search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனஅழுத்தம்"

    • திட்டமிட்ட காரியங்கள் நடக்காதபோது மனம் வேதனைக்குள்ளாகும்.
    • தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மனதை அலைபாய வைக்கும்.

    திட்டமிட்ட காரியங்கள், வேலைகள் நடக்காதபோது மனம் வேதனைக்குள்ளாகும். தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மனதை அலைபாய வைக்கும். அந்த பின்னடைவில் இருந்து மீள முடியாமல் மனம் தடுமாற்றமடையும். அன்றைய நாளே கடினமானதாக மாறிவிடும். எதன் மீதும் நாட்டம் இருக்காது. அந்த சமயத்தில் அமைதியாக இருக்கும் திறனை வளர்த்து கொள்வது அவசியமானது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    தியானம்

    நெருக்கடியான சமயத்தில் தியான பயிற்சி மேற்கொள்வது மனதை இலகுவாக்கும். அதன் மீது முழு கவனத்தையும் செலுத்தும்போது எண்ணங்கள் ஒருநிலைப்படும். பதற்றம் குறையும். கொந்தளிப்பான மனநிலையில் இருந்து மீள முடியும். மனமும் சாந்தமாகும். மனதை நிலைநிறுத்துவதற்கான சக்திவாய்ந்த வழிமுறையாக தியானம் கருதப்படுகிறது. ஆதலால் அந்த சமயத்தில் தியானம் சிறந்த தேர்வாக அமையும்.

    ஆழ்ந்த சுவாசம்

    ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவும். மன அழுத்தத்தையோ, துன்பத்தையோ சந்திக்கும் போது, ஆழமாக சுவாசிப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, சில வினாடிகள் அப்படியே வைத்திருந்து, பின்பு வாய் வழியாக வெளியேற்றவும்.

    வாய் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து பயிற்சி செய்யலாம். இந்த பயிற்சி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். மனதை ஒருநிலைப்படுத்த வித்திடும்.

    ஆதரவு

    சிரமங்களை எதிர்கொள்ளும் போது நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர், நம்பகமான சக ஊழியர்களிடம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். உங்கள் கவலைகள் மற்றும் உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மனதை ஆசுவாசப்படுத்தும். அவர்களின் ஆதரவான பேச்சு மனதை வலுப்படுத்தும். நெருக்கடியான மனநிலையில் இருந்து மீண்டு இயல்புக்கு திரும்ப வழிவகை செய்யும்.

    ஓய்வு

    சரியான ஊட்டச்சத்துக்கள், வழக்கமான உடற்பயிற்சிகள், போதுமான தூக்கம் ஆகியவை மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடினமான காலகட்டத்தில் பலரும் சரிவர சாப்பிடமாட்டார்கள். உடற்பயிற்சியை விட்டுவிடுவார்கள். தூக்கமில்லாமல் அவதிப்படுவார்கள்.

    அந்த சமயத்தில் குறைந்தபட்சம் மனதிற்கு ஓய்வாவது கொடுக்க வேண்டும். சவாலான சூழ்நிலைகளை சிறப்பாக கையாள ஓய்வு அவசியமானது. எளிமையான உடற்பயிற்சிகள் மீது கவனத்தை திருப்பலாம். அவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராவதற்கு வழிவகை செய்யும்.

    தகவல்கள்

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஏராளமான தகவல்கள் நம்மை வந்தடைகின்றன. மன நெருக்கடியில் தவிக்கும்போது எதிர்மறையான தகவல்கள்தான் அதிகம் கண்களுக்கு புலப்படும். அதுசார்ந்த தகவல்களை அறிந்து கொள்வதற்குதான் ஆர்வம் மேலிடும். அதற்கு இடம் கொடுக்காமல் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அவை கவலையை மேலும் அதிகப்படுத்தி நிலை குலைய செய்துவிடும்.

    சிக்கலை தீர்க்கும் திறன்

    பிரச்சினையின் மீது கவனம் செலுத்தாமல், அதற்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். சிக்கல்களை சமாளிக்கக்கூடிய வழிமுறைகளை கண்டறிந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள். இந்த அணுகுமுறை சிந்தனை, செயல்திறனை அதிகரிக்கச்செய்யும்.

    நினைவுகள்

    சவாலான நேரங்களில் வாழ்வில் நடந்த நேர்மறையான விஷயங்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள். அது பற்றி சிந்தித்து மனதை பின்னோக்கி சுழல விடுங்கள். கடந்த கால நிகழ்வுகள், மகிழ்ச்சியான தருணங்கள் மனதை லேசாக்கும்.

    மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிப்பது சவாலாக இருந்தால் மனநல நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    • மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல.
    • எல்லா பிரச்சினைகளையும் எல்லாராலேயும் எளிதாக கையாண்டுவிட முடியாது.

    முதலில் மன அழுத்தம் என்பது ஒரு சிம்டம். மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல. அது பிரச்சினையின் வெளிப்பாடு என்பது முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சிலபேர்களின் வாழ்க்கையில் மன அழுத்தம் தான் பிரச்சினை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. மன அழுத்தம் எங்கிருந்து அல்லது எதில் இருந்து ஆரம்பித்தது என்பதை கண்டறிந்தாலே நாம் அதில் இருந்து வெளியே வருவதற்கு எளிதாக இருக்கும்.

    மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினை அல்லது ஒருவர் மீது வைக்கப்படுகிற அழுத்தம். அதாவது இதை இப்படி செய்ய வேண்டும். இந்த வேலையை நாம் இந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடே மன அழுத்தம். இது நாம் மற்றவர்கள் மேல் வைத்ததாக இருக்கலாம். அல்லது மற்றவர்கள் நம்மேல் வைப்பதாக கூட இருக்கலாம். உலகத்தில் நமக்கு தேவைப்படுகிற விஷயமாக இருந்தாலும் சரி, நாமே நம் மனதில் உருவாக்கி கொள்கின்ற விஷயமாக இருந்தாலும் சரி இதுவே மன அழுத்தத்தை கொண்டுவந்துவிடுகிறது.

    மன அழுத்தத்தை உங்களால் கையாள் முடியும் என்றால் அதனை நீங்களே உடைத்து எரிந்து உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெரிய நிலையை அடைய முடியும். எல்லா பிரச்சினைகளையும் எல்லாராலேயும் எளிதாக கையாண்டுவிட முடியாது. இந்த அழுத்தத்தை முறையாக கையாள தெரியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

    உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலைக்கு உங்களுக்கு மோட்டார்சைக்கிள் தேவை. அங்கு 10 நாட்களுக்கும் சேர வேண்டும். உங்களிடம் பைக் இல்லை, பைக் வாங்கினாலும் 10 நாட்களில் உங்களுக்கு லைசென்சும் கிடைக்காது. எனவே இதனால் உங்களது மனதில் ஒரு அழுத்தம் உருவாகிறது. அதுவே சிலநாட்கள் தொடர்ந்து இருந்தால் அதுவே ஒரு மன அழுத்தமாக மாறிவிடும். இது ஸ்கில் லெவல் பிரச்சினை.

    மற்றொரு உதாரணம் நீங்கள் ஒரு ஆபிசில் வேலைசெய்கிறீர்கள் அங்கு நீங்கள் டாக்குமெண்ட் டைப் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சுமாராக ஒரு நாளைக்கு 100 டாக்குமெண்ட் டைப் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஆபிசில் சிலபேர்களை வேலையைவிட்டு எடுத்துவிடுகிறார்கள் அதனால் என்ன ஆகிறது அவர்களுடைய வேலையும் உங்கள் தலைமேல் விழுகிறது. இப்போது நீங்கள் ஒருநாளைக்கு 150 டாக்குமெண்ட் தயார்செய்ய வேண்டும் இல்லை என்றால் வேலையைவிட்டு நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அப்போது வேலைபளு காரணமாக ஒருவித அழுத்தம் ஏற்படும். இந்த வேலை இல்லை என்றால் நான் என்ன செய்வது? அல்லது இவ்வளவு வேலையை நாம் ஒருவரே எப்படி செய்வது, இந்த கூடுதல் வேலையினால் வீட்டில் உள்ள வேலைகள் எல்லாம் தடைபடும். குடும்பத்திலும் பிரச்சினை ஏற்படும். இதனால் மன அழுத்தம் உருவாகும்.

    எனவே எப்போதும் ஸ்டிரஸ் (மன அழுத்தம்) எதனால் உருவாகிறது என்பதை ஆராய வேண்டும். எனவே உங்களுடைய எண்ண ஓட்டத்தை அறிந்துகொள்ள ஒரு 10 நாட்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் இன்றைக்கு நம் மனதை பாதித்த மற்றும் அழுத்தத்தை கொடுத்த விஷயங்கள் என்னென்ன என்பதை தினமும் எழுதிக்கொண்டு வர வேண்டும்.

    10 நாட்கள் கழித்து அன்றைக்கு உங்களுக்கு மிகவும் பிரச்சினையாக இருக்கக்கூடிய விஷயங்களை கண்டறிந்து அவற்றை வட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அந்த 10 பிரச்சினைகளுக்கும் உங்களால் தீர்வு காண முடியுமா என்பதை குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதில் நீங்கள் யோசித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செயல்படுத்திக்கொண்டே வர வேண்டும். எழுதிவைத்த எல்லா தீர்வுகளும் முடிவுக்கு வராது. ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் தான் பிரச்சினைகளில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு உதவியாக இருக்கும்.

    சிலநேரங்களில் நாம் தோல்வியை கூட தழுவலாம். ஆனால் தொடர்ந்து இதை செயல்படுத்துக்கொண்டே வந்தால் நமக்கு பிரச்சினை வந்தால் அதனை எப்படி தீர்த்துக்கொள்வது என்பதை பற்றிய புரிதல் இருக்கும். சில நேரங்களில் நமக்கு எழுதி வைத்த சில பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லை என்றால் அதனைவிட்டு நாம் வெளியேற முடியுமா என்பதை பார்க்க வேண்டும். இப்போதுதான் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கடுமையான நிலைக்கு வருவீர்கள்.

    இதில் நீங்கள் புரிந்துகொள்வது என்னவென்றால் வாழ்க்கையில் எப்போதும் ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. எனக்கு நிறைய சம்பளமும் வேணும், நான் குறைந்த நேரம் தான் வேலை செய்ய வேண்டும். நான் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட வேண்டும் என்றால் அனைத்தும் எல்லாருக்கும் நடந்துவிடுவதில்லை. ஏதாவது ஒரு விஷயம் மட்டும் உங்கள் வாழ்க்கையில் இழக்க வேண்டி வரும். பணத்தையோ, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையோ அல்லது உழைப்பையோ என்பதை யோசித்து பார்த்து அதற்கு நீங்கள் நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும்.

    அதாவது உங்களுக்கு எது முக்கியம் என்பதை தேடி ஆராய்ந்து பார்த்து அது உங்களுக்கு எந்த அளவுக்கு பயனை தருகிறது என்று ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அடுத்தது ரொம்ம முக்கியமான விஷயம் என்னவென்றால் எடுத்த முடிவை ஃபாளோ செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவையும் முடிவை மாற்றி மாற்றி எடுக்காமல் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியும். இல்லையென்றால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவது கடினம்.

    எனவே நாம் ஒரு முடிவெடுத்தால் அந்த முடிவில் நிலைத்திருக்க வேண்டும். அல்லது கொஞ்ச நாளைக்காவது அதை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் முடிவெடுத்த பிறகு நீங்கள் எடுத்த முடிவில் இருந்து மாற்றிக்கொண்டே வந்தால் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியாது.

    இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியேற யோகா, தியானம் செய்வது சிறந்தது. அதிலும் சென் எனப்படுகிற தியானம் இதற்கு மிகவும் உதவும்.

    • மன அழுத்தம் போக்கும் வகையில் போலீசாருக்கு புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வலியுறுத்தியுள்ளார்.
    • கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமை தாங்கினார். இதில் மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்குவது குறித்தும், குற்ற சம்ப வங்களை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

    கூட்டத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேசியதாவது:-

    போலீசார் பணியின் போது மன அழுத்தமின்றி வேலை பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சைபர் கிரைம் குற்றங்களை தீவிர கவனத்துடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பொது மக்களுடன் நட்புறவை பேணி காக்க வேண்டும்.

    உரிய காரணங்களோடு விடுமுறைக்கு விண்ணப் பிக்கும் போலீசாருக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசா ருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடக்கிறது.

    அதனை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பைக் ரேசில் ஈடுபடுவோர்களை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.

    மனப்போராட்டங்களோ அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட கசப்பான எண்ணங்களோ பிற்காலத்தில் மிதமான மனநோய்களான பயம், பதற்றம், வலிப்பு, மயக்கம் போன்ற பல நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.
    “மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்” என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் நாம் மனநலம் என்றால் என்ன என்பதைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளோமா? என்பது ஐயமே. உடல் நலத்திற்குக் கொடுக்கும் முக்கியத்தை நாம் மன நலத்திற்குக் கொடுப்பதில்லை. மனமும் உடலும் ஒன்றை யொன்று சார்ந்தவை. மனம் நலமாக இருந்தால்தான் உடலும் நன்றாக இருக்கும்.

    தானே சிரித்துக் கொண்டும் தானே பேசிக் கொண்டும் தன்னைப் பற்றிய மனத்தெளிவு இல்லாமல் இருப்பவர்களை மட்டுமே மனநலக் குறைபாடுடையவர்கள் என்று எண்ணுகிறோம். வீட்டில் வன்முறையான செயல்களில் ஈடுபட்டாலோ, மற்றவர்களை அடித்து உதைத்துத் துன்புறுத்தினாலோ பயந்து அரண்டு உறவினர்கள், மனநல மருத்துவரிடம் அழைத்து வருகின்றனர், மேலும் மனநலக் குறைபாடுகளெல்லாம் பேய், பிசாசுத் தொல்லைகள். மாந்திரிகம், செய்வினை போன்ற காரணங்களாலும் வருகிறது என்ற தவறான கருத்துகள் மக்களிடையே பரவியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மனநல மருத்துவரை அணுகுவதே கேவலமானது என்ற எண்ணம் மக்களிடையே பரவியுள்ளது.

    மனநலக் குறைபாடுகள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் உடலில் உள்ள சுரப்பிகளின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களாலும் வருகிறது. பரம்பரையாக வருவதும் ஒரு காரணமாகும். இதைத்தவிர குழந்தைகளின் வளர்ப்பு முறை, வளரும் சூழ்நிலை, போதைப் பொருட்களின் பயன்பாடு, போன்ற காரணங்களாலும் வருகிறது.

    மனநலம் என்றால் என்ன?


    சிந்தனை, உணர்ச்சிகள், நினைவு ஆற்றல், புரிந்துகொள்ளும் தன்மை, முடிவெடுக்கும் ஆற்றல், நடத்தை, குணநலன் ஆகிய அனைத்தும் சரியாக இருப்பது மனநலம் ஆகும்.

    இவற்றுள் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ பாதிக்கப்பட்டு அதனால் அவர் தனக்கும், தன்னைச் சார்ந்தவருக்கும் இடையூறாக இருக்கும் பட்சத்தில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுகிறார்.

    ஏழை, பணக்காரர்கள், படித்தவர்கள் படிக்காதவர்கள், சாதி, மத, இன வேறுபாடின்றி, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்துத் தரப்பினரிடமும் மனநலக் குறைபாடுகள் காணப்படுகின்றன.

    உடல் நோயைப் போன்றே மனநலக் குறைபாடுகளும் பலவகைப்படும். காய்ச்சல் என்றால் வைரஸ் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்று பலவகை இருப்பதைப் போலவே மனநலக் குறைபாடுகளிலும் பலவகையான மனநலக் குறைபாடுகள் உண்டு.

    மனிதர்களுக்குப் பலவிதமான சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுதல் இயல்பே. இல்லறவாழ்க்கையிலும் அலுவலகத்திலும் பலவகைச் சிக்கல்களும் அவற்றால் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. இவற்றுக்குரிய தீர்வுகளைப் பற்றிய சிந்தனைக்கு நேரமும் வாய்ப்பும் கிட்டுகின்றனவா?



    தேவையில்லாமலும் கோழைத்தனத்தாலும் வீண் கோபத்தாலும் தற்கொலைக்குப் பலர் முயல்வதும் வீணே மடிந்து போவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. தற்கொலை முயற்சிகளும், போதைப் பொருட்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் அடிமையாவதும், மனநலக்குறைபாட்டின் வெளிப்பாடுகளே.

    மனநோயை மனநலக்குறைப்பாட்டை தீவிரமான நோய், மிதமான மனநோய் என இருவகையாகப் பிரிக்கலாம். உலக மக்கள் தொகையில் 3 சதவீத மக்கள் தீவிர மன நோய்களாலும் 20 சதவீத மக்கள் மிதமான மனநோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2020-ம் ஆண்டில் மனநோயானது குறிப்பாக மனச்சோர்வு நோயானது உடல் சார்ந்த நோய்களைக் காட்டிலும் அதிக அளவு மக்களைப் பாதிக்கும் எனவும் உளவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கின்ற மூச்சுத்திணறல், ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மூட்டு வலிகள், தீராத தலைவலி, வயிற்றுப்புண், தீராத வயிற்றுப் போக்கு, வாந்தி, முதலியன மனநலக் குறைபாடுகளால் ஏற்படுகின்றன. சிறு வயதில் மனதில் உண்டாகும் அதிர்ச்சிகளும், அன்றாடம் வாழ்க்கை முறையில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் அணுகும் முறைகளாலும் இவை ஏற்படுகின்றன.

    மனப்போராட்டங்களோ அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட கசப்பான எண்ணங்களோ பிற்காலத்தில் மிதமான மனநோய்களான பயம், பதற்றம், வலிப்பு, மயக்கம் போன்ற பல நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. உதாரணமாக, சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு இரையான ஆண்களும் பெரும்பாலான பெண்களும் மிதமான மன நோய்க்கு ஆளாகின்றனர். எனவே வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் முறையான வழிகளைக் கையாள வேண்டும். குழந்தைகளிடம் அன்புடன் கூடிய கண்டிப்பும், கண்காணிப்பும் அவசியம்.

    குழந்தைகளிடம் நேரம் செலவிட்டு அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். அவர்கள் தங்களின் பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ள உரிய வழிகாட்டி உதவ வேண்டும் தமது குழந்தைகளைப் பிற குழந்தைகளுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அவர்களுக்கான முடிவை எடுக்கும் முன் அவர்களுடன் ஆலோசித்து அவர்களுக்குச் சரியான புரிதலை உண்டாக்கவேண்டும். அவர்களது மனநிலையைப் புரிந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும்.

    விடலைப்பருவம் மனநலக் குறைபாடுகளுக்கு வித்திடும் பருவமாகும், இப்பருவத்தை எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் கடந்து விட்டால் அவர்களின் வாழ்வில் மனநலக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க இயலும். உடல்ரீதியாக வெளிப்படும் மன நோய்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து உமட்டல், வாந்தி, தலை சுற்றல், தலைவலி, உடலின் சில பாகங்களில் வலி, வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பல அறிகுறிகளுக்கு உடல் ரீதியாகக் காரணங்கள் இல்லாத போது அவை மன அழுத்தத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.

    மன இறுக்கம் இல்லாத சூழ்நிலையில் வாழ்வதே மன அமைதிக்கும், மனநலத்திற்கும் வழி வகுக்கும், தனிப்பட்ட மனிதனின் குணநல மேம்பாடு, சூழ்நிலையில் ஆக்கப்பூர்வ மாற்றம், சமுதாய மேம்பாடு போன்ற பல காரணங்களும் இதற்குத் துணையாக இருக்கும். மன மகிழ்வோடு, மனநலத்தோடு வாழ உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது இன்றைய கால கட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்றாகும்.

    மனநலமே மனித நலம். மனநலமே சமூகநலம். மனநலமே உலகநலம். இதனைப் பற்றிய புரிந்துணர்வு ஏற்படவே உலக மனநல நாள் கொண்டாடப்படுகிறது.

    மருத்துவர் செல்வமணி தினகரன்
    ×