என் மலர்
நீங்கள் தேடியது "slug 125417"
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தினர் கஜா புயலால் சேதமான கோழிப்பண்ணைகளுக்கு நிவாரணம் கேட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்க மண்டலத்தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 210 கோழிப்பண்ணைகள் சேதமடைந்தன.
இந்த கோழிப் பண்ணைகளுக்கு உரிய நிவாரணம் கேட்டு பலமுறை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலின் போது விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சேதமான 1200 கோழிப்பண்ணைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.
ஆனால் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்னும் 10 நாட்களுக்குள் நிவாரணம் வழங்கவில்லை எனில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். சிறு சிறு கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க கட்சியின் தலைமை ஆலோசனை செய்து வருகிறது. பட்ஜெட்டில் மக்கள் பயன்படும் திட்டங்களும் தற்போதைய செயல்பாட்டு திட்டங்களுக்கும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதேர்தல் நோக்கத்திற்காக போடப்பட்ட கவர்ச்சி பட்ஜெட் இல்லை. தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம் வழங்கபடவில்லை என அங்கங்கே போராட்டம் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார். #ministerkamaraj #relief #gajacyclone
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். வேளாண்மை அதிகாரிகள் வேளாங்கண்ணி, மனோகர் மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக வேடசந்தூர் அருகே உள்ள ஆர். கோம்பை, வடுகம்பாடி விவசாயிகள் கஜா புயலுக்கு நிவாரணம் வழங்ககோரி கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்களது பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. ஆனால் 600 பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்து உள்ளது.
மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். இதனையடுத்து தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
கொடைக்கானலில் புயலால் சிசு வாழை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு மானியம் வழங்ககோரியும் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காய்கறி விவசாயிகள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தங்களது பகுதியில் விளையும் சவ்சவ், வாழை, எலுமிச்சை, அவரை உள்ளிட்ட காய்கறிகளை திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறோம். கடந்த சிலநாட்களாக அங்கு உள்ள காண்டிராக்டர்கள் தலா ஒரு மூட்டைக்கு பணம் கேட்கிறார்கள்.
பணம் தரவில்லை என்றால் உள்ளே கொண்டு வர அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே முன்பு போலவே இலவசமாக காய்கறிகள் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றனர்.
வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது.
மாநிலங்களின் கோரிக்கை குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் அதிகாரக்குழு நேற்று கூடி, பரிசீலித்து கீழ்க்கண்டவாறு நிவாரண நிதி வழங்க அனுமதி அளித்தது.
* வறட்சி பாதித்த மராட்டியத்துக்கு ரூ.4,714 கோடியே 28 லட்சம், கர்நாடகத்துக்கு ரூ.949 கோடியே 49 லட்சம், ஆந்திராவுக்கு ரூ.900 கோடியே 40 லட்சம், குஜராத்துக்கு ரூ.127 கோடியே 60 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.
* மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலை குலைந்து போன இமாசல பிரதேசத்துக்கு ரூ.317 கோடியே 44 லட்சம் வழங்கப்படும்.
* மழை, வெள்ளத்தால் சேதங்களை சந்தித்த உத்தரபிரதேசத்துக்கு ரூ.191 கோடியே 73 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.
* புயலால் நிலைகுலைந்து போன புதுச்சேரிக்கு ரூ.13 கோடியே 9 லட்சம் நிவாரணம் தரப்படுகிறது.
இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. #NaturalCalamity #HomeMinistry
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிககள் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர் பேசும் போது கூறியதாவது:-
கஜா புயலால் டெல்டா விவசாயிகளின் நிலங்கள், மற்றும் வீடுகள் சேதமானது. இதில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அதிகாரிகள் பாரபட்சமக நடந்து வருகிறார்கள்.
இதுவரை புயல் நிவாரணம் பெறாத விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கக்கரை சுகுமா ரன் மற்றும் விவசாயிகள் சிலர் திடீரென கலெக்டர் முன்பு தரையில் படுத்து உருண்டு, கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்த கலெக்டர் அண்ணாதுரை கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபோல் நூதன போராட்டம் என்ற பெயரில் ஈடுபடக்கூடாது. விளம்பரத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவரை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர். #GajaStrom
கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி வீசிய கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கரியாப்பட்டினம், செட்டிபுலம் கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்களை இதுவரை வழங்கவில்லை. இதை கண்டித்தும், உடனே புயல் நிவாரணம் வழங்கக்கோரியும் கரியாப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பல்வேறு அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிஞர் மாசி, ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை அமைப்பாளர் நந்தன், தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஏகாம்பரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒருவாரத்துக்குள் விடுப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். #tamilnews
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அருகில் உள்ள மாவடுகுறிச்சி (கி) ஊராட்சி நாடாகாடு கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு இதுவரை அரசு வழங்கிய 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் மற்றும் நிவாரண உதவித்தொகை, புயல் பாதித்து 60 நாட்களைக் கடந்த நிலையிலும் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த நாடாகாடு கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நிவாரணம் வழங்காவிட்டால் ஆதார் அட்டை, குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைப்பதாக கூறினர்.
தலைமை இடத்து துணை தாசில்தார் யுவராஜ், கூடுதல் தலைமை இடத்து துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பரமானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார், இளம்பரிதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #GajaCyclone