என் மலர்
நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள் கட்சி"
- சராசரி அரசியல்வாதியை போல் திருமாவளவனை கணக்கு போடாதீர்கள்.
- 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெல்ல வேண்டும்.
வணிகர் தினத்தையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது.
விழாவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கிப் பேசியதாவது:-
நாங்கள் எப்போதும் வெறும் கையால் முழம் போட மாட்டோம். எத்தனை நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தலைவர்கள் வந்தாலும் எங்களுடைய களம் முற்றிலும் வேறானது. ஏ.சி. அறைக்குள் உட்கார்ந்துகொண்டு நாங்கள் அரசியல் செய்வதில்லை. சாதியவாதிகளோடும், மதவாதிகளோடும் எந்தச் சூழலிலும் கைகோர்க்க மாட்டோம். இதை வெளிப்படையாக அறிவிக்கிறோம். சராசரி அரசியல்வாதியை போல் திருமாவளவனை கணக்கு போடாதீர்கள்.
அது எந்த காலத்திலும் நடக்காது. நுழையக்கூடாது என்றால் நுழைவோம், நடக்கக்கூடாது என்றால் நடப்போம், பேசக்கூடாது என்றால் பேசுவோம், கூட்டம் போடக்கூடாது என்றால் மாநாடே நடத்துவோம். மதச்சார்பின்மையை பாதுகாக்க திருச்சியில் 31-ந்தேதி மாபெரும் பேரணியை நடத்துகிறோம்.
அ.தி.மு.க., விஜய், பா.ஜ.க. என எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் நாம் கதவுகளை திறந்து வைக்கலாம். ஆனால், அவ்வாறு எந்த கதவையும் திறந்துவைக்கவில்லை. என்னுடைய 2 எம்.பி.யை அமித்ஷாவும், மோடியும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களா?.
டெல்லியில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் என்னுடன் பேசினார். பா.ஜ.க.விற்கு அழைத்தார். பிரதமரிடம் நேரில் பேசலாம் என்றார். அவரிடம் அதெல்லாம் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு திரும்பி விட்டேன்.
மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெறுகிறோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெல்ல வேண்டும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதைவிட சனாதன சக்திகள் எந்த சூழலிலும் வலிமை பெற்றுவிடக்கூடாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் வீழ்த்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
- இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
மதுரை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் பதிவு பெற்ற அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும், 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது.
பட்டியலின, மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள எங்களது கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை செய்து தமிழகத்தில் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, ஊரக மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சி, சாதிய இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கொடி மரங்கள், கல்வெட்டு தூண்கள் அகற்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் எங்களது கட்சி கொடி மரங்களை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடி மரங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கை விரிவான விசாரணைக்காக ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
- மது அருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கும் சரத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர், ஆவாரம் பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 34). ஆட்டோ டிரைவர்.
இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமை ப்பாளராக இருந்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று சரத்குமார் அரியூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்தி கொண்டு இருந்தார். அப்பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கும் சரத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயடைந்தார். கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சரத்கு மாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக ஆஸ்பத்திரி முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அரியூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
- பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது.
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். இதன்பின்னர் பேசிய திருமாவளவன்,
திமுகவில் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதையே கேலி பேசுகிறார்கள். பாஜக, பாமக கட்சியுடன் கூட்டணி இல்லை. பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது.
இப்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜயுடன், புத்தக வெளியீட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த போது, அது தவறான யூகத்தை ஏற்படுத்தும் என்றும், இப்போது உள்ள அணி பாதிக்கப்பட்டு அது பாஜகவிற்கு சாதகமாக மாறிவிடுமோ என்பதால் அந்த விழாவைக்கூட தவிர்த்தேன். அவருடைய மனது நம்முடன் இருக்கும் என்று அப்போது விஜய் கூறினார். நான் நினைத்திருந்தால் விஜய்க்கான கூட்டணி கதவுகள் திறந்துள்ளது என்று கூறியிருக்க முடியும். ஆனால் அந்த கூட்டணி கதவையும் மூடினேன்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது என்றார்.
- நாம் தி.மு.க.வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
- எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கின்றோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலை நோக்கு பார்வை வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-
ஒரு நாள் கூட எனக்கு ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லை என்கிற நிலை தான் நீடிக்கிறது. கட்சிப் பணியில் கவனம் செலுத்த இயலாத நிலையிலும் கூட காதணி விழாவுக்கும், மஞ்சள் நீராட்டு விழாவுக்கும், இல்லத் திறப்பு, திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் பிடிவாதமாக வந்து மணிக்கணக்கிலோ அல்லது நாள் கணக்கிலோ கிடையாய் கிடந்து அழுத்தம் கொடுத்து இழுத்து செல்வதிலேயே தோழர்கள் குறியாக இருக்கிறார்கள்.
24 மணி நேரமும் உங்களோடு இருக்க வேண்டும் என்பதிலே எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால் எந்த பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது.
அலுவலகத்திலே போய் தலைமையகத்தில் காத்திருந்தால் 1 மணி நேரத்தில் பார்வையாளர்களை முடித்துவிடலாம் என்றால் ஒருநாளும் என்னால் முடியவில்லை. அதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமண விழா போன்றவற்றுக்கு அழைப்பதை நிறுத்துங்கள். கட்சியில் உள்ள அடுத்த நிலையில் இருக்கிற முன்னணி தோழர்களையும், மூத்த பொறுப்பாளர்களையும் அழைத்து செல்லுங்கள் என்று பல முறை வேண்டுகோள் விடுத்தும் அதனை பின்பற்ற தவறும் நிலை எனக்கு கடும் அழுத்தத்தை உருவாக்குகிறது.
தமிழ்நாட்டு அரசியலில் தேவையற்ற உரையாடல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். சாதிய, மதவாத சக்திகளை ஊக்கப்படுத்துகிறார்கள். தி.மு.க. தலைமையிலான கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நாம் கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்பதால் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிறார்கள்.
ஏதோ நாம் தி.மு.க.வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
இந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் ஒரு தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசி யலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை.
எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலான பேரம் பலிக்கிற இடத்திலே உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது என்பதெல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கின்றோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலை நோக்கு பார்வை வேண்டும்.
தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் எடுக்க முடியும்.
- தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கிற ஒரு துருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
* கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் பங்கேற்க வைப்பது மன அழுத்தத்தை தருகிறது.
* ஒருநாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லை.
* அழுத்தம் கொடுத்து என்னை இழுத்துச் செல்வதால் கட்சி பணிகளை என்னால் மேற்கொள்ள முடியவில்லை.
* தி.மு.க.வை மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
* தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் எடுக்க முடியும்.
* தி.மு.க. கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் கருத்தகளை சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.
* எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும்.
* தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கிற ஒரு துருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் திருமாவளவன்.
- சமூக நீதி அரசியலை நீர்த்துச்செய்ய போக வேண்டும் என்பதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள்.
பாஜகவின் வாக்கு வங்கி ரீதியில் வலுப்படுத்த அதிமுக துணை போவது வரலாற்றுப் பிழை.. இதனை அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற சங் பரிவாளர் அமைப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இங்கே ஒரு அரசியல் கட்சியாக வலிமைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும என்பதை விட, தமிழகத்தில் நிலைக்கொண்டு இருக்கிற பெரியார் அரசியலை அல்லது சமூக நீதி அரசியலை நீர்த்துச்செய்ய போக வேண்டும் என்பதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள்.
இன்னும குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி அவர்கள் இங்கே காலூன்றி நிற்க வேண்டும். பின்னால், அடுத்த திராவிடக் கட்சியையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
திமுக, அதிமுக என்கிற இரண்டு அரசியல் கட்சிகளை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இங்கு நிலைக்கொண்டிருக்கிற சமூக நீதி அரசியலை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அது தான் பாஜகவின் உண்மையான நோக்கம். உள்நோக்கம்.
ஆனால், இவற்றை எல்லாம் அறிந்தும் கூட அதிமுக ஒரு வரலாற்றுப் பிழையை செய்துள்ளது. 2021ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையிலும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தும் இப்படி முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அதிமுகவிற்கு ஏற்படுகிற பின்னடைவுகளை எல்லாம் தாண்டி, பாஜகவை வாக்கு வங்கி ரீதியாக வலிமைப் படுத்துவதற்கு துணைப் போகிறது என்பது வரலாற்றுப் பிழை. அதிமுக மீண்டும் சிந்தித்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது வரலாற்று தேவையாக இருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மேலும், முதலமைச்சரின் கருத்தை முழுமையாக ஏற்று ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
- தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு.
சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, அமித் ஷா உடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமித் ஷா அறிவித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அதிமுக - பாஜக கூட்டணிதான் அமையும் என்பது ஏற்கனவே எல்லோரும் யூகித்த ஒன்றுதான். அது இன்று நிறைவேறி இருக்கிறது.
விஜய் போன்ற புதிய அரசியல் கட்சி மற்றும் மற்ற அமைப்புகளுடன் இணைந்து அதிமுக கூட்டணி அமைக்கக் கூடாது என்பதில் பாஜக, ஆர்எஸ்எஸ் மிக கவனமாக இருந்தது.
இன்று ஒரு அழுத்தம், நெருக்கடியின் அடிப்படையில்தான் அதிமுக - பாஜகவுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பா.ஜ.க.வின் இந்த பாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.
- வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியா முழுவதும் சுமார் 1.20 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் வக்பு வாரியங்களில் உள்ளன. அந்தச் சொத்துகள் இஸ்லாமிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரால் தானமாக வழங்கிய சொத்துகள் ஆகும். அவற்றை நிர்வகிப்பதற்கு 'வக்பு கவுன்சில்' , 'வக்பு வாரியம்' ஆகிய அமைப்புகள் உள்ளன.
இதுவரை இருந்த சட்டத்தின்படி அந்த அமைப்புகளை இஸ்லாமியர்களே நிர்வகித்து வந்தனர். தற்போது அந்த நிர்வாக அமைப்புகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களைப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உறுப்பினர்களாக நியமித்து அதன் மூலம் வக்பு சொத்துகளை அபகரிப்ப தற்கு பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மதங்களின் சொத்துகளை அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர். இந்துக் கோவில்களின் சொத்துகளை இந்துக்கள்தான் நிர்வகிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட இந்துக்களை மட்டுமே கொண்ட குழுக்கள் தான் நிர்வகிக்கின்றன.
சீக்கியர்களின் குருத்துவாராக்களை சீக்கியர்களைக் கொண்ட குழு நிர்வாகிக்கிறது. தேவாலயங்களைக் கிறித்தவர்களே நிர்வாகம் செய்கின்றனர். அப்படி இருக்கும்போது முஸ்லிம்களின் சொத்துகளை மட்டும் முஸ்லிம் அல்லாத மற்றவர்களையும் கொண்டு நிர்வாகம் செய்ய இந்த அரசு முயற்சிப்பது ஏன்? அவர்களிடம் இருக்கும் சொத்துக்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு அவர்களைப் பொருளாதார தற்சார்பு அற்றவர்களாக ஆக்கி அடிமைப்படுத்தி இரண்டாம்தர குடிமக்களாக்க வேண்டும் என்பதே பாஜகவின் உள்நோக்கம் ஆகும். பா.ஜ.க.வின் இந்த பாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.
இந்நிலையில் வெகு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஏப்ரல் 8-ந்தேதி அன்று மாவட்டந் தோறும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளோடு அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமாறு அழைக்கிறோம்.
அத்துடன், வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- புதிதாக கட்சியை தொடங்கி இருக்கிற நடிகர் விஜயும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை.
- 3 கட்சிகளுக்கும் இடையே 2-வது கட்சி யார் என்பதுதான் இப்போது தமிழ்நாட்டில் போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது.
சென்னை:
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம், தேசிய ஜனநாயக கூட்டணில் 2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தொடர்ந்து கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமாவளவன் கூறியதாவது:-
வடஇந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் வரும் என்ற எண்ணத்தில் சொல்லியிருப்பார். தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அவருக்கே தெரியும். இன்னும் எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டிலே உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.
அ.தி.மு.க.வும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. பா.ஜ.க.வும் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. புதிதாக கட்சியை தொடங்கி இருக்கிற நடிகர் விஜயும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை. அண்மையில் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியது அ.தி.மு.க.வோ, பா.ஜ.க.வோ இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. நான் தான் 2-வது பெரிய கட்சி என்று க்ளைம் செய்து இருக்கிறார். ஆகவே, அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க., ஆகிய 3 கட்சிகளுக்கும் இடையே 2-வது கட்சி யார் என்பதுதான் இப்போது தமிழ்நாட்டில் போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது.
இந்த மாதிரியான சூழலில், தேசிய ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது.
தலைமை என்பது முக்கியமான விஷயம் தான். ஆனால் பொருந்தா கூட்டணி. அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அரசியலுக்காக வலிந்து உருவாக்கப்படுகிற கூட்டணியை தவிர கொள்கை அடிப்படையில் பொருந்தா கூட்டணி. அதனால் அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே நடவடிக்கைகளில் முரண்பாடு இருக்கலாம். அவ்வப்போது கருத்து உரசல்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படையான கொள்கைகளில் அனைவருக்கும் ஒருமித்த பார்வை இருக்கிறது. ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறோம். ஆகவே இந்த கூட்டணியில் ஒரு வலு இருப்பதை உறுதிப்பாடு இருப்பதை நம்மால் காண முடிகிறது. அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும், மற்ற கட்சிகளுக்கிடையே இருக்கிற கூட்டணி அடிப்படையிலே கொள்கை பொருந்தா கூட்டணி
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் காலம் கனியும். ஆனால் இன்னும் அதற்கான சூழல் அமையவில்லை. திராவிட கட்சிகளான திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளில் ஒன்று பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான கோரிக்கை வலுப்பெறும் என்றார்.
- போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது.
- முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைமறைவாகி விட்டனர்.
திட்டக்குடி:
கள்ளநோட்டு அச்சடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.
இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று அதிகாலை 5.15 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் திட்டக்குடி ஆலந்தூர் நவீன் ராஜா (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) என்பதும் இவர்ககள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ரூ. 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி, 2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நவீன் ராஜா, காரத்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைமறைவாகி விட்டனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் செல்வத்துக்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷினை பறிமுதல் செய்தனர்.
- தலைமறைவான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்திற்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ளநோட்டுகள் அச்சடித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.
மேலும் தலைமறைவான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வி.சி.க. கடலூர் மாவட்ட பொருளாளர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் செல்வத்தை நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.