search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107759"

    ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று வரும் சிறுத்தைகளை பிடிக்க 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் வனச்சரகத்தில் ஆந்திர மாநிலத்தின் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளை ஒட்டி உள்ள காரப்பட்டு காப்புக்காடுகள், துருகம் காப்புக்காடுகள், ஊட்டல் வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனால் அபிகிரிப் பட்டரை, பொன்னப்பல்லி, மலையாம்பட்டு, காட்டு வெங்கடாபுரம், மத்தூர் கொல்லை, சுட்டக்குண்டா, பைரப்பள்ளி, பெங்கள மூலை போன்ற பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

    சில காலங்களுக்கு முன்பு வனப்பகுதிகளுக்கு ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டிச் சென்றால் அவற்றை சிறுத்தைகள் வேட்டையாடின. ஆனால், வெள்ளாட்டு கொட்டகைகள், மாட்டுக் தொழுவங்களுக்கு வந்து சிறுத்தை கால்நடைகளை தூக்கி செல்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாம்பட்டை சேர்ந்த வெங்கடேசன் ஆட்டுப்பட்டியில் நுழைந்த 2 சிறுத்தைகள் இரு ஆடுகளை தூக்கி சென்றன. அதேபோல் இரு நாட்களுக்கு முன்பு அபிகிரிப்பட்டறை கலைஞர் நகரை சேர்ந்த ராஜகோபால் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது ஆடு ஒன்றை சிறுத்தை தூக்கி சென்றது.

    சிறுத்தை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் வனப்பகுதி எல்லையோரக் கிராமத்தில் வசிக்கும் பயனாளிகள் ஆடுகளை வளர்ப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    எனவே, சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளனர். அபிகிரிபட்டறை, அரவகல் துருகம் ஆகிய கிராமங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கூண்டு வைத்தபோது சிறுத்தை சிக்கவில்லை.

    இந்த முறையாவது பிடிபடுமா என கண்காணித்து வருகின்றனர்.

    தொண்டாமுத்தூர் அருகே கிராமத்துக்குள் நுழைந்து ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை அடித்து கொன்ற 7 வயது பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது.
    பேரூர்:

    கோவை தொண்டாமுத்தூர் இருட்டுபள்ளம் அருகே உள்ள பச்சினாம்பதி மலையடிவார கிராமத்தில் கடந்த சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் சிறுத்தை கடந்த வாரம் பூலுவம்பட்டி கிராமத்துக்குள் நுழைந்து ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை அடித்து கொன்றது. எனவே இந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டம் எந்த பகுதியில் உள்ளது என ஆய்வு செய்தனர். அப்போது இருட்டுப்பள்ளம் அருகே உள்ள பச்சினாம்பதியில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க பச்சினாம்பதி பகுதியில் கடந்த மாதம் 26-ந் தேதி வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற விவசாயிகள் சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கி இருப்பதை பார்த்தனர். பின்னர் இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் சோழமன்னன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டனர். அப்போது இந்த சிறுத்தை 7 வயதான பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்து கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி பன்னாரி வனச்சரகத்துக்குட்பட்ட தெங்குமரகடா வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள காளிமங்கலத்தில் ஒரு சிறுத்தை சிக்கியது. தற்போது 2- வது முறையாக இந்த பகுதியில் சிறுத்தை சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    மகாரஷ்டிரா மாநிலம் நாசிக்கில் சிறுத்தை கூட்டத்திற்குள் புகுந்து தாக்கியதில் பத்திரிகையாளர்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். #leopardattack
    நாசிக்:

    மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன. இக்காடுகளில் சிறுத்தை, ஓநாய், கழுதைப் புலி மற்றும் நரி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிறுத்தை போன்ற மிருகங்கள் அருகில் உள்ள ஊருக்குள் அடிக்கடி மக்களை அச்சுறுத்தி வரும்.

    இந்நிலையில் இன்று காலை பொதுமக்கள் வசிக்கும் இடமான சவர்கார் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் காட்சியை பார்ப்பதற்கு அப்பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். வீடியோ எடுப்பதற்காக செய்தி சேனல்களும் அங்கு வந்தன.

    கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த கெய்க்வாட் என்பவரும், இரண்டு பத்திரிகையாளர்கள் வீடியோ எடுப்பதற்கும் முயற்சி செய்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சிறுத்தை பொதுமக்களை நோக்கி பாய்ந்தது. இதில் மேற்கொண்ட மூன்று பேரும் காயமடைந்தனர்.

    பின்னர் வனத்துறையினர் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேல் போராடி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தை அருகில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விடப்பட்டது. #leopardattack
    வாணியம்பாடி அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்ததால் 15 கிராம மக்கள் விடிய விடிய தூங்காமல் பீதியில் தவித்தனர்.

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் ஊராட்சி நாகலேரிவட்டம் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி சிறுத்தை ஒன்று கரும்பு தோட்டத்தில் பதுங்கியது. அப்பகுதியை கடந்த பெண் உள்பட 3 பேர் மீது அது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இத்தகவல் பரவியதை அடுத்து, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை மீது அப்பகுதியை சேர்ந்த திரளானோர் ஒன்றிணைந்து கல்வீச்சு நடத்தினர். அப்போது கூட்டத்தினர் மீது சிறுத்தை பாய்ந்து தாக்குதல் நடத்தியதில், மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

    இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மாட்டு இறைச்சி, கோழி ஆகியவற்றை அடைத்த 3 கூண்டுகளை சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்தனர். மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். 3 நாள்கள் அவர்கள் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்த போதும் அது சிக்கவில்லை.

    ஆந்திர வனப்பகுதிக்குள் சிறுத்தை தப்பி சென்று விட்டது. இனி இந்த பகுதிக்குள் சிறுத்தை வராது என்று வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்

    இந்நிலையில், சிக்கனாங்குப்பம் அருகே உள்ள அரப்பாண்டகுப்பம் கிராமத்தினுள் நேற்று அதிகாலை மீண்டும் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள மாட்டுக் கொட்டகை அருகே சிறுத்தை வந்ததைக் கண்ட மாடுகள் கத்தியது. இதனை கேட்ட கிராமத்தினர் தீப்பந்தங்களுடன் ஓடி வந்து சிறுத்தையை விரட்டினர்.

    அதைத் தொடர்ந்து, சிறுத்தை ராஜாமணிவட்டம் கிராமத்தில் புகுந்தது. அங்கு கொட்டையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகள், கன்று குட்டியை தாக்கியது.

    கன்றுக்குட்டி, மாடுகள் கத்தியதைக் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சிறுத்தையை விரட்டினர். காயமடைந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காயமடைந்த 2 மாடுகள் பரிதாபமாக இறந்தது. சிறுத்தை கடித்து இதுவரை 5 மாடுகள் இறந்துள்ளது.

    விடிய, விடிய தவித்த கிராம மக்கள்

    வாணியம்பாடியை சுற்றி தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வருவதற்கு அச்சமடைந்துள்ளனர்.

    சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியை சுற்றி உள்ள கொத்தூர், பச்சூர், சிக்கனாங்குப்பம், சங்கரபுரம், தும்பேரி, அரப்பாண்ட குப்பம், சிமுக்கம்பட்டு உள்ளிட்ட 15 கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்து விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இளைஞர்கள் கிராம வீதியில் தீப்பந்தம் கொளுத்தி வைத்திருந்தனர்.

    இன்று காலை திருப்பத்தூர் வன அலுவலர் சோழராஜன் தலைமையில் வனத்துறையினர் சிக்கனாம்குப்பம், அரபாண்டகுப்பம், ராஜாமணி வட்டம், சிமுக்கம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கேட்டறிந்தனர். பலியான மாட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

    சிறுத்தையின் கால் தடங்களை பதிவு செய்து வருகின்றனர். சிறுத்தை எந்த திசையை நோக்கி சென்றுள்ளது என்பது குறித்த ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் தானியங்கி கதவு வேலை செய்யாததால் மாட்டு இறைச்சியை சிறுத்தை தின்று விட்டு தப்பி சென்று விட்டது.அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வனத்துறையினர் மைக் மூலம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    கிராம மக்கள் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட வீட்டை விட்டு வெளியே வரமல் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    தமிழக- ஆந்திர வனத்துறை இணைந்து பிடிக்க வலியுறுத்தல்

    கிராம மக்கள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபிலை சந்தித்து சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். இந்த கிராமங்கள் அனைத்தும் ஆந்திர மாநில எல்லையில் இருப்பதால் சிறுத்தையை இங்கிருந்து விரட்டினால் ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

    நம் மாநில வனத்துறையினர் சிறுத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விட்டது இனி வராது என்கின்றனர். ஆனால் சில நாட்களில் சிறுத்தை மீண்டும் தமிழக கிராம பகுதிக்குள் புகுந்து எங்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

    இதனால் தமிழக- ஆந்திர வனத்துறையினர் கூட்டாக இணைந்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். * * * சிறுத்தை நடமாட்டம் உள்ள கிராம பகுதியில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்த காட்சி.

    வாணியம்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #Leopard

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் அருகே உள்ள நாகலேரி வட்ட பகுதியில் கடந்த 28-ந் தேதி சிறுத்தை புகுந்தது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியது.

    கரும்புத்தோட்டத்துக்கு சென்ற பொதுமக்கள் 3 பேரை சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியது.

    சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். சிலர் சிறுத்தைப்புலி இருந்த பகுதியை நோக்கி கல்வீசினர். இதனால் கோபம் கொண்ட சிறுத்தை மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் புகுந்து தாக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் உயிர் தப்பினால் போதும் என கருதி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுத்தை அவர்களை துரத்தி மேலும் 3 பேரை தாக்கியது.

    சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் கொண்டு வரப்பட்டது. அதில் மாட்டு இறைச்சி, கோழி, நாய் ஆகியவற்றை அடைத்து ஏரி பகுதியில் வைத்துள்ளனர். சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.

    வனத்துறையினர் மயக்க ஊசியுடன் சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை.

    சிறுத்தை அங்கிருந்து தப்பி காட்டுக்குள் சென்றது. இந்த நிலையில் சிக்கனாங்குப்பம் அருகே உள்ள அரப்பாண்ட குப்பம் கிராமத்திற்குள் நேற்று இரவு சிறுத்தை புகுந்தது. ரவி என்பவர் மாட்டு கொட்டகை அருகே வந்தது. அதனை கண்டதும் மாடுகள் சத்தமிட்டன. பொதுமக்கள் தீப்பந்தங்கள் கொளுத்தி சிறுத்தையை விரட்டினர். அவர்கள் விடிய விடிய தூங்காமல் கண்காணித்தனர்.

    அங்கிருந்து ஓடிய சிறுத்தை ராஜாமணிவட்டம் கிராமத்திற்கு சென்று முருகன் என்பவரது கன்றுகுட்டியை தாக்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அதனை விரட்டியடித்தனர். கன்றுகுட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    வாணியம்பாடி அருகே மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #Leopard

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் அருகே உள்ள நாகலேரி வட்ட பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை புகுந்தது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியது.

    நேற்று காலை அலமேலு என்ற பெண் மாட்டுக்கு தீவனம் எடுக்க கரும்புத் தோட்டத்துக்கு சென்றார். அப்போது சிறுத்தை சத்தமிட்டது. இதனால் திடுக்கிட்ட அந்த பெண் ஊருக்குள் சென்று பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கரும்புத்தோட்டத்துக்கு சென்றனர். பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து 3 பேரை தாக்கியது. பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அதைத்தொடர்ந்து ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். இதில் சிலர் சிறுத்தைப்புலி இருந்த பகுதியை நோக்கி கல்வீசினர்.

    இதனால் கோபம் கொண்ட சிறுத்தை மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் புகுந்து தாக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் உயிர் தப்பினால் போதும் என கருதி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுத்தை அவர்களை துரத்தியது.

    அப்போது சிறுத்தை தாக்கியதில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதுமக்கள் கலைந்து ஓடியதால் சிறுத்தை மறுபடியும் நாகலேரி முட்புதரில் புகுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் வனத்துறை அதிகாரி சோழராஜன், வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தாசில்தார் கிருஷ்ணவேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் 3 கூண்டுகள் கொண்டு வரப்பட்டது. அதில் மாட்டு இறைச்சி, கோழி, நாய் ஆகியவற்றை அடைத்து ஏரி பகுதியில் வைக்கப்பட்டது.

    மேலும் சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.

    வனத்துறையினர் மயக்க ஊசியுடன் இரவு முழுவதும் சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை. இன்று காலை கரும்பு தோட்டம், முள்புதர்களில் சிறுத்தையை தேடினர். அங்கு அது இல்லை அங்கிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. சிறுத்தை காட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளது.

    அதனை பிடிக்க தொடர்ந்து வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். பொதுமக்கள் சிறுத்தையை பார்த்தால் அதை தாக்க முயற்சி செய்யவேண்டாம். அந்த இடத்தில் இருந்து வெளியேறி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். #Leopard

    தோட்டத்தில் காட்டுப்பன்றிகளுக்கு வைத்த கம்பி வேலியில் சிறுத்தை சிக்கியதை அடுத்து அதை பாதுகாப்பாக வனத்துக்குள் விட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மங்கலம்டேம். அணையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் ரப்பர் தோட்டம், வாழை மற்றும் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.

    தோட்டங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தி வருகிறது. இதனால் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். சில விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற கம்பிவேலி அமைத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அங்குள்ள ரப்பர் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். கம்பி வேலிக்கு இடையே உள்ள ஒரு மதில் சுவர் அருகே இருந்து சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்த கரியங்கயம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் கால்நடை டாக்டர் மற்றும் மயக்க மருந்து செலுத்தும் உதவியாளருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தையால் ஓட முடியவில்லை. இதனால் மிக ஆக்ரோ‌ஷமாக இருந்தது.

    இதனையடுத்து கால்நடை டாக்டர் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுத்தை மயங்கியது. பின்னர் அதனை கூண்டுக்குள் மீட்டனர். மயங்கிய நிலையில் உள்ள சிறுத்தையை பாதுகாப்பாக வனத்துக்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  #tamilnews
    பழனி வனப்பகுதியில் தற்போது சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    பழனி:

    பழனி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.

    வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் பிற விலங்குகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு பணி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன்படி கடந்த 24-ந்தேதி பழனி, கொடைக்கானல் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    தற்போது கணக்கெடுப்பு பணிகள் முடிந்து விட்டது. இதுகுறித்து பழனி வனத்துறையினரிடம் கேட்ட போது, பாலசமுத்திரம் காப்புக்காடு, கோணவாய்க்கால் பகுதியில் சிறுத்தையின் கால்தடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களிலும் அவற்றின் நகக்கீரல்கள் பதிவாகி இருந்தன. அவற்றின் மூலம் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

    அதே போல் புலிகளின் கால்தடங்களும் வனப்பகுதியில் பதிவாகி உள்ளது. பழனி வனப்பகுதியில் தற்போது சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் யானைகள், காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்டவைகளையும் நேரில் பார்த்து கணக்கெடுத்துள்ளோம்.

    கணக்கெடுப்பின் முழு விவரம் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் மாவட்ட வன அலுவலர் பழனி, கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றனர். #tamilnews
    கடையம் அருகே சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால், கிராம மக்கள் இரவில் வெளியே நடமாட அச்சப்பட்டு வருகின்றனர். #Leopard

    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமம், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இங்கு பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியுள்ளனர்.

    வனப்பகுதியில் இருந்து அவ்வபோது ஊருக்குள் புகும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவற்றை வேட்டையாடிச் செல்கின்றன. பெத்தான்பிள்ளை குடியிருப்பு, அழகப்பபுரம், கோவிந்தபேரி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் புகுந்து ஆடுகள், நாய்களை கடித்து குதறி வருகிற‌து. சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால், கிராம மக்கள் இரவில் வெளியே நடமாட அச்சப்பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாகவே வன விலங்குகள் அதிகளவில் இப்பகுதியில் நடமாடுகின்றன. இதுவரை பெத்தான் பிள்ளை குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 8-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. அந்த சிறுத்தைகளை வனத்துறையினர் பிடித்து காரையாறு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். அதன் பின்னரும் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் காவலுக்கு இருக்கும் நாய்களை சிறுத்தை கொன்று தின்பது வழக்கமாக நடந்து வருகிற‌து.

    இந்தப் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டது. இதை வனத்துறையினர் மறுத்தனர். தொடர்ந்து சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து, அந்த கிராம மக்கள் கூறுகையில்,‘‘ பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு கிராமப் பகுதியில் உள்ள மலையடிவாரப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகழிகள் தூர்ந்து விட்டன. மின்வேலியும் செயலற்றுக்கிடக்கிறது. எனவே, வனவிலங்குகள் எளிதில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து விடுகின்றன. வனவிலங்குகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர். #Leopard

    பழனி அருகே சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் பலியானதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். #Leopard

    பழனி:

    பழனி வனப்பகுதி 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, சிறுத்தை, மான், புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.

    இவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீருக்காக இடம்பெயர்ந்து வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

    மேலும் குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி செல்வதால் பொதுமக்கள் அதனை விரட்டி வருகின்றனர். வனத்துறையினர் வன விலங்குகளை அகற்ற பல்வேறு முயற்சி மேற்கொண்டாலும் அவை இடம் பெயர்வதை முற்றிலும் தடுக்க முடிவதில்லை.

    குதிரையாறு அய்யனார் கடை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 4 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அந்த ஆடுகளை சிறுத்தை தாக்கி கொன்றதற்கான அடையாளங்கள் தென்பட்டன.

    இதனையடுத்து வனத் துறையிருக்கு தகவல் தெரிவித்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்களும் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.  #Leopard

    போடி அருகே ஆடுகளை சிறுத்தை அடித்துக்கொன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இதனையொட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    போடி மீனாட்சிபுரம் 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் திலகம். இவர் நேற்றிரவு தனது வீட்டு தோட்டத்தில் ஆடுகளை கட்டிவைத்திருந்தார். இன்று காலை பார்த்தபோது அந்த ஆடுகள் கொடூரமான நிலையில் உடல் சிதைந்து கிடந்தன.

    இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. எனவே சிறுத்தைதான் ஆடுகளை அடித்து கொன்றிருக்க கூடும் என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை மற்றும் போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்த சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தை நடமாட்ட பீதியால் கிராமமக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வால்பாறையில் சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

    வால்பாறை:

    வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் முதல்பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் மாதவி(35). தொழிலாளி.

    இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டின் பின்புறம் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் உள்ள புதருக்குள் இருந்த வந்த சிறுத்தை மாதவி மீது பாய்ந்து அவரது தலைப் பகுதியை கடித்து தாக்கியது.

    இதனை பார்த்த மாதவியின் மகன் நித்தீஷ்(4) சத்தம் போட்டான். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் சிறுத்தையை விரட்டினார்கள். பின்னர் மாதவியை மீட்டு டேன்டீ எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.தலையில் பலத்த காயம் என்பதால் அங்கும் சிகிச்சையளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    டேன்டீ நிர்வாகத்திற் குட்பட்ட சிங்கோனா பகுதியில் ஓரே மாதத்தில் 3-வது முறையாக சிறுத்தை நடைபெற்றுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். .டேன்டீ நிர்வாகமும் வனத்துறையினரும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    ×