கள் தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். அந்த பகுதிகளில் பக்தர்கள் 24 மணி நேரமும் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
அதேநேரத்தில் சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகத் துக்கு சொந்தமான 20 பஸ்க ளையும் மலை உச்சியின் தொடக்கத்தில் நிறுத்தலாம். தேவசம்போர்டு மற்றும் காவல்துறை இணைந்து வாகன நிறுத்தத்தை கட்டுப் படுத்த வேண்டும்.
இந்த அனுமதி தற்காலிக மானது தான். போக்குவரத்து நெரிசல் அல்லது வேறு பிற பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் பம்பையில் வாகனங்கள் நிறுத்தும் முடிவை திரும்பப் பெறலாம். கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க அனைத்து அதிகாரங்களும் காவல் துறைக்கு அனுமதி வழங்கப் படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
பக்தர்களின் வாகனங்களை பம்பையில் நிறுத்த அனுமதி வழங்கினால் தங்களின் சங்கிலித்தொடர் சேவை பாாதிக்கப்படும் என்று கூறி, அந்த முடிவுக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வாதிட்டது.
ஆனால் தேவசம் போர்ட்டு தனது தரப்பு வாதத்தை வலுவாக வைத்ததால் பம்பையில் பக்தர்ளின் வாகனங்களை நிறுத்த ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- சபரிமலை பல சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது.
- கார்த்திகை மாதம் வந்தாலே, ஐயப்பனின் சரண கோஷம் தான் கேட்கும்.
கார்த்திகை மாதம் வந்தாலே, ஐயப்பனின் சரண கோஷம் பல இடங்களிலும் ஒலிக்கத் தொடங்கிவிடும். அந்த ஐயப்பனின் புகலிடமான, சபரிமலை பல சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. அதில் சில உங்களுக்காக...
ஐயப்பன் ஆட்சி செய்யும் சபரிமலையோடு சேர்த்து, அதை சுற்றிலும் 18 மலைகள் இருக்கின்றன. அவற்றில் சபரிமலை பீடம் தான் உயர்ந்தது.
ராமாயணத்துடன் தொடர்புடைய மலை இது. இந்த பகுதியில் வாழ்ந்த சபரி என்ற மூதாட்டி, ராமபிரானின் தீவிர பக்தை. அந்த மூதாட்டி, ராமரின் தரிசனம் கிடைக்க வேண்டி நாளும் இறைவனைத் தொழுது வந்தார்.
ராமபிரான் நிச்சயமாக தன்னை சந்திக்க வருவார் என்று அவர் நம்பினார். அப்படி வரும் நேரத்தில் அவருக்கு கொடுப்பதற்காக, வனத்தில் இருந்து கிடைக்கும் பழங்களில் சிறந்தவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
மேலும் அந்த பழம் இனிப்பாக இருக்கிறதா? என்பதை கடித்து ருசிபார்த்து வைப்பார். இந்த நிலையில் சீதையைத் தேடி செல்லும் வழியில் ராமனும், லட்சுமணனும் சபரியை சந்தித்தனர்.
அவர்களுக்கு தான் சேகரித்து வைத்திருந்த பழங்களைக் கொடுத்தார். எச்சில் கனியாக இருந்தாலும், தன் மீதுள்ள பக்தியால் அந்த மூதாட்டி அவ்வாறு செய்தது, ராமரை நெகிழச் செய்தது. ராமரின் தரிசனத்திற்குப் பிறகே அந்த மூதாட்டிக்கு முக்தி கிடைத்தது.
அந்த மூதாட்டியின் பெயரால் வழங்கப்படும் மலையே 'சபரிமலை'. இதில்தான் தற்போது சுவாமி ஐயப்பன் அருளாட்சி செய்து வருகிறார்.
இந்த அகிலத்தைக் காக்கும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக அன்னை லலிதா திரிபுரசுந்தரி இருக்கிறார். இவரை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தவமிருந்து வழிபட்டனர்.
அவர்கள் முன் தோன்றிய அம்பாளிடம், "விஸ்வரூப தரிசனம் காட்டியருள வேண்டும்" என்று மும்மூர்த்திகளும் வேண்டினர்.
அதன்படியே அவர்களுக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அம்பாள் காட்டினார். அப்போது அந்த தேவியின் இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தி இருப்பதை மும்மூர்த்திகளும் கண்டனர்.
அந்த சக்தியே, 'மகா சாஸ்தா'. அந்த சக்தி தனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று, ஒரே சமயத்தில் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனதிற்குள் நினைத்தனர்.
அவர்கள் நினைத்தது நிறைவேற அம்பிகை ஆசி கூறினார். அதன்படியே சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக ஐயப்பன் என்ற பெயரில் அவதரித்தார், சாஸ்தா.
புராண காலம் தொட்டு, சபரிமலையின் அடிவாரத்தில் உள்ள பம்பை நதிக்கரையில், முனிவர்கள் பலர் குடில் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் பம்பையில் யாகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த தலம் யாக பூமி என்றும் அழைக்கப்படுகிறது.
இன்றும் கூட இங்கு யாக பூஜை நடைபெறுவதைக் காணலாம். அப்படிப்பட்ட பம்பை நதி, ஒரு பெண்ணாக இருந்தவள். ராமனும், லட்சமணனும் சீதையைத் தேடி பல வனங்களில் சுற்றித் திரிந்தனர்.
அப்போது மதங்க முனிவர் வாழ்ந்த ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த குடிலில் நீலி என்ற பெண்ணும் இருந்தாள். அவள், முனிவருக்கு பணிவிடை செய்து வருபவள். தாழ்த்தப்பட்ட பெண்ணான தனக்கு இறைவனின் தரிசனம் கிடைக்குமா? என்று ஏங்கித் தவித்த அந்த பெண்ணை, தன் அருகே அழைத்து ஆசீர்வதித்தார்.
அதோடு "பிறப்பால் எவரும் உயர்ந்தவரும், தாழ்ந்தவரும் இல்லை. வாழும் வாழ்க்கையில்தான் அவர்கள் உயர்வும், தாழ்வும் இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தனை காலம் சேவையில் கழித்த உன்னைப் போற்றி புகழும் நிலை உனக்கு ஏற்படட்டும்" என்று வாழ்த்தினார்.
அந்த பெண்ணே, அழகான அருவியாக மாறி, புனித நதியாக பாய்ந்தாள். அதுவே தற்போதைய பம்பை நதி. இதனை 'தட்சிண கங்கை' என்றும் அழைப்பார்கள்.
சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கு முன்பு, பம்பை நதிக்கரையில் விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு 'பம்பா உற்சவம்' என்று பெயர்.
- மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
- பக்தர்களை வேகமாக ஏற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக 15-ந்தேதி மாலை கோவிலின் நடை திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல், அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதில் சரியாக கவனம் செலுத்தாததன் காரணமாக அடிக்கடி நெரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அதுபோன்று இந்த சீசனில் நடக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத் துள்ளது. அதன்படி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனின் போது தினமும் 80 ஆயிரம் பக்தர்களை மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பதினெட்டாம் படி ஏறும் பக்தர்களுக்கு உதவ தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களின் அனுபவம் வாய்ந்தவர்களுடன், முன் அனுபவம் இல்லாத போலீசாரையும் தேர்வு செய்ய முதலில் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே சபரிமலையில் பணியாற்றிய முன் அனுபவம் உள்ள போலீசாரை மட்டும் பக்தர்களை படியேற்றும் பணியில் ஈடுபடுத்த தற்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பணியாற்றிய போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் தகுதியானர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு பதினெட்டாம் படியில் பக்தர்களை வேகமாக ஏற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நான்கு ஷிப்டுகளாக பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்