என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Samathuva Makkal Katchi"
- அன்று நான் கொடுத்த ஒற்றை எதிர்ப்பு அறிக்கை, திமுகவின் முன்னோடிகளை என் இல்லம் நோக்கி பயணிக்கச் செய்தது.
- 16 ஆண்டுகள் அரசியல் பயணம். பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக செயல்பட்டுள்ளேன்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தது குறித்து தன்னிலை விளக்கமாக சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "1996 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அக்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்ததே என் அரசியல் பயணத்தின் துவக்கம்.
அரசியல் அனுபவம் அதிகம் இருந்த போதும், அன்று நான் கொடுத்த ஒற்றை எதிர்ப்பு அறிக்கை, திமுகவின் முன்னோடிகளை என் இல்லம் நோக்கி பயணிக்கச் செய்தது.
எந்த ஒரு சுயலாபத்திற்காகவும், சுய நலனுக்காகவும் அல்லாமல் எந்த ஒரு அரசியல் சூழ்ச்சியும் அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர்களின் கூட்டணியான தமிழ் மாநில காங்கிரஸையும் ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதன் பங்கு என்னையும், என்னைச் சார்ந்த ரசிக பெருமக்களையும், தமிழக மக்களையும் சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன் பிறகு கலைஞர் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அழைக்கப்பட்டு முதன்முறையாக ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆனேன். அரசியல் பாடம், அரசியல் அணுகுமுறை இவை அனைத்தும் கலைஞர் அவர்களுடன் பயணித்ததில் கற்றுக் கொண்டேன். அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.
அங்கும், திமுகவில் இருந்து விலகக் காரணமாய் இருந்த சிலரைப் போல், அறிவும், ஆற்றலும் இருப்பவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிந்தித்த சிலர், புரட்சித்தலைவி அவர்களின் கட்சியில் இருந்து நான் விலக காரணமானார்கள்.
அதன் பிறகு 2007 ஆகஸ்ட் 31 இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உருவானது. 16 ஆண்டுகள் அரசியல் பயணம். பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக, என் சமத்துவ சொந்தங்களுக்கு குடும்பத் தலைவராக மக்கள் சேவையில் என்னை அர்ப்பணித்துக் கொண்டு, பல மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன்.
எந்த ஒரு பேருதவியும் இல்லாமல், நான் நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில், நேற்று வரை என் இயக்கத்தை நடத்தி மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன். அப்பழுக்கற்ற பெருந்தலைவர் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும் என செயல்பட்டிருக்கின்றேன்.
ஆனால், ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த பாராளுமன்றத் தேர்தல் ஓர் ஞானோதயமாக அமைந்தது என்றே சொல்லலாம். காரணம் தேர்தல் வரும் போதெல்லாம், எந்த கட்சியுடன் கூட்டணி, எத்தனை இடங்கள் தரப்போகிறார்கள் என்ற பேச்சு தான் மேலோங்கி நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
பதவி இருந்தால் தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மை என்றாலும், கூட்டணி, கூட்டணி என்ற பேச்சுகளும், அதற்கு மட்டும் தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் என் அமைதியை இழக்கச் செய்தது.
என் பயணத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்று பிறர் பலவிதமாக பேசினாலும், அதற்கெல்லாம் கவலைப்படாமல், நாம் மக்களுக்காக சேவை செய்ய நல்ல எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்பதை மனதில் தாங்கி, சக்திவாய்ந்த நாட்டின் வளர்ச்சியையும், நாட்டு மக்களின் நன்மையையும், இந்தியர்களின் பெருமையை உலகறியச் செய்யும் பாரத பிரதமர் மோடி அவர்களின் திறமையான ஆட்சிக்கு, மீண்டும் அப்பழுக்கற்ற பெருந்தலைவர் அவர்களின் ஆட்சி அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக்கூடாது என்று சிந்தித்தேன்.
அதன் வாயிலாக 2026 இல் தமிழகத்தில் கோலோச்சி வரும் இரு திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்திட நம் இலக்கையும், மக்களின் எண்ணங்களையும் இணைத்து பிரதிபலித்திட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக தோன்றியது.
இந்த சிந்தனை என்னை உந்திக்கொண்டிருந்ததால், மக்கள் பணியில், பதவியில் இருந்தால்தான் நம் இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை கடந்து. ஒரு மாபெரும் சக்தியாக இந்தியாவை அனைத்துத்துறைகளிலும் முன்னேற்றிச் செல்கின்ற பாரதிய ஜனதா கட்சியுடனும், பாரத பிரதமராக திரு.நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டிற்கும். நம் மாநிலத்திற்கும், நம் மொழிக்கும். நம் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்திட எண்ணி, எனது 28 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும்,
என் உழைப்பையும், என் இயக்கத்தின் சகோதரர்களின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனநா கட்சியுடன் இணைந்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்.
என் வளர்ச்சியிலும் இன்ப, துன்பங்களிலும் என்னுடன் பயணித்து, ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கும், சமத்துவ சொந்தங்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கும் நன்றி கூறி, இது என் முடிவல்ல, ஓர் வருங்கால எழுச்சியின் தொடக்கம் என்று அறிவித்து, மக்கள் பணியில் மேலும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன்" என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
- 6 வருடம் தனியாக கட்சி நடத்தியுள்ளேன்.
- 1996-ம் ஆண்டில் தி.மு.க. கூட்டணிக்கு தன்னலமின்றி பிரசாரம் செய்தது போலவே தற்போதும் பிரசாரம் செய்வேன்.
சென்னை:
பா.ஜ.க.வுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் நேற்று இணைத்துள்ளார். இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. அவரது கட்சியை சேர்ந்த சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன் எனக் கூறினார்.
மேலும், 16 வருடம் தனியாக கட்சி நடத்தியுள்ளேன். என்னை பற்றி பா.ஜ.க. அறியும். 1996-ம் ஆண்டில் தி.மு.க. கூட்டணிக்கு தன்னலமின்றி பிரசாரம் செய்தது போலவே தற்போதும் பிரசாரம் செய்வேன். பொறுப்பை எதிர்பார்த்து பா.ஜ.க.வில் சேரவில்லை. பா.ஜ.க. தலைமை சொல்லும் பணியை செய்வேன். நான் கூறிய ஒரு கருத்தை மட்டும் வைத்து விமர்சித்து வருகிறார்கள், நான் தரம் தாழ்ந்து யாரையும் விமர்சித்ததில்லை என்றார்.
- மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு இது.
- மக்கள் பணிக்கான தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பா.ஜனதாவுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது குறித்து முடிவு செய்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார்.
அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் பாரதிய ஜனதாவுடன் இணைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான நிர்வாகிகளின் முடிவை ஏற்று கட்சியை பா.ஜனதாவுடன் இணைப்பதற்கு சரத்குமார் முடிவு செய்தார்.
இதுபற்றி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், சரத்குமார் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு இணைப்பு விழா நடந்தது.
பா.ஜ.க. நிர்வாகிகள் முன்னிலையில் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜனதாவில் இணைப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
பா.ஜனதாவுடன் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு நிர்வாகிகள் ஒவ்வொருவரும் சால்வை அணிவித்தனர்.
பா.ஜ.க.வுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தது குறித்து சரத்குமார் கூறியதாவது-
பெருந்தலைவர் காமராஜரை போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் நலன் கருதியும் சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இன்று இணைத்துள்ளேன். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும்.
பாரதிய ஜனதாவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது தொடர்பாக உங்களது கருத்துக்களையும் பெற்றுள்ளேன். உங்களது விருப்பம் மற்றும் மக்கள் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியை இணைத்துள்ளோம்.
இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவாகும். மக்கள் பணிக்கான தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
சரத்குமார் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். கடந்த 17 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த அவர் பாரதிய ஜனதாவுடன் கட்சியை இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
- தேர்தலில் சரத்குமார் போட்டியிடுகிறாரா என்பது குறித்தும் நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பின் தெரிய வரும்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
நெல்லை, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி விரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் சரத்குமார் போட்டியிடுகிறாரா என்பது குறித்தும் நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பின் தெரிய வரும்.
சமத்துவ மக்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டி?, எங்கெல்லாம் போட்டி? என்பதை சரத்குமார் நாளை அறிவிக்க உள்ளார்.
- சரத்குமாரின் முதல் விருப்ப தொகுதியாக இருக்கும் நெல்லை தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
- ஒருவேளை நெல்லை தொகுதி கிடைக்காத பட்சத்தில், அவர் விருதுநகர் தொகுதியை பா.ஜனதா கூட்டணியில் கேட்டு பெறுவதற்கு ஆயத்தமாகி உள்ளார்.
நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதி நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
இந்த பாராளுமன்ற தொகுதியில் நாடார் சமுதாயத்தினரின் வாக்கு சதவீதம் அதிகம் என்பதால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அதிக அளவில் வழங்கப்படும்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் கூட்டணி பலத்தை அதிகரிக்க ஒவ்வொரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தங்களது கட்சிகளை முன்னிறுத்தி கூட்டணியில் சேர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
அந்த வகையில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
அவர் பா.ஜனதா கூட்டணியில் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி, கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி என 2 தொகுதிகள் கேட்டதாகவும், இது தவிர ஒரு ராஜ்ய சபா பதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் நெல்லை தொகுதியை சரத்குமார் குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தொகுதியில் நாடார் சமுதாய ஓட்டுக்கள் வெற்றியை தீர்மானிக்கும் என்பதாலும், ஏற்கனவே இங்கு கடந்த தேர்தல்களில் அவர் களம் கண்டுள்ளார் என்பதாலும் அவருக்கு நெல்லை தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை மனதில் வைத்தே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரத்குமார் நெல்லையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளையும் தேர்தலுக்கு தயாராகுமாறு முடுக்கி விட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் சரத்குமார் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிந்துவிடும். ஆனாலும் அவர் நெல்லை தொகுதியை அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை நெல்லை தொகுதி கிடைக்காத பட்சத்தில், அவர் விருதுநகர் தொகுதியை பா.ஜனதா கூட்டணியில் கேட்டு பெறுவதற்கு ஆயத்தமாகி உள்ளார். மேலும் காமராஜரின் சொந்த மாவட்டமான விருதுநகர் தொகுதி கிடைக்கும் பட்சத்தில் அங்கு தனது மனைவியான ராதிகா சரத்குமாரை நிறுத்தலாமா? என்று அவர் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
ஏற்கனவே சரத்குமார் விருதுநகரில் சுமார் 12 ஏக்கர் இடத்தில் தனது சொந்த செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்து கொடுத்துள்ளார்.
மேலும் அங்கு வருங்காலத்தில் பள்ளிக்கூடம் கட்டி இலவச கல்வி வழங்க எதிர்கால திட்டத்தையும் வைத்துள்ளார்.
இதன் காரணமாக பா.ஜனதா கூட்டணி சார்பில் ஒரு தொகுதி மட்டும் வழங்கப்பட்டால், விருதுநகரை கேட்டு பெற்று அங்கு ராதிகாவை போட்டியிட வைப்பதோடு, ராஜ்ய சபா எம்.பி. பதவியை சரத்குமார் கேட்டு பெற முனைப்புடன் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, சரத்குமாரின் முதல் விருப்ப தொகுதியாக இருக்கும் நெல்லை தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நெல்லை தொகுதி தனக்கு தான் என்று முடிவு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பா.ஜனதாவின் நெல்லை பாராளுமன்ற அலுவலகத்தை அவர் திறந்துவிட்டார்.
சமீபத்தில் பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்துவந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை அவர் முன்னின்று நடத்தி தனக்கு தான் நெல்லை சீட் என்று மேலும் பிடிவாதத்தை அதிகப்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் சூழ்நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிட பல வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர் விட்டு கொடுக்க வேண்டியது தானே என்று சொந்த கட்சியினரே ஆதங்கப்படுகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் வேட்பாளர்கள் குறித்த கருத்து கேட்பு நடத்தப்பட்டது.
இதில் சுமார் 170 நிர்வாகிகள் கலந்து கொண்டு விருப்ப வேட்பாளர்களை எழுதி கொடுத்தனர்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்ட சிலரது பெயர்கள் எழுதி கொடுக்கப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு அதிகமாக இல்லை என்றாலும் அவர் எம்.பி. சீட்டை யாருக்கும் விட்டுக் கொடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே தென் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிர்வாகிகளை இன்று சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னரே சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எத்தனை? வேட்பாளர் சரத்குமாரா? அல்லது ராதிகா சரத்குமாரா என்பது தெரியவரும் என நிர்வாகிகள் கூறினர்.
- வருகிற தேர்தலில் பண நாயகத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்திற்கு அடிய பணிய வேண்டும்.
- சபாநாயகர் சட்ட மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசிக் கொண்டிருக்கிறார்.
நெல்லை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சமத்துவ மக்கள் கட்சியின் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஒரு டைரி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு மண்டே பெட்டிஷன் உள்பட பல்வேறு வழிகளில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
கூட்டணியில் சேர்வது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அ.தி.மு.க.வுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பா.ஜனதாவை சேர்ந்தவர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியா? அல்லது பா.ஜனதா கூட்டணியா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்.
இந்த கூட்டணி முடிவு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு முடிவு எடுக்கப்படும். நெல்லையில் நடந்த கூட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என கட்சி தொண்டர்கள் வலியுறுத்தினர்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி ஒரு வாரத்தில் தெரிவிப்பேன். அதுவரை காத்திருக்க வேண்டும். வருகிற தேர்தலில் பண நாயகத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்திற்கு அடிய பணிய வேண்டும்.
சபாநாயகர் சட்ட மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் சபாநாயகர் போல் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விஜயகாந்த் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை.
- தொடர்ந்து 5 படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த்.
சென்னை:
சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது:-
விஜயகாந்த் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை. விஜயகாந்த் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவார் என நம்பியிருந்தோம்.விஜயகாந்தின் சிறந்த பண்புகள், குணாதிசயங்களை நாம் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து 5 படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த் என கூறினார்.
இதன்பின்னர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற சரத்குமார் அங்கு வைக்கப்பட்டு இருந்த விஜயகாந் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதையடுத்து பிரேமலதா, விஜயகாந்த் மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
- டிசம்பர் 9-ந்தேதி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.
- சரத்குமாருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லையில் வருகிற டிசம்பர் 9-ந்தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத் குமார் கலந்து கொள்கிறார். நெல்லை வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சரத் ஆனந்த் வரவேற்று பேசினார். மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செங் குளம் கணேசன், இளை ஞரணி துணை செயலாளர் குரூஸ் திவாகர், மகளிர் அணி துணை செயலாளர் ஜெயந்திகுமார், மாநில மாணவர் அணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி, கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் அமலன், விவசாய அணி துணை செயலாளர் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முடிவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் நன்றி கூறி னார்.
இதில் மாவட்ட செயலா ளர்கள் தங்கராஜ், அரசன் பொன்ராஜ், வில்சன், தயாளன், பாஸ்கரன், ஜெய ராஜ், ஸ்டார்வின் தாஸ், பாபு, பிரபு, சிவஞான குரு நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட செயலாளர்கள், பாராளு மன்ற, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், நகராட்சி, பகுதி செயலாளர்கள், அணி செய லாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளா னோர் கலந்து கொண்டனர்.
- கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
- மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
கே.கே.நகர்:
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு வலுவாக இருந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் நேரத்தில் ஒரே நாட்டிற்குள் இருக்கும் காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருப்பது வேடிக்கையானது.
காவிரி விவகாரத்தில் அதிகமான தண்ணீர் இருக்கும்போது கர்நாடகா அரசு திறந்து விட்டு விடுகிறார்கள். ஆனால் முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு கூறினால் வழங்க மறுத்து வருகிறார்கள்.
நடிகர்கள் தற்போது எல்லாம் மாநிலங்களுக்கும் சென்று நடித்து வருகிறார்கள். எனவே அவர்கள் தான் இந்த விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லை. காவிரி பிரச்சனையை சரி செய்ய வேண்டியது அரசு தான்.
கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எல்லோரும் அப்படி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இல்லை.
இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகத்தில் இருந்தாலும் அவர்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை.
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தான் நாங்கள் அதிகம் பயணிக்கிறோம். அதற்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் குறித்து வருகிற டிசம்பர் 9-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்களுடைய கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சேர்ந்து முடிவை அறிவிப்போம்.
தேர்தல் சூடு பிடிக்க இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்கள் ஆகலாம் எனவே பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.
பாராளுமன்ற தேர்தல் பண நாயகமாக தான் இருக்கும். எம்.பி. தேர்தலில் நின்றால் ரூ.100 கோடி வேண்டும் என்கிறார்கள். சட்டசபை தேர்தல் என்றால் ரூ.25 கோடி வேண்டும் என்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா என தெரியவில்லை.
5 சதவீத வாகனங்களுக்கான வரியை உயர்த்தி இருப்பது வருத்தம் அளிக்கின்றது. மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
தேர்தலில் தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் தான் போட்டி என அண்ணாமலை கூறி இருப்பது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
- பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன்.
சென்னை :
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி சுஜிர்தா (வயது 27) பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவும், இனிமேல் இதுபோன்று எந்தவொரு மாணவிக்கும் துயரம் ஏற்படாத வகையில், நேர்மையான முறையில் விசாரணை நடப்பதற்கு, இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டுமென தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், கல்லூரிக்கு படிக்கச் சென்ற மகளை இழந்து தீராத வேதனையில் வாடும், முதுநிலை மருத்துவ கல்லூரி மாணவியின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் கோவில் நடை பராமரிப்பு பணிக்காக அடைக்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
- தமிழக அரசு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு திருவிழா பாதுகாப்புடன் நடைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கிய நிலையில் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் கோவில் நடை பராமரிப்பு பணிக்காக அடைக்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
காப்பு கட்டி பக்தர்கள் விரதமிருக்கக் கூடிய சமயத்தில் நடை மூடப்படும் என்ற அறிவிப்பும், பக்தர்கள் தனியார் வாகனங்களில் வரக்கூடாது, அரசுப்பேருந்தில் வர வேண்டும் என பல வகையான வழிபாட்டு கட்டுப்பாடுகள் அப்பகுதி மக்களின் மத நம்பிக்கையில் குழப்பம் ஏற்படுவதாக அமைந்துள்ளது. இத்தகைய சூழல் முற்றிலும் நியாயமற்றது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு திருவிழா பாதுகாப்புடன் நடைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நடிகர் விஜய் மட்டும் அல்ல மற்ற நடிகர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என அனைவரும் அரசியலுக்கு வரலாம்.
- மக்களுக்காக சேவை செய்யும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.
சென்னை:
சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள ஜிம்கானா கிளப் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எங்கள் இலக்கு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான். அப்போது கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதன்படி செயல்படுவோம். இன்னும் கூட்டணி தொடர்பான எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் கட்சி வலுவாகத்தான் இருக்கிறது. மக்கள் மாறவேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறோம். மக்கள் அறிவு, ஆற்றல், திறமை உள்ளவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஜனநாயகம் தழைக்கவேண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது. பணமில்லாத அரசியலை உருவாக்க வேண்டும். மக்கள் எங்கள் பக்கம் திரும்பி பார்க்கும் காலம் வரும் என்று நம்பிக்கையோடு பயணிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து சரத்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- காமராஜரை பின்பற்றிதான் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று பா.ஜ.க.வினர் கூறிவருகிறார்களே...
பதில்:- ஒருவர் விட்டுச்சென்ற பணியை தொடர்கிறார் என்றால், பெருந்தலைவர் காமராஜருக்குதான் அந்த புகழ் சேரும். பொற்கால ஆட்சி தந்த காமராஜரை முன்னோடியாக வைத்து ஒருவர் பின்பற்றுகிறார் என்றால் அது வரவேற்கத்தக்கது. அதில் தவறில்லை.
கேள்வி:- நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- நடிகர் விஜய் மட்டும் அல்ல மற்ற நடிகர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என அனைவரும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். குறிப்பிட்ட ஒருவர்தான் அரசியலுக்கு வரவேண்டும், வரவேண்டாம் என சொல்ல நான் தயாராக இல்லை.
கேள்வி:- நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், அவரோடு கூட்டணி வைப்பீர்களா?
பதில்:- நாங்கள் தனித்துதான் போட்டியிடப்போகிறோம். யாருடனும் கூட்டணி இல்லை. மக்களுக்காக சேவை செய்யும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். நல்லவர்கள், வல்லவர்கள், அறிவு, ஆற்றல், திறமை உள்ளவர்கள் ஆட்சி புரியவேண்டும்.
இவ்வாறு சரத்குமார் பதில் அளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்