என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறவில்லை.
    • இதையடுத்து, ஜோஸ் பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை ஏற்க தனக்கு ஆர்வம் இல்லை என நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இதையடுத்து, ஜோஸ் பட்லர் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணி கேப்டன் பதவியை ஏற்க ஆர்வமாக உள்ளீர்களா என ஜோ ரூட்டிடம் கேட்கப்பட்டது.

    இங்கிலாந்தில் ஒரு கேப்டனாக எனது நேரத்தைச் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் அதைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் எவரும் மிகவும் பெருமைப்படுவார்கள், சிறந்த வேலையைச் செய்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

    ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் இந்தியாவை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    நாங்கள் வெற்றிபெற முடியும் என நினைக்கிறேன். முதலில் நாங்கள் சொந்த மண்ணில் விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

    5 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியா வருகிறது. போட்டியை வெல்லும் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்'
    • ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான பட்டத்தையும் ஷஹானா கோஸ்வாமி பெற்றார்.

    பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது. 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.

    இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    கதை என்ன?

    வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

    என்ன பிரச்சனை?

    இந்நிலையில் படத்தில் உள்ள கருத்துக்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை வெட்ட தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய படத்தின் ஹீரோயின் (பெண் போலீஸ் கதாபாத்திரம்) ஷஹானா கோஸ்வாமி. "படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை சென்சார் வழங்கியுள்ளது.

    எங்கள் முழு குழுவும் அதனுடன் உடன்படவில்லை, ஏனென்றால் அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள், எனவே, இந்திய திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை.

    இந்தியாவில் வெளியிட இவ்வளவு வெட்டுக்களும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றிருந்தார்.

    படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான சந்தியா சூரி, சென்சார் குழுவின் முடிவை ஏமாற்றமளிப்பதாகவும் மனதை உடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    அவர் கூறியதாவது, "இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு, ஏனென்றால் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் இந்திய சினிமாவுக்குப் புதியவை என்றோ அல்லது இதற்கு முன்பு வேறு படங்களில் எழுப்பப்பட்டதில்லை என்றோ நான் நினைக்கவில்லை. சென்சார் வாரியம் வழங்கிய வெட்டுக்களின் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

    • மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான தனிநபர்கள் 4 பேர் மீது பொருளாதார தடை.
    • இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

    2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய போரில் மனித உரிமை மீறல் ஏற்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் உள்பட 4 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடைவிதித்துள்ளது.

    இலங்கை ஆயுதப்படை முன்னாள் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணகோடா, முன்னாள் இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணை தலைவராக இருந்து பின்னர், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு இலங்கை பாராளுமன்றத்தில் துணை மந்திரியான வினாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நான்கு பேரும் இங்கிலாந்துக்கு பயணம் செய்யவும், அங்குள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சட்டத்திற்கு புறம்பாக கொலை, துன்புறுத்தல் அல்லது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான 4 பேர் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், "இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

    விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்றதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

    விடுதலைப்புலிகளுக்கு எதிரான சுமார் 30 வருட சண்டையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதாக, இலங்கை அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

    • உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.
    • இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது.

    இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் தேதி பவுலா மற்று்ம டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

    அங்கு தேவதை போன்ற எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். புகைப்படங்களின் படி மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்ட மர்ம உயிரினம் காணப்படுகிறது. இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.

     


    "இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. அது மிகவும் விசித்திரமான விஷயம்," என்று பவுலா ரீகன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    கடற்பகுதிகளில் விசித்திர தோற்றமுடைய பொருள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், ரஷிய மீனவர் கடலின் ஆழத்திலிருந்து ஒரு விசித்திரமான, இதுவரை கண்டிராத உயிரினத்தை பிடித்தார். இது சமூக ஊடகங்களில் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. 

    • தாய் ஜூலியானா மற்றும் தங்கை கிசேல் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர்.
    • தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் நிக்கோலசை கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் லூட்டன் நகரைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் பிரோஸ்பர் (வயது 19). கடந்த ஆண்டு இவருக்கும், தாய் ஜூலியானா பால்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் திடீரென வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் தாய் ஜூலியானா மற்றும் தங்கை கிசேல் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் நிக்கோலசை கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். எனவே நிக்கோலசுக்கு 49 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • இதை ஏற்று அந்த பெண் டெல்லிக்கு வந்து மஹிபால்பூர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரிட்டிஷ் உயர் கமிஷனிடம் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர்.

    இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண் இன்ஸ்டாகிராம் நண்பனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த பெண் கைலாஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இதற்கிடையே மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு சமீபத்தில் சுற்றுலா வந்துள்ளார்.

    தனது இன்ஸ்டா நண்பன் கைலாஷையும் தன்னுடன் அந்த பெண் அழைத்துள்ளார். ஆனால் கைலாஷ் தான் டெல்லியில் உள்ளதாகவும், அங்கு வருமாறும் பெண்ணனிடம் தெரிவித்துள்ளார்.

    இதை ஏற்று அந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு வந்து மஹிபால்பூர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் மாலையில் தனது அறைக்கு கைலாஷை அப்பெண் அழைத்துள்ளார்.

    தனது நண்பன் வாசிம் உடன் வந்த கைலாஷ் ஹோட்டல் அறையில் வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க ஹோட்டல் லிப்டில் சென்றபோது அங்கு வேலைபார்த்த ஊழியர் ஒருவரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறி அந்த பெண் வசந்த் குஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரிட்டிஷ் உயர் கமிஷனிடம் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். கைலாஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தாக தெரிகிறது. அவனையும் தொடர்புடையவர்களையும்  கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    தன்னைச் சந்திக்க இந்தியாவுக்கு வருமாறு பெண்ணை அடிக்கடி கைலாஷ் வற்புறுத்தியது தெரியவந்தது. பெண்ணுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது டெஸ்ட் போட்டி 1877-ம் ஆண்டில் நடந்தது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டு கால போட்டி அதே மெல்போர்னில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 1977-ம் ஆண்டு நடந்தது.

    மெல்போர்ன்:

    சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது டெஸ்ட் போட்டி 1877-ம் ஆண்டில் நடந்தது. மெல்போர்னில் நடந்த அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டு கால போட்டி அதே மெல்போர்னில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 1977-ம் ஆண்டு நடந்தது. இவ்விரு டெஸ்டிலும் ஆஸ்திரேலியா தலா 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் 150-வது ஆண்டு கால கொண்டாட்டம் 2027-ம் ஆண்டில் தொடங்குகிறது. இதையொட்டி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் சிறப்பு டெஸ்ட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. 2027-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மெல்போர்னில் இந்த டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் நேற்று அறிவித்தார்.

    ஆஸ்திரேலிய மைதானங்களில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகள் பகல்-இரவாக பிங்க் பந்தில் நடந்துள்ளது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் பிங்க் பந்து டெஸ்ட் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

    • இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தில் 100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் சுமார் 2,600 பேர் பணியாற்றி வருகிறார்கள்.
    • பெரு நிறுவனங்களான அடாம் வங்கி மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான ஆவின் ஆகியவையும் 4 நாட்கள் வேலை திட்டத்தில் கையொப்பமிட்டுள்ளன.

    லண்டன்:

    ஐரோப்பியாவில் சில நாடுகள், ஊழியர்களிடம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை வாங்கும் திட்டத்தை கொண்டு வந்து உள்ளன.

    பணி நேரம் அதிகமாக இருப்பதால் ஊழியர்கள் சிரமத்தை களைய அதே வேளையில் பணியும் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

    இங்கிலாந்தில் சோதனை ஓட்டமாக வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் கடந்த ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 6 மாதங்கள் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சுமார் 3,300 ஊழியர்கள் பங்கேற்று பணியாற்றி வந்தனர். இதன் முடிவில் 88 சதவீத நிறுவனங்கள், இத்திட்டம் தங்கள் வணிகத்துக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன. 15 சதவீதம் உற்பத்தித்திறன் உயர்ந்துள்ளதாகவும், மற்ற பணிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தன.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தில் 100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் சுமார் 2,600 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இதில் பெரு நிறுவனங்களான அடாம் வங்கி மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான ஆவின் ஆகியவையும் 4 நாட்கள் வேலை திட்டத்தில் கையொப்பமிட்டுள்ளன. இந்த 2 நிறுவனங்களிலும் தலா 450 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்.

    இதுகுறித்து ஆவின் தலைமை நிர்வாகி ஆடம் ரோஸ் கூறும்போது, இது நிறுவனத்தின் வரலாற்றில் நாங்கள் பார்த்த மிகவும் மாற்றத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும்.

    கடந்த 1½ ஆண்டுகளில் ஊழியர்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் மிகப்பெரிய அதிகரிப்பை கண்டோம். அதே நேரத்தில் வாடிக்கையாளர் சேவை மற்றும் உறவுகளை, தக்க வைத்தல் ஆகியவற்றில் பெரும் பயன்கள் ஏற்பட்டன என தெரிவித்துள்ளார்.

    100 இங்கிலாந்து நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைக்காமல், நிரந்தரமாக 4 நாட்கள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளன.

    • முதல் நாளான இன்று 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து அசத்தினர்
    • ஹாரி ப்ரூக் டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

    ராவல்பிண்டி:

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். தொடக்க வீரர்களான ஜாக் கிராலி, பென் டக்கட், ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய நான்கு வீரர்கள் சதமடித்து அசத்தினர்.

    அணியின் சிறந்த தொடக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் முனைபில் விளையாடிய ஹாரி புரூக், தொடக்கம் முதலே விறுவிறுவென ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆட்டத்தின் 68வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சவுத் ஷகீல் வீச வந்தார். அந்த ஓவரில் ருத்ரதாண்டவமாடிய புரூக், ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை திரட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்திலும் பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை புரூக் பெற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடித்த வீரர்கள்:

    1982: சந்தீப் பாட்டீல் - பாப் வில்லிஸ் பந்துவீச்சு

    2004: கிறிஸ் கெய்ல் -மேத்யூ ஹோகார்ட் பந்துவீச்சு

    2006: ராம்நரேஷ் சர்வான் -முனாஃப் படேல் பந்துவீச்சு

    2007: சனத் ஜெயசூர்யா -ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு

    2022: ஹாரி ப்ரூக் -சவுத் ஷகீல் பந்துவீச்சு.

    • ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன.
    • இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

    ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக களத்தில் இவ்விரு அணி வீரர்களும் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு.

    குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 6 தொடர் 'டிரா'வில் முடிந்துள்ளது. கடைசியாக 2021-22-ம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சொந்தமாக்கியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது.

    இந்நிலையில் தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது.
    • இங்கிலாந்தைவிட ஆஸ்திரேலியா அணி 142 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    பென் ஸ்டோக்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரை சதம் விளாசினார்.

    9 விக்கெட்டுகளை இழந்ததால் அதிரடியாக விளையாடிய ஸ்டோக்ஸ் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் முன்னிலையுடன் 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது.

    முதலாவதாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 43 ரன்களிலும், டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும் அவுட்டானார்கள். தொடர்ந்து மார்னஸ் 33 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், இங்கிலாந்தைவிட ஆஸ்திரேலியா அணி 142 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    • கொரோனா வைரஸ் தொற்று நோயை தொடர்ந்து சிகிச்சைக்கான நோயாளிகளின் காத்திருப்பு பட்டியல் நீண்டுள்ளது.
    • வேலை நிறுத்தங்கள் நடைபெறும் போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்ற கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது.

    இங்கிலாந்தில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த சுமுக முடிவு எட்டப்படாததால், பல்லாயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் தங்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். 5 நாள் இப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது நீடித்தால் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை அமைப்பின் வரலாற்றிலேயே ஒரு மிக நீண்ட வேலை நிறுத்தமாக இது அமையும்.

    இன்று காலை 7 மணிக்கு தங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கிய அவர்கள் 35% ஊதிய உயர்வுக்காக போராடுகிறார்கள். இந்த மருத்துவரகள் அனைவரும் மருத்துவ படிப்பை முடித்து தங்கள் மருத்துவ பணியின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பணவீக்கத்தை கணக்கில் கொண்டு இளநிலை டாக்டர்களின் ஊதியத்தை 2008ம் ஆண்டிருந்த நிலைக்கு நிகராக கொடுக்க வேண்டும் எனக் கோரி 35% ஊதிய உயர்வை அந்நாட்டு மருத்துவர்களின் சங்கமான பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால், இதில் உடன்படிக்கை ஏற்படவில்லை.

    இங்கிலாந்தின் 75,000 அல்லது அதற்கு மேற்பட்ட இளநிலை மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயை தொடர்ந்து சிகிச்சைக்கான நோயாளிகளின் காத்திருப்பு பட்டியல் நீண்டுள்ளது.

    "இங்கிலாந்தின் தேசிய மருத்துவ சேவையின் (NHS) வரலாற்றிலேயே இன்று முக்கியமான நாள். மருத்துவர்களின் வெளிநடப்பை குறிக்கும் இந்த நாள் மிக நீண்ட வேலை நிறுத்தமாக மாறி வரலாற்று புத்தகங்களில் பதிவாகி விட கூடாது" என்று பிரிட்டனின் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்களான டாக்டர், ராபர்ட் லாரன்சன் மற்றும் டாக்டர், விவேக் திரிவேதி ஆகியோர் கவலை தெரிவித்தனர்.

    வேலை நிறுத்தங்கள் நடைபெறும்போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்ற முன்நிபந்தனையை கைவிடுமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

    "இளநிலை மருத்துவர்களின் இந்த 5 நாள் வெளிநடப்பு, ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். நோயாளிகளின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. சுகாதார சேவையின் காத்திருப்பு பட்டியலை குறைக்கும் முயற்சிகளை இது தடுக்கிறது. அவர்களின் 35% அல்லது அதற்கு மேற்பட்ட ஊதிய கோரிக்கை நியாயமற்றது. இந்தளவு ஊதிய உயர்வு அனைவரையும் ஏழ்மையாக்கி பணவீக்கத்தை மேலும் தூண்டி விடும் அபாயமும் உள்ளது" என்று சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே கூறியிருக்கிறார்.

    பல துறைகளில் பொது ஊழியர்களின் வேலை நிறுத்தங்களை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்து அரசாங்கம், வேலை நிறுத்தங்கள் நடைபெறும் போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறது.

    பிற உலக நாடுகளை போலவே, பல வருடங்களாக இல்லாத வகையில் முதல் முறையாக இங்கிலாந்து அரசாங்கம் அதிகரிக்கும் பணவீக்கத்துடன் போராடுகிறது. கொரோனா தொற்று நோய் பாதிப்பின் விளைவாக விநியோக சங்கிலி சிக்கல்களால் விலையுயர்வு முதலில் தூண்டப்பட்டது. பின்னர், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் எரிசக்தி மற்றும் உணவு விலைகள் உயர்ந்தன.

    ×