என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை மழை"

    • அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
    • தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது‌.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப் பக்கூடல், அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் நிலவியது. இந்தநிலையில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பின்னர், மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் நல்லிக்கவுண்டன் புதூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் கிளையும், அத்தாணி- செம்புளிச்சாம்பாளையம் செல்லும் சாலையில் தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.

    மேலும், அத்தாணி கருப்பண்ணகவுண்டன் புதூர் பிரிவில் இருந்து கருப்பண்ணகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் இருந்த இலகுவான 2 மரங்கள் வேரோடு சாய்ந்து ஒரு மரம் மின்கம்பிகளின் மீதும், மற்றொரு மரம் சாலையிலும் விழுந்தது.

    இதைத் தொடர்ந்து, பவானி நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளையும், வேரோடு சாய்ந்து மின்கம்பிகளின் மீது விழுந்த மரங்களையும் அகற்றினர். ஆப்பக்கூடலில், நேற்று மாலை 3.30 மணிக்கு மேல் தூரல் மழையாக ஆரம்பித்து 30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது, அதன் பின்னரும், அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய தூரல் மழை இரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது.

    • அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
    • முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 1 மாதத்திற்கும் மேலாக கோடை மழையானது அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஓரளவுக்கு பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், பிற்பகலில் பரவலாக மழை பெய்வதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை சிறிது நேரம் பெய்தது. அங்கு அதிகபட்சமாக 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 2.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து எஸ்டேட் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. காக்காச்சியில் 10 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 8 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்தடை பாதிக்கப்பட்டு ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின. கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளாங்குளியில் சுடலைமாடசுவாமி கோவில் அருகே உள்ள மரம் சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்ற காரின் முன்பகுதி கண்ணாடி உடைந்தது. காரில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மெல்ல அதிகரித்தது.

    அதிகபட்சமாக கருப்பாநதியில் 40 மில்லிமீட்டரும், கடனா நதி நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 28 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் தண்ணீர் புகுந்தது. முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

    தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் தேங்கி கிடந்ததால் இன்று 2-வது நாளாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சிவன் தெரிவித்தபோது, 1 மணி நேரம் பெய்த கனமழைக்கு சங்கரன்கோவிலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் வாறுகால்களின் அளவு சுருங்கி விட்டது.

    கோவிலை சுற்றி உள்ள சாலைகளின் உயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோவில் இருக்கும் இடம் தாழ்வான இடம் ஆகி விட்டது. ஒவ்வொரு முறை புதிய சாலை போடும்போது சாலையை தோண்டி போடாமல் உயரமாக்கிக் கொண்டே செல்வதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதை அரசும் கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து வடிகால் வசதியை சரி செய்ததால் கோவிலுக்குள் மழை நீர் தேங்காத நிலை உருவாகும் என்றார்.

    • சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
    • கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லையை பொறுத்த வரை நேற்று 2-வது நாளாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் நேற்று மாலையில் தொடங்கி சுமார் 1 மணி நேரம் பயங்கர இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மேலும் சூறைக்காற்றும் வீசியது.

    சில இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் பாளை சமாதான புரம், கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை, சந்திப்பு, புதிய பஸ் நிலையம், பெருமாள்புரம் பகுதிகளில் பரவலாக பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. கன்னடியன் கால்வாய் பகுதியை ஒட்டிய கிராமங்க ளிலும் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 31.20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு மற்றும் மூலைக்கரைப்பட்டி யில் தலா 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அம்பை சுற்றுவட்டா ரத்தில் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைக்கப்பட்டு மின்வினியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.

    களக்காடு சுற்றுவட்டாரத்தில் பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு 9.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையினால் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    மூலைக்கரைப்பட்டி தங்கம் நகரில் மின்னல் தாக்கியது. இதனால் வீடுகளில் இருந்த மின் மீட்டர்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின் சாதனங்கள் கருகின. 50-க்கும் மேற்பட்ட மின் சாதனங்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அத்துடன் அங்குள்ள சுடலை மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பால் விற்பனை கடையில் மின்னல் தாக்கியதில் வயர்கள் கருகி தீ பற்றியது.

    இதனைத் தொடர்ந்து கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயினால் கடையில் இருந்த பொருட்கள் நாசம் அடைந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மின் சாதனங்கள் கருகியதால் பொதுமக்கள் பாதிப்படைந்து ள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. குறிப்பாக விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 23 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு செல்சினி காலனி அருணா நகர் பகுதியில் நேற்று மாலையில் மழை பெய்தபோது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த மீனாட்சி(வயது 60) என்பவர் மீது பயங்கரமாக இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

    புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய நேரம் மக்கள் வெளியில் நடமாடுவதையே தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மேகம் திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், சாமி நத்தம், சில்லாநத்தம், ஜம்புலிங்கபுரம், ராஜாவின் கோவில், தட்டப்பாறை ஆகிய கிராமங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. தட்டப்பாறையில் இடி-மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

    ஏற்கனவே கோடை மழையால் பாதிக்கப்பட்டு வந்த உப்பு உற்பத்தி, கடந்த சில நாட்களாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. பல உப்பளங்களில் பாத்திகளை தயார் செய்து உப்பு உற்பத்திக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென பெய்த மழையால் மீண்டும் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    • வருகிற 19-ந்தேதி தொடங்கும் வெயில் மே 5-ந்தேதி வரை அதிகமாக இருக்கும்.
    • தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ந்தேதி தொடங்கும்.

    சென்னை:

    சென்னையில் நேற்று திடீரென்று பலத்த மழை பெய்தது. சென்னை மேடவாக்கத்தில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10 செ.மீ. மழை பெய்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியதாவது:-

    சென்னையில் நேற்று பெய்தது சாதாரண வெப்பச்சலன இடி மழைதான். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு உருவான இடிமழை மேகங்கள் அப்படியே காற்றின் போக்கில் தெற்கு நோக்கி நகர்ந்து வந்தது.

    இந்த மழை மேகங்கள் கிட்டத்தட்ட 1,000 கி.மீ. தூரம் பயணித்து சென்னைக்கு நேற்று முற்பகல் 11 மணியளவில் நகர்ந்து வந்த போது கடற்காற்றும் உள்ளே புகுந்ததால் வலுவடைந்தது. இதனால் சென்னையில் நேற்று இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது.

    சென்னையில் இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது கோடை மழை என்பதால் முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாது. ஆனால் இன்று முதல் மழை குறைய தொடங்கும். வருகிற 19, 20, 21-ந்தேதிகளில் வெயில் உச்சம் தொடும்.

    வருகிற 19-ந்தேதி தொடங்கும் வெயில் மே 5-ந்தேதி வரை அதிகமாக இருக்கும். மே 5-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும்.

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ந்தேதி தொடங்கும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்புதான் வெயில் கொளுத்தும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகியது. தமிழகத்தில் இன்று முதல் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க கூடும்.

    வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல் , ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்பட 22 மாவட்டங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 106 டிகிரி வரை நிலவக்கூடும்.

    தமிழகத்தின் உட்புற சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வருகிற 19, 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பஅலை வீசக்கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை எதிர்ப்பார்க்கலாம்.

    வருகிற 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளி பகுதிகளில் விவசாயப் பணிகள், கட்டுமான பணிகள் போன்ற பொதுவெளி பணிகளை தவிர்க்க வேண்டும்.

    ஆன்மிக பாதயாத்திரை செல்பவர்கள், மலைப்பகுதி ஏறுபவர்கள் முற்பகல் 11 மணி முதல் 3 மணி வரையிலான காலக்கட்டத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகபடியாக நீர் சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் குறைந்தது.
    • சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியின் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இதனை தொடர்ந்து நாளை முதல் 23-ந்தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் 21-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் குறைந்தது.

    சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதேவேளையில் மதிய நேரங்களில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னையில் திடீரென்று மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
    • ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    சென்னை:

    கோடை வெயில் தாக்கம் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகமாக இருந்தது. வெப்பம் படிப்படியாக அதிகரித்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று திடீரென்று கோடை மழை பெய்தது.

    சென்னையில் இன்று காலை வெயில் அடித்தப்படி இருந்தது. சுமார் காலை 9 மணியளவில் திடீரென்று கருமேகங்கள் திரண்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடக்கத்தில் சென்னையின் சில இடங்களில் மழை பெய்தது. பின்னர் படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. அதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் திடீரென்று மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.

    சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மதுரவாயல், பூந்தமல்லி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. அதே போல் காஞ்சீ புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்தது.

    சென்னையில் கடந்த சில நாட்களில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் இன்று பெய்த மழையால் வெப்பம் அடியோடு தணிந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தின் போது இருக்கும் சூழல் இன்று நிலவியது.

    திடீர் மழை காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நிலவரப்படி சென்னை மேடவாக்கத்தில் 13 செ.மீ. மழை பெய்து உள்ளது. வளசரவாக்கத்தில் 11 செ.மீ., சாலி கிராமம், நெற்குன்றத்தில் தலா 10 செ.மீ., மணலியில் 9 செ.மீ., பாரிமுனையில் 8 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், ராஜாஅண்ணாமலைபுரத்தில் தலா 7 செ.மீ., நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 6 செ.மீ., அடையாறில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்றும், நாளையும் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் 36 செல்சியல் வரை பதிவாகக்கூடும். 

    • தமிழகத்தில் வரும் 12-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
    • தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தென் வங்கக்கடல் பகுதியில் நாளைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இதனால் தமிழகத்தில் வரும் 12-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவு தண்ணீரே வந்துகொண்டிருந்தது.
    • மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று 2-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேனி பஸ் நிலையம் உள்பட நகரின் முக்கிய இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பெரியகுளம் சாலை, மதுரை சாலையில் இருந்து நேரு சிலை சிக்னல் நோக்கி மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதால் நடந்து செல்ல முடியாத நிலையும், வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    இதேபோல் தேவதானப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, அரண்மனைபுதூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவு தண்ணீரே வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளக்கவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது.

    நேற்று மாலை அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்றும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நீரின் அளவை பொறுத்து சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனச்சரகர் அன்பழகன் தெரிவித்தார்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்திற்கு மேலும் சில நாட்கள் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.43 அடியாக உள்ளது. நீர்வரத்து 180 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2955 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.30 அடியாக உள்ளது. வரத்து 396 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 1442 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடி. வரத்து 155 கன அடி. திறப்பு 3 கன அடி, இருப்பு 40.28 மி.கன அடி. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34.40 அடி. வரத்து 7 கன அடி.

    ஆண்டிபட்டி 43, அரண்மனைபுதூர் 30.2, வீரபாண்டி 9.4, பெரியகுளம் 61, மஞ்சளாறு 43, சோத்துப்பாறை 86, வைகை அணை 22.8, போடி 12.8, உத்தமபாளையம் 54.6, கூடலூர் 9.6, பெரியாறு அணை 8, தேக்கடி 1.2, சண்முகாநதி அணை 11.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
    • கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பெய்த மழையால் திருப்பூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பலத்த மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது.

    பின்னர் இரவு 10 மணியளவில் பெய்ய ஆரம்பித்த மழை இன்று அதிகாலை 4 மணி வரை இடைவிடாமல் பெய்தது. மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் இந்த மழை நீடித்தது. குறிப்பாக திருப்பூர் மாநகர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக திருப்பூர் கலெக்டர் அலுவலக முகாம் பகுதியில் 15 செ.மீ., வரை மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, பெத்திசெட்டிபுரம், அறிவொளி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற மாநகராட்சி பணியாளர்கள் தேங்கி உள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    திருப்பூர் அறிவொளி நகர் பகுதி முழுவதுமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பெண்கள் குழந்தைகள் என ஏராளமான மக்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக அந்த பகுதி வெள்ளக்காடாக மாறி உள்ளது. மழை காரணமாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை மின்சாரம் கிடைக்கவில்லை. குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் விஷப்பூச்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பேக்கிங் அட்டைகள் டெலிவரிக்கு தயாராக இருந்த நிலையில் மழை நீர் உள்ளே புகுந்ததால் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான அட்டைகள் தண்ணீரால் சேதமடைந்துள்ளது. அதே நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கார் மற்றும் அட்டைகளை ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ தண்ணீரில் மூழ்கி என்ஜினில் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மழை நீரால் சேதம் அடைந்துள்ளது. இதேபோல் இப்பகுதியில் பல வீடுகளிலும் மழை நீர் புகுந்தது.

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் பின்புற பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருந்த 10 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அருகில் உள்ள மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சாமுண்டிபுரம், அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பெய்த மழையால் திருப்பூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.



    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-110, திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலகம்-150, திருப்பூர் தெற்கு-96, கலெக்டர் அலுவலகம்-131, அவினாசி-75, ஊத்து க்குளி-120, பல்லடம்-28, திருமூர்த்தி அணை-25. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7.7 செ.மீ., மழை பெய்துள்ளது.

    திருப்பூர் ஊத்துக்குளியில் இருந்து கதித்தமலை வழியாக காங்கயம் பாளையம் என்.எஸ். செல்லும் வழியில் உள்ள அவரக்கரை பள்ளத்தில் உள்ள பாலத்தில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் ஊத்துக்குளி அடுத்த ஆதியூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் திருவாய் முதலியூர் அருகில் உள்ள பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. 

    • தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவது ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரித்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இந்த மாதம் தொடர்ந்து வெப்பம் அதிகரிக்கும் என்று இருந்த நிலையில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    தென் தமிழகத்திலும், உள் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 20-ந்தேதி வரை கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் சூழல் ஏற்படுவதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை அதிகம் இருக்காது. ஆனால் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெப்ப அலை இருந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அதுபோல வெப்பத்தின் தாக்கம் இருக்காது. 44 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டு இருந்தது. இந்த மாதம் பரவலாக மழை பெய்யக்கூடும் என்பதால் வெயில் தாக்கம் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • களக்காடு, மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
    • சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும், பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது.

    நெல்லை மாநகரில் டவுன், பாளையங்கோட்டை, சமாதானபுரம், நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை பகுதிகளில் கனமழை கொட்டியது. இரவிலும் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பாளை சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    மாவட்டத்திலும் களக்காடு, மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வள்ளியூரில் யாதவர் தெருவில் மழை பெய்தபோது அங்குள்ள மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்ட நிலையில், அந்தநேரம் அவ்வழியாக சென்ற மாடு ஒன்று அதில் உரசியதால் மின்சாரம பாய்ந்து மாடு உயிரிழந்தது.

    சில இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ராதாபுரத்தில் போலீஸ் நிலையம் முன்பு தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் குளம்போல் தேங்கி கிடந்தது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 8 சென்டிமீட்டரும், ராதாபுரத்தில் 6 சென்டிமீட்டரும் மழை பெய்தது.

    சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் மாலையில் இதமான காற்று வீசிய நிலையில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழை மக்களை குளிர்வித்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. நம்பியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 99.54 அடியை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஊத்து எஸ்டேட்டில் 16 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 12 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி சுற்றுவட்டாரங்களில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் சாரல் மழை பெய்தது.

    ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் மாலையில் சுமார் 2 மணி நேரம் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிவகிரி, சங்கரன்கோவில் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிவகிரியில் அதிகபட்சமாக 63 மில்லிமீட்டரும், சங்கரன்கோவிலில் 53 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 26 மில்லிமீட்டரும், கடனா அணையில் 12 மில்லி மீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. குற்றாலம் அருவியில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது.

    தென்காசி மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×