என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிச்சாமி"

    • அ.தி.மு.க.வை அடக்கி விட்டது பா.ஜ.க. என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
    • மகிழ்ச்சியோடு உருவானது அதிமுக - பாஜக கூட்டணி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கே சிக்கல் வரும். இதனால் பாஜக கூட்டணிக்கு எடப்பாடி ஒத்துக்கொண்டுள்ளார். அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது பா.ஜ.க., அவர்களின் அடக்குமுறைக்கு எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, முதலமைச்சரின் விமர்சனத்துக்கு பதில் கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுகவை பாஜக மிரட்டிப் பணிய வைத்துள்ளது என்று ஸ்டாலின் கூறுகிறார். எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை. மகிழ்ச்சியோடு உருவானது எங்கள் கூட்டணி. எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயம் இல்லை" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசிய தமிழிசை, "போராட்டங்கள் ஒருபக்கம் நடக்கிறது, ஆனால் முதலமைச்சர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார். Pressure கொடுத்து கூட்டணி வைத்ததாக சொல்கிறார்கள், ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியானது Pleasure" என்று தெரிவித்தார்.

    மேலும், எந்த அழுத்தத்தின் காரணமாக காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்தது? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

    • 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக - திமுக இடையே மட்டும் தான் போட்டி என்று விஜய் தெரிவித்தார்.
    • நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

    இன்று எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்றைய தினம் பொதுமக்களுடைய பிரச்சினைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பேச முயன்றபோது எனக்கு சட்ட பேரவை தலைவர் அனுமதி வழங்க வில்லை. குறிப்பாக உசிலம்பட்டி காவலர் அடித்து கொலை செய்த சம்பவம், மற்றொன்று சிவகங்கையில் பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக பேச முயன்றேன். அனுமதிக்கவில்லை.

    இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அரசு தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையில் என்னுடைய கருத்தை சட்டமன்றத்தில் தெரிவிக்க முற்பட்டேன். அதற்கு அனுமதி கொடுக்க வில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு எங்களை வெளியேற்றி விட்டார்கள் என்றார்.

    தொடர்ந்து நிருபர்கள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.விற்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் போட்டி என நடிகர் விஜய் பேசி உள்ளது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அது அவருடைய கருத்து என்றும், ஒவ்வொரு கட்சித் தலைவரும் கட்சி வளர்ச்சிக்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்து வதற்காகவும் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பார்கள். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க தான் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டு பிரதான எதிர்க்கட்சி என்கிற அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர் என்றார். பின்னர் செங்கோட்டையன் டெல்லி சென்றது குறித்து கேள்வி கேட்டதற்கு அது பற்றி எனக்கு தெரியாது என்று பதிலளித்தார்.

    • சி வோட்டர் நடத்திய கணக்கெடுப்பில் 27% பேர் மு.க.ஸ்டாலினை தேர்வு செய்துள்ளார்.
    • த.வெ.க. தலைவர் விஜயை 18% பேர் தேர்வு செய்துள்ளனர்.

    தேர்தல் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பாக நாடு முழுவதும் கருத்து கணிப்புகளை நடத்தும் சி.வோட்டர் நிறுவனம் தற்போதைய தமிழக அரசி யல் நிலவரம் தொடர்பாக கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.

    அந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியானது. அதில் தமிழக அரசியல் தலைவர்கள் செல்வாக்கு தொடர்பாக பல்வேறு ருசிகர தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    இப்போது தேர்தல் நடந்தால் முதல்-மந்திரி பதவிக்கு யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 27 சதவீதம் பேர் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நெருங்கி வரும் வகையில் விஜய்யை முதல்வராக்க 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவீத ஆதரவும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு 9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.

    தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 15 சதவீதம் பேர் மிக மிக திருப்தியாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் பேர் திருப்தி என்று கருத்து கூறியுள்ளனர்.

    25 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர். 24 சதவீதம் பேர் பதில் சொல்ல இயலாது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் எப்படி அமைந்துள்ளது என்ற கேள்விக்கு 22 சதவீதம் பேர் அவர் மிக மிக அற்புதமாக செயல்படுவதாக மிகுந்த திருப்தி தெரிவித்து உள்ளனர். 33 சதவீதம் பேர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடு ஒட்டு மொத்தத்தில் திருப்தி தருவதாக ஆதரவு தெரி வித்துள்ளனர்.

    22 சதவீதம் பேர் மட்டுமே முதல்-அமைச்சர் செயல் பாடில் திருப்தி இல்லை என்று கூறி இருக்கிறார்கள். 23 சதவீதம் பேர் பதில் சொல்ல தெரிய வில்லை என்று கூறியுள்ள னர்.

    ஒட்டு மொத்தத்தில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளில் மிகவும் திருப்தி இருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் நன்கு அமைந்து இருப்பதாகவும் தமிழக மக்களின் கருத்துக்க ளில் இருந்து தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது இருக்கும் முக்கியமான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு 15 சதவீதம் பேர் பெண்கள் பாதுகாப்பு பற்றி கூறியுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் முதல் கோரிக்கையாக இருப்பது தெரிய வந்துள்ளது.

    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அதிகம் ஆகிவிட்டதாக 12 சதவீதம் பேர் கூறியுள்ளனர். போதைப் பொருட்கள் பிரச்சினை அதிகமாக இருப்பதாக 10 சதவீதம் பேரும், வேலையில்லா பிரச்சினை இருப்பதாக 8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

    உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர் மட்டுமே மிகுந்த திருப்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு மூலம் மக்கள் மத்தியில் தி.மு.க. தொடர்ந்து செல்வாக்கில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    அதுபோல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு அதிக பேரால் ஆதரவு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அது போல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் வளர்ச்சியும் இந்த கருத்து கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    • பாமக எம்.எல்.ஏக்களுடன் பேசிக்கொண்டே அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவைக்கு வந்தார்.
    • கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்.

    சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே வந்தார்.

    அப்போது "பாஜக, நம்ம (அதிமுக), அப்புறம் பாமக" என சிரித்துக்கொண்டே பேசி வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "நாங்க கூட்டணிங்க" எனச் சொல்லிச் சென்றதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இன்று மதியம் திண்டுக்கல் சீனிவாசனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "பாமகவுடன் கூட்டணி என நான் யாரிடமும் கூறவில்லை. கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்" என்று கூறிவிட்டு சென்றார்.

    • ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
    • திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது.

    சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

    ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

    இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அதிமுக பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை
    • ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே "உரிய மரியாதையுடன்" அதனை சொல்வார்கள்.

    நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 57). இவர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.

    அதன்பிறகு இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு கிளம்பியபோது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்டி கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது.

    இதனை தொடர்ந்து, ஜாகிர் உசேன் பிஜிலி கொலை தொடர்பாக அக்பர்ஷா, தவ்ஃபீக் ஆகிய இருவர் நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    அதே போல், நேற்று கோட்டூர்புரத்தில் ரவுடிகளுக்கு இடையிலான தகராறில் இரட்டைக் கொலை நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை; ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே "உரிய மரியாதையுடன்" அதனை சொல்வார்கள்.

    ரமலான் மாதத்தில் அதிகாலை தொழுகை முடித்து ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, அதுவும் உங்கள் தந்தையின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர், வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்ல முடியவில்லை. தன் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து அவரே ஒரு காணொளியை வெளியிட்டும் இருந்திருக்கிறார்.

    இதற்கெல்லாம் என்ன தான் பதில் வைத்திருக்கிறீர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களே? வழக்கம் போல உங்கள் அமைச்சர்களை விட்டு, "அது தனிப்பட்ட பிரச்சனை" என்று கடந்துவிடப் பார்ப்பீர்கள். அவ்வளவு தானே? இந்த பதிலை சொல்ல உங்கள் திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?

    உங்கள் வழிக்கே வருகிறேன்- தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கொலை செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? உங்கள் ஆட்சியில் சட்டத்தின் மீதான அச்சம் துளி கூட இல்லாமல் போனதால் தானே? இதனை நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?

    "கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இடையிலான தகராறில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று நீங்கள் நிச்சயம் கேட்கக் கூடும். ஏனெனில், பொறுப்பற்ற பதில்களை அளிப்பது மட்டும் தானே உங்கள் அரசு செய்து வருவது? ஆனால், அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன், "தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிஸத்தைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று மக்கள் கேட்பார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

    திரு. ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • தொண்டர்கள் திரளான கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

     வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் மூலனூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. ஒன்றிய நகர பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு பேசியதாவது :- வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வருகைதர உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய நகர பேரூராட்சி பகுதியில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி பூத்துக்கும் 18 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து அதில் இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்கள் ஆகியோரை இடம்பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேசசுதர்சன் உள்ளிட்ட மாவட்ட ,ஒன்றி,ய நகர ,கிளைக்கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு அதிகாரிகள் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
    • அ.தி.மு.க. தான் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம்.

    சேலம்:

    ஆத்தூரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

    சென்னையில் புயல் காற்றினால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டபோது முதல்-அமைச்சர் பாதுகாப்பு காரில் சென்னை மேயர் பிரியா தொங்கிக்கொண்டு போனார். அது அவர் கட்சிக்காரர்.

    ஆனால் உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், திறமையான அதிகாரி. அவர் அந்த காரை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகிறார். தி.மு.க. மாவட்ட செயலாளர் போல் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி செயல்படுகிறார். இது வேதனையாக இருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி என்றால் அது ஒரு கவுரவம்.

    உயர்ந்த பதவி இருக்கிறவர்கள் இப்படி தாழ்வான நிலைக்கு போகாதீங்க. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

    பிற மாநிலத்தில் இருக்கிற மக்கள் எல்லாம் நம்முடைய மாநிலத்தை பார்க்கின்றபோது தரத்தை குறைத்து மதிப்பிடுவாங்க.

    அரசு அதிகாரிகள் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தயவு செய்து இப்படி இருக்க வேண்டாம். அரசு அதிகாரி காரில் தொங்கிக்கொண்டு போனால் மக்கள் எப்படி பார்ப்பார்கள்?

    அ.தி.மு.க. தான் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம். மீண்டும் அம்மாவுடைய அரசு உங்களுடைய பேராதரவோடு மலரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பதுதான் நடைமுறை.
    • காதல் கடிதமா வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவதற்கு.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரதெருவில் உள்ள வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளரான புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர். அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பதுதான் நடைமுறை.

    இதுஎன்ன காதல் கடிதமா வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவதற்கு. இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில்தான் மாநில தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளார். எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடர்கின்றனர்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அமைச்சகம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அனுப்பபட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டுள்ளனர். இது முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையின் தூண்டுதலே காரணம். திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக தொடர்ந்தால் அ.தி.மு.கவில் ஒரு சேர்கூட மிச்சம் இருக்காது. சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடித்து விடுவார்கள். சசிகலா காலில் விழுந்ததால்தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக முடிந்தது. அவரைப்பற்றி பேசுவதற்கு எடப்பாடி தரப்பினருக்கு தகுதி கிடையாது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமாகும். எனவே அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு ஓ.பி.எஸ். தலைமையை ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. வெற்றிக்காக பம்பரமாக சுழன்று கட்சியினர் பணிபுரிய வேண்டும்.
    • நாமே வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடு புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றுங்கள்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து அ.தி.மு.க. களம் இறங்குகிறது.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரப்போகிறது? என்பது அரசியல் களத்திலும், அ.தி.மு.க. வட்டாரத்திலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. இதனை வைத்து எடப்பாடி பழனிசாமி பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தல், தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தலாகும். இதனை கருத்தில் கொண்டு இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்ட மன்ற தேர்தலின் போது கூட்டணி கட்சியான த.மா.கா. குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தது. இதனை மனதில் வைத்து கட்சியினர் செயல்பட வேண்டும்.

    தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மக்கள் மத்தியில் சரியாக நாம் கொண்டு சென்று பிரசாரம் செய்தாலே வெற்றி பெற்று விடலாம். எனவே அ.தி.மு.க. வெற்றிக்காக பம்பரமாக சுழன்று கட்சியினர் பணிபுரிய வேண்டும்.

    ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி போட்டியிடுகிறதே? நம்மால் வெற்றி பெற முடியுமா? என்று தளர்ந்து போகாமல் பணியாற்றுங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    கட்சிக்கு நிச்சயமாக இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இதில் எந்த குழப்பமும் அடையாதீர்கள்.

    தி.மு.க. அரசு மீது பரவலாக எழுந்துள்ள விமர்சனங்களையும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும் சொல்லி ஓட்டு கேளுங்கள். நாமே வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடு புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றுங்கள்.

    எதிர்காலத்தில் நாம் பெறப்போகும் வெற்றிக்கு ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

    இவ்வாறு அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறினார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுவதா? இல்லை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது பற்றி இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் அ.தி. மு.க.வினர் விருப்ப மனுக்களை பெற்றுக் கெள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் சுறுசுறுப்புடன் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    • முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • மதுரை மக்களுக்கு கொண்டுவரப்பட்ட ரூ‌. 1,296 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    மதுரை

    தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வழியாக வந்தார். அப்போது மதுரை வலையங்குளம் ரிங் ரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேளதாளம் முழங்க எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து டாக்டர் சரவணன் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றார்.

    பின்னர் அங்கு நடந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அப்போது டாக்டர் சரவ ணன், பழனிச்சாமிக்கு செங்கோல் கொடுத்தார்.

    விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் வாக்கு றுதியை 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக பொய் கூறி வருகிறார்கள். ஆனால் 10 சதவீத வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை.

    ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. அரசு தான். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாக மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் உண்மையில் தமிழகம் ஊழலில் தான் முதன்மையாக இருக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க.வினர் நிறுத்திவிட்டார்கள். மதுரை மக்களுக்கு கொண்டுவரப்பட்ட ரூ. 1,296 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    தி.மு.க. கூறிய எந்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை மக்களுக்கு பட்டை நாமம் போட்டு விட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
    • கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (வயது 44). இவர் பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவரும், அவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் (36) சேர்ந்து காரில் அந்த மாணவியை ஏற்றி சென்றுள்ளனர். பின்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடி புது நகரை சேர்ந்த பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி (45), அன்னலட்சுமி என்ற உமா (34) ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.

    அவரது உத்தரவின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது ஆகியோர் மீது போக்சோ சட்டத்திலும், கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி கைதாகி உள்ள பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஜி. சிகாமணி, (பரமக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×