என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா"
- இந்திய அணி அக்டோபர், நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
- அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் ஆடுகிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி பெர்த்தில் நடக்கிறது. எஞ்சிய இரு ஒருநாள் போட்டிகள் அடிலெய்டு (அக்டோபர் 23), சிட்னியில் (அக்டோபர் 25) நடைபெறுகிறது.
டி20 ஆட்டங்கள் கான்பெர்ரா (அக்டோபர் 29), மெல்போர்ன் (அக்டோபர் 31), ஹோபர்ட் (நவம்பர் 2), கோல்டுகோஸ்ட் (நவம்பர் 6), பிரிஸ்பேன் (நவம்பர் 8) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியா செல்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்டில் விளையாடுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பெர்த்தில் மார்ச் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது.
- விலைவாசி உயர்வு, வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும்.
- இந்த தேர்தல் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவின் கவர்னர் சாம் மாஸ்டினை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் சென்று சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்தப் பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தேர்வாகினர். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கண்காட்சி கடந்த 14-ம் தேதி சென்னையில் தொடங்கியது.
- மாணவர்கள், பெற்றோர்களுக்கு இந்த கண்காட்சி விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது.
ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையம் (Austrade) சார்பில் "ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா"வின் இரண்டாம் கட்ட நிகழ்வு நடைபெற்றது. இது ஆஸ்திரேலியாவின் உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் பிரீமியம் உணவு, பான தயாரிப்புகளைக் கொண்டாடும் கண்காட்சியாகும். இந்த கண்காட்சி கடந்த 14-ம் தேதி சென்னையில் தொடங்கியது.
அதன்பிறகு இந்த விழா புனே (மார்ச் 16), அகமதாபாத் (மார்ச் 20) மற்றும் டெல்லி (மார்ச் 22) ஆகிய நகரங்களிலும் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாடவும், அவர்களின் கல்வி மற்றும் தொழில் விருப்பங்களை ஆதரிக்கும் வகையில் கல்வித் திட்டங்களை ஆராயவும் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த சென்னை கண்காட்சி ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது.
ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்வி உறவுகள் பல ஆண்டுகளாக ஆழமடைந்துள்ளன. வளர்ந்து வரும் வலுவான பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை வளர்க்கின்றன. ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் இருப்பை வலுப்படுத்துகிறது.
- சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது டெஸ்ட் போட்டி 1877-ம் ஆண்டில் நடந்தது.
- டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டு கால போட்டி அதே மெல்போர்னில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 1977-ம் ஆண்டு நடந்தது.
மெல்போர்ன்:
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது டெஸ்ட் போட்டி 1877-ம் ஆண்டில் நடந்தது. மெல்போர்னில் நடந்த அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டு கால போட்டி அதே மெல்போர்னில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 1977-ம் ஆண்டு நடந்தது. இவ்விரு டெஸ்டிலும் ஆஸ்திரேலியா தலா 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் 150-வது ஆண்டு கால கொண்டாட்டம் 2027-ம் ஆண்டில் தொடங்குகிறது. இதையொட்டி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் சிறப்பு டெஸ்ட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. 2027-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மெல்போர்னில் இந்த டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் நேற்று அறிவித்தார்.
ஆஸ்திரேலிய மைதானங்களில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகள் பகல்-இரவாக பிங்க் பந்தில் நடந்துள்ளது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் பிங்க் பந்து டெஸ்ட் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.
- தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
- அவரை நாடு கடத்த இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை விடுத்தது.
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள வாங்கெட்டி கடற்கரை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு, 24 வயது நிரம்பிய இளம்பெண் டோயா கார்டிங்லி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்வீந்தர் சிங் (வயது 38) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளை விட்டு விட்டு தலைமறைவான அவரைப் பற்றி துப்பு கொடுத்தால் 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (ரூ.5.5 கோடி) சன்மானம் வழங்கப்படும் என குயீன்ஸ்லேண்ட் காவல்துறை அறிவித்தது. இது குயீன்ஸ்லாந்து காவல்துறை வரலாற்றில் மிக அதிகமான சன்மானம் ஆகும்.
இதனையடுத்து விமானம் மூலம் ராஜ்வீந்தர் சிங் இந்தியா தப்பி வந்துவிட்டதாகவும், அவரை நாடு கடத்தவேண்டும் என்றும் இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அரசு கடந்த 2021ம் ஆண்டு கோரிக்கை விடுத்தது. அவரை கைது செய்து ஒப்படைக்க இந்தியா ஒப்புதல் அளித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய போலீசார் மற்றும் இந்திய சட்ட அமலாக்கப் பிரிவினரின் உதவியுடன் டெல்லி காவல்துறையின் சிறப்புப் படையினர் ராஜ்வீர் சிங்கை நேற்று கைது செய்தனர். உடனடியாக அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 30ம் தேதி வரை நிதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
- ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
- பிரபல புகைப்படக்கலைஞர் பல கோணங்களில் படம் பிடித்தார்.
சிட்னி:
சர்வதேச அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. அங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய கதிர்கள் உடல் மீது படும் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு என மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று விழிப்புணர்வு போட்டோ சூட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கடற்கரையில் சூரிய உதயத்தின்போது தங்கள் ஆடைகளை களைந்த அவர்கள் நிர்வாணமாக நின்று கொண்டும், கடற்கரையில் படுத்துக் கொண்டும், தோலின் மீது சூரிய கதிர்கள் படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்விற்காக கடற்கரையின் ஒரு பகுதி மட்டும் தற்காலிகமாக நிர்வாண கடற்கரையாக அறிவிக்கப் பட்டிருந்தது. பிரபல புகைப்படக்கலைஞர் ஸ்பென்சர் துனிக் பல்வேறு கோணங்களில் இதனை படம் பிடித்தார்.
இது குறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஸ்காட் மாக்ஸ், இந்த கலை படைப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் புற்றுநோயிலிருந்து நமது மக்களைக் காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், புற்று நோய் காரணமாக யாரும் இறக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் என கூறினார்.
- பாகிஸ்தானில் உள்ள சவுதி மக்கள், அதிகாரிகள் வெளியே செல்வதை தவிர்க்க வலியுறுத்தல்.
- ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்.
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபிய குடிமக்கள், அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தேவையை தவிர வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்கவும், தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக விழிப்புடன் செயல்படவும், ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
- சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

கிரிக்கெட் விளையாட்டை நேரில் பார்த்த அனிருத்
இந்நிலையில் இந்த போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் சென்று பார்த்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியமர்த்த கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டது.
- வைரல் ஆகி வரும் விளம்பரம் பிரிடிஷ் மருத்துவ இதழின் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறை, மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகர ஊதியம் வழங்குவதாக கூறும் விளம்பர பதிவு வைரல் ஆகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்த மிகவும் கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வைரல் ஆகி வரும் விளம்ர பதிவில், "டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டதா? ஆஸ்திரேலியாவுக்கு வாங்க! பிரிட்டனை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும். மாதம் 10 ஷிஃப்டுகள் மட்டும் வேலை செய்து, 20 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்."
"ஆண்டு வருமானம் 2 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1.3 கோடி. இத்துடன் தங்கும் இடம் வழங்கப்படும். சைன்-இன் போனஸ் தொகையாக ரூ. 2.7 லட்சம் வழங்கப்படும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் விளம்பரம் பிரிடிஷ் மருத்துவ இதழின் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்த விளம்பரத்தை எழுத்தாளர் மற்றும் முன்னாள் மருத்துவ நிபுணர் ஆடம் கே தனது டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
- மேஜை டிராயருக்குள் கருப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட பெரிய மலைபாம்பு ஒன்று நிம்மதியாக உறங்குவதை காண முடிகிறது.
- ஒருவர் அந்த மலைப்பாம்பை பிடித்து காட்டுக்குள் விடுகிறார்.
ஆஸ்திரேலியாவில் பார் மேலாளர் ஒருவரின் மேஜை டிராயருக்குள் மலைப்பாம்பு சுருண்டு கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்சைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் மூலம் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் மேஜை டிராயருக்குள் கருப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட பெரிய மலைபாம்பு ஒன்று நிம்மதியாக உறங்குவதை காண முடிகிறது. பின்னர் மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் அந்த மலைப்பாம்பை பிடித்து காட்டுக்குள் விடுகிறார்.
பகிரப்பட்டதில் இருந்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரம் விருப்பங்களையும் பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் வீடியோவை பார்த்து பய்ந்துவிட்டேன். எனது மேஜை டிராயரை பூட்டி விட்டு போக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன.
- இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.
ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக களத்தில் இவ்விரு அணி வீரர்களும் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு.
குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 6 தொடர் 'டிரா'வில் முடிந்துள்ளது. கடைசியாக 2021-22-ம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சொந்தமாக்கியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது.
இந்நிலையில் தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான சட்டமசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- இந்த ஆண்டு இறுதிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் பழங்குடியினரின் உரிமைகள் தொடர்பான ஒரு வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பிற்கு வழிவகுக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பல நூற்றாண்டுகளாக வாழும் பழங்குடியின மக்கள் அபோரிஜின்ஸ் (Aborigins)எனப்படுவர். இவர்களுக்கு இதுவரை அரசியலமைப்பு ரீதியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் தேசிய கொள்கை வகுப்பில் எந்த பங்களிப்பும் இன்றி இருந்து வருகின்றனர்.
அதை மாற்றும் முயற்சியின் முதல்படியாக, பழங்குடியின மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவில் வசிக்கும் மக்களுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கவேண்டுமா? என்பதை தீர்மானிக்க அந்நாட்டு மக்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பிறகு பாராளுமன்ற மேலவையான செனட் சபையில் நடந்த இறுதி வாக்கெடுப்பில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 52 பேரும் எதிராக 19 பேரும் வாக்களித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவில் வசிக்கும் மக்களை பாதிக்கும் விஷயங்களில், பாராளுமன்றத்திற்கு ஆலோசனை வழங்கக்கூடிய "பாராளுமன்றத்திற்கான குரல்" என்ற ஒரு ஆலோசனை குழுவை அமைப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை ஆஸ்திரேலியர்கள் ஆதரிக்கிறார்களா, இல்லையா என இந்த வாக்கெடுப்பின் மூலம் மக்களிடம் கேட்டறியப்படும்.
இது குறித்து பேசியுள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ், 'பாராளுமன்றங்கள் சட்டங்களை இயற்றுகின்றன. ஆனால் மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள். இது உங்கள் நேரம், உங்கள் வாய்ப்பு; சரித்திரம் படைப்பதில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பு. இப்போது, ஆஸ்திரேலிய மக்களுக்கு நல்லிணக்கத்திற்கு 'ஆம்' என்றும், 'முதல் நாடுகளின் மக்களுக்கான' அங்கீகாரத்திற்கு 'ஆம்' என்றும் சொல்ல வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.
வாக்கெடுப்புக்கான தேதியை அல்பானீஸ் இன்னும் நிர்ணயிக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை 26 மில்லியன் ஆகும். இதில் பழங்குடி ஆஸ்திரேலியர்கள் சுமார் 3% இருக்கிறார்கள். ஆனால், அதிகாரப்பூர்வ தரவுகள், அந்நாட்டின் சிறைவாசிகளில் கால் பகுதி இவர்களை கொண்டது என்றும், சிறிய குற்றங்களுக்காகவே பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலிய பழங்குடியினரின் 3ல் ஒரு பங்கு மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். பல வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததும், லத்தீன் சட்டப்பூர்வ வார்த்தையான "டெர்ரா நுல்லியஸ்" (நிலம் யாருக்கும் சொந்தமில்லை) என்று ஒரு கொள்கையை பயன்படுத்தி பூர்வீக ஆஸ்திரேலியர்களின் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த பொது வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டால், குறைந்தபட்சம் 60,000 ஆண்டுகளாக இக்கண்டத்தில் வாழ்ந்து வரும் ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவர்கள், முதல் முறையாக அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்படுவார்கள். இதனால் இந்த வாக்கெடுப்பு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், அரசியலமைப்பு சட்டம் வழங்கும் உரிமையின் காரணமாக, இவர்களை பாதிக்கும் சட்டங்கள் குறித்து இவர்களை கலந்தாலோசித்தாக வேண்டும் என்ற உரிமை இவர்களுக்கு கிடைக்கும்.
இருப்பினும் கணிப்புகளின்படி, பெரும்பாலானோரின் ஆதரவு இருந்தாலும், இது குறித்த சர்ச்சைகள் விவாதங்கள் கடுமையாவதை தொடர்ந்து, இந்த மசோதாவிற்கிருந்த ஆதரவு குறைய தொடங்குவதாக தெரிகிறது.
பழங்குடிப் பெண்ணும், ஆளும் தொழிற்கட்சி செனட்டருமான 'மலர்ண்ட்ரி மெக்கார்த்தி பாராளுமன்றத்தில் பேசும்போது, "அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற எளிமையான வேண்டுகோள் இது. பெரும்பாலான மக்கள் இது நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்" என கூறினார்.
வாக்கெடுப்பில் "இல்லை" என்று வாக்களிக்குமாறு எதிர்க்கட்சியான லிபரல் கட்சி மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் பேசும்போது, "ஆம்" என்கிற வாக்கு, நாட்டையே இன ரீதியாகப் பிளவுபடுத்தும் என்று கூறினார். "அனைத்து ஆஸ்திரேலியர்களும் சமம், ஆனால் சில ஆஸ்திரேலியர்கள் மற்றவர்களை விட சமமாக இருப்பார்கள என ஒரு 'ஆர்வெல்லியன் விளைவு' இதனால் ஏற்படுத்தப்படும்" என்று அவர் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கூறியிருந்தார்.
பசுமைக் கட்சித் தலைவர் ஆடம் பேண்ட் பேசும்போது, இக்கருத்தை இனவெறி நாயின் ஒலிச்சத்தம் என கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் சில பழங்குடி ஆர்வலர்கள் இந்த "ஆஸ்திரேலியர்கள் குரல்" அமைப்பின் தகுதி குறித்து சந்தேகக் கேள்வி எழுப்பியுள்ளனர். சுதந்திரமான செனட்டர், 'லிடியா தோர்ப்' பேசும்போது "இது ஒரு சக்தியற்ற ஆலோசனை அமைப்பு" என கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக இதுவரை 44 முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், 19 முன்மொழிவுகள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. அதிலும், 8 மட்டுமே மக்கள் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடைசியாக 1999ல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் குடியரசை நிறுவுவதை ஆஸ்திரேலியர்கள் நிராகரித்தனர்.
வாக்கெடுப்பில் வெற்றிபெற, அரசாங்கம் இரட்டைப் பெரும்பான்மையை பெற வேண்டும், அதாவது நாடு முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் மற்றும் ஆறு மாநிலங்களில் குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் உள்ள பெரும்பான்மை வாக்காளர்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்க வேண்டும்.