என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea turtles"

    • இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
    • கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினர்.

    புதுச்சேரி:

    பசிப்பிக் கடல் பகுதியில் வாழும் ஆலிவ்ரெட்லி மற்றும் சில வகை ஆமைகள், முட்டையிடுவதற்கு இந்திய பெருங்கடல் கரை பகுதியில் வரும். அவ்வாறு காரைக்கால் கடற்கரை ஓரம் உள்ள சவுக்கு தோப்பு மணல் பரப்பில் முட்டையிட வந்தபோது, படகில் மோதியோ, வலையில் சிக்கியோ இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தது. கடந்த சில நாட்களில் 10-க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி மற்றும் பிற வகை ஆமைகள், காரைக்கால் கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கி கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.

    அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் அமைப்பினர், உடனடியாக கடற்கரைக்கு சென்று, இறந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்த 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகளை கண்டறிந்து, கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினர்.

    • வனச்சரகம் சார்பாக ஆமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே, கடலோர கூழையார் கிராமத்தில் சீர்காழி வனச்சரகம் சார்பாக ஆமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தலைமையில் கூழையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் வன உயிரின ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகனேசன் கலந்து கொண்டு மடிக்கணினி மூலம் ஆமைகள் முட்டையிடும் காட்சிகள் மற்றும் கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    குறிப்பாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரிய வகை ஆமை இனமான ஆலிவர்ரெட்லி ஆமைகள் இக்கடற்கரை பகுதிக்கு முட்டைகள் இடுவதற்காக வரும் காலமாகும்.

    இந்நேரத்தில் கடற்கரையோரம் வரும் ஆமைகளை வன விலங்குகள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். ஆமை முட்டைகள் குறித்து வனத்துறை அலுவலர்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    தொடந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் அழிந்து வரும் ஆமையினமான ஆலிவர் ரெட்லியை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர்.

    தொடர்ந்து ஆமை பொரிப்பகங்கள் உள்ள இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், கடற்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீர் கடலில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வனத்துறையிடம் கிராம மக்கள் முன் வைத்தனர்.

    முகாமில் விஏஓ பவளச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள், கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
    • 200க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    சென்னை சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இது வன ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அழுகிய நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளால், சுற்றுச்சூழல் சீர்கேடும் அடைந்து வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்றும், இன்றும் மாமல்லபுரம் சுற்றுவட்டார கடலோர மீனவர் கிராமங்களான நெம்மேலி, தேவநேரி, பட்டிபுலம், வெண்புருஷம், கொக்கிலமேடு உள்ளிட்ட கடலோரத்தில் 20க்கும் மேற்பட்ட ஆமைகள் ஆங்காங்கே செத்து கரை ஒதுங்கி கிடக்கிறது. இதை அப்பகுதி மீனவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.


    இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கிழக்கு கடற்கரை சாலை கடலோர பகுதியில், அதிகளவில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம். கடற்கரை பகுதிகளுக்கு முட்டையிட வரும் ஆமைகளுக்கு இயற்கை சூழலில் நெருக்கடி ஏற்படுவதால், அது தன் போக்கை மாற்றி மாற்று இடங்களுக்கு செல்லும் போது, கனவா வலைகள் (டிரால் நெட்) வலைகளில் அடிபட்டு மூச்சுவிட முடியாமல் இறந்தும் கரை ஒதுங்குவதாக தெரிய வந்துள்ளது.

    மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வரும் 22-ந் தேதி மீன்வளத்துறை சார்பில், இது தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது.

    இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளை, வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் கடற்கரை பகுதிகளில் புதைத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 2 கடல் ஆமைகள் மீட்கப்பட்டன.
    தூத்துக்குடி:

    கடல் ஆமை அழிந்து வரும் இனமாக உள்ளது. மன்னார்வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்களில் ஒன்றான கடல் ஆமை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனால் இந்த கடல் ஆமையை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடல் ஆமையின் ரத்தம் மற்றும் இறைச்சி பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதனால் சிலர் தடையை மீறி கடல் ஆமைகளை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் கடல் ஆமை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு உள்ள பழைய மாநகராட்சி கழிவறை கட்டிடத்தில் சோதனை செய்தனர். அங்கு 2 ராட்சத ஆமைகள் உயிரோடு இருந்தன. இதில் ஒரு ஆண் ஆமை 85 கிலோ எடையும், ஒரு பெண் ஆமை 65 கிலோ எடையும் இருந்தது. இந்த 2 ஆமைகளையும் போலீசார் மீட்டனர். 

    தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உடனடியாக வனத்துறையினர் 2 ஆமைகளையும் தூத்துக்குடி தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 ஆமைகளையும் பத்திரமாக கடலில் விட்டனர். அந்த ஆமைகள் அங்கிருந்து கடலில் நீந்தி சென்றன.

    மேலும் கடல் ஆமைகளை சட்டவிரோதமாக பிடித்து வந்து பதுக்கி வைத்தவர்கள் யார் என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் ஓரிரு ஆமை வெட்டி அதன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×