என் மலர்
நீங்கள் தேடியது "SC"
- தெலுங்கானாவில் எஸ்.சி. பிரிவில் 59 சமூகத்தினர் உள்ளனர்.
- 59 சமூகத்தினரை மூன்று பிரிவுகளாக பிரித்து இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு பெறும் வகையில் எஸ்.சி. சமூகத்தினரை மூன்றாக வகைப்படுத்தி தெலுங்கானா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் எஸ்.சி. சமூகத்தினரை வகைப்படுத்திய முதல் மாநிலமாகியுள்ளது தெலுங்கானா.
எஸ்.சி. சமூகத்தினரை வகைப்படுத்த தெலுங்கானா அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஷானீம் அக்தர் தலைமையில் ஆணையத்தை நியமனம் செய்தது. இந்த ஆணையம் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி அடிப்படையில் 59 எஸ்.சி. சமூகத்தினரை குரூப் 1, 2, 3 என மூன்று வகையாக பிரித்தது.
எஸ்.சி. பிரிவினருக்கு வேலை மற்றும் கல்வியில் 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 15 சதவீதம் இவர்களுக்கு பிரித்து அளிக்கக்கூடிய வகையில் இந்த ஆணையம் அறிக்கை தயார் செய்து அரசிடம் தாக்கல் செய்தது.
இதனடிப்பையில் தெலுங்கானா மாநில அரசு சட்டம் நிறைவேற்றியது. அந்த சட்டத்திற்கு கடந்த 8ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். அதனடிப்படையில் இன்று அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 1-ல் எஸ்.சி. பிரிவில் உள்ள 15 சமூகத்தினருக்கு ஒரு சதவீதம் வழங்கப்படும். குரூப் 2-ல் எஸ்.சி. பிரிவில் உள்ள 18 சமூகத்தினருக்கு 9 சதவீதம் வழங்கப்படும். குரூப் 3-ல் 26 சமூகத்தினருக்கு 5 சதவீதம் வழங்கப்படும்.
- மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி முறையிட்டார்.
- இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
புதுடெல்லி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் தங்களை விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளனர். இது தொடர்பான மனுக்கள் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி முறையிட்டார். அப்போது நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்தார். ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் ராகேஷ் துவிவேதி, வேறொரு நாளில் பட்டியிலிடுமாறு கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு், இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
- கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பல மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன.
- கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
புதுடெல்லி:
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பல மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன. இவற்றில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.
இந்நிலையில், கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
வலுக்கட்டாய மதமாற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கறிஞரும், பா.ஜ.க. தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரத்தை பாதிக்கிறது. கட்டாய மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும்.
மத சுதந்திரம் இருக்கலாம், ஆனால் கட்டாய மதமாற்ற சுதந்திரம் இல்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். நவம்பர் 22-ம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தது.
- வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
- ராகுல் காந்தியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சரிதா நாயரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட்டார்.
இவர் கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் தொடர்புடையவர். மேலும் இது தொடர்பான 2 வழக்குகளில் 3 ஆண்டு தண்டனை பெற்றவர். எனவே இவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்தும், தனது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்தும் சரிதா நாயர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சரிதா நாயரின் வக்கீல் இதற்கு முன்பு நடந்த விசாரணையின்போது ஆஜராகாதது ஏன்? என்று விசாரித்தனர்.
அதற்கு தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக வீடியோ கான்பரன்சிங் விசாரணையில் பங்கேற்க இயலவில்லை என சரிதா நாயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த கோர்ட்டு, ராகுல் காந்தியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சரிதா நாயரின் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும் சரிதா நாயருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.
- பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை.
- ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் ஒரே ஒரு அம்சத்தில் சற்று முரண்பாடான கருத்தை தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு இருப்பதாக அவர் கூறினார். அதன்படி, அப்போது இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்தநிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 58 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த 58 பேரின் மனுக்களை நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியின்(ஆர்.பி.ஐ.) பரிந்துரை அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என வாதிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
வரி ஏய்ப்பைத் தடுப்பது உள்ளிட்ட பலகட்ட நன்மைகளைக் கருத்தில்கொண்டு, விரிவான ஆலோசனைக்குப் பிறகே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதை ரத்து செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அந்த நடவடிக்கையால் ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் நாளடைவில் அவை சரி செய்யப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கடந்த மாதம் 7-ந் தேதி உத்தரவிட்டனர். வழக்கு மீதான தீர்ப்பையும் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில், நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நாளை மறுநாள் (4-ந் தேதி) பணிஓய்வு பெற இருப்பதால் பண மதிப்பிழப்பு வழக்கில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வெளியிட சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி இன்று பகல் 11 மணிக்கு அந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
நீதிபதிகளின் ஒட்டுமொத்த கருத்துக்கள் அடங்கிய தீர்ப்பை நீதிபதி கவாய் வாசித்தார். தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது பொருளாதார ரீதியிலான கொள்கை முடிவாகும். எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திரும்ப பெறுங்கள் என்று இப்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது.
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை. ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி உரிய முறையில்தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசை குறை கூற இயலாது.
மத்திய அரசின் நடவடிக்கை உரிய முறையில் இருப்பதால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த 58 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும். மத்திய அரசின் நடவடிக்கை ஏற்புடையது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது.
இந்த நடவடிக்கையில் உரிய இலக்கு எட்டப்பட்டதா என்பதை விசாரிப்பது பொருத்தமானது அல்ல. அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி தருகிறது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை விசயத்தில் எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படமாட்டாது.
மத்திய அரசு பணமதிப் பிழப்பு நடவடிக்கையை ஏனோதானோவென்று உடனடியாக திடீரென்று எடுக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவுடன் சுமார் 6 மாதங்கள் மத்திய அரசு ஆய்வு செய்திருக்கிறது.
போதுமான ஆய்வுகளை செய்த பிறகுதான் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து உள்ளது. காரணமே இல்லாமல் பணமதிப்பிழப்பு செய்து உள்ளனர் என்று சொல்வதை ஏற்க இயலாது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் பெரும்பாலான நீதிபதிகளின் கருத்துக்கள் ஒருமித்த நிலையில் உள்ளன. ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் ஒரே ஒரு அம்சத்தில் சற்று முரண்பாடான கருத்தை தெரிவித்து உள்ளார்.
அவர் ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26(2) பிரிவின்படி மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரங்கள் தொடர்பாக அவர் மட்டும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு உள்ளார்.
அவர் தனது தீர்ப்பில், "500, 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்க செய்யும் நடவடிக்கை சட்ட ரீதியில் மட்டுமே இருக்க வேண்டும். வெறும் அறிவிப்பாக இருந்ததை ஏற்க இயலாது.
பணமதிப்பிழப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்ட ரீதியாக விவாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து அரசாணை மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்திருக்க கூடாது.
எனவே எனது கருத்துபடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை சட்டபூர்வமானது அல்ல. ஆனால் மத்திய அரசு நடவடிக்கையை 2016-ம் ஆண்டே எடுத்து விட்டதால் அதை திரும்ப பெற இயலாது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அதிகாரத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது. எனவே அது சட்டப்பூர்வமானது இல்லை என்பதே எனது முதன்மையான கருத்து ஆகும் என்று கூறி உள்ளார்.
என்றாலும் மற்ற 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதனால் அரசியல் சாசன அமர்வில் நான்குக்கு ஒன்று என்ற அளவில் பெரும்பாலான நீதிபதிகளின் கருத்துக்களுடன் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
- ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
- அ.தி.மு.க.வுக்கு நீயா? நானா? என்று எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எழுந்துள்ள அதிகார போட்டியின் முடிவு சுப்ரீம் கோர்ட்டின் கைகளில் உள்ளது.
புதுடெல்லி:
அ.தி.மு.க. யார் கைக்கு செல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் சூடு பிடித்து வரும் பொதுக்குழு தொடர்பான விசாரணை எகிற வைத்துள்ளது.
அ.தி.மு.க.வுக்கு நீயா? நானா? என்று எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எழுந்துள்ள அதிகார போட்டியின் முடிவு சுப்ரீம் கோர்ட்டின் கைகளில் உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு பெஞ்ச் பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைரமுத்து என்பவரும் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். பல கட்டங்களாக தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும் கேட்டனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடர்ந்ததையும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தையும் எடுத்து கூறினார்கள்.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். அந்த பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்று வைரமுத்து தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார்.
ஆனால் இருவரும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டது செயற்குழுவில் தான். அதற்கு பொதுக் குழுவின் ஒப்புதல் தேவை என்றார்.
அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளரை அந்த பொதுக்குழுவில் நீக்கி இருக்கிறார்கள்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிபதிகள் இந்த வழக்கை நீட்டிக்க விரும்பவில்லை. இந்த வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
வைரமுத்து தரப்பில் 45 நிமிடங்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மணி நேரம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 30 நிமிடம் வாதிடுவதற்கு நேரம் கேட்டுள்ளார்கள்.
இந்த பரபரப்பான கட்டத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடங்கியது. இன்று அல்லது நாளைக்குள் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் தொடுக்கப்பட்டுள்ள அனைத்து கோர்ட்டுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
- எந்தவொரு வழக்குதாரரும் நேரில் ஆஜராகி வாதிட முடியாத பட்சத்தில், காணொலிக்காட்சி வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
புதுடெல்லி:
நமது நாட்டில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள்- அதாவது ஆண் மற்றொரு ஆணையும், பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறபோது அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை.
ஆனால் ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்ரியோ சக்கரவர்த்தி- அபய் தங், டெல்லியைச் சேர்ந்த பார்த் பெரோஸ் மெஹரோத்ரா- உதய்ராஜ் ஆனந்த் ஆகிய ஆண் ஜோடிகள், தங்கள் திருமணத்துக்கு 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு திருமணச்சட்டத்தின்படி சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுத்து அவை நிலுவையில் உள்ளன.
இதே போன்ற வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளிலும் நிலுவையில் இருக்கின்றன.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி. பார்திலாலா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அவர், "தற்போது இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு முன் 2 தெரிவுகள் உள்ளன. டெல்லி ஐகோர்ட்டில் இதையொட்டிய ஒரு வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வர உள்ளதால் அதன் தீர்ப்புக்காக சுப்ரீம் கோர்ட்டு காத்திருக்கலாம் அல்லது இதையொட்டிய எல்லா வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கே மாற்றி விடலாம்" என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், " எல்லா வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கே மாற்ற வேண்டும். அப்போது இந்த விவகாரததில் ஒரு அதிகாரப்பூர்வமான உத்தரவு வரும். மத்திய அரசும் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய முடியும்" என குறிப்பிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு, ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் தொடுக்கப்பட்டுள்ள அனைத்து கோர்ட்டுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
எல்லா வழக்குகளும் ஒரே வழக்காக இணைத்து விசாரிக்கப்படும் எனவும் அறிவித்தது.
இந்த வழக்குகள் அனைத்தையும் மார்ச் மாதத்தில் விசாரணை நடத்த பட்டியலிடுமாறும் உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் கூட்டாக மத்திய அரசு அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு பிறப்பித்த பிற உத்தரவுகள்:-
* எந்தவொரு வழக்குதாரரும் நேரில் ஆஜராகி வாதிட முடியாத பட்சத்தில், காணொலிக்காட்சி வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
* இந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான குறிப்புகள், சட்ட விவரங்கள், முன்னுதாரணங்கள் இருந்தால் அவற்றை மத்திய அரசு மற்றும் வழக்குதாரர்கள் என இரு தரப்பும் பகிர்ந்து கொண்டு, சுப்ரீம் கோர்ட்டிலும் தாக்கல் செய்ய வேண்டும்.
* இது தொடர்பான எந்தவொரு வழக்கும் விடுபடாமல் இருப்பதையும், வழக்குகளின் விவரங்கள் உருவாக்கப்பட வேண்டிய தொகுப்புகளில் இணைக்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.
- இந்த பொதுநல மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
- தமிழக அரசின் கருத்தை மனுவாக தாக்கல் செய்யுங்கள்.
புதுடெல்லி :
பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் தத்தர், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோரை தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமில்லை என வாதிட்டார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த விவகாரத்தை மாநில சட்டப்பேரவையிடம் விட்டுவிட வேண்டும். மனுதாரர் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்பதால், இந்த பொதுநல மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. மனுதாரருக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு இருக்கிறது என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்துக்கு அரசியல்சாயம் பூச வேண்டாம். தமிழக அரசின் கருத்தை மனுவாக தாக்கல் செய்யுங்கள். மனுதாரர் பா.ஜ.க.வை சேர்ந்தவராக இருந்தாலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்க விரும்புகிறோம் என தெளிவுபடுத்தினர்.
அப்போது மீண்டும் வக்கீல் வில்சன், தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. மனுதாரர் தவறான தகவலை தெரிவித்துள்ளார் என்றார்.
அதற்கு நீதிபதிகள், இதுபோன்று வாதங்களை மறுத்து வாதிட பல காரணங்கள் இருக்கலாம். கோர்ட்டு விசாரணையை வேறு எதுவாகவும் மாற்றிவிட வேண்டாம். குறிப்பிட்ட மாநிலத்தில் நடைபெறும் கட்டாய மதமாற்ற புகார் குறித்து கவலைகொள்ளாது, ஒட்டுமொத்த நாட்டிலும் கட்டாய மதமாற்ற புகார் பற்றி கவலைகொள்கிறோம். ஒரு மாநிலத்தை மட்டும் குறிவைப்பதாக நினைத்து அரசியலாக்க வேண்டாம் என்றனர்.
மேலும், கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான விவகாரம் என்பதால், சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உதவ வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அப்போது மூத்த வக்கீல், வழக்கின் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற யோசனை தெரிவித்தார்.
அதையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்று, கட்டாய மதமாற்ற புகார்கள் குறித்து தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு என மாற்றியது. மேலும், இந்த பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, விசாரணையை பிப்ரவரி 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.
- தமிழக அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
- மீனவர்கள் தங்கள் படகுகளில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தியிருக்க வேண்டும்.
புதுடெல்லி:
சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க மீனவர்களுக்கு தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு தடை விதித்தது.
அரிய வகை உயிரினங்கள், மீன் குஞ்சுகள், பவளப்பாறைகள் சிக்கி கொள்வதால் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து மீனவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசின் உத்தரவு சரியானது என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. அப்போது மீனவர்கள் தரப்பில் கூறும்போது, தாங்கள் 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை தாண்டி சுருக்குமடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரும் என்று தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் கூறும்போது, தமிழ்நாட்டின் அதிகார வரம்புக்குள் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இயற்கை வளங்களும் அழிகின்றன.
ஆயிரக்கணக்கான படகுகள் செல்வதால் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால்தான் சுருக்குமடி வலையால் மீன் பிடிக்கிறார்கள் என்பதை கண்காணிப்பது மிக கடினம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான பெஞ்ச் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது:-
வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 நாட்டிக்கல் மைல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
தமிழக அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சுருக்குமடி வலையுடன் காலை 8 மணிக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்குள் மீனவர்கள் திரும்பி விட வேண்டும்.
மீனவர்கள் தங்கள் படகுகளில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தியிருக்க வேண்டும். நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் சமமான பலனை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நிபந்தனைகளை மீறி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறி உள்ளனர்.
அதே வேளையில் தமிழகத்தில் 12 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட கடல் பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்த தமிழக அரசாணைக்குள் தற்போதைய நிலையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்தனர்.
இதனால் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான பிரதான வழக்கின் விசாரணை இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.
- 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ள வழக்கு விசாரணை அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்கும் எடப்பாடி பழனிசாமி இரட்டை சிலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தனி நீதிபதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளனர்.
இதனால் சுப்ரீம் கோர்ட்டு இருவரில் யாருக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்போகிறது என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 2 அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) முறையிடுங்கள், நாங்கள் முடிவெடுக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறது.
இதையடுத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை வாதிட்ட அத்தனை அம்சங்களையும் திரட்டி திங்கட்கிழமை முறையிட எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகி வருகிறார்கள். மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், வக்கீல் பாலாஜி சீனிவாசன் உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள். சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தங்களுக்கு சாதகமாக உள்ள விஷயங்களை அலசி ஆராய்ச்சி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். திங்கட்கிழமை வழக்கு விசாரணை நடைபெறும்போது கடுமையான ஆட்சேபங்களை தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமே நீடிப்பதால் தங்கள் தரப்புக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர்களும் உரிமை கோர உள்ளனர்.
இதனால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வமும் உரிமை கோர உள்ளதால் இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவே சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்ய பிப்ரவரி 7-ந்தேதி கடைசி நாளாகும். அதற்குள் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டு விடுமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கத்தை கேட்க வேண்டும்.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவையெல்லாம் 7-ந்தேதிக்குள் முடிந்து விடுமா? என்பதும் சந்தேகமே.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் ஆபத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ள வழக்கு விசாரணை அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
- இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வர இருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் போட்டியிடுகிறார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். ஆகியோர் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் கடந்த 11.7.2022-ல் நடைபெற்ற பொதுக்குழுவின் அடிப்படையில் தங்கள் அணிக்கு தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனுவின் மீது பதில் அளிக்குமாறு ஓ.பி.எஸ். தரப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அ.தி.மு.க.வின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அளிக்கப்பட்டிருந்த பதில் மனுவில், 2022 ஜுலை 11-ந் தேதி அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால், இதுவரையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார் எனத் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவக்குமாரிடம் கேட்டபோது, இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வர இருக்கிறது. தீர்ப்பு வந்ததும் அதற்கு தகுந்தாற்போல் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
- மேகதாது திட்டத்தை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை தொடங்க அரசு தயாராக உள்ளது.
- மேகதாது அணை கட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய சாத்தியமில்லை.
பெங்களூரு:
கர்நாடகம்-தமிழ்நாடு எல்லையில் ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்து அதற்காக முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடிக்கடி டெல்லி சென்று மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாது அணை கட்டும் திட்டத்தை தொடங்கும் முன்பாகவே, முந்தைய அரசு பல தவறுகளை செய்திருந்தது. அதனால் தற்போது மேகதாது திட்டம் பிரச்சினையில் சிக்கி உள்ளது. அன்றைய அரசு மேகதாது திட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியது. தற்போது மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் மேகதாது திட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேகதாது திட்டத்தை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை தொடங்க அரசு தயாராக உள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி கொண்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படும். மேகதாது அணைகட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய சாத்தியமில்லை.
திட்ட அறிக்கை கூடிய விரைவிலேயே அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். முந்தைய பட்ஜெட்டிலேயே மேகதாது திட்டத்திற்காக அரசு ரூ.1,000 கோடியை ஒதுக்கி இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக கூடிய விரைவில் நிதி கிடைக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.