என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sceptre"
- செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது.
- அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள்.
பாராளுமன்றத்தில் செங்கோலை அகற்றும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
'செங்கோல் என்பது கொடுங்கோலின் சின்னம் கிடையாது' 'செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம்' எந்த தமிழ் அரசரும் மக்கள் ஆட்சி மீறி ஆட்சி நடத்தவில்லை.
இது தமிழ் மண்ணின் நீதி தவறாமல் ஆட்சி நடப்பது என்பதற்கு ஆன குறியீடு தான் செங்கோல். ஆக பாராளுமன்றமும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரத பிரதமர் அதை நிறுவினார்.
கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த செங்கோலின் தன்மையும் புனிதத்துவமும் தெரியாது என்பதை அவர்கள் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது. அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
சமாஜ்வாதி காட்சியை சார்ந்தவர்கள் எதிர்க்கலாம். ஆனால் நம் தமிழகத்தைச் சார்தவர்கள் எதிர்க்கலாமா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான பொய் முகம் இன்று கிழித்தெரியப்பட்டிருக்கிறது.
தமிழும் தமிழ் கலாச்சாரமும் அவர்களின் அரசியலுக்காக தான் அவர்களின் உணர்வுகளுக்காக அல்ல!.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாராளுமன்றம் கலைநயமிக்க கட்டிட கலையில் கட்டப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். நீதி தவறாத ஆட்சி நடைபெறும் இடத்தில்தான் செங்கோல் இருக்கும்.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் நவபாஷாண முருகன் சிலையை வடிவமைத்த போகர் சித்தரின் சீடர் புலிப்பாணி சுவாமிகளின் பாரம்பரியத்தில் 13-வது போகர் ஆதீனமாக விளங்குபவர் பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்.
இவர் கடந்த 28-ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்து சோழர் காலத்து செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தொடர்ந்து பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடியை ஆசீர்வாதம் செய்தார். இதையடுத்து பழனிக்கு திரும்பிய புலிப்பாணி ஆதீனத்துக்கு திருஆவினன்குடி கோவில் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் சன்னதி வீதியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரத பிரதமருக்கு செங்கோல் வழங்கிய நிகழ்ச்சி மறக்க முடியாது. பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் செங்கோல் வழங்கியபோது பிரதமர் மிக எளிமையாக, சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
பாராளுமன்றம் கலைநயமிக்க கட்டிட கலையில் கட்டப்பட்டுள்ளது. எங்களை பிரதமர் அவரது வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்தார். பழனி மக்களின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த பெருமை அனைத்தும் பழனி முருகனையே சேரும்.
பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். நீதி தவறாத ஆட்சி நடைபெறும் இடத்தில்தான் செங்கோல் இருக்கும். பிரதமரை சந்தித்தபோது சித்தர் பீடங்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதனை நிறைவேற்றித் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது.
- தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை :
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ரூ.5 கோடி நிதியை குறைக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்.
செங்கோல் விவகாரத்தில் நிறைய புனைக்கதைகள் வருகிறது. புனைக்கதைகளை நம்ப வேண்டாம். தமிழக கவர்னர் புனைகதைக்கு மேலும் ஜோடித்து ஒரு கதை சொல்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை நேரு, ராஜாஜியின் வரலாற்றில் வரலாற்று ஆசிரியா்கள் எழுதியிருக்கின்றனர்.
வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதில் திருவாவடுதுறை ஆதீனம் இங்கிருந்து ரெயிலில் பயணம் செய்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி மாலையில் ஜவஹர்லால் நேருவின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேருவும் வந்து பார்த்துள்ளார். வந்த இடத்தில் இந்த செங்கோலை கொடுத்து உங்களுக்கு நினைவு பரிசாக தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதனை நேருவும் வாங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் நேருவுக்கு பல நூறு நினைவு பொருட்கள் வந்தன.
அந்த நினைவு பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பத்திரமாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்தார். ஆகஸ்டு 14-ந் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தான் சென்றிருந்தார். அன்று பாகிஸ்தான் நாட்டின் சுதந்திரதின நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு டெல்லி வந்தார். அதன்பின் வீட்டிற்கு சென்று விட்டு இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிக்கு இரவு 11 மணிக்கு மேல் வருகிறார். 12 மணிக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதன்பின் நேரு உரையாற்றினார். நடந்தது அவ்வளவு தான்.
அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேழையில் `நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்க கோல்' என எழுதப்பட்டிருந்தது. அதில் ஒன்றும் `வாக்கிங் ஸ்டிக்' என எழுதப்படவில்லை. வரலாற்று ஆசிரியர்கள் எழுதினால் அது வரலாறு. மற்றவர்கள் எழுதுவது எல்லாம் புனைகதைகள். அந்த செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
மணிப்பூர் கலவரங்களை நிறுத்துவதற்கு அமித்ஷா சென்றிருப்பது மகிழ்ச்சி. பிரதமர் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மவுனம் காப்பது வருத்தத்தை தருகிறது. டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது. பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் அனுப்பாதது ஏன்?.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும். வருமான வரித்துறை சோதனைகள் பெரும்பகுதி ஜோடிக்கப்பட்டவை. சில சோதனைகள் உண்மையாக இருக்கலாம். அது சோதனை முடிந்த பின் தெரியவரும். மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது.
- காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சசிதரூர் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு விடுதலை பெற்றபோது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக இது வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் நிராகரித்து உள்ளது.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்து உள்ளது. எனினும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சசிதரூர் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'செங்கோல் சர்ச்சையில் இரு தரப்பும் நல்ல வாதங்கள் எடுத்து வைக்கின்றன என்பது எனது சொந்த கருத்து. இந்த பிரச்சினை சமரசத்துக்குரியதுதான். ஏனெனில் நமது நிகழ்காலத்தின் மதிப்பீடுகளை உறுதிப்படுத்த கடந்த காலத்திலிருந்து இந்த சின்னத்தை (செங்கோல்) தழுவிக்கொள்வோம்' என குறிப்பிட்டு இருந்தார்.
- முக்கியத்துவம் வாய்ந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கையின் அருகில் இடம் பெறவிருப்பது பாராட்டுதலுக்குரியது.
- தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய விடுதலையின் அடையாளமாகவும், ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோல், பிரதமரால் நாளை திறக்கப்படவுள்ள புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவிருக்கிறது என்பது தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கையின் அருகில் இடம் பெறவிருப்பது பாராட்டுதலுக்குரியது.
புதிய பாராளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவர் அவர்களின் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிரந்தரமாக இடம்பெறுவது என்பதும், நவீன வசதிகள் கொண்ட புதிய பாராளுமன்றக் கட்டிடம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ளது என்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதனை சில எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல. இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதில் செங்கோலை இடம் பெறச் செய்த பிரதமருக்கு என்னுடைய பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- புதிய பாராளுமன்றம் திறக்கப்படும்போது மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட உள்ளது.
- செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டதாகும்.
புதுடெல்லி:
டெல்லியில் தற்போதைய பாராளுமன்ற வளாகத்தில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் செயல்படுவதற்கு கடுமையான இட பற்றாக்குறை நிலவுகிறது.
மேலும் அந்த பாராளுமன்றம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அதில் புதிய நவீன வசதிகள் எதையும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது. இதனால் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பிரதமர் மோடி முடிவு செய்தார்.
அதன்படி தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கின. 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தத்தில் ஒரே நேரத்தில் 1,272 எம்.பி.க்கள் அமர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்ள முடியும்.
புதிய பாராளுமன்ற கட்டிடம் 2 ஆண்டுகள் 5 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுவதற்கு சுமார் 1,200 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் கருதப்படுகிறது.
பழைய பாராளுமன்றம் வட்ட வடிவில் அமைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் கட்டிட கலை பாணி அதில் காணப்படுகிறது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நாளை சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவை காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக கூட்டாக அறிவித்துள்ளன. என்றாலும், திட்டமிட்டபடி திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புதிய பாராளுமன்றம் திறக்கப்படும்போது மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட உள்ளது. அந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டதாகும்.
அந்த செங்கோல் புனித நீரால் சுத்தம் செய்யப்பட்டு ஆங்கிலேயர்களிடம் வழங்கப்பட்டு, பிறகு ஆதீனம் மூலம் நேருவின் கைக்கு வந்தது. அப்போது கோளறு பதிகம் பாடப்பட்டது. இத்தகைய சிறப்புடைய அந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
ஆட்சி அதிகாரத்தின் மாற்றத்துக்கு அடையாளமாக கருதப்படும் அந்த செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைப்பதுதான் பொறுத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி முடிவு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அந்த செங்கோல் அலகாபாத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் தமிழகத்தை சேர்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனர். நாளை காலை புதிய பாராளுமன்றத்தில் நடக்கும் விழாவில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகத்தின் ராஜ மேளம் முழங்க அவர்கள் செங்கோல் சுமந்து வருவார்கள். அதை புனித நீரால் தூய்மைப்படுத்தி பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பார்கள்.
முன்னதாக நாளை காலை புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு ஹோமம் செய்து வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவை முடிந்ததும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நாளை பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். பா.ஜ.க. வின் தோழமை கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., சிவசேனா கட்சிகள் பங்கேற்கின்றன.
எதிர்க்கட்சிகளில் பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலிதளம் உள்பட பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ள வருகின்றன. வரும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும். அந்த கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும்.
- டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
- வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவன மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அந்த செங்கோல் வழங்கப்பட்டது.
டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவன மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். வரும் 28-ந் தேதி சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.
இதை முன்னிட்டு அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த செங்கோலை கங்கை புனித நீரால் புனிதப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மேலும் அந்த செங்கோலை தயாரித்தவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.
- திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு பதிகம் குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது.
- பிரிட்டன் அரசர்கள், அரசிகள் முடிசூட்டும் தங்கக் கோளத்தின் மேல் சிலுவை நிறுவப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய பாரம்பரிய நெறிமுறைகளுடன் அதிகாரப் பரிமாற்ற நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு கேட்க, ஜவஹர்லால் நேரு. மூதறிஞர் ராஜாஜியுடன் ஆலோசனை நடத்தினார். சோழ மன்னர்கள் அதிகார பரிமாற்றத்துக்கு புனித அடையாளமாக செங்கோல் பரிமாற்றம் செய்த அதே பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க ராஜாஜி ஆலோசனை கூறினார்.
மேலும், ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு 'தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசி நல்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். குருமகா சன்னிதானம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும் ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வர வித்வான் 'நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத் தினம் பிள்ளையையும் டெல்லிக்கு தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்கள்.
சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல் ஒன்று செய்து திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட் டது. புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீன கர்த்தரான குரு மகாசன்னிதானத்தைப் பார்த்து, அரசு விழாவில் தான் எந்தத் திருமுறைப்பாடல் பாடுவது எனக் கேட்க. 'கோளறு பதிகம் பாடுக' என்று சன்னிதானம் கட்டளையிட்டார்.
1947 ஆகஸ்ட் 14-ம் நாள் நள்ளிரவில், மவுண்ட்பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய தம்பிரான் முதலில் பெற்றார். செங்கோலுக்குப் புனித நீர் தெளித்து 'ஓதுவா மூர்த்தி, வேயுறு தோளிபங் கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்குகிற திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தை 'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்று முழுமையாகப் பாடி ஆசிர்வதித்து செங்கோலை ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார்.
திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு பதிகம் குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது. தமிழில் 'கோள்' என்றால் கிரகம்: 'அறு' என்றால் நீக்குவது. 'கோளறு' என்றால் கிரகங்களின் தீய விளைவுகளை அழித்தல். 'பதிகம்' என்பது பொதுவாக 10 பாடல்களைக் கொண்ட சிவபெருமானை போற்றும் பாடலாகும்.
பிரிட்டன் அரசர்கள், அரசிகள் முடிசூட்டும் தங்கக் கோளத்தின் மேல் சிலுவை நிறுவப்பட்டுள்ளது. கடவுளின் சக்தி பெறப்படுவதைக் காட்டும்விதமாக 1661-ம் ஆண்டு 2-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்காக பிரிட்டன் ராணியின் சாவரின் ஆர்ப் உருவாக்கப்பட்டது. 363 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இப்படி பல்வேறு நாடுகளின் ஆட்சி அடையாள சின்னம் குறித்தும், சோழ பேரரசு குறித்த தகவல்களும் மத்திய அரசின் விளக்கக்காட்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
- முக்கோண வடிவிலான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது.
பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளால் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது.
ஏற்கனவே உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த 1921-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் கருத்துக்களுக்கும், காலத்தின் தேவைக்கும் ஏற்ப 6 ஆண்டுகளில் 1927-ல் கட்டி முடிக்கப்பட்டது.
இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் இதில் கூடும், இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது. 1956-ம் ஆண்டில், தற்போதைய கட்டிடத்தில் 2 மாடிகள் சேர்க்கப்பட்டன. காலப்போக்கில் தேவைகள் அதிகரித்துள்ளன. இடமும் குறுகலாகிவிட்டது.
இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு, மைய மண்டபத்தில் 436 பேர் மட்டுமே அமர முடியும். கூட்டுக்கூட்டம் நடக்கும் போதெல்லாம் சுமார் 200 நாற்காலிகள் தற்காலிகமாக ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
இது தவிர, 100 ஆண்டுகளை நெருங்கும் இக்கட்டடத்தில், அவ்வப்போது புதிய மின் கேபிள்கள், சிசிடிவி, குளிரூட்டும் அமைப்புகள், ஆடியோ வீடியோ போன்ற வசதிகள் உள்ளன. தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் பலம் இழந்து காணப்படுகிறது.
இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பின்னர் இருக்கைகள் அதிகரிக்கும். அதற்கு தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் போதாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. பழைய பாராளுமன்ற கட்டிடம் 6 ஏக்கரில் சுமார் 24 ஆயிரத்து 821 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது.
ஆனால் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 18 ஏக்கரில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. புதிய கட்டிடம் இரண்டு ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் கட்டப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தை போல், புதிய கட்டிடத்தில் மத்திய மண்டபம் எதுவும் கட்டப்படவில்லை. இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களுக்கு மக்களவை பயன்படுத்தப்படுகிறது.
888 இருக்கைகள் கொண்ட மக்களவை மண்டபத்தில் மொத்தம் 1272 இருக்கையில் பொருத்தப்பட்டு உள்ளன.
உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக இருக்கைகளில் பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு சாதனங்கள், மாற்றக்கூடிய மைக்ரோ போன்கள் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் மல்டிமீடியா காட்சி வசதி உள்ளது. கேலரிகளில் எங்கு அமர்ந்தாலும் சாமானியர்கள் தெளிவாகத் தெரியும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு விசேஷ மற்றும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மொத்தம் 530 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முக்கோண வடிவிலான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த 3 வாயில்களுக்கு அருகில் ஆயிரக்கணக்கான ஆண்டு இந்திய வரலாற்றை விளக்கும் வெண்கலப் படங்கள் நிறுவப்பட்டுள்ளன. அறிவு வாயில் அருகே நாளந்தாவின் உருவங்கள். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் காட்சிகள், கர்மா வாயிலின் ஒருபுறம் கோனார்க், சக்ரா மற்றும் மறுபுறம் சர்தார், வல்லபாய் படேல், பாபாசாஹேப் அம்பேத்கார் வெண்கல சிலைகள் உள்ளன.
அனைத்து மாநிலங்களின் ஓவியங்களும் சிற்பங்களும் இதில் வைக்கப்பட்டுள்ளன. லோக்சபா பொதுச்செயலாளர் உத்சல் குமார் சிங், கட்டிட திறப்பு விழாவுக்காக, எம்.பி.,க்களுக்கு ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளார். இந்தக் கட்டிடத்தை வரும் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு பிரதமர் திறந்து வைப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்க உள்ளார். ஆனால், அழைப்புக் கடிதத்தில் ராஜ்யசபா தலைவரின் பெயர் இல்லை என்று காங்கிரஸ் எம்பி விவேக் தங்கா மறுத்துள்ளார். இந்த அட்டையில் துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவரான ஜக்தீப் தன் காட் பெயர் ஏன் இல்லை என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
- புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாக உழைத்த தொழிலாளர்களை பிரதமர் மோடி கவுரவிப்பார்.
- பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள விழாவை 19 கட்சிகள் புறக்கணித்தாலும் அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலி தளம், த.மா.கா. உள்பட பல கட்சிகள் பங்கேற்க உள்ளன.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.
என்றாலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது விரிவான தகவல்களை வெளியிட்டார்.
அமித்ஷா கூறுகையில், "1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகார பரிமாற்றம் நடந்ததை குறிப்பிடும் வகையில் பிரதமர் நேருவிடம் தமிழக செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும்" என்று தெரிவித்தார்.
புதிய பாராளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை சின்னமாக தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார். அந்த செங்கோல் பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படும் என்றும் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் தமிழக செங்கோல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த தமிழக செங்கோல் அலகாபாத் நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த செங்கோலை புதுப்பித்து டெல்லிக்கு கொண்டு வர உள்ளனர்.
அந்த செங்கோலை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் நிறுவும் வைபவம் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரத்தின் அடையாளமாக நேருவிடம் அந்த செங்கோல் எத்தகைய நிகழ்ச்சிகளுடன் வழங்கப்பட்டதோ அதே போன்ற நிகழ்ச்சிகளுடன் வருகிற 28-ந்தேதியும் விழாவை நடத்த மத்திய அரசு அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக தமிழக செங்கோலை நிறுவும் நிகழ்ச்சியை முழுக்க முழுக்க தமிழக கலாசார பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சி அதிகாரம் மாற்றங்கள் செங்கோல் வழங்கப்படுவதன் மூலமே உறுதிப்படுத்தப்பட்டது. தமிழக மூதாதையர்களின் அந்த பாரம்பரிய சிறப்பை பாராளுமன்றத்தில் நவீன முறையில் பிரதமர் மோடி நிகழ்த்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
28-ந்தேதி காலை பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அலகாபாத் மியூசியத்தில் இருந்து எடுத்து வரப்படும் அந்த செங்கோல் கங்கை நீரால் சுத்தப்படுத்தப்படும். பிறகு அதை ஆதீனங்கள் புடைசூழ பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை பகுதிக்கு எடுத்து செல்வார்கள்.
அப்போது தமிழர்களின் கலாசார சிறப்பை கொண்ட மேளதாளங்கள் இசைக்கப்படும். அந்த மேளதாளங்கள் முழங்க பிரதமர் மோடியும் அழைத்துச் செல்லப்படுவார். நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே வந்ததும் அந்த செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்படும்.
இதையடுத்து கோளறு பதிகத்தில் இடம் பெற்றுள்ள "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" என்ற பாடல் வரிகள் பாடப்படும். அந்த சமயத்தில் தமிழக செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி நிறுவுவார்.
அப்போது ஓதுவார்கள் தொடர்ந்து கோளறு பதிகம் பாடிக்கொண்டே இருப்பார்கள். நாதசுவரமும் இசைக்கப்படும். இதன் மூலம் இந்திய ஜனநாயக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக கருதப்படுகிறது.
இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாக உழைத்த தொழிலாளர்களை பிரதமர் மோடி கவுரவிப்பார். பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த விழாவை 19 கட்சிகள் புறக்கணித்தாலும் அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலி தளம், த.மா.கா. உள்பட பல கட்சிகள் பங்கேற்க உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்