search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem jail"

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 10 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மார்ச் 11-ந்தேதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அருகே உள்ள வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், குடிசைகள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது, குளத்தில் விஷம் கலப்பது போன்ற அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்களும் நடந்தது.

    இதையடுத்து இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    இதேபோல் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (55) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 3,200 பாக்கு மரங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு செடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(42) என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகளையும், வீரமணி(42) என்பவரது தோட்டத்தில் வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சென்றனர்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் ஏற்கனவே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சவுந்தர்ராஜன் என்பவரது நிலத்தில் பாக்கு மரங்களை சேதப்படுத்திய வழக்கில் தனிப்படை போலீசார் ஜேடர்பாளையம், பாகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிவராஜ் (44), பாலசுப்ரமணி (50), பழனிச்சாமி என்கிற மணி (55), விஜய் (25), பூபதி (46), பிரகாஷ் (25), மெய்யழகன் (21), தனுஷ் (20) மற்றும் 18, 19 வயது சிறுவர்கள் ஆகிய 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 9 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.

    இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.
    • போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சங்ககிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அச்செட்டிப்பள்ளி அருகே உள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் திலக். பிரபல ரவுடி.

    இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீராம் சேனா என்கிற அமைப்பின் நகர செயலாளர் மோகன்பாபு என்பவர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய ஓசூர் மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்த முனிராஜ் மகன் சசிகுமார் (24) என்பவர் நேற்று சங்ககிரி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா முன்னிலையில் சரணடைந்தார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சசிகுமார், சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இதற்கான ஆவணங்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என தெரிகிறது.

    • பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
    • இதை தொடர்ந்து நேற்று வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.

    இது பற்றி முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நேற்று முன்தினம் இந்த போராட்டம் கலவரமாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளியை சூறையாடி வாகனங்களுக்கு தீவைத்தனர். அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், தற்போது நடைபெற்றுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்களில் தெளிவு இல்லை என்பதால் இரண்டாவது முறை மாணவியின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து நேற்று வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். நேற்று மாலைவரை விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் தாளாளர், ஆசிரியைகள் உள்பட 5 பேரும் மாலையில் கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதையடுத்து 5 பேரையும் வருகிற ஆகஸ்டு 1-தேதி வரை, சேலம் மத்திய சிறையில் அடைக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 5 பேரும் இன்று அதிகாலை 2.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதையடுத்து தாளாளர் ரவிக்குமார், பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும், பள்ளி செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கிருத்திகா ஆகியோர் அருகில் உள்ள மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    • 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர்.
    • பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பார்வதி (வயது 30). இவர் முதல் கணவரை பிரிந்து ராசிபுரம் புதுப்பட்டியை சேர்ந்த பூபதி (25) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி 2 பேரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் பார்வதிக்கு முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே பார்வதி மீண்டும் கர்ப்பமானார்.

    ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர். நேற்று முன்தினம் மதியம் அவர்கள் 2 பேரும் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு வந்தனர்.

    அப்போது பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது பெண் குழந்தை இறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அந்த பகுதியில் குழி தோண்டி குழந்தையின் உடலை புதைத்தனர். இதனிடையே சிறிது நேரத்தில் மயங்கிய பார்வதி, அங்கேயே பலியானார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து மல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் குழந்தை மற்றும் பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து மனைவியை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் பொதுவெளியில் மருத்துவ விதிமுறைகளை மீறி பிரசவம் பார்த்தது மற்றும் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது பற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் புதைத்தது போன்ற குற்றத்திற்காக பூபதியை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் போலீசார், அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    தாய் இறந்த நிலையில், தந்தையை போலீஸ் கைது செய்துள்ளதால் அவர்களது குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ கட்டத்தில் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
    பாலக்கோடு:

    தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த கும்மனூர் கிராமம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முத்துராஜ் (21).

    இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கடந்த மாதம் கடத்தி சென்று விட்டதாக பெண்ணின் பெற்றோர் மாரண்டஹள்ளி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நகருக்கு கடத்தப்பட்ட பெண்ணுடன் வந்த முத்துராஜை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மாணவி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
    போச்சம்பள்ளியில் இளம்பெண்ணின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலூக அனகோடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கவுரிசங்கர் (வயது 28). இவரும், சூளகிரி அருகே உள்ள திராடி பகுதியைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் ஒன்றாக வேலை பார்த்தனர். இந்த நிலையில் கவுரி சங்கர், அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார். அவருடைய காதலை அந்த பெண் ஏற்க மறுத்து விட்டார்.  

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கவுரிசங்கர் திராடி பகுதியில் உள்ள இளம்பெண் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் பெண்கேட்டார். அப்போது பெண்ணின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கவுரிசங்கர், இளம்பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு, அவதூறு கருத்துகளை பதிவிட்டார்.

    இதுகுறித்து இளம்பெண் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கவுரிசங்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காரை வழிமறித்து டிரைவரை வெட்டிக்கொன்ற வழக்கில் கைதான 5 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40), கார் டிரைவர்.

    கடந்த 15-ந் தேதி இவர் காரில் சேலம்-திருச்செங்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல் காரை வழிமறித்து சுரேஷ்குமாரை சரிமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கொலை செய்த கும்பலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருச்செங்கோட்டில் நாமக்கல் செல்லும் சாலையில் நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் திருச்செங்கோட்டை சேர்ந்த செல்வராஜ் (28), விக்னேஷ்வரன் (26) என்பதும், இவர்கள் சிலருடன் சேர்ந்து சுரேஷ்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் உடனே போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் முன்பு திருச்செங்கோட்டை சேர்ந்த சங்கீத்குமார் (34), ஆம்னி ராஜா (30), அய்யாவு (34) ஆகியோர் நேற்று சரணடைந்தனர். அவர்கள் 5 பேரையும் திருச்செங்கோடு டவுன் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார் திருச்செங்கோடு பகுதியில் நடந்த 2 கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதும், கடந்த 2012-ம் ஆண்டு திருச்செங்கோட்டில் மீனாட்சி சுந்தரம் கொலையை முன்னின்று நடத்தியதும் தெரிய வந்தது.

    மேலும் கைதான 5 பேரும் போலீசாரிடம் கூறுகையில், சுரேஷ்குமார் எதிர்கோஷ்டியுடன் சேர்ந்து அடிக்கடி தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் எங்களை பாதுகாக்கும் வகையில், ஆட்டோ மற்றும் காரில் சென்று சுரேஷ்குமார் சென்ற காரை வழி மறித்து அவரை வெட்டி கொலை செய்ததாகவும் வாக்கு மூலத்தில் கூறி உள்ளனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது கைதான 5 பேரும் சுரேஷ்குமாருக்கு எதிரான கும்பலில் இருந்து கொண்டு பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தொழிலாளியை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது மகன்கள் மாதேஸ் (வயது 28), கிருஷ்ணா (21). இதில் மாதேஸ் கூலி வேலை செய்து வந்தார். கிருஷ்ணா வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

    இதன் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடிப்பதற்காக கிருஷ்ணா, தனது அண்ணன் மாதேசிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மாதேஸ் பணம் கொடுக்க மறுத்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணா வீட்டில் இருந்த அரிவாளால் மாதேசை சரமாரியாக வெட்டினார். இதில் உடல் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதாவும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் போலீசார் மாதேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணாவை கைது செய்தனர். கைதான அவர் தேன்கனிக்கோட்டை ஆஜர் செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கைதான தம்பி கிருஷ்ணா போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது அண்ணன் மாதேஸ் வீட்டு கணக்கு வழக்குகளை கவனித்து வந்தார். நான் அந்த பொறுப்புகளை கவனிக்கிறேன் என்று அண்ணனிடம் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். மேலும் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டதால் என்னை திட்டி வந்தார். சம்பவத்தன்று இரவு அண்ணனிடம் பணம் கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொன்றுவிட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக தெரிகிறது. 

    தளி அருகே தகராறில் மனைவியை கொன்ற கூலி தொழிலாளி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த சின்னமத கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (40).

    கடந்த 24-ந்தேதி லட்சுமி சமைக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் மனைவியை அடித்து உள்ளார். இதனால் நிலை தடுமாறி விழுந்த லட்சுமியின் தலை கட்டிலின் முனையில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குபதிவு செய்து நாகராஜை கைது செய்தார்.

    பின்னர் அவர் தேன்கனிக்கோட்டை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மேகலா மைதிலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நவதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராணி (வயது 45). இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நவதி அருகில் ராணியின் முகம், கை, கால்கள் என பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ராணி கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மேல ஆசாரப்பள்ளியை சேர்ந்த விவசாயி தேவராஜ் (60) என்பவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கைது செய்யப்பட்ட தேவராஜிக்கும், ராணிக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. ராஜா பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்ததால் தேவராஜ் அடிக்கடி ராணி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். தேவராஜ் 3 செண்ட் நிலம் வாங்கி உள்ளார். அந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு ராணி கேட்டுள்ளார். மேலும் ராணிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை தேவராஜ் கண்டித்தும் ராணி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், சம்பவத்தன்று இரவு நிலத்தை எழுதி தருகிறேன். அதற்காக ஆதார் அட்டையை எடுத்து வருமாறு போனில் கூறி உள்ளார். இதனால் ராணி ஆதார் அட்டையுடன் நவதி பகுதிக்கு சென்ற போது வேறு நபருடனான கள்ளத்தொடர்பு குறித்து 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைதான தேவராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கைதான நண்பர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜீவா நகரை சேர்ந்த பழனியின் மகன் மாணிக்கம் (வயது 22). நேற்று முன்தினம் இரவு இவர் காவேரிப்பட்டணத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் பீர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், காயத்திரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த அவரது நண்பரான சிவா (22) என்பவரை கைது செய்தனர். காவேரிப்பட்டணத்தை அடுத்த கருக்கன்சாவடி பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே நின்றிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    நண்பரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து சிவா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தன்னை கரடி என்று மாணிக்கம் கிண்டல் செய்ததால் அவரை கொன்றதாக அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
    8 வழி சாலைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் சேலம் ஜெயிலில் இன்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிப்பு தெரிவித்து காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    அப்போது 8 வழி பசுமை சாலையை எதிர்த்து அரசுக்கு எதிராக 8 வழி சாலையை அமைத்தால் 8 பேரை வெட்டி கொன்றுவிட்டு ஜெயிலுக்கு செல்வேன் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகானையும், பியூஷ் மானுஷையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர்.

    பின்னர் மன்சூர் அலிகானும், பியூஷ் மானுசும் ஜாமீன் கேட்டு ஓமலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரமேஷ் விசாரணையை 22-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    அதன்படி நேற்று ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது கடந்த மாதம் 3-ந் தேதி தும்பிப்பாடி விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் மன்சூர் அலிகான் பேசிய ஆடியோ பதிவை போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி ரமேஷ் நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    பியூஷ் மானுஷ் ஓமலூர் கோர்ட்டில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையின் பேரில் ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் சேலம்-சென்னைக்கு 8 வழி பசுமை சாலை அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என கூறி நடிகர் மன்சூர் அலிகான் சேலம் ஜெயிலில் இன்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

    காலை உணவை அவர் சாப்பிட மறுத்ததால் ஜெயில் அதிகாரிகள் அவரிடம் சமாதானம் செய்து வருகிறார்கள். இதனால் சேலம் ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×