என் மலர்
நீங்கள் தேடியது "தீபாவளி பண்டிகை"
- திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன.
- தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர்.
திருப்பூர் :
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் சென்றதால், அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை குறைவாக இருந்தது.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரம் தொழிலாளர்கள் இன்றி காணப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் திருப்பூரில் ஹோட்டல்கள் நடத்திய வருகிறார்கள். தற்போது அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், திருப்பூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
இதுபோல் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பாத நிலையில் அவர்கள் குழந்தைகள் பல பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள பல பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகை குறைந்தது. பள்ளி வகுப்பறைகள் பலவும், மாணவ- மாணவிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
- இந்தி நடிகர் ராஜ்குமார் பெயர் வைக்கப்பட்டு இருந்த கழுதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையானது.
- அதிகளவில் பொதி சுமக்கும் கழுதைகளுக்கு ரன்பீர்கபூர், ஹிருத்திக் ரோஷன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
உத்தரபிரதேச மாநிலம் சித்ரகுட் மாவட்டம் மந்தாகினி நதிக்கரையில் புந்தேல்கணிட் பகுதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாளில் இருந்து 3 நாட்களுக்கு கழுதை சந்தை நடைபெறும். கடந்த 3 நாட்களாக இங்கு கழுதை சந்தை நடைபெற்றது.
இந்த சந்தையில் சுமார் 15 ஆயிரம் கழுதைகள் விற்பனை செய்யப்பட்டன. இவை ரூ.1000 முதல் ரூ.5 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. இந்த கழுதைகளை வாங்கவும், விற்கவும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். நேபாளத்தில் இருந்தும் வியாபாரிகள் கழுதைகளை கொண்டு வந்தனர்.
வியாபாரிகள் பலர் தங்கள் கழுதைகளுக்கு இந்தி நடிகர்களின் பெயர்களை வைத்திருந்தனர். இந்தி நடிகர் ராஜ்குமார் பெயர் வைக்கப்பட்டு இருந்த கழுதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையானது. உயர்ரக கழுதை ஒன்றுக்கு சல்மான்கான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த கழுதை ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்றது. ஷாருக்கான் பெயரிடப்பட்ட கழுதை ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனையானது.
அதிகளவில் பொதி சுமக்கும் கழுதைகளுக்கு ரன்பீர்கபூர், ஹிருத்திக் ரோஷன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கழுதைகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்கப்பட்டன. நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கழுதைகள் அதிகபட்சமாக ரூ.5 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த கழுதை சந்தையில் ரூ.2 கோடி வரை விற்பனையாகி உள்ளது.
வட மாநிலங்களில் கட்டிடப் பணிகளில் செங்கல், மணல், கருங்கற்கள் போன்றவற்றை சுமந்து செல்லவும், சலவை தொழிலுக்கு துணை மூட்டைகளை சுமந்து செல்லவும் கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே குதிரைகளை விட கழுதை உரிமையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதன் காரணமாக கழுதை சந்தையில் விற்பனை அமோகமாக நடந்தது.
இதுகுறித்து கழுதை சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முன்னாலால் திரிபாதி கூறுகையில், "கழுதை சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஒரு கழுதைக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கிறோம். இந்த சந்தை முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு படையெடுத்த அவுரங்கசீப்பின் பல குதிரைகள் நோய்வாய்ப்பட்டு இறந்தன. எனவே குதிரைகளுக்கு மாற்றாக அவர் கழுதை வியாபாரிகளை வரவழைத்து சந்தையை தொடங்கினார். அதன் பிறகு கழுதை சந்தை இதுவரை நடந்து வருகிறது" என்றார்.
- காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது.
- காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ளகோவில்:
முத்தூர் பகுதிகளில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து வெள்ளகோவில், முத்தூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
முத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் பலகார கடைகள், உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் தீபாவளி பண்டிகைக்கு தயார் செய்த அனைத்து வகையான காலாவதியான இனிப்பு, காரம் உட்பட அனைத்து தின்பண்டங்கள், உணவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் காலாவதியான இனிப்பு கார உணவு பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வதை தவிர்த்தல் வேண்டும். காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள சிறு, பெரிய இனிப்பு, காரம் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை கடைகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனைக்காக வைக்கப்பட்ட பலகாரங்களை உடனே அகற்றி அழிக்க வேண்டும்.
எனவே காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- தீபாவளி பண்டிகையின் போது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கும் மேல் தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு திருப்பூரில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பண்டிகை முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக நாளை 31-ந்தேதி பெரும்பாலான தொழிலாளர்கள் திரும்ப உள்ளனர். இதனால் நெல்லை, நாகர்கோவில், மதுரை, சேலம், தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தொழிலாளர்கள் திரும்ப உள்ளதையடுத்து திருப்பூரில் மீண்டும் ஆடை உற்பத்தி வேகமெடுக்கும். இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையின் போது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கும் மேல் தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.இதன் பின்னர் பண்டிகையை முடித்து விட்டு திருப்பூருக்கு திரும்புவார்கள்.
இதிலும் ஆர்டர்கள் மிகவும் அவசரமாக இருக்கிற சில நிறுவனங்கள் பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களிலேயே தொழிலாளர்களை வேலைக்கு வருமாறு அழைப்பார்கள். ஆனால் தற்போது நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக எதிர்பார்த்த ஆர்டர்கள் இல்லை. இதன் காரணமாக பல நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் விடுமுை றஅளித்துள்ளன. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் நாளை திருப்பூர் வந்து விடுவார்கள். இதன் பின்னர் ஆடை தயாரிப்பு முன்பு போல் தொடங்கி விடும் என்றனர்.
மேலும் சில உற்பத்தியாளர்கள் கூறுகையில்,
தற்போதைய நிலவரப்படி ஏற்றுமதி நிறுவனங்களில் அவசர ஆர்டர்கள் இல்லை. பெரிய நிறுவனங்களிடம் ஆர்டர் எடுத்து ஆடை தைத்து கொடுக்கும் குறு, சிறு பனியன் யூனிட்களிலும் பணி குறைவாகவே உள்ளது.இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான குறு, சிறு பின்னலாடை யூனிட்களுக்கு நவம்பர் 10ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் கைவசம் உள்ள தொழிலாளரை கொண்டு உற்பத்தியை தொடர திட்டமிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு பின்னலாடை உற்பத்தியைத் துவக்கினாலும் அது வேகமாக இல்லை.
சொந்த நிலம் உள்ள வெளி மாவட்ட தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகைக்கு சென்று, போனசை பயன்படுத்தி, விவசாய பணிகளை துவக்குவது வழக்கம்.இந்தாண்டு பருவமழையும் கைகொடுத்துள்ளதால், பண்டிகைக்கு சென்ற தொழிலாளர் விவசாய பணியை துவக்கியிருப்பர். ஒரு சிலர் அங்கேயே தங்கிவிட்டு மற்றவர்கள் திருப்பூர் திரும்புவதுண்டு.
பெரும்பாலான நிறுவனங்களில் 10 நாட்கள் வரை தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பணிக்கு வர விரும்பினால் வரலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.
வடமாநில தொழிலாளரை கொண்டு உற்பத்தியை தொடர்கிறோம். சில நிறுவனங்கள் கைவசம் உள்ள தொழிலாளரை கொண்டு பராமரிப்பு பணியை செய்து வருகின்றனர்.வரும் நவம்பர் மாத இறுதியில் புதிய ஆர்டர் வந்து உற்பத்தி முழு வேகமெடுக்கும்.அதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர் என்றனர்.
- தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
- குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் பயணத்தை உறுதி செய்யவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னை:
சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடவே விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் குடும்பமாக சென்று கொண்டாடி விட்டு பின்னர் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு திரும்புவார்கள்.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ரெயில் முன்பதிவு 4 மாதங்களுக்கு முன்பு செய்யும் வகையில் இன்று தொடங்கியது.
இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் வருகிறது. அதனால் சொந்த ஊர் செல்பவர்கள் வியாழக்கிழமை (9-ந்தேதி) முதல் பயணத்தை தொடங்குவார்கள்.
அந்த அடிப்படையில் அதற்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் முன்ப திவு மையங்கள் வழியாக தொடங்கின. தீபாவளிக்கு முந்தைய 3 நாட்கள் பயணம் என்பதால் இன்று குறைந்த அளவிலேயே டிக்கெட் பதிவானது.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் பயணத்தை உறுதி செய்யவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடைசி நேரத்தில் அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்களில் செல்வதை தவிர்க்கும் வகையில் இப்போதே பய ணத்தை திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
நவம்பர் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்திற்கு நாளை முன்பதிவு தொடங்குகிறது. நவம்பர் 11-ந்தேதிக்கு வருகிற 14-ந்தேதியும், தீபாவளிக்கு முதல் நாள் பயணம் செய்ய வருகிற 15-ந்தேதியும் முன்பதிவு நடைபெறும்.
தீபாவளி பண்டிகை முன்பதிவு பெரும்பாலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் வழியாக வீடுகளில் இருந்தவாறே முன்பதிவு செய்கின்றனர். குறைந்த அளவில் தான் முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று முன்பதிவு செய்கிறார்கள். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அண்ணா நகர், தி.நகர், கிண்டி, பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் தீபாவளி முன்பதிவிற்கான கூட்டம் குறைந்த அளவில் இருந்தது. ஆனாலும் முன்பதிவு செய்ய வந்த பயணிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டனர்.
காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியதும் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்கு செல்ல உறுதியான டிக்கெட் கிடைத்தது. 10 நிமிடங்களில் முக்கிய ரெயில்களின் இடங்கள் நிரம்பின. பின்னர் காத்திருப்போர் பட்டியல் தொடங்கின.
நாளைய முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும். அதைவிட வெள்ளிக்கிழமை அன்று முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் 3, 4 நாட்கள் தாங்கள் செய்து வரும் கடையை மூடி விட்டோ, மாற்று ஏற்பாடு செய்து விட்டோ வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
- ரெயில்களில் பயணம் செய்ய விரும்புவோருக்கு, 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயிலில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடும்.
- தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்குமுன்பாக பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பார்கள்.
சென்னை:
பண்டிகை காலங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ரெயில்களில் முன்கூட்டியே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 10-ந் தேதி செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
முன்பெல்லாம் முன்பதிவு தொடங்கும் நாளில் ரெயில் நிலையங்களில் கவுண்டர்களில் டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதும். ஆனால் இப்போது ஆன்லைன் மூலமும் டிக்கெட் எடுத்துக்கொள்ள வசதிகள் வந்துவிட்டதால் ரெயில் நிலையங்களில் மிகப்பெரிய அளவில் கூட்டம் இல்லை.
இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை, பொதிகை, கோவை, மதுரை பாண்டியன் உள்ளிட்ட ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலும் 300-க்கும் மேல் உள்ளது.
நவம்பர் 11-ந் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. நாளையும் டிக்கெட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடும் என்கிறார்கள் ரெயில்வே அதிகாரிகள்.
- தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன் உள்ள 3 நாட்களுக்கு நேற்று வரை முன்பதிவு செய்தனர்.
- கடந்த 3 நாட்களைவிட இன்று முன்பதிவு செய்ய கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்னை:
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 12-ந் தேதி வருகிறது. பண்டிகை வருவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கின்ற நிலையில் சொந்த ஊரில் சென்று பண்டிகையை கொண்டாட மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
கூட்ட நெரிசல் இல்லாமல் ரெயிலில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய பயணத்தை திட்டமிட்டுள்ளனர். அதன்படி தீபாவளி ரெயில் முன்பதிவு கடந்த 12-ந்தேதி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன் உள்ள 3 நாட்களுக்கு நேற்று வரை முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் ஆன்லைன் வழியாக வீடுகளில் இருந்தவாறு முன்பதிவு செய்ததால் கவுண்டர்களில் கூட்டம் இல்லை.
ஆனாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் வெளியூர் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர். குடும்பமாக செல்பவர்கள் 2 நாட்களுக்கு முன்பே பயணத்தை திட்டமிட்டு டிக்கெட் எடுத்துள்ளனர். எழும்பூரில் இருந்து செல்லும் கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, ராமேஸ்வரம், திருச்சி, திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட முக்கிய ரெயில்களில் உள்ள 2-ம் வகுப்பு படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன.
தீபாவளிக்கு முந்தைய நாள் நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்ய இன்று காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கியது. கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் இன்று உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெறுவதில் தீவிரமாக இருந்தனர்.
அதிகாலை 5 மணிக்கே எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் காத்து நின்றனர். அவர்களுக்கு போலீசாரால் டோக்கன் வழங்கப்பட்டது. 8 மணிக்கு கவுண்டர் திறந்தவுடன் வரிசையில் முதலில் நின்ற ஒருவருக்கே உறுதியான டிக்கெட் கிடைத்தது. அடுத்து வந்தவர்களுக்கு ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியல் வரத்தொடங்கியது.
ஆனாலும் பலர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்திருப்போர் பட்டியல் நீடித்த போதிலும் டிக்கெட் வாங்கி சென்றனர்.
கடந்த 3 நாட்களைவிட இன்று முன்பதிவு செய்ய கூட்டம் அதிகமாக இருந்தது. 5 நிமிடத்தில் முக்கிய ரெயில்களில் உள்ள 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பிவிட்டன.
ஆன்லைன் வழியாக பலரும் முன்பதிவு செய்ததால் இடங்கள் உடனே நிரம்பி விட்டன. கோவை, ஈரோடு, சேலம் மார்க்கத்திலும் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பகல் நேர ரெயில்களில் மட்டுமே இடங்கள் தற்போது காலியாக இருக்கின்றன. ஏ.சி. வகுப்பு இடங்களும் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.
தீபாவளிக்கு இன்னும் 120 நாட்கள் இருப்பதால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது டிக்கெட் உறுதியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். இன்று மாலைக்குள் காத்திருப்போர் பட்டியல் ரூ.200 தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ந்தேதி கடைசி நாளாகும்.
மதுரை
மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 2008-ன் படி வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி படிவம் எண் ஏ.இ.5 என்ற படிவத்தனை பூரத்தி செய்து ரூ.2க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் (இணையதளத்தில் பதிவிறக்கம்) பாஸ்போர்ட் புகைப்படத்துடன், விண்ணப்பதாரரின் கூடுதல் பாஸ்போர்ட் புகைப்படம்-2 (தனியாக இணைக்கப்பட வேண்டும்), தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று, உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் (2 வழிகள் இருக்கவேண்டும்) வரைபடத்தில் கடையின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும்,
மனுதாரர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும், உத்தேசிக்கப்பட்ட கடை அமையவுள்ள இடத்தை சுற்றி 50 மீட்டர் அருகாமையில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் சொந்த கட்டிடமாக இருப்பின் சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் வாடகைக் கட்டிடமாக இருப்பின் 2023-2024-ம் ஆண்டுக்குரிய முதலாம் அரையாண்டு வரை அதாவது 30.09.2023 வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் கட்டிட உரிமையாளரின் சம்மத க்கடிதம் மற்றும் கட்டிட உரிமையாளருடன் விண்ணப்பதாரர் ஏற்படுத்திக்கொண்ட வாடகை முத்திரைத்தாளில் நோட்டரி பப்ளிக் ஒப்புதலு டன்). ஒப்பந்தப்பத்திரம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் மாநகராட்சி / பொதுப்பணித்துறை / மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம், மாநகராட்சி டி.அண்டு சி. ரசீது,
ஏற்பு உறுதி ஆவணம் (ரூ.20/- மதிப்புள்ள பத்திரத்தில் நோட்டரி ஒப்புதலுடன்) கடை அமையவுள்ள இடத்தின் புகைப்படம் 2 கோணங்க ளில், விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை (அல்லது) ஆதார் அட்டை நகல்கள் ரூ.900/- விண்ணப்ப உரிமம் கட்டணம் (திருப்பித்தர இயலாது).
அசல் விண்ணப் பத்துடன் அனைத்து ஆவணங்களும் 3 நகல் இணைக்கப்படவேண்டும். செப்டம்பர் 21ம் தேதி 1 மணிக்குள் பெறப்படும் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசார ணைக்குப்பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும்.
வெடிபொருள் சட்டம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி, சாலை ஓரக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட மாட்டாது. மேற்கண்ட தேதிக்கு மேல் விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. குறித்த கால கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப் பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தள்ளுபடி செய்யப்படும். தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ந்தேதி கடைசி நாளாகும்.
இவ்வாறு அவர்கள் தெரித்தனர்.
- சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
- தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய டெண்டரை அரசு கோரியுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு தீவுத்தடலில் பட்டாசு விற்பனைக்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. அதன்படி, அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 55 கடைகள் அமைப்பதற்கான டெண்டரை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது. விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு கடைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.
- மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.
சென்னை:
ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30-க்கும், பாமாயில் பாக்கெட் ரூ.25 -க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.25-க்கும் விற்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரர்களுக்கு பாதி விலையில் இந்த பொருட்கள் கொடுக்கப்படுகிறது.
தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி மற்றும் கோதுமையை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து, ரேசன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.
தற்போது மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.
இது வரஇருக்கிற தேர்தலில் எதிரொலிக்க கூடும் என்பதால் மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.
இதற்காக தீபாவளி பண்டிகையின்போது ரேசனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கலாமா? என்று பரிசீலித்து வருகிறது.
இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில் 6 கோடி லிட்டர் பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆவின் நிறுவனம் இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
- புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை.
சென்னை:
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இப்பாலைப் பதப்படுத்தி ஆரஞ்சு, பச்சை, நீலநிறப் பாக்கெட்டுகளில் அடைத்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜு பிஸ்தா ரோல், நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்சர் உள்ளிட்டவற்றை தயாரித்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.
இதன் மூலமாக ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. இதே போல இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு பண்டிகை நெருங்கும் நிலையில் இனிப்பு, கார வகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்கள் எங்களை தற்போது அணுகி வருகின்றன.
புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய இனிப்பு வகைகள் உற்பத்தி அளவை அதிகரிக்கவும், ஏற்கனவே வழங்கும் இனிப்பு, கார வகைகள் தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
- பட்டாசு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, பாதுகாத்து வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அர்ஜூன் கோபால், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் விளக்கங்களை கேட்ட பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
இதன்படி பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் கூடிய சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டதுடன், குறைந்த அளவிலான சத்தம் மற்றும் புகையை வெளியிடக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதிக அளவில் அலுமினியம் சேர்க்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பேரியம் இல்லாத பட்டாசுகளை தயாரிப்பது சிரமமாகும். அது சரவெடியில் குறைவான அளவே உள்ளது. எனவே அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு சரவெடி பட்டாசு விவகாரத்தில் தீர்ப்பை வழங்கியது. சரவெடி பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
சரவெடியில் பேரியம் வேதிப்பொருள் சேர்ப்பது அத்தியாவசியமாகிறது. அது சுற்றுச்சுழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்கிற பட்டாசு நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவர்களது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பேரியம், சரவெடி ஆகிய இரண்டில் மட்டுமே தீர்ப்பு கூறியிருப்பதாகவும், மூல வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் தீபாவளிக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிப்பதற்கு அனுமதிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்தினர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும். பட்டாசு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது பசுமை பட்டாசுகளில் எந்த மாதிரியான மூலப்பொருட்களை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு எப்போது பட்டியலிடப்படும் என்று மனுதாரர்களும் எதிர்மனுதாரர்களும் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் "ஹேப்பி தீபாவளி" என்று தெரிவித்தனர். காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவில் 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.