என் மலர்
நீங்கள் தேடியது "Shipping Service"
- தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம்.
- கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் வெளி நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெண்கள் உள்பட பலரும் பணியில் உள்ளனர். இவர்கள் தங்கள் பயணத்திற்கு விமான சேவையை மட்டுமே நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் விமான டிக்கெட் உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் இவர்களது பயணம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கப்பல் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலங்களாக உள்ளது. இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூர் பகுதியில் இருந்து கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடல்சார் வாரிய தலைவர் என்.எஸ்.பிள்ளை கூறுகையில், இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் ஆதரவு அளித்தால், கப்பல் சேவையை விரைவில் தொடங்க முடியும். இதற்கான டெண்டர் ஜனவரி மாதத்தில் கோரப்படும். தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம் என்றார்.
ஆயிரம் முதல் 2 ஆயிரம் பயணிகள் செல்லக்கூடிய வகையில் கப்பல் இயக்க பரிசீலித்து வருவதாகவும், பயண நாட்கள் 5 நாட்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
- சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
- இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவைச் சேர்ந்த மலையாள மக்கள் வளைகுடா நாடுகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கப்பல் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து கேரள கடல்சார் வாரியம் விழிஞ்சம், கொல்லம், பேப்பூர் மற்றும் அழிக்கால் துறை முகங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கப்பல் சேவைகளை இயக்க முடிவு செய்தது. இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.
அதன்பேரில் கப்பல் சேவைகளை தொடங்க 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கேரள கடல்சார் வாரியத் தலைவர் என்.எஸ்.பிள்ளை தலைமையில் கொச்சியில் நாளை (27-ந் தேதி) முதல் கட்ட விவாதம் நடைபெற உள்ளது. இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டால், பயண நேரம் அதிகரித்தாலும், அதிக சரக்குகளை கொண்டு செல்லமுடியும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- இலங்கை நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டம்.
- சுமார் 250 நபர்கள் பயணிக்கும் வகையில் இயக்க திட்டமிட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
இந்தியா, இலங்கை நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 10-ந்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கப்பல் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் பயணிகள், கப்பலை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இதன் காரணமாக நாகையில் இருந்து இலங்கைக்கு கூடுதலாக ஒரு கப்பல் இயக்க வேண்டும் என இந்தியா, இலங்கை நாட்டு வர்த்தகர்களிடையே கோரிக்கை எழுந்தது.
இதனை பரிசீலித்த சிவகங்கை கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம், அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் சுமார் 250 நபர்கள் பயணிக்கும் வகையில் மேலும் ஒரு புதிய கப்பலை நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்க திட்டமிட்டு உள்ளது.
இத்தகவலை நாகையில் நடந்த நாட்டிலஸ் ஷிப்பிங் கருத்தரங்க கூட்டத்தில் சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்தது.
அப்போது கடல்சார் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பணிகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் அதற்கான சிறந்த ஊதியம் உள்ளிட்டவைகள் குறித்து, மாலுமிகள், என்ஜினீயர்கள், பயனாளர்கள் மத்தியில் நாட்டிலஸ் ஷிப்பிங் நிறுவன கேப்டன், ஆர்.கே.சிங் மற்றும் சுபம் கப்பல் நிறுவன பொறுப்பாளர் கீதா ராஜராஜன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
மேலும், கடல்சார் கல்வி மற்றும் பயிற்சியை முடித்த உள்ளூர் கடலோடிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு சுற்றுலா மற்றும் வர்த்தக கப்பல்களில் வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
- மார்ச் 1-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும்.
- சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியா பாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன்துறைமுகத்துக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. வாரத்தில் 2 நாட்களுக்கு கப்பல் இயக்கப்பட்டு வந்தது.
பின்னர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 7.30 மணிக்கு நாகையில் கிளம்பி 11.30 மணிக்கு காங்கேசன் துறைமுகத்தை அடையும் கப்பல், அங்கிருந்து மறுமார்க்கத்தில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு நாகையை வந்தடைந்தது. இதனை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 28-ந்தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசி வருகிறது.
மோசனமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இன்று 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மார்ச் 1-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகை-இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.