search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 164462"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது.
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. மேலும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது.

    அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள பிபோர்ஜோய் அதிதீவிரப் புயலாக வலுவடைந்து வடக்கு நோக்கி நகரும்.

    வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின.
    • தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக மழை பொழிவு இருக்கும்.

    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். இதற்கான அறிகுறிகள் கேரளாவின் லட்சத்தீவில் தென்படும். அதனை மையமாக வைத்தே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்யும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

    இந்த நிலையில்தான் அரபிக்கடலில் பிபோர்ஜோய் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை உருவாகுவதற்கான பகுதிகளில் உள்ள காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்பதால் தென்மேற்கு பருவமழை தொடங்குவது தள்ளிப்போகும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். அதற்கேற்ப கடந்த வாரம் முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.

    தற்போது பிபோர்ஜோய் புயல் கராச்சிக்கு தெற்கே, ஓமன் நோக்கி நகர்ந்து விட்டது. இதன்காரணமாக லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின. இதன்மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதற்கேற்ப மாலத்தீவு-லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் ஏற்பட்டது. இது தென்மேற்கு பருவமழை ஆரம்பம் ஆகி விட்டதை காட்டுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக மழை பொழிவு இருக்கும். ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இது விவசாயத்திற்கு உகந்தது என்பதால் நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் சாகுபடி பணிகளில் ஆர்வமாக ஈடுபடுவார்கள்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்து உள்ளன. பிபோர்ஜோய் புயல் காரணமாக மழை பொழிவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தனர். ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்யும் என்று கூறியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
    • தென் அரபிக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே பருவமழை தொடங்கியது.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

    இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 4 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளது.

    தென் அரபிக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருகிறது. இது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலைகளை காட்டுகிறது. எனவே இன்னும் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு தோகாவில் இருந்து ஒரு விமானம் வந்தது.
    • தங்கத்தை கடத்தி வந்ததாக நிஷாத் என்பவரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு தோகாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் 570 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக நிஷாத் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    • பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோவிலுக்கு தேவையான பொருள்களை கேபிள் கார் மூலம் கொண்டு செல்ல தேவசம்போர்டு திட்டமிட்டது.
    • சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்களின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

    இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய கோவிலின் அடிவாரமான பம்பையில் இருந்து பொருள்கள் டிராக்டர் மூலம் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.

    இந்த டிராக்டர்கள் மலைப்பாதையில் செல்லும்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. எனவே பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோவிலுக்கு தேவையான பொருள்களை கேபிள் கார் மூலம் கொண்டு செல்ல தேவசம்போர்டு திட்டமிட்டது. இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கேபிள் கார் அமைக்க அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டது.

    சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும்.

    இதற்கான மண் ஆய்வு பணியும் தொடங்க உள்ளது. இந்த பணி முடிந்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
    • ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

    இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுது ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சுக்கம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் இது பற்றி பாதகையும் கிராம மக்கள் வைத்தனர். இந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற நான்கு கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார்,மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தத்தின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
    • இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கேரள அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    கொல்லம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தவர் வந்தனா தாஸ் (23). இன்று அதிகாலையில் அவர் பணியில் இருந்தபோது, சந்தீப் என்ற நபருக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

    குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையின்போது சந்தீப்புக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர் வந்தனா சிகிச்சை அளித்தபோது திடீரென ஆவேசமாக எழுந்த சந்தீப், ரகளையில் ஈடுபட்டுள்ளார். கத்தரிக்கோலை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்கி உள்ளார்.

    இதில் டாக்டர் வந்தனா, போலீஸ்காரர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் டாக்டர் வந்தனா தாஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டாக்டரின் மரணம் குறித்து பல்வேறு தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் போதையில் இருந்துள்ளார்.

    மருத்துவர் உயிரிழப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கல் தெரிவித்ததுடன், இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்திய மருத்துவ சங்கம், மற்றும் கேரள அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

    ஊடக தகவல்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கொல்லம் மாவட்ட காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.

    • ஏப்ரல் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார்.
    • வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலத்தின் மல்லப்புரம் மாவட்டத்தில் திருநவ்யா மற்றும் திருர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாக்குதல்காரர்கள் ரயிலின் சி4 பெட்டி மீது கற்களை வீசி கடுமையாக தாக்கினர். இதில் ரயிலின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மல்லப்புரம் காவல் துறை விசாரணையை துவங்கி, அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. ரயில்வே காவல்துறையும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவம் நடைபெற்ற பகுதியின் கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் தெற்கு ரயில்வே வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தான் பிரதமர் நரேந்தி மோடி திருவணந்தபுரம் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார். மல்லப்புரம் மாவட்டத்தின் திருர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிற்க வலியுறுத்தி ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. முந்தைய அறிவிப்பின் போது வந்தே ரயில் திருரில் நின்று செல்லும் என்றே கூறப்பட்டது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு திருரில் வந்தே பாரத் ரயில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டது.

    வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு கேரளா மாநிலத்தின் பாஜக தலைவர் கே சுரேந்திரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மல்லப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவம் கேரளாவுக்கு அவப்பெயரை கொண்டு சேர்த்துள்ளது. முதல் நாளில் இருந்தே எதிர்ப்புக்குரல் இருந்து வந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.

    டிரைவர் உள்பட 2 பேர் கைது

    நாகர்கோவில், மார்ச்.14-

    குமரி மாவட்டம் வழியாக கேரளா வுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருவாய் துறை அதிகாரிகளும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமையிலான போலீசார் இன்று காலை இருளப்பபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த டெம்போவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் டெம்போ நிற்கவில்லை. வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் தங்களது வாகனம் மூலமாக டெம்போவை துரத்தி சென்று பீச்ரோடு சந்திப்பில் வைத்து மடக்கிப் பிடித்தனர். டெம்போவை போலீஸ் மடக்கியதும் டெம்போவில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். எனினும் துரிதமாக செயல்பட்ட போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    இதைத் தொடர்ந்து டெம்போவை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 2,100 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது.

    அந்த ரேஷன் அரிசியை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர் டெம்போ டிரைவரான கோட்டாரை சேர்ந்த தளபதி (வயது 52) என்பவரையும், தப்பி செல்ல முயன்ற கிளினரான பன்னீர் செல்வம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ரேஷன் அரிசியை டெம்போவோடு சேர்த்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • யானை தந்த பொம்மைைய கேரளாவில் இருந்து கடத்தி வந்த 2 பேருக்கு வனத்துறை வலைவீசி வருகின்றனர்.
    • யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மதுரை

    மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது மதுரை ஜெ.ஜெ. நகர் பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அங்கு யாைன தந்த பொம்மைகளை விற்பனை செய்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த இருளன் என்ற முத்து, பாண்டியன் நகரை சேர்ந்த பீட்டர் சகாயராஜ் என்பது தெரிய வந்தது. அவர்கள் நாங்கள் இந்த பொம்மைகளை செய்யவில்லை. சாத்தூரை சேர்ந்த ரஞ்சித்ராஜா என்பவரிடம் வாங்கி வந்து கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மதுரை சரக வனத்துறை அதிகாரிகள் சாத்தூருக்கு சென்று ரஞ்சித்ராஜாவை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், யானை தந்த பொம்மைகள் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டு மதுரை மற்றும் விருதுநகரில் விற்பனை செய்து வருவது தெரி வந்தது.

    இந்த சிலைகளை கடத்திவரும் 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    யானை தந்த பொம்ைம விற்பனை தொடர்பாக பிடிபட்ட பொன்இருளன், பீட்டர்சகாயராஜ், ரஞ்சித்ராஜா ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி தபாலா கூறுகையில், மதுரை வன குற்றங்களின் மையமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். வன உயிரினங்களை வேட்டையாடுவோர், மயில் இறகு, யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கேரள மலைகிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
    • கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 3712 பாம்புகள் பிடிபட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காடுகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மலைகிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. விஷ பாம்புகள் கடித்து பலர் பலியாகி உள்ளனர். இந்த பாம்புகளை பிடிக்க வனத்துறையினரும், பாம்பு பிடிக்கும் நிபுணர்களும் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கேரளாவில் பிடிபட்ட பாம்புகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 325 என தகவல் வெளியாகி உள்ளது. இதில் கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 3712 பாம்புகள் பிடிபட்டுள்ளன. கோட்டயத்தில் 1635 பாம்புகளும், வயநாட்டில்1616 பாம்புகளும் பிடிபட்டுள்ளன.

    தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 1415 பாம்புகள் சிக்கியுள்ளது. ஏராளமான பாம்புகள் பிடிப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் கவனமுடன் செல்லவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • 500 கிலோ அரிசி பறிமுதல்
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமை யிலான குழுவினர் வெள்ளமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தெரிசனம் கோப்பு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.

    காரை சோதனை செய்த போது காரில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரில் இருந்து 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தேரேக்கால் புதூர் பகுதியைச் சேர்ந்த அன்சார் என்பது தெரியவந்தது.போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அன்சாரிடம் விசாரணை நடத்திய போது ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×