என் மலர்
நீங்கள் தேடியது "சுசீந்திரம்"
- இந்த காட்சி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது.
- இக்காட்சியைக் காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, அலங்கார தீபாராதனை, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் 3-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சியும், இரவு 11 மணிக்கு சாமி கற்பக விருட்ச வாகனத்தில் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது வடக்கு தெருவில் கொட்டாரம் வாசலில் வைத்து கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை முருகன் ஆகிய மூவரும் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் விழாவை காண வருகின்றனர்.
உமா மகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் வாகனங்களை விநாயகரும், சுப்ரமணியரும் மூன்று முறை சுற்றி வலம் வந்து ஆசி பெறுவார்கள். பின்னர் இரு புறமாக கிழக்கே பார்த்து அனைவரும் சேர்ந்து நின்று பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். அப்போது தீபாராதனை நடைபெறும். இந்த காட்சி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது. இந்த தரிசனத்தை "மக்கள் மார் சந்திப்பு" என்றும் "மக்கள் மார் சுற்று" என்றும் கூறுவர்.
இக்காட்சியைக் காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவர். பின்னர் 7 நாட்கள் விநாயகரும், சுப்பிரமணியரும் தாய் தந்தையரின் திருத்தலத்தில் தங்கி அவர்களோடு விதவிதமான வாகனங்களில் வீதியுலா வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
- 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்திஇசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இந்தநிைலயில், 5-ம் திருவிழாவான நேற்று அதிகாலையில் கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரர், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன், கருட வாகனத்தில் பெருமாள் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுடன் வேளிமலை முருகன், மருங்கூர் சுப்பிரமணிய சாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்தனர். பிறகு வீரமார்த்தாண்ட கோவில் முன் மேற்கு நோக்கி உமா மகேஸ்வரர், பெருமாள், அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூன்று பேரும் நின்றனர். அப்போது அத்திரி முனிவரும், அனுசுயா தேவியும் வானத்தில் கருட வடிவில் வந்து தாணுமாலய சாமியை வணங்கினர். இந்த கருட தரிசனம் நிகழ்ச்சியை காண திரண்டிருந்த திரளான பக்தர்கள் பார்த்து வணங்கினர்.
விழாவில் வருகிற 5-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
- இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
- நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடக்கிறது.
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இசை, பக்தி மெல்லிசை, சொல்லரங்கம், பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் கைலாசப்பர்வத வாகன நிகழ்ச்சியும், 8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வந்த போது பேரம்பலம் திருக்கோவில் முன்பு நடராஜ பெருமான் ஆனந்தத் திருநடனம் ஆடினார். இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர்.
மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலாவரும் நிகழ்ச்சியும், சுவாமியும் அம்பாளும், அறம் வளர்த்த நாயகியும், விநாயகரும் கோவிலில் இருந்து தட்டு வாகனங்களில் புறப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும், அம்மன் தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளுவார்கள்.
அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். நான்கு ரதி வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக உலா வரும் தேர் பின்பு வெடி முழக்கத்துடன் நிலைக்கு வந்து சேரும். அதன் பின்னர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தேரோட்டத்தை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் சுசீந்திரத்திற்கு வருவார்கள்.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் துப்புரவு பணிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.
- தேரின் மேல் வானத்தில் 3 கருடர்கள் வட்டமிட்டு பறந்தன.
- அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும் 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவையொட்டி தினமும் காலை மாலை சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று காலையில் கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் தட்டு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் அறம் வளர்த்தநாயகியும் விநாயகரும் எடுத்து வரப்பட்டனர்.
பின்னர் பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும் அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினார்கள். இதைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. 'ஓம் காளி ஜெய் காளி' என்ற பக்தி கோசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது தேரின் மேல் வானத்தில் 3 கருடர்கள் வட்டமிட்டு பறந்தன.
விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர் கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சுவாமி பத்மேந்திரா, இணை ஆணையர் ஞான சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. தேரோட்ட விழாவில் புதுமணத் தம்பதியினர் பலரும் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. இதையடுத்து கோவில் 4 ரத வீதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. சாலை ஓரங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தேரேட்டத்தை காண வந்திருந்தனர் சுசீந்திரம் புறவழிச்சாலையிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர் திருவிழாவையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இன்று இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சாமி, வேளிமலை குமார சுவாமி ஆகியோர் விடை பெறும் சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் திருவிழாவான நாளை 6-ந் தேதி காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.
- பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவில் இதுதான்.
- முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது.
குமரி மாவட்டத்திலேயே மிக புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகள் முன்னாலேயே தொடங்குகிறது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவில் இதுதான்.
மகரிஷிகள், துறவியர்கள், சுற்று வட்டாரத்தை ஆண்ட சிற்றரசர்கள், முன்கால சேர, சோழ, பாண்டிய நாட்டு அரசர்கள், வேணாட்டு அரசர்கள், விஜயநகர மன்னர்கள், திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள், திருவிதாங்கூர் மன்னர்கள், முன்னாள் கோவில் நிர்வாகிகளாக இருந்த யோகஸ்தானிகர்கள், ஊர் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரால் இந்த அழகான கோவிலின் பல பாகங்கள் பல காலங்களில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
கல்வெட்டுகள்
கொன்றையடி மிகவும் பழமை வாய்ந்தது. அங்குள்ள கொன்றை மரம் 2000 வருடங்களுக்கு முன் உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியில் அறியப்பட்டது. ஆலயத்தின் உள் கருவான இந்த மையத்தை வைத்துதான் இந்த கோவில் எழுந்துள்ளது. முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது.
வடகேடம் என்ற அதில் தாணு மாலய மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். தெக்கேடம் என்ற மகாவிஷ்ணு திருவேங்கிடபெருமாளாக காட்சி தருகிறார். பாறையின் மேல் உயரமாக அமைந்துள்ள கைலாய நாதர் கோவில் மண்டபம் 5-ம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாக கல்வெட்டுகள் சாட்சியம் அளிக்கிறது.
மணிமண்டபம்
1238-ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் கண்டியூர் உண்ணி என்பவரால் கட்டப்பட்டு அதன் நித்திய செலவுக்கு உள்ள வஸ்து வகைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. அறம் வளர்த்தம்மன் கோவில் 1444-ம் ஆண்டு தேரூரில் உள்ள பள்ளியறை நாச்சியார் குடும்பத்தாரால் கட்டப்பட்டதாகும்.
வீர பாண்டியன் மணி மண்டபத்திற்கு முன்பாக மிகப்பெரிய அரிய வகை கலை சிற்பங்கள் நிறைந்த செண்பக ராமன் மண்டபம் வேணாட்டு ராஜாவான ராமவர்ம ராஜாவால் 1471-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
ராஜகோபுரம்
1545-ம் ஆண்டு மிகவும் எழில்மிக்க ராஜகோபுரம் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 1888-ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் கோபுரம் சீர் செய்யப்பட்டது. 1587-ம் ஆண்டு கோவில் நிர்வாகிகளான யோகஸ்தானிகர் தெற்கு மண்டபத்தில் புருஷோத்தமரு நீலகண்டரு என்பவரால் பெரிய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. முக்குறுணி பிள்ளையார் என்று கூறும் அந்த கணபதியின் நித்திய செலவுக்கு தேவையான வஸ்து வகைகளையும் விட்டுக் கொடுத்துள்ளார்.
அதனால் அது "நீலகண்ட விநாயகர்" என்று இப்போதும் அழைக்கப்படுகிறது. அவரது செயல்களை பெருமைப்படுத்த கோவில் மேலாளர் அலுவலகத்திற்கு முன்னால் தெற்கு பக்கமாக அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.
பெண் உருவில் விக்னேஸ்வரி விநாயகர்
கோவிலின் நவக்கிரக மண்டபத்தின் அருகில் அமைந்துள்ள நீலகண்ட விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இந்த விநாயகர் மகா கணபதி, முக்குறுணி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சுமார் 6 அடி உயரமுடைய இந்த விநாயகரின் சிலையமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. தெற்குமண்மடம் ஸ்தானிகராக விளங்கிய நீலகண்டரு என்பவர் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்ததால் அவரது பெயராலேயே நீலகண்ட விநாயகர் அழைக்கப்படுகிறார். இதேபோல் செண்பகராமன் மண்டபத்தில் விநாயகர் பெண் உருவில் காட்சி அளிக்கிறார். மண்டப தூணில் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. பெண் உருவில் இருப்பதால் இவரை விக்னேஸ்வரி விநாயகர் என அழைக்கிறார்கள். பெண் உருவில் உள்ள விநாயகரை வழிபடுவது நன்மையை கொடுக்கும்.
- பன்னிரண்டு படாகையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும்.
- புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.
புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். ஆம்! பெண்ணாசையால் சாபம் அடைந்து விமோசனம் பெற்ற இந்திரனும், கணவனை கண்கண்ட தெய்வமாக போற்றி வாழ்ந்த கற்பரசி அனுசுயாவும், பித்தனை நினைத்து மனம் பித்தாகி முடிவில் பிறை சூடிய பெருமானோடு சேர்ந்த அறம் வளர்த்த நாயகி போன்ற பெண்மணிகளின் தெய்வீக திருப்பாதங்கள் பட்ட இந்த திருத்தலத்தில் பெண்ணின் பெருமை நிலைத்து நிற்பது போன்று பெண்கள் விளங்க வேண்டும் என்பதின் அடையாளமாக மார்கழி திருவிழா தேரோட்டத்தை புதுமணத் தம்பதியினர் கண்டிப்பாக காண வேண்டும் என்பது முன்னோர் வாக்கு.
அதிலும் பன்னிரண்டு படாகையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும். சுசீந்திரம் தேர் திருவிழாவுக்கு புத்தாடை உடுத்தி புது மணத்தம்பதிகள் வருவது நமது மனதை விட்டு அகலாத காட்சியாகும்.
செண்பகராமன் மண்டபத்தில் ராமாயண காட்சிகள்
இந்தியாவின் இதிகாசங்களில் முக்கியமானது ராமாயணம். ராமா என்றால் ராமன் என்றும் யணம் என்பதற்கு வரலாறு என்றும் பொருள் ஆகும். இன்றும் ராமாயணம் இந்திய மக்களின் வாழ்வில் மிகவும் ஆழமான தாக்கம் செலுத்துகிறது.
இதனால் பல கோவில்களில் ராமாயணம் ஓவியங்களாக தீட்டப்பட்டு உள்ளது. சுசீந்திரம் கோவில் மண்டபங்களில் செண்பகராமன் மண்டபம் மிகவும் பெரியது. இந்த மண்டப சுவர்களில் ராமாயண காட்சிகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது.
- தனது கற்பின் வலிமையால் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கி அனுசுயா பாலூட்டினாள்.
- ஆதிபராசக்தியின் அருளால் மீண்டும் மும்மூர்த்திகளும் சுய உருவம் பெற்றனர்.
குமரி மாவட்டம் ஆன்மிக களஞ்சியமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சுசீந்திரத்தில் தான் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
புராண காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்ட சுசீந்திரத்தில் தவநெறியில் சிறந்து விளங்கிய அத்திரி-அனுசுயா தம்பதிகள் வசித்து வந்தனர். அனுசுயாவின் கற்பை சோதிக்கும் நோக்கில் மும் மூர்த்திகளும் வயோதிகர் வேடத்தில் வந்து யாசகம் கேட்டனர். நிர்வாணமாக உணவு பரிமாறினால்தான் உண்போம் என்றும் நிபந்தனை விதித்தனர். தனது கற்பின் வலிமையால் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கி அனுசுயா பாலூட்டினாள்.
பின்னர் ஆதிபராசக்தியின் அருளால் மீண்டும் மும்மூர்த்திகளும் சுய உருவம் பெற்றனர். அனுசுயாவின் கற்பின் மகிமையை போற்றிய மூம்மூர்த்திகளும் அத்திரி-அனுசுயா தம்பதியரின் வேண்டுதலை ஏற்று கிருதயுகத்தில் அரசமரமாகவும், திரேதா யுகத்தில் துளசியாகவும், துவாபர யுகத்தில் வில்வமரமாகவும், கலியுகத்தில் சரக்கொன்றை மரமாகவும் மாறி அருள்பாலித்து வருகின்றனர்.
அதன்படி ஒன்றின் மேல் ஒன்றாக மும்மூர்த்திகள் சுயம்புலிங்க வடிவில் வீற்றிருப்பதை ஆதி மூலஸ்தானமாகிய கொன்றையடி சன்னதியில் தற்போதும் காணமுடிகிறது. ஆண்டுகள் ஈராயிரம் கடந்த பின்பும் சரக்கொன்றை மரமானது செதில் அரிக்காமல் கறுமை நிறத்தில் காட்சியளிப்பது எங்குமே காணமுடியாத தெய்வீக காட்சியாகும். இது இந்திரன் சாபம் தீர்த்த தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு இன்றளவும் இந்திரன் அர்த்தஜாம பூஜை நடத்தி வருவதாக நம்பப்பட்டு வருகிறது.
சுசீந்திரம் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை பக்தர்கள் அனைவரும் தொட்டு வணங்கலாம் என்பது சிறப்பம்சம். மேலும், கோவிலில் உள்ள விக்னேஷ்வரி சிலையும் சிற்பியின் சிந்தனை வளத்தை எடுத்துக்கூறிக்கொண்டிருக்கிறது.
- சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றது.
- சப்தம் என்றால் 7 என்று பொருள்.
பண்டைய காலத்தில் இருந்து, மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சுசீந்திரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமானது, 'சப்தாவர்ண காட்சி' ஆகும்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கூட இந்த கோவிலை காண வருகிறார்கள். சிவன்- விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களும் ஒன்று கூடி இந்த கோவிலில் கொன்றையடியில் அருள்பாலிப்பது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அதிசயம் ஆகும்.
சப்தாவர்ணம்
கோவில் மார்கழி பெருந்திருவிழாவையொட்டி 9-ம் நாள் விழாவான இன்று (வியாழக்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது. 60 அடி உயரத்தில் 5 அடுக்கு கொண்ட சுவாமி தேர், 40 அடி உயரம் கொண்ட அம்மன் தேர் இவை தவிர 14 அடி இந்திரன் தேர் மற்றும் 28 அடி பிள்ளையார் தேரும் சுசீந்திரம் ரதவீதிகளில் வலம் வருகிறது.
மார்கழி திருவிழாவின் 3-ம் நாள் கோட்டார் விநாயகர், வேளிமலை முருகன் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசுவாமி சிலைகள் (சிவனின் மைந்தர்கள்) பெற்றோரின் தலமான சுசீந்திரத்துக்கு ஊர்வலமாக கொண்டு வருவார்கள். மைந்தர்கள் இருவரும் ஒருவாரம் தந்தையுடன் தங்கி இருந்து விழாவை சிறப்பிப்பார்கள். அவர்கள் இங்கு தங்கும் காலத்தில் தாணுமாலய சுவாமி நகர்வலம் வரும்போது அவர்களும் உடன் செல்வார்கள்.
திருவிழாவின் 9-ம் நாள் விழாவான இன்று அவர்கள் தங்கள் தந்தையை விட்டு பிரிந்து அவரவர் இருப்பிடங்களுக்கு செல்லும் காட்சியே சப்தாவர்ணம் என்று அழைக்கப்படுகிறது.
சப்தாவர்ணம் என்பது 7-வது பிரகாரத்தில் மட்டும் அதாவது சுசீந்திரம் நகரத்தின் பெரிய வீதியில் மட்டும் சுவாமிகள் எழுந்தருளுவது ஆகும். பெரிய வீதி என்பது 4 ரதவீதிகளையும் குறிக்கும். சப்தம் என்றால் 7 என்று பொருள். இதன் காரணமாக சப்தாவர்ணம் என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து பெற்றோருடன் தங்கியிருந்து விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதே மனநிலையில் தெய்வங்கள் இருக்கும் என்று பக்தர்கள் உணருகிறார்கள்.
கண்கலங்க வைக்கும்
இன்று நள்ளிரவில் ஒரு வாகனத்தில் விநாயகரும், 2 வாகனங்களில் முருகனும் எழுந்தருளுவார்கள். இன்னொரு வாகனத்தில் சிவன் எழுந்தருளுவார். பிரம்மனின் அன்ன வாகனத்தில் அம்பாள் எழுந்தருளுவார். இவர்கள் அனைவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லும் காட்சி காண வந்த பக்தர்களை கண் கலங்க வைக்கும்.
சப்தாவர்ண நிகழ்ச்சி முடிந்த உடன் பெரும்பாலான பக்தர்கள் இரவு சுசீந்திரத்தில் தங்குவார்கள். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தெப்பக் குளத்தில் நீராடி, கோவிலின் சித்திர மண்டபத்தில் நடை பெறும் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை காண செல்வார்கள். குறிப்பாக புதுமண தம்பதிகள் ஏராளமாக கூடுவார்கள்.
- மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.
- இன்று காலையில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் வாகன பவனியும், ஆன்மீக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி களும் நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெளிநாட்டினரும் தேரோட்டத்தை கண்டு ரசித்தனர். இதைத் தொடர்ந்து இரவு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் தாணுமாலய சாமியும் அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரம் பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் மருங்கூர் முருகபெருமான், கோட்டார் ஏழகரம் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசாமி ஆகியோர் எதிரே காட்சியளித்தனர். அப்போது அனைத்து தெய்வங்களுக்கும் தீபாராதனை நடந்தது. இரு முருகப்பெருமானும் விநாயகரும் தாணுமாலயசாமியை வலம் வந்து எதிரே நிற்க தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னும் அசைந்து அசைந்து செல்லுவதும் பின்னர் திரும்புவதுமாக பலமுறை நடந்தது.
இதைத் தொடர்ந்து பெண்கள் குலவையிட்டு மங்கள ஒலி எழுப்பி மேளதாளங்கள் முழங்க 3 வாகனங்களில் இருந்த சாமிகளும் கோவிலை சென்ற டைந்தனர். சப்தாவர்ணம் நிகழ்ச்சியை காண குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.அய்யப்பப் பக்தர்களும் ஏராளமானோர் கோவிலில் குவிந்திருந்தனர். இதனால் இரவும் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
சப்தாவர்ணம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பெரும்பாலான பக்தர்கள் கோவிலிலேயே தங்கினார்கள். இதைத் தொடர்ந்து இன்று காலையில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.
- சாமிக்கு மேல் உள்ள 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக உள்ளது.
- இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவனின் முகத்தோற்றம் சிவசொரூபமாகவே உள்ளது.
தாணுமாலயசாமி கோவில் கருவறையில் லிங்க வடிவமுள்ள பெருமானின் மீது சார்த்தப்படும் தங்க கவசத்தில் சுவாமியின் உருவமும், ஒன்றின்மேல் ஒன்றாக பதினான்கு சந்திரப்பிறைகளும் அதன் மீது ஆதிசேஷனாகிய பாம்பு காட்சி அளிக்கிறது.
14 நாட்களில் வருகின்ற சந்திரனின் பிறைகள் உச்சியில் சிறியதில் இருந்து தொடங்கி கீழ்பாகம் பெரிதாகி முடிவில் பவுர்ணமி போன்று இறைவனின் முகம் தெரிவதாக சந்திரனின் வளர்ச்சியை நமக்கு காட்டுகின்றது. 14 நாட்கள் கழித்து அமாவாசையான இருளை காண்கிறோம்.
இறைவன் மீது கொண்ட பக்தியால் தினந்தோறும் அவரை வழிபட்டு வருவோமானால் முடிவில் மெய்ஞானமாகிய பூரண ஒளியில் இறைவனை காண முடியும். அவரை விட்டு விலக, விலக பக்தியென்ற பேரன்பு குறையும் தருணத்தில் மாயை என்ற இருளில் மூழ்குகின்றோம் என்ற உயர்ந்த தத்துவத்தையும் நமக்கு உணர்த்துகின்றது, பிறைகள் நிறைந்த கவசக்காட்சி. இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவனின் முகத்தோற்றம் சிவசொரூபமாகவே உள்ளது.
கருவறை திருநடையில் இருந்து இறைவனை நேராக நாம் காணும் போது வலதுபுறம் சற்று தள்ளி இருப்பதை காண முடிகிறது. சிவலிங்கத்தின் அருகே இடதுபுறம் சிறிது இடைவெளியிருக்கும்
இடத்தில் அரூபமான சக்திக்கு இடமளித்து சக்தியில்லையேல், சிவமில்லை என்ற தத்துவப்படி லிங்க வடிவில் மும்மூர்த்திகளையும் செயல்பட வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார் தாணுமாலய பெருமான். சாமிக்கு மேல் உள்ள 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக உள்ளது.
- மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது.
- மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மற்றும் கேப் கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (24-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுபொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைகுளம், ஊட்டுவாள்மடம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த நேரத்தில் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. மேலும் மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தைப்பூசத்தை முன்னிட்டு காலை, மாலை வேளையில் வாகன பவனி நடக்கிறது.
- நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.
பின்னர் அங்கிருந்து அதிகாலை 5.30 மணிக்கு மேளதாளத்துடன் நெற்கதிர்களை ஊர்வலமாக கொண்டு வந்து தாணுமாலய சாமி சன்னதியில் வைப்பார்கள். அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு செய்த பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்களது வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்கள் வாழ்வும் செழிப்படையும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
இதேபோன்று கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அன்றைய தினம் தைப்பூசம் வருவதையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் காலை மற்றும் மாலை வேளையில் வாகனபவனியும் நடக்கிறது.